Showing posts with label எஸ்.ராமகிருஷ்ணன். Show all posts
Showing posts with label எஸ்.ராமகிருஷ்ணன். Show all posts

Thursday, January 28, 2010

சிங்கிஸ் ஐத்மதேவ்


பிரபல ரஷ்ய எழுத்தாளர் சிங்கிஸ் ஐத்மதேவ் 2008 ஜூன் மாதம் பத்தாம் தேதி இறந்து விட்டார் என்ற தகவல் மிகத் தாமதமாக நேற்றிரவு தான் எனக்கு வந்த ஒரு மின்னஞ்சலில் இருந்து தெரிந்து கொள்ள நேர்ந்தது. சமீபத்தில் இறந்து போன ரஷ்ய எழுத்தாளர் சோல்சனிட்சென் இறப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் சிறுபத்திரிக்கை கவனம் ஐத்மதேவிற்கு கிடைக்கவில்லை.


காரணம் சோல்சனிட்சென் சர்ச்சைக்கு உள்ளானர். அமெரிக்க ஊடகங்களுக்கு நன்றாக அறிமுகமானவர். ஐத்மதேவ் தீவிரமான படைப்பாளி, கோர்பசேவின் வலதுகரம் போன்று செயல்பட்டவர். அதனால் தானோ என்னவோ அவரது மரணம் கண்டுகொள்ளப்படாமலே விடுபட்டிருக்கிறது. ஆனால் நான் அறிந்தவரை மத்திய ஆசியாவின் கலாச்சாரத்தை எழுதிய மிக முக்கிய எழுத்தாளர் சிங்கிஸ் ஐத்மதேவ்.


டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, கோகல், துர்கனேவ், செகாவ், கார்க்கி, லெர்மென்தேவ் என்று ருஷ்ய செவ்விலக்கியவாதிகள் அறிமுகமான அளவு ரஷ்ய இலக்கியத்தின் சமகால படைப்புகள் நமக்கு அறிமுகமாகவில்லை. ரஷ்ய நவீன இலக்கியவாதிகளாக அறியப்பட்டவர்களில் சிங்கிஸ் ஐத்மதேவ் தான் தமிழில் அதிகம் வாசிக்கபட்டவர்.

இவரது முக்கிய நாவல்களான முதல் ஆசிரியர், குல்சாரி, ஜமீலா, அன்னைவயல், லாரி டிரைவரின் கதை போன்ற யாவும் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. அவை மிகுந்த வரவேற்பு பெற்றவை. இந்த ஆண்டிற்கான நோபல் பரிசிற்கு அவரை கிர்கிஸ்தானிய அரசு சிபாரிசு செய்துள்ளது.

எண்பதுகளின் துவக்கத்தில் நவீன இலக்கியத்தின் மீது விருப்பம் கொண்டவர்கள் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளும் போது அவர்கள் பேச்சில் ஒருமுறையாவது சிங்கிஸ் ஐத்மதேவ் (Chingiz Aitmatov )பற்றிய குறிப்பு இடம்பெறும். அந்த அளவு தமிழ் சூழலில் அவரது பாதிப்பு ஆழமானதாகயிருந்தது.

ரஷ்ய இலக்கிய இதழ் ஒன்றில் வெளியான சிங்கிஸ் ஐத்மதேவின் சிறுகதையிலிருந்து அவரை தேடி வாசிக்கத் துவங்கினேன். அந்த நாட்களில் ருஷ்ய இலக்கியம் தந்த உத்வேகத்தில் ரஷ்ய மொழி கற்றுக் கொள்வது என்று இலவசமாக ரஷ்ய மொழி கற்று தரும் இஸ்கஸ் அமைப்பில் வாரம் இரண்டு நாள் வகுப்பில் கலந்து கொண்டிருந்தேன்.


ரஷ்ய மொழியை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கான ஒரே ஆசை. தஸ்தாயெவ்ஸ்கியின் ஒரு நாவலையாவது மூல பாஷையில் வாசித்துவிட வேண்டும் என்பது தான். இரண்டு மாத பயிற்சியின் பலனாக தஸ்தாயெவ்ஸ்கி என்ற பெயரை வாசிக்கும் அளவிற்கு ரஷ்ய மொழி பழகியிருந்தேன்.
மொழி கற்றுக் கொள்வதற்காக தனியான இசைத்தட்டுகள், பயிற்சி புத்தகங்கள் மற்றும் அகாரதிகள் தந்திருந்தார்கள். அந்த இசைதட்டுகளோடு

சைகோவ்ஸ்கியின்( TCHAIKOVSKY- Swan Lake ) இசைதட்டு ஒன்று எனக்கு வந்து சேர்ந்திருந்தது.

