Friday, April 30, 2010

சிறுவர் கதைகள்

1. காணாமல் போனவன் - ஜப்பானிய சிறுவர் கதை

ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி,காட்டுல வயசான தாத்தாவும் பாட்டியும் இருந்தாங்க. தினமும் காட்டுல இருக்கிற மரங்களை வெட்டி, விறகாக்கி அதை பக்கத்து கிராமத்தில வித்து வந்தார் தாத்தா. ஒரு நாள் மதியம் ரொம்ப களச்சு போய் சாப்பிட உக்காந்தார். பாட்டி அவருக்கு

கேழ்வரகு களி கொடுத்து அனுப்பி இருந்தாங்க. களிய கையில எடுத்ததும் களி
தவறி கீழ விழுந்து உருண்டு ஓடிடுச்சு. பாவம் தாத்தா, அந்த தள்ளாத வயசுல களிய துரத்திட்டு ஓடினார். களி ஒரு பொந்துக்குள்ள விழுந்துடுச்சு. அது எலி பொந்து போல இருந்துச்சு.அய்யோ இனி சாப்பாட்டுக்கு என்ன செய்யறதுன்னு யோசிச்சார்.நல்ல பசி வேற. அப்ப திடீர்னு ஒரு அழகான எலி எட்டி பாத்து..”மிக்க நன்றி தாத்தா” அப்படின்னு சொல்லுச்சு.அட எலி பேசுதேன்னு பாத்தாரு.”நல்லா சாப்பிடுங்க எலி. அழகா இருக்கீங்களே” ன்னு சொன்னாரு. எலி சிரிச்சிட்டு..”நீங்க எங்க அரண்மனைக்கு வரீங்களா?”ன்னு கேட்டுச்சு.

“இந்த சின்ன பொந்துக்குள்ள நான் எப்படி வர முடியும்”ன்னு தாத்தா கீழ உக்கார்ந்துகிட்டாரு. கால் வலி இருந்துச்சு போல. “என் வாலை பிடிச்சிக்கோங்க தாத்தா.கண்ணை மூடிக்கோங்க” ன்னு சொல்லுச்சு எலி. வாலை பிடிச்சிகிட்டார்.கண்ணை மூடிக்கிட்டார்.

எங்கயோ பறக்கற மாதிரி இருந்துச்சு தாத்தாவுக்கு. “தாத்தா வாங்க வாங்க” அப்படி சத்தம் கேட்டு கண்ணை த் தொறந்தார் தாத்தா. எலிக்களோட அரண்மனை தான் அது.நிறைய தங்கம் இருந்தது. எலிகள் சமைத்துக்கொண்டு இருந்தது. சில எலிகள் ஓடி ஆடி விளையாடிட்டு இருந்துச்சு. சில எலிகள் சாப்பாட்டு பொருள்களை எங்கிருந்தோ எடுத்துட்டு வந்துச்சு. எங்க பாத்தாலும் தங்கமா இருந்துச்சு. பெண் எலி ஒன்னு வந்து “தாத்தா உங்களுக்கு பசிக்கும், இந்தாங்க சாப்பாடு” ன்னு சாப்பாடு கொடுத்தது. எலிகள் எல்லாம் பாட்டு பாடிட்டு இருந்துச்சு..

“நாங்கள் இங்கே எலிகள்
நல்ல நல்ல எலிகள்
பூனை சத்தம் வேண்டாமே
எங்கும் அமைதி வேண்டுமே
திலக்கலக்கா திலக்கலக்கா”

தாத்தா பாட்டு கேட்டுகிட்டே சந்தோஷமா சாப்பிட்டார். ராஜா போல இருந்த எலி ஒன்னு தாத்தாவுக்கு மூட்டை நிறைய தங்கம் கொடுத்து அனுப்பிச்சாம்.மறுபடியும் அதே எலி வாலை புடிச்சிக்கிட்டு,கண்ணை மூடிகிட்டு பறந்து அவர் வீட்டுக்கு வந்துட்டார்.

வீட்டுக்கு வந்த தாத்தா, அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை பாட்டிகிட்ட சொன்னாரு. தங்கத்தை எல்லாம் காண்பிச்சாரு.பக்கத்து வீட்டில இருந்த ஒருத்தன் இதை எல்லாம் கேட்டான். அதே பொந்திற்கு போய் ஒரு களி உருண்டைய போட்டான்.அதே எலி வந்துச்சு, அதே போலவே அவனை அவங்க அரண்மனைக்கு கூட்டிட்டு போச்சு.

