Thursday, January 28, 2010

மோனோநோகி

ஜப்பானின் புகழ்பெற்ற அனிமேஷன் இயக்குனர் ஹயோ மியாசகி (Hayao Miyazaki )இயக்கிய 1997ல் வெளியான Princess Mononoke படத்தை கடந்த ஒருவாரத்தில் நான்குமுறை பார்த்துவிட்டேன்.

சமீபத்தில் அவதார் திரைப்படம் ஏற்படுத்திய வியப்பை விடவும் பலமடங்கும் இந்த படம் என்னை பாதித்தது. தொழில்நுட்ப ரீதியாகவும் கற்பனையான கதை சொல்லும் முறையிலும் இதுவரை நான் பார்த்த அனிமேஷன் படங்களில் இதுவே ஆகச்சிறந்தது என்பேன்.


மியாசகியின் அனிமேஷன் படங்களை ஒவ்வொரு குழந்தைகளும் அவசியம் காணவேண்டும். குறிப்பாக சிறார்பள்ளிகள் மற்றும் பூங்காங்களில் இவை தொடர்ந்து திரையிடப்பட வேண்டும். இந்த படங்கள் சிறுவர்களை சந்தோஷப்படுத்துவதுடன் கற்றுக் கொடுக்கின்றன. அவர்களது கற்பனை திறனை வளப்படுத்துகின்றன.


அதிலும் இளவரசி மோனோநோகி ஒவ்வொரும் பார்க்க வேண்டிய அவசியமான உலகதிரைப்படம். மோனோநோகி ஒரு சாகசகதை. இளவரசன் அஷிதஹா எமிஷி இனக்குழுவை சேர்ந்தவன். அது ஒரு பழங்குடி இனம். அவர்கள் காட்டை சார்ந்து வாழ்பவர்கள். அவர்கள் கிராமத்தை அழிக்க வரும் மூர்க்கமும் விநோதமுமான கரடி ஒன்றை அவன் கொல்கிறான். அந்த கரடியின் உடலில் இருந்த மயிர்கள் அவன் கையை பற்றிக் கொண்டுவிடுகின்றன. அந்த கறுப்புரோமம் அவனது கையில் மாறாத அடையாளமாகிவிடுகிறது.


அந்த கரடி சாகும்போது அவர்களை அழிப்பேன் என்று சாபம் கொடுத்துவிடுகிறது. கிராமத்தில் உள்ள குறி சொல்லும் வயதான பெண் அந்த கரடி தீமையின் உருவம் என்று அதன் சாபம் அஷிதஹாவின் மீது படிந்துவிட்டது. அவன் அந்த சாபத்தின்படியே கரடியால் ஏற்படுத்தப்பட்ட கருந்தேமல் வளர்ந்து அவனை கொன்றுவிடும் என்கிறாள்.


அதிலிருந்து மீட்சிபெறுவதற்காக இளவரசன் காட்டின் கடவுளை சந்திக்க புறப்படுகிறான். இனிமேல் அவன் உயிரோடு திரும்ப மாட்டான என்றே மக்கள் நம்புகிறார்கள். அவனது தலைமயிரில் ஒன்று வெட்டப்படுகிறது. அப்படி ஒரு மனிதனின் தலைமயிர் ஒன்றை துண்டித்துவிட்டால் அவன் இறந்துவிட்டதாகவே நம்பிக்கை. ஊரை பொறுத்தவரை அவன் இறந்து போன ஒருவனே. ஆனால் இளவரசன் தனது மீட்சிக்காக காட்டிற்குள் செல்கிறான்.

காடும் அதன் வாழ்க்கையும் முன் அறியாத விந்தை உலகமாக இருக்கிறது.
இளவரசன் குதிரைக்கு பதிலாக ஒரு சிவப்புநிற மானை பயன்படுத்துகிறான். அது ஒரு கற்பனையான மிருகம். அதன் பெயர் யாகூல். அது இளவரசனை காட்டிற்குள் அழைத்து போகிறது. அங்கே ஒநாய் இளவரசி ஒருத்தியை சந்திக்கிறான். அவள் மானுடப்பெண். ஆனால் ஒநாய்களால் வளர்க்கபடுகிறவள். ஒநாய் என்றாலே பயமும் வெறுப்பும் கொள்ளும் குழந்தைகளை ஒநாய்களை செல்லபிராணிகள் போல அத்தனை உயிர்ப்பும் நெருக்கமும் கொள்ள செய்கிறது இக்கதை. அந்த ஒநாய் இளவரசி காட்டிற்குள் தனது இனத்தை காக்க போராடிக் கொண்டிருக்கிறாள்.