என்னவென்று புரியாமலே பல நாட்கள் சைக்கோவெஸ்கியை கேட்ட ஆரம்பித்தேன். அது ஒரு மயக்கம். தெருவில் நடமாட்டம் அற்றுப் போன பகல் பொழுதில் வேம்பு கூட காற்றசைவின்றி ஒடுங்கி நிற்கும் போது அறையில் பழைய கிராமபோனை சுழல விட்டு அதன்வழியே சைக்கோவெஸ்கியின் சங்கீதத்தை கேட்பது விசித்திரமாக இருக்கும்.


காற்றில் எப்போதும் புழுதியேறிய கிராமத்தின் தெருவில் சைக்கோவ்ஸ்கி வழிந்து ஒடிக் கொண்டிருப்பார். தெருநாய்கள் கூட அந்த இசைக்கு பழகியிருந்தன. சங்கீதம் கோடையின் உக்கிரமான மழையை போல பொழிய துவங்கி அறையில் நிரம்பி ஜன்னல் தாண்டி வழிய துவங்கும். மழைக்கு பின்பாக காளான்கள் முளைப்பது போல இசை முடிந்த பிறகு மனதில் புதையுண்டிருந்த ஏதேதோ நினைவுகள் பீறிட துவங்கும்.

மூன்று மாத காலம் ரஷ்ய மொழி கற்றுக் கொள்வதற்குள் ரஷ்ய மொழி கற்று தந்த ஆசிரியர் இடம் மாறி போய்விட்டார். புதிதாக ஆசிரியர் இல்லாமல் போனதால் அப்படியே ரஷ்யமொழி வகுப்பு பாதியில் முடிந்தது.

அந்த நாட்களில் ஐத்மத்தோவை தொடர்ந்து வாசிக்க துவங்கினேன். அவரை கார்க்கியோடு ஒப்பிடலாம். ஆனால் கார்க்கியிடமிருந்த நாடோடித்தனம் இவரிடம் குறைவு. அடித்தட்டு மக்களின் மனவுலகை துல்லியமாக பதிவு செய்தவர் கார்க்கி. ஐத்மேதாவிடமிருந்தது டால்ஸ்டாயின் தொடர்ச்சி. ஐத்மேதாவின் புதிதாக கதை சொல்லும் முறையும் நுட்பமான விவரணைகளையும் என்னை வெகுவாக கவர்ந்தது.

குறிப்பாக முதல் ஆசிரியன் படித்து முடித்தபிறகு பல நாட்கள் அதிலிருந்து மீளமுடியாமலிருந்தேன். அப்படியான ஆசிரியர்களை எனக்கு தெரியும். ரஷயாவில் கம்யூனிச அரசு அமைந்த பிறகு நிலங்கள் பொதுவாக்கபட்டு கூட்டுபண்ணைகள் உருவாகின. கம்யூனிசம் உருவாக்க விரும்பும் மாற்றங்கள் குறித்து கிராமப்புற மக்கள் வரை புரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பி கம்யூன் ஒரு ஆளை கிராமத்திற்கு அனுப்பி வைக்கிறது. அவர் எதிர்கொள்ளும் நிகழ்வுகளே இந்த நாவல். அற்புதமாக எழுதப்பட்டு நாவலது. முதல் ஆசிரியனை பின்னாளில் ரஷ்ய திரைப்படமாகவும் பார்த்தேன். ஆனால் நாவல் அளவு என்னால் படத்தில் ஒன்றிப்போக முடியவில்லை. அந்த நாவல் என்னை ஆழமாக பாதித்தது.

அதன் தொடர்ச்சியாக ஐமீலாவை படிக்க துவங்கினேன். சமகால நாவல்களில் முக்கியமான காதல் கதை இதுவே என்பேன். ரஷ்ய இலக்கியத்தில் தனித்துவமான காதல்கதைகள் நிறைய இருக்கின்றன. அதில் எனக்கு மிகவும் பிடித்தது தஸ்தாயெவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள். அது போல துர்கனேவின் ஆஸ்யா, செகாவின் டார்லிங். இந்த வரிசையில் ஜமீலாவை சேர்த்துக் கொள்ளலாம். ஜமீலா திருமணமான பெண்ணிற்கு வரும் காதலைச் சொல்கிறது. இசையும் காதலும் ஒன்று சேர்ந்த நாவலது.

அதன்பிறகு அன்னை வயலை வாசித்தேன். ஜமீலாவோடு ஒப்பிடும் போது அன்னை வயல் ஒரு குறுநாவலே. யுத்த பின்புலத்தில் எழுதப்பட்டது. நான் வாசித்தவரையில் சிங்கிஸ் ஐத்மதோவின் உயர்சாதனை என்று குல்சாரியை சொல்வேன்

பேர்வெல் குல்சாரி என்று ஆங்கிலத்தில் வெளியாகி உள்ளது. தமிழ் ஆங்கிலம் இரண்டு பதிப்புகளையும் வாசித்திருக்கிறேன். நவீன ரஷ்ய நாவல்களில் முக்கியமானது குல்சாரி.