“நாங்கள் இங்கே எலிகள்
நல்ல நல்ல எலிகள்
பூனை சத்தம் வேண்டாமே
எங்கும் அமைதி வேண்டுமே
திலக்கலக்கா திலக்கலக்கா”

எலிகள் பாடும் சத்தம்.அரண்மனையில எங்க பாத்தாலும் தங்கமா இருந்துச்சாம். இவனுக்கு பேராசை. ஒரு மூட்டை தங்கம் மட்டும் பத்தாது, இதை எல்லாம் எடுத்துக்கலாம்ன்னு யோசிச்சான்.பெண் எலி இவனுக்கு சாப்பாடு எடுத்து வரும் போது “மியாவ் மியாவ்” என சத்தம் போட்டான். எல்லா எலியும் பயந்து எங்க போச்சுன்னே தெரியல.கொஞ்ச நேரத்தில ஒரு எலியும் அரண்மனையில் இல்ல. எல்லா தங்கத்தையும் அள்ளி எடுத்தான். ஆனா அங்கிருந்து எப்படி வெளிய போறாதுன்னு தெரியல.இருட்டா மாறிடுச்சு. கத்தி அழுது பாத்தான். ஒருத்தரும் வரல.அவனை காணம்னு இன்னும் கூட தேடிட்டி இருக்காங்க.பாவம்.

2. சின்னு மரம் - சிறுவர் கதை

சின்னு மரம்.”உஷ் உஷ்” என்ற சத்தமிட்டபடியே இருக்கும் இந்த மரம்.காட்டின் நடுவிலே இருக்கின்றது.அனேகமாக எல்லா விலங்கிற்கும் அணில் மரத்தை பற்றி தெரிந்து இருக்கும். அதன் பெயர் காரணம் தெரியாமல் போனாலும் அது எந்த இடத்தில் இருக்கிறது என எல்லோருக்கும் தெரியும். இந்த மரத்தை “சின்னு மரம்” “சின்னு மரம்” என்று தான் அழைப்பார்கள். பக்கத்து காட்டில் இருந்து ஏதாவது விலங்கு இந்த காட்டிற்கு வந்து, வழி கேட்டால் “சின்னு மரத்திற்கு முன்னால் போங்க” , ” சின்னு மரத்திற்கு இரண்டாம் மரம்” என மற்ற விலங்குகள் வழி காட்டும். அந்த அளவிற்கு சின்னு மரம் காட்டின் முக்கிய சின்னமாக கருதப்பட்டது.

அது சரி அது என்ன அணில் மரம். அந்த கதை ரொம்ப சுவாரஸ்யமா இருக்குமா?. முன்னொரு காலத்தில் இதே மரத்தில் செம்பன், செம்பி என்று இரண்டு அணில் வாழ்ந்து வந்தது. அவர்களுக்கு சின்னு என்ற அழகான அணில் குழந்தை பிறந்தது.பிறந்த சில மாதங்களுக்கு இது மற்ற அணில்களை போல அமைதியாக நல்ல பிள்ளையாக தான் இருந்தது..ஓட ஆரம்பித்த பிறகு வால்தனம் வந்துவிட்டது. கொஞ்ச வால்தனம் எல்லாம் இல்லை, பயங்கர வால்தனம். எந்த மரத்திற்கு சென்றாலும் கலாட்டா தான். கலாட்டா செய்தால் பரவாயில்லையே, அடாவடி செய்ய ஆரம்பித்துவிட்டது.குறும்பு செய்யும் குழந்தைகளை அனைவருக்கும் பிடிக்கும், ஆனால் அடாவடி செய்தால், அடம்பிடித்தால் யாருக்கு தான் பிடிக்கும் சொல்லுங்க.மற்ற அணில்கள் விளையாடும் போது தான் மட்டும் தான் விளையாட்டில் வெற்றி பெற வேண்டும் என சொல்லும்.வயதான காலத்திலும் செம்பனும் செம்பியும் சின்னுவிற்கு உணவினை தேடி எடுத்து வந்து தந்தனர்.சின்னு ஒரு வேலையும் செய்யாமல் இருந்தது.

சின்னு என்ற பெயரை கேட்டாலே சக வயது அணில்கள் ஓடி ஒளிய ஆரம்பித்துவிட்டன. சின்னுவிற்கு நண்பர்கள் என்றே யாரும் இல்லை. இப்படி இருந்தால் எப்படி நண்பர்கள் கிடைப்பார்களாம்? பெரிய அணில்களுக்கு மரியாதையே தராது சின்னு. இப்படி எல்லாம் செய்யக்கூடாது என சொல்லும் தன் அம்மா அப்பாவையும் சில சமயம் விட்டுவைக்காது சின்னு. இந்த கவலையில் செம்பன் செம்பி இருவரும் மனம் வருந்தி இறந்துவிட்டன்ர்.

