Friday, February 19, 2010

எறும்பைக் கொல்ல வெடிகுண்டு வீசுதல்

முன் கதை

ராஜ்மோகன் உண்ணித்தான் கேரளப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் எண்ணற்ற பொதுச்செயலாளர்களில் ஒருவர். நீண்ட காலத் தொண்டர். நல்ல சரீர கனமும் சாரீர வளமும் கொண்டவர். அதனால் தீப்பொறிப் பிரசங்கம் செய்வதில் தேர்ச்சிபெற்றவர். இந்தத் தகுதிகளுக்காகச் சில மலையாளப் படங்களில் நடிக்கும் வாய்ப்பும் உண்ணித்தானுக்குக் கிடைத்திருந்தது. ஊடகங்களுடன் தோழமை பாராட்டுபவர். அதனால் பத்திரிகை, தொலைக் காட்சிகளில் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதியாகக் கருத்துச் சொல்ல அழைக்கப்படும் நிரந்தர விருந்தினர். சுருக்கமாகச் சொன்னால் அன்றாடம் நாளிதழ் வாசிக்கும், தொலைக்காட்சி பார்க்கும் சாமான்ய மலையாளிக்கு ராஜ்மோகன் உண்ணித்தான் பார்த்ததும் அடையாளம் தெரியக்கூடிய நபர். அப்படி வலுவான நினைவாற்றல் இல்லாதவர்கள்கூட ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தையொட்டி அவரை ஞாபகத்தில் வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

மூத்த காங்கிரஸ் தலைவர் கே. கருணாகரனின் நிர்ப்பந்தத்துக்குப் பணிந்து காங்கிரஸ் மேலிடம் அவருடைய மகன் முரளிதரனை மாநிலக் காங்கிரஸ் தலைவராக நியமித்தது. நியமனத்தில் அதிருப்தியுற்ற கட்சியின் குறுங்குழுக்கள் கொந்தளித்தன. அப்படிக் கொந்தளித்தவர்களில் சிலர்மீது தலைவர் முரளிதரன் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தார். அதில் முதன்மையானவர்கள் அதுநாள்வரை கருணாகரனின் விசுவாசிகளாக இருந்த ராஜ்மோகன் உண்ணித்தானும் டி. சரத் சந்திர பிரசாத்தும். கோவளத்தில் நடந்த காங்கிரஸ் கட்சி காரியக் கமிட்டிக் கூட்டத்தில் இவ்விருவரும் கலந்துகொள்ளக் கூடாது என்று முரளிதரன் குழு முடிவு செய்தது. அழைப்பு அனுப்ப மறந்தது. அழைக்கப்படாமல் கூட்டத்துக்கு வந்த சரத் சந்திர பிரசாத்தையும் உண்ணித்தானையும் முரளிதரன் விசுவாசிகளும் வாடகைக் குண்டர்களும் ஆக்கிரமித்தார்கள். தென் மாநிலங்களிலுள்ள காங்கிரஸ் கட்சியின் மரபுப்படி அவர்களின் சட்டைகளைக் கிழித்தார்கள். இடுப்பு வேட்டியை உருவி இருவரையும் அரைநிர்வாணமாக ஓடவிட்டார்கள். அதைத் தொலைக்காட்சிகள் நேரலையாக ஒளிபரப்பின. அடுத்த நாள் வெளியான பத்திரிகைகள் முதன் முறையாக ஆண்களின் அரைநிர்வாணப் படங்களை முதல் பக்கங்களில் பிரசுரித்தன.