ஐத்மதேவ் மத்திய ஆசியநிலவியலில் வாழ்ந்த மனிதர்களின் கதையை தான் எழுதுகிறார். குறிப்பாக கிர்கிஸ்தானிய மனிதர்கள் எந்த அளவு மரபில் ஊறியவர்கள். அவர்களை புத்துலக சிந்தனைகள் எப்படி மாற்றுகின்றன. நவீனமாற்றங்களை வரவேற்று அவர்கள் எப்படி நகர்மயமாக முயற்சி செய்தார்கள் என்பது அவரது கதைகளின் மையசரடாக வெளிப்படுகிறது.

குல்சாரி நாவல் நகரில் வாழும் தன் மகன் மனைவியின் பேச்சை கேட்டுக்கொண்டு தன்னை அவமதிப்பாக உணரும் தனாபாய் என்ற முதியவர் மகனோடு வாழ விருப்பமற்று தன் சொந்த கிராமத்தை நோக்கி குதிரையில் திரும்ப முயற்சிக்கிறார். அவரது கிராமம் ஸ்டெப்பி புல்வெளியினுள் உள்ளது. இந்த பயணத்தின் ஊடாக அவருக்கு பழைய நினைவுகள் பீறிடுகின்றன.
நீண்ட பயணம். தனிமை, களைப்பு மற்றும் வயதான தன்மை இதனால் அவரும் குதிரையும் பாதிக்கபடுகிறார்கள். பலவருடமாக துள்ளிதிரிந்த குதிரை தள்ளாடுகிறது. எப்படியும் வழியில் இறந்து போய்விடும் என்பதை உணர்ந்த முதியவர் குதிரையோடு தன் கடந்தகால நினைவுகளை பேசத்துவங்குகிறார். அவரது வாழ்வு குதிரையின் வாழ்வும் பிரிக்கமுடியாதபடி ஒன்று கலந்திருப்பதை நாவல் விவரிக்கிறது.

ஒரு கிராமத்து விவசாயிகளாக தன்வாழ்வை துவக்கிய தனபாய் என்னபாடுகளை அடைந்தார். எப்படி அதிலிருந்து தன்னை வளர்த்து கொண்டார் என்பதை விரிவாக பேசுகிறது நாவல். இதில் கிர்கிஸ்தானுக்குள் அக்டோபர் புரட்சியின் விளைவுகள் ஏற்பட்டது. அதை அவர் எதிர்கொண்ட விதம் மற்றும் கம்யூனிச சிந்தனைகளை ஏற்றுக் கொண்டு உறுப்பினராகியது, அதிலிருந்து அவர் நீக்கப்பட்டது. வாழ்வில் தான் கண்டு அடைந்த உண்மைகளுடன் வாழ முற்படுவது என்று ஒரு மனிதனின் அகபுற சிக்கல்களை நாவல் விவாதிக்கிறது.

ஐத்மதேவின் நாவல்களில் வரும் பெண்கள் தைரியசாலிகள். அவர்கள் வாழ்வை உன்னிப்பாக கவனிக்கிறார்கள். முன் உணர்ந்து கொள்கிறார்கள். அதன் மாற்றத்தை எதிர்கொள்கிறார்கள். அவர்களின் இயல்பான மனவெழுச்சிகள் முக்கியமானவை. கல்வி கிடைக்காத சமூக சூழலிலிருந்து விடுபடும் பெண்கள் எப்படி சுயசிந்தனை மிக்கவர்களாக செயல்படுகிறார்கள் என்பதை அவரது கதைகள் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றன. நாட்டார் மரபிசையும் நினைவுகளாக தேங்கி நிற்கும் பழங்கதைகளும் படைப்பின் ஊடாக வெளிப்படுகின்றன.

தனிநபர்களின் வாழ்வோடு பிரிக்க முடியாதபடி தேசத்தின் சரித்திரமும் நினைவுகளும் கலந்திருக்கின்றன. மனித உறவுகள் பொய்த்து போன சூழலில் வாழ்வை முன்செலுத்த இன்றும் நம்பிக்கை தருவதாக இருப்பது நிலமும் நிலப்பரப்பும் தான். எல்லா வலிகளுக்கும் வேதனைகளுக்கும் மாற்றாக நினைவுகள் மட்டுமே துணைநிற்கின்றன.