இந்த கதை பதினாலாம் நூற்றாண்டில் நடைபெறுகிறது. அந்த காலத்தில் ஜப்பானில் சுரங்கம் தோண்டும் முயற்சிகள் தீவிரமாக இருந்தன. குறிப்பாக நிலக்கரி மற்றும் தாதுக்களை தேடி காட்டை அழிக்க ஆரம்பித்திருந்தார்கள். இந்த கதையிலும் அதுபோன்ற இரும்பு நகரம் ஒன்று வருகிறது. அது காட்டின் மேற்குபகுதியில் உள்ளது. அங்கே நிலக்கரி மற்றும் இரும்பு தாது எடுப்பதற்காக தொழுநோயாளிகள் பயன்படுத்தபடுகிறார்கள்.இரும்பை கொண்டு ஆயுதங்கள் செய்து அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்று ஆசைப்படும் யபோஷி என்ற சீமாட்டி அந்த இரும்பு நகரை ஆள்கிறாள். அவள் காட்டை தன் கட்டுபாட்டிற்குள் வைத்திருக்கிறாள்.


காட்டில் உள்ள ஆதி இனக்குழுவினரை தேடிதேடி அழிக்கிறாள். அவளிடம் நவீன ரக துப்பாக்கிகள் இருக்கின்றன. காட்டுவாசிகளிடம் ஆயுதம் இல்லை. அவர்கள் மறைந்திருந்து தாக்குகிறார்கள். அவள் துப்பாக்கியால் அவர்களை சுட்டு வீழ்த்துகிறாள். இந்த போராட்டம் நடந்து கொண்டிருந்த சூழலில் இளவரசன் அஷிதஹா காட்டிற்குள் சென்று கொண்டிருந்த சாமுராய் வீரர்களை ஆபத்தில் இருந்து காப்பாற்றுகிறான். அந்த வீரர்கள் யபோஷி சீமாட்டியின் பணியாளர்கள். காட்டிற்குள் ஜிகோ என்ற துறவியின் நட்பு கிடைக்கிறது. அவர் சாபத்திலிருந்து அவனை விடுவிக்க காட்டின் கடவுளால் மட்டுமே முடியும் என்று வழிகாட்டுகிறார்.


காட்டுவாழ்க்கை அச்சமும் திகைப்புமாக நீள்கிறது. ஒரு நாள் காட்டின் கடவுள் தன் இன்னிசையுடன் தண்ணீரின் மீது காற்றை போல கடந்து போகிறார். அவரது தொடுதல் பட்டு இளவரசன் புத்துயிர் பெறுகிறான். அவனை ஒநாய் இளவரசி காப்பாற்றி துணை செய்கிறாள். அவளை காதலிக்க துவங்குகிறான் இளவரசன். யபோஷி சீமாட்டியை அழிப்பதே தனது லட்சியம் என்று ஒநாய் இளவரசி சொல்கிறாள். அவளுடன் இணைந்து சீமாட்டியை எதிர்க்க துவங்குகிறான் இளவரசன். அவர்களது மீட்சியும் ஒநாய் இனத்தின் விடுதலையும் ஒன்று சேர்க்கின்றன.


சாபம் அதிலிருந்து மீள்வதற்கான பேராட்டம் இறுதி யுத்தம் என்று கதையின் ஒரு தளம் செல்லும் போது மறுதளம் இயற்கையின் விசித்திர உயிர்கள், அவை சந்திக்கும் பிரச்சனைகள் அதற்கான மாற்றுவழிகளை படம் விவரிக்கிறது. இன்னொரு பக்கம் மனிதர்கள் இயற்கையை இன்றுவரை புரிந்து கொள்ளவேயில்லை. அதை வெறும்பயன்பாடாக மட்டுமே கருதுகிறார்கள் என்பதை விளக்கும் காட்டின் கடவுள் மற்றும் மீமாய அற்புதங்கள் இடம் பெறுகின்றன. அதிகார போட்டி ஆயுதங்கள் உருவாக்குவது அதற்காக நோயாளிகளை பிடித்துவந்து வேலை வாங்குவது என்று சமகால உலகின் வன்முறைகளையும் படம் சித்திரிக்கிறது.