ராஜ்மோகன் உண்ணித்தான் அந்த அளவுக்குப் பொது அறிமுகம் உடையவர் என்பதையும் பொதுமக்கள் புழங்கும் இடங்களில் அவர் ரகசியமாக எந்தச் செயலிலும் ஈடுபட்டுவிட முடியாது என்பதையும் வலியுறுத்தத்தான் இந்த நினைவுகூரல். ஆனால் ராஜ்மோகன் உண்ணித்தான் ஒரு பெண்ணுடன் ஒரு வீட்டில் ரகசியமாக ஒழுக்கப் பிறழ்வான நடவடிக்கையில் ஈடுபட்டார் என்று குற்றம்சாட்டி அவமதிக்கப்பட்டார். இரண்டாவது முறையாகப் பொது இடத்தில் வேட்டி உருவப்பட்டுக் கூசி நின்றார். இந்தமுறை அதைச் செய்தது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் இளைஞர் பிரிவான இந்திய ஜனநாயக வாலிபர் சங்க (DYFI)த்தின் பிரதிநிதிகளும் அப்துல் நாசர் மதானியின் ஜனநாயக மக்கள் கட்சி(பீப்பிள்ஸ் டெமாக்ரட்டிக் பார்ட்டி)யின் பிரதிநிதிகளும்.

பாகம்-1

கடந்த டிசம்பர் மாதம் இருபதாம் தேதி சம்பவம் நடந்தது. மலப்புரம் மாவட்டம் மஞ்சேரியில் வசிக்கும் அஷ்ரப் என்பவர் வீட்டுக்கு ராஜ் மோகன் உண்ணித்தான் போயிருக்கிறார். மாலை மணி ஏழு ஏழரை இருக்கும். அவருடன் காங்கிரஸ் சேவாதளத் தொண்டரான ஜெயலக்ஷ்மியும் இருந்திருக்கிறார். கொல்லத்தைச் சேர்ந்த ஜெயலக்ஷ்மி திரு மணமானவர். சில வருடங்களுக்கு முன்னர் அஷ்ரப்புடன் சேர்ந்து வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தவர். வியாபாரம் நிறுத்தப்பட்ட பின்பு தன்னுடைய பங்குத் தொகையை அஷ்ரப்பிடம் கேட்டிருக்கிறார். பல காலமாகவே அதை இழுத்தடித்து வந்திருக்கிற அஷ்ரப்பைச் சந்தித்துப் பேசிப் பணத்தைத் திரும்பப் பெறுவதற்காக உண்ணித்தானை நாடியிருக்கிறார். அதன் பொருட்டே அவர்கள் இருவரும் அஷ்ரப்பை அவர் வீட்டில் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். இந்தப் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்த சமயம் வீட்டுக்கு வெளியில் ‘பொதுமக்கள்’ திரண்டு கூச்சல் போட்டிருக்கிறார்கள். உண்ணித்தானையும் ஜெயலக்ஷ்மியையும் வாசலில் இழுத்துப்போட்டு ஆடைகளை உருவியும் அடித்தும் அவமானப்படுத்தியிருக்கிறார்கள்.

இந்தச் சம்பவம் உடனடியாகத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. காங்கிரஸ் கட்சிக் கொடி பொருத்திய காரில் வந்த உண்ணித்தானும் ஜெயலக்ஷ்மியும் ஒரு நண்பரின் வீட்டில் முறைகேடாக நடந்துகொண்டதாகவும் அவர்களைப் ‘பொதுமக்கள்’ முற்றுகையிட்டிருப்பதாகவும் செய்தி ஒளிபரப்பப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் இருவரையும் விசாரித்தது. அஷ்ரப்பின் அழைப்பின் பேரில்தான் அங்கே வந்ததாக இருவரும் சொன்னதைக் காவல் துறை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர். ஆனால் அவர்கள் ‘பாலியல் குற்றத்தில்’ ஈடுபட்டதாகப் ‘பொதுமக்கள்’ தொடர்ந்து வலியுறுத்தினர். அவர்களைக் கைது செய்யாமல்விட்டால் ஊரின் மானம் காற்றில் பறக்கும் என்று ஆவலாதிப்பட்டனர். எனவே போலீசும் அவர்களைக் கைதுசெய்து காவலில் வைத்தது. கிட்டத்தட்டப் பதினெட்டு மணிநேரத்துக்குப் பின்பு மாஜிஸ்டிரேட் முன்னிலையில் ராஜ்மோகன் உண்ணித்தானும் ஜெயலக்ஷ்மியும் ஆஜர் செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். இருவரின் ஒழுக்கக்கேடான நடவடிக்கையைக் கண்டுபிடித்துக் கைதுசெய்ய வற்புறுத்திய ‘பொது மக்கள்’ அனைவரும் விதிவிலக்கில்லாமல் DYFI அல்லது றிஞிறியின் உறுப்பினர்களாகவே இருந்தார்கள். ‘பொதுமக்க’ளின் கருத்தை மதித்து காங்கிரஸ் கட்சியும் உண்ணித்தானையும் ஜெயலக்ஷ்மியையும் தற்காலிக நீக்கம் செய்திருக்கிறது. மேலிட விசாரணைக்கும் உத்தரவிட்டிருக்கிறது.