இயற்கை மனிதர்களால் ஒரு போதும் வெல்ல முடியாதது. அதை புரிந்து கொள்ளாமல் இயற்கையை சீரழிக்கிறோம் நாம், இவையே ஐத்மேதாவின் படைப்புகளில் திரும்ப திரும்ப வரும் முக்கிய அம்சங்கள்.

ஸ்டெப்பி புல்வெளியும் அதன் பிரம்மாண்டத்தையும் கோகலை போல எழுதியவர்கள் எவருமில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அதிலும் குறிப்பாக தாரஸ்புல்பா என்ற நாவல் அளவிற்கு நிகராக ஸ்டெப்பியை வேறு எவரும் எழுதிவிட முடியாது என்றிருந்த எனக்கு ஐத்மேதாவ் ஸ்டெப்பியை எழுதிய விதம் வியப்படைய செய்தது.

அதிலும் ஒரு கிழவனும் குதிரையும் மட்டுமே கடந்துசெல்லும் பிரம்மாண்டமான அந்த பெருவெளியும் சாவின் முன்னால் அவர்களுக்குள் ஏற்படும் நெருக்கமும் கடந்த கால நினைவுகளும் அற்புதமானவை
குதிரைகளுக்கும் மனிதர்களுக்குமான உறவு விசித்திரமானது. குதிரை வெறும் வளர்ப்பு பிராணியல்ல. அதே நேரம் வெகு மூர்க்கமானதும் அல்ல. குதிரை பயணத்திற்கான தோழன் என்பதில் துவங்கி மெல்ல அந்தரங்கமான ஸ்நேகம் கொண்டுவிடுவதை பலரது குறிப்புகளிலும் வாசிக்க முடிந்திருக்கிறது.

தமிழில் குதிரைகளை பற்றிய கதைகள் குறைவு. ஆனால் உலக இலக்கியத்தில் குதிரைகளை முன்னிறுத்திய கதைகள் என்றே தனியாக நூறு கதைகள் எடுக்கலாம். அவ்வளவு எழுதப்பட்டிருக்கிறது. குறிப்பாக மகனை பறிகொடுத்த துக்கத்தை குதிரையோடு பகிர்ந்து கொள்ளும் குதிரைவண்டிக்காரனை பற்றிய செகாவின் கதை முக்கியமானது.

ருஷ்ய இலக்கியத்தின் பிரதான ஒசையே குதிரைகளின் காலடி சப்தம் தான். தேவாலயமணிகளும் குதிரைகளின் காலடி ஒசையும், எளிய மனிதர்களின் கண்ணீரும், வேசைகளின் தூக்கமற்ற இரவுகளும், பகட்டான விருந்துகளும், பனிநிரம்பிய நிலப்பரப்பும், சுயஅடையாளம் குறித்த தேடுதல் கொண்ட மனிதர்களும் தான் ருஷ்ய இலக்கியத்தின் பிரதான அம்சங்கள்.

ருஷ்ய இலக்கியம் தனக்கென தனியான வாசனை கொண்டது. அதை வாசிக்கையில் உணர முடியும். அதிலும் தஸ்தாயெவ்ஸ்கி போன்றவர்கள் காட்டும் ரஷ்ய உலகம் இருளும் அகநெருக்கடியும் விசும்பலும் நிரம்பியது.

சிங்கிஸ் ஐத்மேதாவ் ரஷ்ய மொழியில் எழுதிய போதும் அவரது நினைவுகள் முழுவதும் கிர்கிஸ்தானிய நிலப்பரப்பும் அதன் வாழ்வின் மீதே கவிந்திருக்கிறது. அதன் நாட்டார் கதைமரபு அவரது கதைகளில் வலியுறுத்தபடுகிறது. ஆடுகள் கிர்கிஸ்தானிய கலாச்சாரத்தில் மிக முக்கியமானவை. குறிப்பாக பலியாடு ஒரு புனித சின்னம். அதுபோல அவரது நாவலில் ரஷ்ய சட்டங்களுக்கு பலியான குறியீடு போல பயன்படுத்தபட்டுள்ளது.

அதுபோலவே கிர்கிஸ்தானிய விளையாட்டான புஷ்காஸி பற்றி விரிவாக ஐத்மதேவ் எழுதியிருக்கிறார். இந்த விளையாட்டில் இரண்டு குழுக்கள் குதிரைகளில் எதிரெதிராக வந்து ஒருவரோடு மற்றவர் சவுக்கால் அடித்து சண்டையிட்டு நடுவில் வைக்கபட்டிருந்த ஆட்டின் தலையை கைப்பற்றி கொண்டு செல்ல வேண்டும் . இது ஒரு வீர விளையாட்டு. மரபான இந்த விளையாட்டு ஐத்மதேவ் நாவலில் பல இடங்கல் இடம்பெற்றிருக்கின்றது

தமிழில் ராதுகா பதிப்பகத்தால் ரஷ்ய மொழியிலிருந்து நேரடியாக மொழியாக்கம் செய்யப்பட்ட ஐத்மேதாவின் நாவல்கள் தமிழில் சிறந்த வாசக கவனத்திற்கு உள்ளாகியது. குல்சாரியும் திரைப்படமாக வெளிவந்துள்ளது. இப்படம் கிராண்ட் பிரிக்ஸ் விருதுபெற்றுள்ளது.