காடு சதா இயங்கிக் கொண்டேயிருக்கிறது. எங்கிருந்தோ மறைந்து இரண்டு கண்கள் உற்று நோக்குவதை போல காடு அதில் நடக்கும் இயக்கங்களை உற்று பார்த்தபடியே இருக்கிறது. காட்டின் கடவுள் நடந்து செல்லும்போது இலைகள் துளிர்க்கின்றன. நீர் அலையாகிறது. வனம் பூக்கிறது. செடிகொடிகள் பசுமையாகின்றன. காற்று தாவுகிறது. காட்டின் கடவுள் இசையாகவே கடந்து போகிறார். அவரது காலடிகள் தண்ணீரில் மீது சலனம் ஏற்படுத்தி மறைகின்றன. காடு கடவுளின் நடமாட்டத்தினை கொண்டாடுகிறது.

கோடமா என்ற மரங்களின் ஆன்மா எப்போதுமே சந்தோஷத்தையும் அழகையும் வாறி இறைத்தபடியே இருக்கிறது. அதுபோலவே நைட் வாக்கர் எனப்படும் இரவில் நடக்கும் உருவம். அது காட்டின் ஆன்மா இரவில் தன்னை ஒளிரும் உருவமாக மாற்றிக் கொள்கிறது என்பதையே சுட்டுகிறது.


அதுபோலவே இரும்பு நகரில் உள்ள தொழுநோயாளிகள் மற்றும் வேசைகளின் உலகம். அங்கே பெண்கள் தான் கடுமையான வேலைகளில் ஈடுபடுகிறார்கள். இரும்பை உருக்கும் வேலையை செய்பவர்கள் பெண்கள். அவர்கள் துப்பாக்கிசெய்கிறார்கள். ஆண்கள் பெண்களை சார்ந்தே வாழ்கிறார்கள். தொழுநோயாளிகளை சமூகம் புறக்கணித்து ஒதுக்கி வைத்த போது யபோஷி சீமாட்டி அவர்களை தனது பிரஜைகளாக்கி கொள்கிறாள். அவர்கள் அவளுக்காக விசுவாசமாக இருக்கிறார்கள். அந்த உறவும் நெருக்கமும் சிறப்பாக படத்தில் உள்ளது.


ஒநாய் குலமும் அதன் வீழ்ச்சியும் கதையின் முக்கிய சரடாக உள்ளது. ஒநாய்கள் மனிதர்கள் தங்களை நேசிப்பதேயில்லை என்று குற்றம்சாட்டுகின்றன. காடு எப்போதும் உறங்குவதேயில்லை என்று படத்தில் வசனம் இடம்பெறுகிறது. படம் முழுவதுமே பௌத்தசாரம் வழிந்தோடுகிறது. நேசமும் அன்புமே மனிதனின் ஆதார உணர்ச்சிகள் என்பதை படம் ஆழமாக வெளிப்படுத்துகிறது.


ஒரு லட்சத்திநாற்பத்திநான்காயிரம் சித்திரங்களை கையால் வரைந்து இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். மிக குறைவாகவே கணிணி தொழில்நுட்பம் பயன்படுத்தபட்டிருக்கிறது. இந்த கதையை பதினாறு வருசம் தன் மனதிலே வளர்த்து மாற்றிமாற்றி எழுதியிருக்கிறார் மியாசகி. மரபான நிறக்கலவையும் இயற்கையின் தனித்துவமிக்க நிறங்களும் படத்தில் பயன்படுத்தபட்டிருக்கின்றன. இசையும் காட்சிகோணங்களும் வெகு அற்புதமானவை. காட்டின் உன்னதம் இசையாக்கபட்டிருக்கிறது. இந்த கதை மாங்கா காமிக்ஸ் புத்தகமாகவும் வெளியாகி உள்ளது. ஜப்பானில் அதிக வசூல் செய்தபடங்களில் இதுவும் ஒன்று.