மஞ்சேரி போன்ற சின்ன ஊரில் இவ்வளவு பொதுமக்கள் திரள்வதற்குச் சாத்தியமில்லை; அஷ்ரப்பின் அழைப்பின் பேரில்தான் இதெல்லாம் நடந்தது என்பது உண்ணித்தானின் வாதம். இந்த விஷயத்தில் யாருக்காவது புகார் இருக்குமென்றால் அது தன்னுடைய மனைவிக்கு மட்டுமே என்றார். உண்ணித்தானின் மனைவி இதைப் பொருட்படுத்தவில்லை. இடதுசாரிகளின் தீவிர விமர்சகரான தன்னுடைய கணவரைப் பழிவாங்கும் எண்ணத்தில் தொடுக்கப்பட்ட பொய்யான குற்றச்சாட்டு என்று காங்கிரஸ் தலைவர்களிடம் முறையிட்டார். அதுவும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக அவரும் தாக்கப்பட்டார். காங்கிரஸ் தலைவர்களின் அறிவுறுத்தலின்படி போலீசில் புகார் செய்யப் போனார். அவரை முந்திக்கொண்டு DYFIயினர் அவர்மீது புகார் செய்தனர். பத்திரிகைகளுக்கும் தொலைக்காட்சிகளுக்கும் இரண்டு மூன்று நாள் கொண் டாட்டமாக இருந்தன இந்தச் செய்தியும் அது தொடர்பான வாதப் பிரதிவாதங்களும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ தொலைக்காட்சியான ‘கைரளி’தவிர சகல அலைவரிசைகளிலும் ராஜ் மோகன் உண்ணித்தான் நிரம்பியிருந்தார்.