இயக்குனரும் நடிகருமான பொன்வண்ணன் ஐத்மதேவின் தீவிர ரசிகர். இவர் தனது திரைப்படங்களுக்கு கூட அன்னை வயல், ஜமீலா என்று பெயரிட்டுள்ளார். அந்த அளவு தமிழ் வாசகர்களிடம் ஐத்மேதாவின் நேரடியான பாதிப்பு இருந்தது

சிங்கிஸ் ஐத்மதேவ் கால்நடை மருத்துவம் படித்தவர். சில ஆண்டுகாலம் ரஷ்யாவின் பிராவ்தா இதழில் பணியாற்றியிருக்கிறார். பிறகு கிர்கிஸ்தானிய தூதுவராக பல ஆண்டுகாலம் ஐரோப்பிய நாடுகளில் பணியாற்றியுள்ளார். இவரது மகன் கிர்கிஸ்தானிய அமைச்சரவில் இடம்பெற்றவர். இலக்கிய பங்களிப்பிற்காக லெனின் விருதுபெற்றவர். 10 ஒன்ய்ங் 2008.

இவரது முக்கிய படைப்புகள் Face to Face (1957), Jamilla (1958) , The First Teacher (1962) , The Camel Eye (1960), The Girl with the Red Scarf (1960), Farewell, Gulsary! (1966), Red Apple (1964), The White Ship (1970) , The Soldier�s Son (1971), Early Cranes (1975), Piebald Dog Running Along the Shore (1977), The Day Lasts More Than a Hundred Years (1980), The Dreams of a She-Wolf (1990), The Scaffold (1988) and The Mark of Cassandra (1995).

குல்சாரியை படித்த முடிக்கும் எவரும் அதன்பிறகு குதிரையை ஒரு மிருகம் என்று மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளமுடியாது. அந்த அளவு ஆழமான பாதிப்பை வாசகனிடம் உருவாக்கிய ஐத்மதேவ் விடைபெற்று சென்று விட்டார்

எங்கோ அவர் அறிந்திராத தமிழ்மொழியில் அவரை வாசித்த பல நூறு வாசகர்களில் ஒருவனாக அவரது மரணதுயரை பகிர்ந்து கொண்டு சொல்கிறேன்

போய்வாருங்கள் ஐத்மதேவ். உங்களது ஐமீலாவும் குல்சாரியும் உள்ளவரை நீங்கள் உலகெங்கும் இருப்பீர்கள். குதிரைகளுடன் பேச தெரிந்த அற்புதமான மனிதன் நீங்கள். அது எங்கள் நினைவில் அப்படியே இருக்கிறது.

மோனோநோகி

ஜப்பானின் புகழ்பெற்ற அனிமேஷன் இயக்குனர் ஹயோ மியாசகி (Hayao Miyazaki )இயக்கிய 1997ல் வெளியான Princess Mononoke படத்தை கடந்த ஒருவாரத்தில் நான்குமுறை பார்த்துவிட்டேன்.

சமீபத்தில் அவதார் திரைப்படம் ஏற்படுத்திய வியப்பை விடவும் பலமடங்கும் இந்த படம் என்னை பாதித்தது. தொழில்நுட்ப ரீதியாகவும் கற்பனையான கதை சொல்லும் முறையிலும் இதுவரை நான் பார்த்த அனிமேஷன் படங்களில் இதுவே ஆகச்சிறந்தது என்பேன்.


மியாசகியின் அனிமேஷன் படங்களை ஒவ்வொரு குழந்தைகளும் அவசியம் காணவேண்டும். குறிப்பாக சிறார்பள்ளிகள் மற்றும் பூங்காங்களில் இவை தொடர்ந்து திரையிடப்பட வேண்டும். இந்த படங்கள் சிறுவர்களை சந்தோஷப்படுத்துவதுடன் கற்றுக் கொடுக்கின்றன. அவர்களது கற்பனை திறனை வளப்படுத்துகின்றன.