சரி பெற்றோர் இறந்த துக்கத்திலாவது சின்னு சரியாகிவிடும் என நினைத்த அனைவருக்கும் ஏமாற்றம் தான். அப்பா அம்மா உயிருடன் இருந்த போது கொஞ்சமாவது அவர்களுக்கு பயந்து இருந்தது.இப்போது அட்டகாசம் தாங்கமுடியவில்லை.எல்லா அணிலும் கூடி ஒரு முடிவினை எடுத்தது.” நாங்கள் அனைவரும் உனக்கு தினமும் வேண்டிய உணவினை தருகிறோம்.இந்த மரத்தைவிட்டு வரவே வராதே” என்று வேண்டின. சின்னுவால் மற்ற அணில்களின் தின வாழ்கையே பாதிக்கபடும் நிலையில் இருந்ததால் இப்படி ஒரு முடிவினை அனைவரும் எடுத்தனர்.

அதன்படி தினமும், பழம், உணவு அனைத்தும் மரம் தேடி வந்தது. எந்த வேலையும் செய்யாமல் தினசரி உணவு உண்பதே வேலையாக இருந்தது. காடே அதிசயிக்கும்படி ஒன்று நிகழ்ந்தது. சின்னுவின் வால் நாளுக்கு நாள் நீண்டுகொண்டே போனது. காட்டில் இது தான் பேச்சு. சிங்கம்,புலி, யானை, மான், பாம்பு என எல்லா உயிரினமும் இந்த அதிசயத்தை காண வந்தது.

மரத்தின் உச்சியில் சின்னு இருந்தால் தரை வரை வால் நீண்டுவிட்டது. மரத்தில் உயரம் முப்பது அடி இருக்கும்.பெருத்த வால் இருப்பதால் நகர்ந்து செல்வதே சிரமமாகிவிட்டது. வால் எங்காவது சிக்கி கொள்ளும்.காட்டிலே ஒரு காட்சி பொருளாகிவிட்டது சின்னு,மற்ற காடுகளில் இருந்துகூட விலங்குகள் வர ஆரம்பித்துவிட்டன.முதலில் பெருமையாக இருந்தது, பிறகு அவர்களின் கேலிப்பேச்சு சின்னுவை என்னவொ செய்தது.

தன் தவறுகளை எல்லாம் எண்ணி வருத்தப்பட்டது.அப்பா அம்மா சொல்லை கேட்கவில்லையே, யாருக்கும் மரியாதை தரவில்லையே என நினைத்து அழுதது.சின்ன சின்ன வேலைகளை மெதுவாக செய்ய ஆரம்பித்தது.உணவு கொண்டு வருபவர்களிடம் மரியாதையாக நடக்க ஆரம்பித்தது.நல்ல அணிலாக மாறிவிட்டது.சில மாதங்களில் அந்த பெரிய வால் மறைந்து சின்னு மற்ற அணில்களை போன்று மாறிவிட்டது. பொறுப்பு வந்தது. எல்லோரிடமும் நல்ல பெயர் எடுத்தது. ஆனந்தமாக வாழ்ந்தது.ஆனாலும் அந்த மரத்தின் பெயர் அப்படியே நிலைத்துவிட்டது. சின்ன அணில்களுக்கு சின்னுவின் கதை சொல்லி நல்லபடி நடக்க சொல்வது அந்த காட்டின் வழக்கத்தில் வந்துவிட்டது.

3. காக்கா ஏன் கறுப்பாச்சு? (பர்மா நாட்டு நாடோடிக்கதை)

ரொம்ப காலத்துக்கு முன்னாடி காக்கா வெள்ளையா இருந்துச்சுசாம். வெள்ளைன்னா அப்படி ஒரு வெள்ளை. அப்ப எல்லாம் காக்கா ரொம்ப தூரம் பறக்குமாம். சூரியன் வரைக்கும் பறந்து போகுமாம்.அப்படி இருந்த காக்கா எப்படி கருப்பாச்சு? ஊங் குட்டுங்க செல்றேன்..