பாகம் - 2

திருவனந்தபுரம் புத்தகக் கண் காட்சி நிறைவு தினத்தில் (22 டிசம்பர் 2009) மலையாளத்தில் சிறந்த பத்துப் புத்தகங்களுக்குப் பரிசு வழங்கிப் பேசிய எழுத்தாளர் சக்கரியா இச்சம்பவத்தை மேற்கோள்காட்டிப் பேசினார். நரகலை மோப்பம் பிடிக்கும் ஊடகங்களின் போக்கையும் பெண்ணியவாதிகளின் மௌனத்தையும் கேள்விக்குட்படுத்தினார். அரசியல் கட்சிகளின் துணையமைப்புகள் கலாச்சாரக் காவலர்களாக மாறுவதைச் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து ‘கலாகௌமுதி’ வார இதழில் கட்டுரையும் எழுதினார். அதில் பின்வரும் கேள்விகளை எழுப்பினார் . கிட்டத்தட்ட ஐம்பது வயதைக் கடந்த ஓர் ஆணும் பெண்ணும் தனித்துச் சந்திப்பதும் பேசுவதும் குற்றமா? அவர்கள் ஒரே வாகனத்தில் பயணம் செய்வது பாதகமா? ஒரு வீட்டில் உட்கார்ந்து பேசும் இருவரைப் பாலியல் குற்றம் சுமத்தி வெளியில் இழுத்துவந்து அவமானப்படுத்துவது என்ன ஜனநாயகம்? அதற்கான அதிகாரத்தை யார் அளித்தது? இது இந்திய இறையாண்மைக்கு எதிரானதல்லவா? ராஜ்மோகன் உண்ணித்தானும் ஜெயலக்ஷ்மியும் இந்தியக் குடிமக்கள் என்னும் நிலையில் சந்திக்கவும் பேசவும் உரிமையுள்ளவர்கள். அவர்கள் மட்டுமல்ல இந்தியக் குடிமக்களான ஓர் ஆணும் ஒரு பெண்ணும் பரஸ்பரம் விரும்பினால் உறவுகொள்ளவும் இந்திய அரசியல் சட்டம் உரிமையளித்திருக்கிறது. அப்படியானால் உண்ணித்தான் விவகாரத்தில் அடிப் படை உரிமைகள் மீறப்பட்டிருக்கின்றன. அதைவிடவும் முக்கியமாக ஒரு பெண் பதினெட்டு மணி நேரம் எந்த விதிகளும் பின்பற்றப்படாமல் போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். அந்த அத்துமீறலுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தந்தைக் கட்சியான மார்க்சிஸ்ட் கட்சி பொறுப்பேற்க வேண்டுமா வேண்டாமா? இதுதான் மலையாளியின் முற்போக்குக் குணமா? இந்தக் குணத்தை நோயென்று அல்லவா சொல்ல வேண்டும்? மலையாளிகளின் மனநோய் இது. பாலியல் வறுமை காரணமாக ஏற்பட்டிருக்கும் மனக் கோளாறு. இதற்கு என்ன சிகிச்சை? சக்கரியாவின் கட்டுரையை ஒட்டியும் வெட்டியும் கலாச்சார அரங்குகளில் விவாதங்கள் தொடர்ந்தன. விமர்சகரும் பேச்சாளருமான டாக்டர் சுகுமார் அழீக்கோடு அரசின் மந்தப்புத்தித்தனத்தைச் சாடினார். கவிஞரும் சமூகச் செயல்பாட்டாளரும் முன்னாள் நக்சலைட்டுமான சிவிக் சந்திரன் பிறத்தியானின் அந்தரங்கத்தில் தலையிடும் மலையாளிகளின் சுபாவத்தையும் அதற்குக் கோட்பாட்டு வண்ணம் பூசும் அரசியல் இயக்கங்களின் செயலையும் விமர்சித்தார்.

பாகம்-3

மது நாயர் நியூயார்க் எழுதிய ‘காபோயுடெ நாட்டிலும் வீட்டிலும்’ என்னும் புத்தகத்தின் வெளியீட்டு விழா காசர்கோடு மாவட்டம் பையனூரில் ஜனவரி 9ஆம் தேதி நடந்தது. சக்கரியாதான் நூலை வெளியிட்டுப் பேசியவர். மது நாயரின் நூல் ஒரு பயணக் கதை. காப்ரியேல் கார்சியா மார்க்கேசின் ஊரையும் வீட்டையும் தேடி நூலாசிரியர் நடத்திய பயணத்தின் கதை. அதை வெளியிடப் பொருத்தமான நபர் இன்று கேரளத்தில் சக்கரியாதான். எஸ். கே. பொற்றேக்காட்டுக்குப் பிறகு அவர்தாம் அதிக அளவில் உலகப் பயணம் செய்திருப்பவர். அவற்றை நூல்களாக எழுதியிருப்பவர்.