அதிலும் இளவரசி மோனோநோகி ஒவ்வொரும் பார்க்க வேண்டிய அவசியமான உலகதிரைப்படம். மோனோநோகி ஒரு சாகசகதை. இளவரசன் அஷிதஹா எமிஷி இனக்குழுவை சேர்ந்தவன். அது ஒரு பழங்குடி இனம். அவர்கள் காட்டை சார்ந்து வாழ்பவர்கள். அவர்கள் கிராமத்தை அழிக்க வரும் மூர்க்கமும் விநோதமுமான கரடி ஒன்றை அவன் கொல்கிறான். அந்த கரடியின் உடலில் இருந்த மயிர்கள் அவன் கையை பற்றிக் கொண்டுவிடுகின்றன. அந்த கறுப்புரோமம் அவனது கையில் மாறாத அடையாளமாகிவிடுகிறது.


அந்த கரடி சாகும்போது அவர்களை அழிப்பேன் என்று சாபம் கொடுத்துவிடுகிறது. கிராமத்தில் உள்ள குறி சொல்லும் வயதான பெண் அந்த கரடி தீமையின் உருவம் என்று அதன் சாபம் அஷிதஹாவின் மீது படிந்துவிட்டது. அவன் அந்த சாபத்தின்படியே கரடியால் ஏற்படுத்தப்பட்ட கருந்தேமல் வளர்ந்து அவனை கொன்றுவிடும் என்கிறாள்.


அதிலிருந்து மீட்சிபெறுவதற்காக இளவரசன் காட்டின் கடவுளை சந்திக்க புறப்படுகிறான். இனிமேல் அவன் உயிரோடு திரும்ப மாட்டான என்றே மக்கள் நம்புகிறார்கள். அவனது தலைமயிரில் ஒன்று வெட்டப்படுகிறது. அப்படி ஒரு மனிதனின் தலைமயிர் ஒன்றை துண்டித்துவிட்டால் அவன் இறந்துவிட்டதாகவே நம்பிக்கை. ஊரை பொறுத்தவரை அவன் இறந்து போன ஒருவனே. ஆனால் இளவரசன் தனது மீட்சிக்காக காட்டிற்குள் செல்கிறான்.

காடும் அதன் வாழ்க்கையும் முன் அறியாத விந்தை உலகமாக இருக்கிறது.
இளவரசன் குதிரைக்கு பதிலாக ஒரு சிவப்புநிற மானை பயன்படுத்துகிறான். அது ஒரு கற்பனையான மிருகம். அதன் பெயர் யாகூல். அது இளவரசனை காட்டிற்குள் அழைத்து போகிறது. அங்கே ஒநாய் இளவரசி ஒருத்தியை சந்திக்கிறான். அவள் மானுடப்பெண். ஆனால் ஒநாய்களால் வளர்க்கபடுகிறவள். ஒநாய் என்றாலே பயமும் வெறுப்பும் கொள்ளும் குழந்தைகளை ஒநாய்களை செல்லபிராணிகள் போல அத்தனை உயிர்ப்பும் நெருக்கமும் கொள்ள செய்கிறது இக்கதை. அந்த ஒநாய் இளவரசி காட்டிற்குள் தனது இனத்தை காக்க போராடிக் கொண்டிருக்கிறாள்.


இந்த கதை பதினாலாம் நூற்றாண்டில் நடைபெறுகிறது. அந்த காலத்தில் ஜப்பானில் சுரங்கம் தோண்டும் முயற்சிகள் தீவிரமாக இருந்தன. குறிப்பாக நிலக்கரி மற்றும் தாதுக்களை தேடி காட்டை அழிக்க ஆரம்பித்திருந்தார்கள். இந்த கதையிலும் அதுபோன்ற இரும்பு நகரம் ஒன்று வருகிறது. அது காட்டின் மேற்குபகுதியில் உள்ளது. அங்கே நிலக்கரி மற்றும் இரும்பு தாது எடுப்பதற்காக தொழுநோயாளிகள் பயன்படுத்தபடுகிறார்கள்.இரும்பை கொண்டு ஆயுதங்கள் செய்து அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்று ஆசைப்படும் யபோஷி என்ற சீமாட்டி அந்த இரும்பு நகரை ஆள்கிறாள். அவள் காட்டை தன் கட்டுபாட்டிற்குள் வைத்திருக்கிறாள்.


காட்டில் உள்ள ஆதி இனக்குழுவினரை தேடிதேடி அழிக்கிறாள். அவளிடம் நவீன ரக துப்பாக்கிகள் இருக்கின்றன. காட்டுவாசிகளிடம் ஆயுதம் இல்லை. அவர்கள் மறைந்திருந்து தாக்குகிறார்கள். அவள் துப்பாக்கியால் அவர்களை சுட்டு வீழ்த்துகிறாள். இந்த போராட்டம் நடந்து கொண்டிருந்த சூழலில் இளவரசன் அஷிதஹா காட்டிற்குள் சென்று கொண்டிருந்த சாமுராய் வீரர்களை ஆபத்தில் இருந்து காப்பாற்றுகிறான். அந்த வீரர்கள் யபோஷி சீமாட்டியின் பணியாளர்கள். காட்டிற்குள் ஜிகோ என்ற துறவியின் நட்பு கிடைக்கிறது. அவர் சாபத்திலிருந்து அவனை விடுவிக்க காட்டின் கடவுளால் மட்டுமே முடியும் என்று வழிகாட்டுகிறார்.