உலகெங்கும் இதிகாசங்கள் எப்போதுமே இயற்கை சார்ந்தே எழுதப்படுகிறது. கானகவாழ்க்கையை விவரிக்காத இதிகாசங்களே இல்லை. நமது மகாபாரதம் ராமாயணம் இரண்டிலும் கானகவாழ்வே கதையின் மையப்பகுதியாக உள்ளது. அவ்வகையில் இந்த மோனோநோகியும் இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவையும் மனிதர்கள் இயற்கையை அழித்தொழிப்பதில் காட்டும் அதிவேக அக்கறைகளுமே பதிவாகி உள்ளது.


வால்ட் டிஸ்னியின் அனிமேஷன் திரைப்படம் மரபான ஒவிய வகையை சேர்ந்தவை. அத்துடன் அவரது கதாபாத்திரங்களில் வேடிக்கை பிரதானமாகி கற்பனையும் அது சார்ந்த கதை சொல்லுதலும் மிக குறைவாகவே இருக்கின்றன. அவர் கற்பனையான கதாபாத்திரங்களை உருவாக்குவதிலும் அவற்றை ஒன்றோடு ஒன்று மோதவிட்டு நடைபெறும் வேடிக்கைகளை பிரதிபலிப்பதிலுமே அதிக அக்கறை கொண்டிருக்கிறார்.


கலாச்சாரம் பண்பாடு அது சார்ந்த பன்முகப்பட்ட கதை சொல்லல் போன்றவற்றில் டிஸ்னியின் ஈடுபாடு அதிகமில்லை. அவர் எந்த தேசத்தின் கதையையும் அமெரிக்க மக்களுக்கான கதைசொல்லும் முறையாக மாற்ற தெரிந்தவர். அமெரிக்க மக்கள் கதாபாத்திரங்களின் செயல்களில் தான் அதிக நாட்டம் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கதாபாத்திரங்களின் வழியே வெளிப்படும் குறியீடுகள், சங்கேதங்கள், ஆழ்ந்த மெய்தேடல், அர்த்தமற்ற கனவுகள், அறிவு தேடல் போன்றவற்றை பிரதானமாக கருதுவதில்லை.

இயற்கை குறித்த டிஸ்னியின் பார்வை எவ்விதத்திலும் தனித்துவமானதில்லை. இயற்கையை அவர் கொண்டாடுவதில்லை. அதே நேரம் புறக்கணிப்பதுமில்லை. அதை அவர் பயன்பாடு என்ற நிலையிலே பெரிதும் அணுகுகிறார். அவரது ஒவியஉலகில் காணப்படும் இயற்கை சித்தரிப்புகள் பெரும்பாலும் தட்டையானவை. விசித்திரமான தாவரம். அதன் இலைகள் மற்றும் பூக்கள் என்று இயற்கையை உற்று நோக்க அதிகம் விரும்புவதில்லை.

டிஸ்னி மிருகங்களின் உடலை ரப்பர் போல உருவகித்து கொள்கிறார். அந்த கதாபாத்திரங்களுக்கு அற்புத சக்திகளோ, அதியமான திறன்களோ அதிகமிருக்காது. அவை தினசரி வாழ்வு சார்ந்தே ஒன்றையொன்று சந்திக்கின்றன. அந்த சந்திப்பை சுவராஸ்யமாக்குவது அதன் போராட்டம் . அதிலிருந்து உருவாகும் நகைச்சுவை.

பெரும்பாலும் பசித்தலும் உறக்கமும், ஊர் சுற்றலும், கேளிக்கை விருந்துகளும், தினசரி வாழ்வை சுகமாக்கி கொள்ள விரும்பும் கனவுகளுமே அவரது கதை சொல்லுதலில் முக்கியமாக இருக்கின்றன முட்டாள்தனம் என்று பொதுவான சுட்டிக்காட்டப்படும் தருணங்களே அவரது கதை நிகழ்வுகள். முட்டாள்தனத்தை வேடிக்கையாக்கி சிரிப்பது பொதுபுத்தி. அது உலகெங்குமே உள்ளது..