சக்கரியாவின் உரை மலையாளத்தின் முதலாவது பயண இலக்கிய எழுத்தாளரான தோமா கத்தனாரில் தொடங்கி எஸ். கே. பொற்றேக்காடு வழியாக மது நாயரில் வந்து முடிந்திருக்கிறது. அவரது உரையின் முக்காற் பகுதியும் பயண இலக்கியம் பற்றிய விவரங்கள்தாம். கடைசிப் பகுதியில் அவர் சொன்னார். ‘முன்பெல்லாம் பயணம் செய்வது எளிதாகவும் சுதந்திரமானதாகவும் இருந்திருக்கிறது. இன்று அப்படியல்ல. நீங்கள் உங்கள் மனைவியுடனோ வேறொரு பெண்ணுடனோ ஒரு காரில் பயணம் செய்ய நேர்ந்தால் நல்லொழுக்கக் காவலர்களால் கையாளப்படுவீர்கள். அதற்கு உத்தமமான உதாரணம் ராஜ்மோகன் உண்ணித்தானின் மலப்புரம் யாத்திரை. இதைச் செய்தவர்கள் இடதுசாரிச் சிந்தனையுள்ளவர்கள் என்று கருதப்படும் DYFIயினர் என்பது வருந்தத்தகுந்தது. ஜனநாயக மதிப்புகளை மேம்படுத்துவதற்காகத் தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் ஓர் அடிப்படைவாத இயக்கத்தின் நோக்கில் செயல்படுவது வருந்தத் தகுந்தது. இதற்குக் காரணம் இன்றைய DYFI பிரதிநிதிகளுக்கு வரலாறு தெரியவில்லை என்பதே. இவர்களது முன்னோடிகளான கம்யூனிஸ்ட் தலைவர்கள் இது போன்ற பிரச்சினைகளில் வெளிப்படையானவர்களாக இருந்தார்கள். தலைமறைவாக இருந்தபோதும் வெளியரங்கில் இருந்தபோதும் தங்களது பாலியல் உறவுகள் பற்றிப் பேச அவர்கள் தயங்கியதில்லை. அதை அவர்கள் வெறும் பொது ஒழுக்கத்தின் கண்ணாடி மூலம் பார்க்கவில்லை. அவர்களுடைய சுதந்திரமான மனப்பாங்கு தான் நிறையக் கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் இடதுசாரி இயக்கத்தின்பால் ஈர்த்தது. இதே இளைஞர் இயக்கம் தொடங்கப்பட்ட அன்று ஏராளமான கலைஞர்களும் எழுத்தாளர்களும் மனிதச் சங்கிலியில் கைகோத்து நின்றது இந்த ஜனநாயகத் தன்மை காரணமாகத்தான். அப்படிப்பட்ட இயக்கம் இன்று அடிப்படைவாதக் கும்பல்களுடன் கைகோத்து நிற்பதை வீழ்ச்சியின் அடையாளமாகவே நினைக்கிறேன். இந்த இயக்கம் காலத்தின் பிரச்சினைகளைச் சரியான கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடியதாக புதுப்பிக்கப்பட வேண்டும்’. சக்கரியாவின் உரை முடிந்தது. அழைக்கப்பட்ட வேறு விருந்தினர்களும் பேசி முடிந்து மேடை இறங்கியதும் பு.க.