காட்டுவாழ்க்கை அச்சமும் திகைப்புமாக நீள்கிறது. ஒரு நாள் காட்டின் கடவுள் தன் இன்னிசையுடன் தண்ணீரின் மீது காற்றை போல கடந்து போகிறார். அவரது தொடுதல் பட்டு இளவரசன் புத்துயிர் பெறுகிறான். அவனை ஒநாய் இளவரசி காப்பாற்றி துணை செய்கிறாள். அவளை காதலிக்க துவங்குகிறான் இளவரசன். யபோஷி சீமாட்டியை அழிப்பதே தனது லட்சியம் என்று ஒநாய் இளவரசி சொல்கிறாள். அவளுடன் இணைந்து சீமாட்டியை எதிர்க்க துவங்குகிறான் இளவரசன். அவர்களது மீட்சியும் ஒநாய் இனத்தின் விடுதலையும் ஒன்று சேர்க்கின்றன.


சாபம் அதிலிருந்து மீள்வதற்கான பேராட்டம் இறுதி யுத்தம் என்று கதையின் ஒரு தளம் செல்லும் போது மறுதளம் இயற்கையின் விசித்திர உயிர்கள், அவை சந்திக்கும் பிரச்சனைகள் அதற்கான மாற்றுவழிகளை படம் விவரிக்கிறது. இன்னொரு பக்கம் மனிதர்கள் இயற்கையை இன்றுவரை புரிந்து கொள்ளவேயில்லை. அதை வெறும்பயன்பாடாக மட்டுமே கருதுகிறார்கள் என்பதை விளக்கும் காட்டின் கடவுள் மற்றும் மீமாய அற்புதங்கள் இடம் பெறுகின்றன. அதிகார போட்டி ஆயுதங்கள் உருவாக்குவது அதற்காக நோயாளிகளை பிடித்துவந்து வேலை வாங்குவது என்று சமகால உலகின் வன்முறைகளையும் படம் சித்திரிக்கிறது.


காடு சதா இயங்கிக் கொண்டேயிருக்கிறது. எங்கிருந்தோ மறைந்து இரண்டு கண்கள் உற்று நோக்குவதை போல காடு அதில் நடக்கும் இயக்கங்களை உற்று பார்த்தபடியே இருக்கிறது. காட்டின் கடவுள் நடந்து செல்லும்போது இலைகள் துளிர்க்கின்றன. நீர் அலையாகிறது. வனம் பூக்கிறது. செடிகொடிகள் பசுமையாகின்றன. காற்று தாவுகிறது. காட்டின் கடவுள் இசையாகவே கடந்து போகிறார். அவரது காலடிகள் தண்ணீரில் மீது சலனம் ஏற்படுத்தி மறைகின்றன. காடு கடவுளின் நடமாட்டத்தினை கொண்டாடுகிறது.

கோடமா என்ற மரங்களின் ஆன்மா எப்போதுமே சந்தோஷத்தையும் அழகையும் வாறி இறைத்தபடியே இருக்கிறது. அதுபோலவே நைட் வாக்கர் எனப்படும் இரவில் நடக்கும் உருவம். அது காட்டின் ஆன்மா இரவில் தன்னை ஒளிரும் உருவமாக மாற்றிக் கொள்கிறது என்பதையே சுட்டுகிறது.


அதுபோலவே இரும்பு நகரில் உள்ள தொழுநோயாளிகள் மற்றும் வேசைகளின் உலகம். அங்கே பெண்கள் தான் கடுமையான வேலைகளில் ஈடுபடுகிறார்கள். இரும்பை உருக்கும் வேலையை செய்பவர்கள் பெண்கள். அவர்கள் துப்பாக்கிசெய்கிறார்கள். ஆண்கள் பெண்களை சார்ந்தே வாழ்கிறார்கள். தொழுநோயாளிகளை சமூகம் புறக்கணித்து ஒதுக்கி வைத்த போது யபோஷி சீமாட்டி அவர்களை தனது பிரஜைகளாக்கி கொள்கிறாள். அவர்கள் அவளுக்காக விசுவாசமாக இருக்கிறார்கள். அந்த உறவும் நெருக்கமும் சிறப்பாக படத்தில் உள்ளது.