சூரியபூர் நாட்டோட ராஜாவுக்கு ரொம்ப வருஷம் கழிச்சு அழகான இளவரசி பிறந்தாங்கலாம். கொள்ளை அழகு. குழந்தையில இருந்து வீட்டை விட்டே வெளிய வரலையாம்.நல்ல பெரியவங்களாகி கல்யாண வயசுல வெளிய விளையாட வந்தாங்கலாம். அவங்க பேரு அங்கிகா. அவங்க விளையாடறத பாத்த சூரியனுக்கு அவங்களை ரொம்ப பிடிச்சு போச்சாம். இளவரசிக்கும் சூரியனை பிடிச்சிடுச்சாம். தினமும் விடியற்காலையில எழுந்ததில இருந்து சூரியன் கிட்ட தான் பேசிட்டு இருப்பாங்கலாம். சூரியனும் பூமிய சுத்திக்கிட்டே இளவரசிகிட்ட பேசிட்டு இருந்ததாம். ரொம்ப நல்ல நண்பர்களா மாறிட்டாங்க. ஒரு நாள் சூரியன் இந்த இளவரசிக்கு பரிசு கொடுக்க நினைச்சுதாம்.

சூரியன் கிட்ட வரைக்கும் காக்கா பறந்துச்சு இல்லையா? அதனால சூரியன் ஒரு காக்காவ கூப்பிட்டு பையில சந்தனம்,வாசனை திரவியங்கள், முத்து மாலை எல்லாம் கொடுத்து இளவரசிகிட்ட கொடுத்துடுன்னு சொல்லிட்டு மறஞ்சி போச்சாம். சாய்ந்திரம் ஆகிடுச்சுன்னா சூரியன் தூங்க போயிடும் இல்லையா? காக்கா அந்த பைய தூக்கிகிட்டு இளவரசி இருந்த அரண்மனைய நோக்கி பறந்து போயிட்டு இருந்துச்சாம்.

வழியில திருமண ஊர்வலம் போயிட்டு இருந்திருக்கு. நிறைய பழங்கள்,உணவுப்பொருட்கள் எடுத்துட்டு போனாங்க போல.காக்காவுக்கு கொஞ்ச உணவாச்சும் கிடைக்குமேன்னு ஆசை. அரண்மனைக்கு போயிட்டு வந்தா தாமதமாகி போகும். சரின்னு அந்த பைய ஒரு மரத்தில மாட்டிட்டு திருமண ஊர்வலத்துக்கு போச்சாம். மரத்துக்கு கீழ இருந்த ஒருத்தன் இந்த காக்கா பைய வெச்சுட்டு போனதை பாத்துகிட்டே இருந்தானாம். நல்ல வாசனை வந்தது. அதனால மரத்தில ஏறி பைய திறந்து பாத்து இருக்கான். பைக்கு உள்ள சூரியன் கொடுத்து அனுப்பின எல்லா பொருளையும் பாத்து சொக்கி போயிட்டானாம்.உடனே எல்லாத்தையும் எடுத்துகிட்டு மரத்தில இருந்த குப்பை எல்லாம் பையில எடுத்து போட்டுட்டு கிளம்பிட்டான்.

காக்கா நல்லா சாப்பிட்டு வந்துச்சாம். பைய எடுத்துகிட்டு இளவரசி அரண்மனைக்கு போயிடுச்சாம்.அங்க இளவரசிகிட்ட சூரியன் கொடுத்த பைய கொடுத்துச்சாம். திறந்து பார்த்த இளவரசிக்கு அதிர்ச்சி. ச்ச..இந்த சூரியன் ஏன் இப்படி பண்ணிடுச்சு. என் மேல அன்பே இல்ல. எல்லாம் நடிப்பு. அவன் பேச்சு இனிமேல் டூன்னு சொல்லிட்டு பைய விசிரியடிச்சிடுச்சாம்.

மறுநாள் காலை,சந்தோஷமா இளவரசிய பார்க்கலாம்ன்னு வந்த சூரியனுக்கு தூக்கி வாரி போட்டுச்சாம். அந்த பை கீழ விழுந்திருந்தத பாத்தே ஏதோ தப்பு நடந்திருக்குதுன்னு புரிஞ்சிடுச்சாம்.பயங்கர கோபம் வந்துடுச்சாம். காக்காவை பார்த்து கோவமா பாத்த உடனே வெள்ளையா இருந்த காக்கா கறுப்பா மாறிடுச்சாம். அதனால தான் சூரியன் கிட்டகூட பறக்க முடியாம போச்சாம். கிட்ட இருந்த சூரியனும் பூமி மேல கோபம் வந்து தூரமா போயிடுச்சாம்.

இப்ப தெரிஞ்சதா காக்கா ஏன் காக்கா கறுப்பாச்சுன்னு?