சா (புரோகமன கலா சாஹித்ய சங்கம் - முற்போக்குக் கலை இலக்கியச் சங்கம்) தோழர் ஒருவர் சக்கரியாவை நெருங்கினார். அவருக்குச் சொல்ல இருந்த புகார் “நீங்கள் ராஜ்மோகன் உண்ணித்தான் போன்றவர்களுக்கு ஆதரவாகப் பேசியிருக்கக் கூடாது. அந்த மாதிரியான கழிசடைப் பேர்வழிகளுக்கெல்லாம் வக்காலத்து வாங்க வேண்டிய தேவை என்ன?” என்பது. “நண்பரே, யாருக்கும் வக்காலத்து வாங்க வேண்டிய தேவை எனக்கில்லை. ஓர் எழுத்தாளன் என்ற முறையில் எனக்குச் சரியென்றுபட்ட கருத்துகளைப் பேசியிருக்கிறேன். அதை மறுப்பதற்கான எல்லா உரிமையும் உங்களுக்கும் உண்டு” என்று சக்கரியா பதில் சொல்லியிருக்கிறார். அதற்குள் இலக்கிய நண்பர்களான சி.வி. பாலகிருஷ்ணனும் சசிதரனும் அருகில் வர, புகார் சொன்ன நபர் விலகிப் போனார். எல்லோரும் உள்ளூர் நண்பர் தாமோதரன் நம்பூதிரியின் காரில் ஏறி ஹோட்டலுக்குத் திரும்பியிருக்கிறார்கள். சற்று நேரத்துக்குப் பின்னர் வெளியே போக ஓட்டல் முகப்புக்கு வந்தபோது விபரீதம் காத்திருந்தது. ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த ஐந்தாறு பேர் கார் டிரைவரை மிரட்டிச் சாவியைப் பிடுங்கியிருந்தார்கள். சக்கரியா கார் அருகில் வந்ததும் அவருடைய சட்டையைப் பிடித்து உலுக்கியிருக்கிறார்கள். பல ஜோடிக் கைகள் தன்னை உந்தித் தள்ளியதை உணர்ந்ததாகச் சொல்லுகிறார் சக்கரியா. நண்பர்கள்கூட நின்றதில் அடி விழவில்லை. ‘உண்ணித்தான் மாதிரி ஒருத்தனுக்காக DYFIஐ அவமதித்துப் பேசியிருக்கிறீர்கள்’ என்பது அவர்களின் குற்றச்சாட்டு. ‘DYFIஐ நான் அவமதிக்கவில்லை. விமர்சித்திருக்கிறேன். இரண்டும் வேறுவேறு’ என்றிருக்கிறார் சக்கரியா. இத்தனைக்கும் இடையில் தொலைக் காட்சியில் பணியாற்றும் தன் நண்பர் ஒருவரைக் கைப்பேசியில் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்திருக்கிறார். அவர் அதைச் செய்தியாக ஒளிபரப்பவும் செய்திருக்கிறார். இதற்குள் நண்பர்கள் கும்பலைச் சமாதானப்படுத்திச் சாவியை வாங்கி டிரைவரைக் காரை எடுக்கச் சொல்லியிருக்கிறார்கள். சக்கரியாவுக்குப் பாதுகாப்பாக நண்பர்கள் நின்றிருந்ததால் ஆக்கிரமிப்பு நடக்கவில்லை. “பையனூரில் வந்நு இங்ஙனே பிரசங்ஙிச்சிட்டு ஜீவனும் கொண்டு போகான் பற்றில்ல” என்று மிரட்டியிருக்கிறார்கள். “அங்ஙனெயாணெங்கில் வல்ல பெட்டியிலும் போய்க்கொள்ளாம்” என்று பதில் சொல்லியிருக்கிறார் சக்கரியா. அதைச் சொல்லும்போது பயமில்லை. ஆனால் ஓர் எழுத்தாளன் என்னும் நிலையில் வெட்கக்கேடாக உணர்ந்தேன். அவர்கள் கண்ணில் கொலை வெறி இருந்தது. எதேச்சாதிகாரமும் மூடத்தனமும் கொண்ட வறட்டுவாத அரசியலால் உருவாக்கப்படும் வெறியை அந்தக் கண்களில் பார்த்தேன் என்கிறார் சக்கரியா.