டிஸ்னியின் கற்பனை மிருகங்கள் ஒரு போதும் அநாகரீகமாக பேசுவதில்லை. அவை படித்த நடுத்தரவர்க்க மனிதனை போலவே பல நேரங்களில் நடந்து கொள்கின்றன. மறைபொருள்தன்மைக்கு டிஸ்னியிடம் அதிக இடமில்லை. அதை குழந்தைகள் விரும்புவதில்லை என்று அவர் நினைத்திருக்க கூடும். ஆலீஸின் அற்புத உலகையும் குட்டி இளவரனையும் குழந்தைகளுக்கு பிடித்திருப்பது அதன் எண்ணிக்கையற்ற உள்தளங்கள் மற்றும் குறியீடுகள், சங்கேதங்கள் கணிதபுதிர்கள் மற்றும் உயரிய கற்பனையே. அதை மிக எளிமைப்படுத்தினார் டிஸ்னி.

பல்வேறு தேசங்களின் தேவதை கதைகளும், அராபிய கதைகள், ஆலீஸ், போன்ற குழந்தைகளுக்கான புகழ்பெற்ற கதைகளே அவரது ஆதார பிரதிகள். அதை காட்சிபடுத்துவதில் அவர்கள் அடைந்த வெற்றியே அந்த திரைப்படங்களை உலகெங்கும் கொண்டாட செய்தன. ஆனால் டிஸ்னியின் கதாபாத்திரங்கள் என்ன செய்யும் என்பதை ஒரு குழந்தை தொடர்ந்து பார்ப்பதன் வழியே கண்டுபிடித்துவிடுகிறது. இது சாப்ளினுக்கு நடந்ததுபோன்ற ஒன்றே. சுவாரஸ்யமாக இருப்பினும் சாப்ளின் எப்படி நடந்து கொள்வார் என்பதை குழந்தைகள் முன்கூட்டியே உணர்ந்து கொண்டுவிடுகின்றன. ஒரு வகையில் இது பெரிய அதிர்ஷடம். இன்னொரு வகையில் இது ஒரு போதாமை.

டிஸ்னியின் போதாமையை இன்றுள்ள குழந்தைகள் அதிகம் உணருகிறார்கள். அவர்கள் மரபான அனிமேஷன் படங்களில் இருந்து விலகி உயர்கற்பனையும். பன்முக கதை சொல்லும் முறையும் கொண்ட அனிமேஷன்படங்களை காணவே விரும்புகிறார்கள். டிஸ்னி வலுவான எதிர்நாயகர்களை ஒரு போதும் உருவாக்கியவரில்லை. அவரது வில்லன்கள் இயல்பானவர்கள். அவர்கள் தீமையின் பிரதிபலிப்புகள் இல்லை. மாறாக நெருக்கடியில் இருந்து உருவானவர்கள்.

அதுபோலவே ஒவ்வொரு நிகழ்வின் பின்பும் ஒய்வு எடுப்பது தான் அவரது கதாபாத்திரங்களின் முக்கியமான செயல். ஒய்வை சீர்குலைப்பதோ, ஒய்வெடுக்க விடாமல் துரத்தபடுவதோ தான் பல கதாபாத்திரங்களின் செயல்பாட்டிற்கான ஆதாரபுள்ளியாக இருக்கிறது.

டாம் அண்ட் ஜெரி என்ற இரண்டு கதாபாத்திரங்கள் அனிமேஷன் உலகில் மிக பிரபலமானவை. அவற்றை உருவாக்கியவர்கள் வில்லியம் ஹன்னா மற்றும் ஜோசப் பார்பேரா.

டாம் அண்ட் ஜெரி ஜோடிகளின் முக்கிய வேலை ஒருவரது ஒய்வை மற்றவர் கெடுப்பதே. அதிலிருந்து தான் துரத்துதல், அடித்தல், தப்புதல் போன்றவை நடைபெறுகின்றன. டாம் அண்ட் ஜெரியை தொடர்ந்து பார்க்கும் சிறுவர்கள் அடிப்பதும் அடித்தபிறகு ஒடி ஒளிவதும் அடிபடுதலும் அவசியமானது என்று நம்புகிறார்கள். ஆனால் வலியை வெளிப்படுத்த கூடாது. அடிபடும் டாம் ஒரு முறை கூட தன் உடல் வலிக்காக கண்ணீர்விடுவதில்லை. ஜெர்ரியும் அப்படியே. அவை நெருக்கடிக்குள் தன்னை புகுத்திக் கொள்கின்றன. அல்லல்படுகின்றன. மீண்டு ஆசுவாசம் கொள்கின்றன