4. கஞ்ச வியாபாரியும் முட்டாள் உதவியாளர்களும்

முத்து உவமை முன்னொரு காலத்தில் பணக்கார துணி வியாபாரி ஒருவன் இருந்தான், பணக்காரனாக இருந்தாலும் படும் கஞ்சன். அவனிடம் வேலை செய்தவர்கள் அனைவரும் படும் முட்டாள்கள். எங்கே புத்திசாலிகளை வேலைக்கு வைத்தால் அதிக சம்பளம் கொடுக்கணும் என்றும், தன்னிடமே படித்து எங்கே தனக்கு போட்டியாக வியாபாரம் தொடங்கிடுவாங்கன்னு நினைத்தான்.
ஒரு நாள் வழக்கம் விற்பனைக்காக வெளியூர் செல்ல முடிவு செய்தான். விலை உயர்ந்த துணிகளை எல்லாம் நான்கைந்து பெட்டிகளுக்குள் வைத்து மூடினான். எல்லாப் பெட்டிகளையும் ஒரு ஒட்டகத்தின் முதுகில் ஏற்றிவிட்டு மிகக்குறைந்த கூலிக்கு அமர்த்திய முட்டாள் வேலைக்காரர்கள் இருவருடன் புறப்பட்டான்.

அளவுக்கு அதிகமாக பொருட்களை ஏற்றியதால் வழியில் பாரம் தாங்காமல் ஒட்டகம் கீழே விழுந்து விட்டது.

வேலைக்காரர்களைப் பார்த்து அவன், ""நீங்கள் இங்கேயே ஒட்டகத்தைப் பார்த்துக் கொண்டிருங்கள். நான் பக்கத்தில் இருக்கும் ஊருக்குச் சென்று இன்னொரு ஒட்டகம் கொண்டு வருகிறேன். பிறகு சுமையை இரண்டு ஒட்டகத்திலும் சமமாக வைத்துப் பயணத்தைத் தொடரலாம். நான் இல்லாத போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். நான் வருவதற்குள் மழை வந்துவிட்டால் பெட்டிகளை எப்படியாவது நனையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்,'' என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

வேலைக்காரர்கள் இருவரும் சரியான முட்டாள்கள். இது தெரிந்தும் குறைந்த கூலி கொடுத்து அவர்களை விலை பேசியிருந்தான் வணிகன். எல்லாரும் எவ்வளவோ சொன்னார்கள். ஆனால், வியாபாரியோ வழித்துணைக்குதானே இவர்களை அழைத்துச் செல்கிறேன். எடுபடி வேலை செய்யணும். இதனால் எனக்கு ஒரு பாதிப்பும் வராது என்று நினைத்தான்.

சிறிது நேரத்தில் மழை பெய்யத் தொடங்கியது.

"நம் முதலாளி பெட்டிகளை நனையாமல் பார்த்துக் கொள்ளச் சொன்னார். இப்பொழுது என்ன செய்வது?'' என்று கேட்டான் ஒருவன்.

"பெட்டிகளுக்கு உள்ளே இருக்கின்ற துணிகளை எல்லாம் எடுத்துப் பெட்டிகள் மேலே போட்டு மூடுவோம். பெட்டிகள் நனையாமல் பார்த்துக் கொள்வோம்,'' என்றான் அடுத்தவன்.

இருவரும் பெட்டிகளுக்குள் இருந்த விலையுயர்ந்த துணிகளை எல்லாம் எடுத்துப் பெட்டிகளுக்கு மேல் போட்டனர்.

மழையில் நனைந்து துணிகள் எல்லாம் ஈரமாகிவிட்டன.

ஒட்டகத்துடன் திரும்பிய வணிகன், ""ஐயோ! என்னடா செய்தீர்கள்? துணிகள் எல்லாம் நனைந்து வீணாகிவிட்டதே,'' என்று கோபத்துடன் கத்தினான்.

"முதலாளி நீங்க சொன்னபடி பெட்டிகள் நனையாமல் இருப்பதற்காகத் துணிகளை எல்லாம் அதன் மேலே போட்டோம். அந்தப் பெட்டிகள் சிறிது கூட நனையவில்லை. நீங்களே பாருங்கள்,'' என்றான் அவர்களில் ஒருவன்.

"முட்டாள்களான உங்களுக்கு இனி என்னிடம் வேலை இல்லை,'' என்று அவர்களை விரட்டினான் வணிகன்.

கொஞ்சம் காசுக்கு சிக்கனம் பார்க்கப் போய் முதலுக்கே நஷ்டம் வந்ததை எண்ணி வேதனையுடன் ஊர் திரும்பினான் வணிகன்.

No comments:

Post a Comment

சொற்களின்

amma