மறுபடியும் அவரை உந்தித்தள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். ‘தள்ளுவது தான் தள்ளுகிறீர்கள். கொஞ்சம் பலமாகத் தள்ளினால் காருக்குள் போய் விடுவேனே?’ என்றிருக்கிறார் சக்கரியா. ஆத்திரத்துடன் அவர்கள் தள்ளியதில் எதிர்பார்த்ததுபோலவே வண்டிக்குள் பத்திரமாக விழுந்ததாகச் சொல்கிறார் சக்கரியா. வண்டியும் நகர்ந்தது. கற்களோ கடப்பாரைகளோ தாக்கும் என்று தோன்றியது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

இவையெல்லாம் தற்செயலானவையல்ல என்பதற்குத் திருவனந்த புரத்தில் நடந்த ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில மாநாட்டில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் மாநிலச் செயலாளர் பிணராயி விஜயன் மறுநாள் ஆற்றிய நிறைவுரை சாட்சியாக இருந்தது. திடீரென்று ஏற்பட்ட உணர்ச்சி வேகத்தில் DYFI இளைஞர்கள் ஆவேசப்பட்டுவிட்டார்கள். சம்பவம் தொடர்பாகக் கட்சி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் என்று குறிப்பிட்டார். கூடவே சக்கரியா போன்ற ‘தலைதிரிந்த எழுத்தாளர்’களுக்கு எச்சரிக்கையும் விடுத்தார். ‘நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் எங்கே பேசுகிறோம், யார் நடுவில் பேசுகிறோம் என்பதையும் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.’

இந்தப் பேச்சை எதேச்சாதிகாரத்தின் குரல் என்கிறார் சக்கரியா. பொதுவிவாதத்துக்கு இடங்கொடாமல் நான் சொல்வதைக் கேள் என்று மிரட்டும் சர்வாதிகாரியின் குரல் என்கிறார். ஆனால் இந்த வன் முறைக்குப் பிணராயி விஜயன் வலிந்து ஒரு கோட்பாட்டு முக்கியத்துவம் கொடுக்கிறார். ஓர் அரசியல் அமைப் பின் முன்னால் எழுத்தாளனோ கலைஞனோ அற்பஜீவிகள்தாம். ‘நான் ஒரு எறும்பு என்னைக் கொல்ல எதற்கு வெடிகுண்டு?’ என்று கேட்கிறார் சக்கரியா. அற்பஜீவியானாலும் மானுடத்தின் இருப்பை ஓயாமல் ஞாபகப்படுத்துகிறது என்பதுதான் வெடிகுண்டை வீசக் காரணமாக இருக்கலாம்.

சம்பவம் தொடர்பாகப் போலீசில் புகார் கொடுக்கவும் சக்கரியா விரும்பவில்லை. ‘உண்ணித்தானின் மனைவிக்கு நேர்ந்ததே எனக்கும் நேரும்’ என்பது அவரது கருத்து.

பின் கதை

சக்கரியா என்னும் எழுத்தாளர் கடந்த நான்கு பதிற்றாண்டுக் காலமாகக் கேரள இலக்கிய கலாச்சார உலகில் செயல்பட்டு வருபவர். மலையாள இலக்கியத்துக்குக் காத்திரமான படைப்புகளை அளித்திருப்பவர். அதன் தொடர்ச்சியாக மலையாளிகளின் கலாச்சார, அரசியல் ஈடுபாடுகளின் மீது கருத்துகளை உருவாக்கி வருபவர். வெறும் பொதுப்புத்தியைச் சார்ந்து செயல்படாமல் சிந்தித்துச் செயல்பட மலையாளிகளைத் தூண்டுபவர்களில் ஒருவர். இலக்கியவாதி என்பதையும் மீறி ‘சாம்ஸ்காரிக நாயக’ (கலாச்சார நாயகன்)னாகவும் அங்கீகரிக்கப்பட்டவர். இன்று அதிகாரத்திலிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்த அங்கீகாரத்தை ஒப்புக்கொண்டிருக்கிறது. எனினும் விருப்பமில்லாத ஓர் உண்மை முன்வைக்கப்படுமானால் அதை அச்சுறுத்தல் மூலமோ வன் முறை மூலமோ சரிக்கட்ட முயல்கிறது. இது ஜனநாயகத்துக்கு ஒவ்வாத நடவடிக்கை என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. பொதுவிவாதத்தின் மூலம் பதில் காண முனைவதற்கு மாறாக மாற்றுக் குரலையே அழித்துவிடப் பார்க்கிறது. இது மார்க்சியத்தின் பாடமல்ல, அடிப்படைவாதக் கும்பல்களின் பாணி. சிவசேனைக்கும் ராமசேனைக்கும் மதானியின் பி.டி.பிக்கும் இது பொருந்தும்.