இந்த வகை அனிமேஷன் படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை ஜப்பானிய அனிமேஷன் படங்கள் .இவை மிக உயர்ந்த கற்பனை திறன் கொண்டவை. கதை சொல்லுதலிலும் ஜப்பானிய பழங்கதை மரபையும் நவீனத்துவத்தையும் ஒன்று சேர்ப்பவை. ஜப்பானிய அனிமேஷனின் தனிச்சிறப்பு அதன் கதாபாத்திரங்கள். அவர்கள் அதிசயத்தையும் இயல்பையும் ஒருங்கே கொண்டவர்கள். சூப்பர்மேன் ஸ்பைடர்மேன் போல அதிமனிதர்கள் இல்லை.
சாதாரண மனிதர்கள்

ஆனால் சில வேளைகளில் அதிசயமான சக்தி கொண்டவர்கள். அந்த சக்தி அவர்களை வழிநடத்துகிறது. தீமைக்கு எதிராக நன்மை மேற்கொள்ளும் முயற்சியே அந்த அதிசயமாக வெளிப்படுகிறது. அது போலவே இயற்கை பல்வேறு பின்னல்களும் மாய, யதார்த்த உயிரினங்களும், விசித்திரங்களும், மயக்கமூட்டும் நிறமும் ஒசையும் கொண்டதாக சித்திரிக்கபடுகிறது.

ஒருவகையில் நமதுபுராதன வாழ்வும் அதன் நினைவுகளுமே ஜப்பானிய அனிமேஷனில் முக்கிய அம்சமாக வெளிப்படுகிறது.
அதே நேரம் மாநகரங்கள் உருவாக்கபட்டு மக்களது வாழ்வு தொழில்நுட்ப ரீதியாக மிக மேம்பாடு உள்ளதையும் இந்த கதைகள் கணக்கில் எடுத்து கொள்கின்றன. நகரங்களின் விசித்திரங்களையும், இங்கும் கானகம் போலவே அறியாத வீதிகளும் அதன் உள்ளே ஒளிந்து வாழும் மனிதர்களை பற்றியும் நகரங்களின் வன்முறை பெருகிய இரவு வாழ்க்கையும் அதன் ஊடாடும் மனித துயர்களையும் முன்வைக்கின்றன.


இன்று அமெரிக்க அனிமேஷன் துறையை விட பலநூறு மடங்கு பெருகி சாதனை புரிந்திருக்கிறது ஜப்பானிய அனிமேஷன். தொழில்நுட்ப ரீதியாக அவர்கள் உருவாக்கிகாட்டிய சாதனைகளை இப்போது தான் ஹாலிவுட் பயன்படுத்தவே துவங்கியிருக்கிறது. இதற்கு சிறந்த உதாரணம் Final Fantasy​ . இதன் அனிமேஷன் மற்றும் விளையாட்டு வடிவங்கள் எட்டு பகுதியாக வெளியாகி உள்ளன. கின்னஸ் சாதனை புரிந்த அனிமேஷன் படமிது. இந்த படத்தில் பயன்படுத்தபட்ட தொழில்நுட்ப உத்திகளின் விரிவாக்கமே இன்று அவதாரிலும் இடம்பெற்றிருக்கிறது.


இவ்வளவு புகழ்பெற்றுள்ள ஜப்பானிய அனிமேஷன் உலகின் கடவுள் என்று புகழப்படுபவர் ஹயோ மியாசகி. அது உண்மையும் கூட. இவர் கடவுளை போலவே தனது கற்பனையை பயன்படுத்துகிறார். இருப்பதில் இருந்து புதியதை உருவாக்குகிறார். ஒவ்வொன்றையும் தனித்துவமானதாக உருவாக்கி காட்டுகிறார். இவரது கதை சொல்லும் உத்தி ஹிட்ச்காக்கின் திரைப்படங்களுக்கு இணையானது. அடுத்த என்ன நடக்கும் என்று பதைபதைப்பை இவரது கதை சொல்லல் இயல்பாகவே கொண்டிருக்கின்றன.

அதே வேளை மரபா

No comments:

Post a Comment

சொற்களின்

amma