இடதுசாரி இயக்கங்களுக்கு இது களங்கம் என்று கேரளக் கலாச்சார உலகம் இந்தச் சம்பவத்தை விவாதித்துக்கொண்டிருக்கிறது. மலையாள இலக்கியவாதிகள், அறிஞர்கள், கலைஞர்கள் எல்லாரும் கண்டனம் எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள். சக்கரியா தாக்கப்பட்ட சம்பவம் வேறுவகையான அச்சுறுத்தல்களைச் சுட்டிக்காட்டுகிறது. வேறுவகையான கேள்விகளை எழுப்புகிறது. ஒரு கருத்துக்கு எதிர்வினை வன்முறைதான் என்றால் நாம் வாழ்வது ஜனநாயக அமைப்பில் அல்லவா? கருத்துகளை விவாதிக்க அனுமதிக்கப்படும் எல்லாருக்குமான பொதுத்தளம் மூடப்படுகிறதா? தனிமனித ஒழுக்கங்களைக் கட்சிதான் நிர்ணயிக்குமா? அப்படியென்றால் சுதந்திரம் என்பது ஆபத்தானதா? சகிப்பின்மை என்பது அரசியலின் மூல மந்திரமா? அந்த அரசியல்வாதிகளிடம்தான் நம்மை ஒப்படைத்திருக்கிறோமா?

இந்தக் கேள்விகளுடன் ஒரு சமூகம் வாழ்வது செத்துப் பிழைப்பதற்குச் சமம். இன்று கேரள மக்களின் வாழ்க்கையில் இந்தக் கேள்வி நச்சு மரமாக நிமிர்ந்திருக்கிறது. மார்க்சிஸ்ட் கட்சியின் இன்றைய தலைவர்களுக்கு இது ஆபத்தில்லாத ஒன்றாக இருக்கலாம். ஆனால் வெகுமக்கள் வாழ்வின் மீது கரிசனமுள்ள படைப்பாளிகளுக்கும் கலைஞர்களுக்கும் இது மூச்சுத் திணறச் செய்யும் நெருக்கடி.

இடதுசாரி மனப்பாங்கு என்பது மக்களைச் சார்ந்தது. மக்களுக்காகவே எல்லாம் என்பதுதான் அதன் உயிர் நிலை. கலையும் பண்பாடும் மொழியும் தத்துவமும் கோட்பாடும் மக்கள்மீதான அக்கறையிலிருந்து உயிர் பெற்றவை. மாறாக மதத்துக்காக மக்கள், கலாச்சாரத்துக்காக மக்கள், தத்துவத்துக்காக மக்கள், வியாபாரத்துக்காக மக்கள், அதிகாரத்துக்காக மக்கள் என்னும் வலதுசாரி நிர்ப்பந் தங்கள் குறுகிய கண்ணோட்டத்திலிருந்து உருவாக்கப்பட்டவை. கேரளத்தில் இடதுசாரிகள் இன்று கைக்கொண்டி ருக்கும் தாலிபானிய நிலைப்பாடுகளும் ஒழுக்க நீதிகளும் வேறு சக்திகள் தடையின்றி உள்ளே நுழைந்துவிடுவதற்கான வழியைத் திறந்துகொடுக்கும் என்ற அச்சத்தைக் கலாச்சாரச் சூழலில் ஏற்படுத்தியுள்ளன. அப்படி நிகழுமானால் அது ஒரு மாபெரும் மக்களியக்கம் மக்களுக்குச் செய்யும் துரோகமாக இருக்கும்.

No comments:

Post a Comment

சொற்களின்

amma