ஒநாய் குலமும் அதன் வீழ்ச்சியும் கதையின் முக்கிய சரடாக உள்ளது. ஒநாய்கள் மனிதர்கள் தங்களை நேசிப்பதேயில்லை என்று குற்றம்சாட்டுகின்றன. காடு எப்போதும் உறங்குவதேயில்லை என்று படத்தில் வசனம் இடம்பெறுகிறது. படம் முழுவதுமே பௌத்தசாரம் வழிந்தோடுகிறது. நேசமும் அன்புமே மனிதனின் ஆதார உணர்ச்சிகள் என்பதை படம் ஆழமாக வெளிப்படுத்துகிறது.


ஒரு லட்சத்திநாற்பத்திநான்காயிரம் சித்திரங்களை கையால் வரைந்து இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். மிக குறைவாகவே கணிணி தொழில்நுட்பம் பயன்படுத்தபட்டிருக்கிறது. இந்த கதையை பதினாறு வருசம் தன் மனதிலே வளர்த்து மாற்றிமாற்றி எழுதியிருக்கிறார் மியாசகி. மரபான நிறக்கலவையும் இயற்கையின் தனித்துவமிக்க நிறங்களும் படத்தில் பயன்படுத்தபட்டிருக்கின்றன. இசையும் காட்சிகோணங்களும் வெகு அற்புதமானவை. காட்டின் உன்னதம் இசையாக்கபட்டிருக்கிறது. இந்த கதை மாங்கா காமிக்ஸ் புத்தகமாகவும் வெளியாகி உள்ளது. ஜப்பானில் அதிக வசூல் செய்தபடங்களில் இதுவும் ஒன்று.


உலகெங்கும் இதிகாசங்கள் எப்போதுமே இயற்கை சார்ந்தே எழுதப்படுகிறது. கானகவாழ்க்கையை விவரிக்காத இதிகாசங்களே இல்லை. நமது மகாபாரதம் ராமாயணம் இரண்டிலும் கானகவாழ்வே கதையின் மையப்பகுதியாக உள்ளது. அவ்வகையில் இந்த மோனோநோகியும் இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவையும் மனிதர்கள் இயற்கையை அழித்தொழிப்பதில் காட்டும் அதிவேக அக்கறைகளுமே பதிவாகி உள்ளது.


வால்ட் டிஸ்னியின் அனிமேஷன் திரைப்படம் மரபான ஒவிய வகையை சேர்ந்தவை. அத்துடன் அவரது கதாபாத்திரங்களில் வேடிக்கை பிரதானமாகி கற்பனையும் அது சார்ந்த கதை சொல்லுதலும் மிக குறைவாகவே இருக்கின்றன. அவர் கற்பனையான கதாபாத்திரங்களை உருவாக்குவதிலும் அவற்றை ஒன்றோடு ஒன்று மோதவிட்டு நடைபெறும் வேடிக்கைகளை பிரதிபலிப்பதிலுமே அதிக அக்கறை கொண்டிருக்கிறார்.


கலாச்சாரம் பண்பாடு அது சார்ந்த பன்முகப்பட்ட கதை சொல்லல் போன்றவற்றில் டிஸ்னியின் ஈடுபாடு அதிகமில்லை. அவர் எந்த தேசத்தின் கதையையும் அமெரிக்க மக்களுக்கான கதைசொல்லும் முறையாக மாற்ற தெரிந்தவர். அமெரிக்க மக்கள் கதாபாத்திரங்களின் செயல்களில் தான் அதிக நாட்டம் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கதாபாத்திரங்களின் வழியே வெளிப்படும் குறியீடுகள், சங்கேதங்கள், ஆழ்ந்த மெய்தேடல், அர்த்தமற்ற கனவுகள், அறிவு தேடல் போன்றவற்றை பிரதானமாக கருதுவதில்லை.

இயற்கை குறித்த டிஸ்னியின் பார்வை எவ்விதத்திலும் தனித்துவமானதில்லை. இயற்கையை அவர் கொண்டாடுவதில்லை. அதே நேரம் புறக்கணிப்பதுமில்லை. அதை அவர் பயன்பாடு என்ற நிலையிலே பெரிதும் அணுகுகிறார். அவரது ஒவியஉலகில் காணப்படும் இயற்கை சித்தரிப்புகள் பெரும்பாலும் தட்டையானவை. விசித்திரமான தாவரம். அதன் இலைகள் மற்றும் பூக்கள் என்று இயற்கையை உற்று நோக்க அதிகம் விரும்புவதில்லை.

டிஸ்னி மிருகங்களின் உடலை ரப்பர் போல உருவகித்து கொள்கிறார். அந்த கதாபாத்திரங்களுக்கு அற்புத சக்திகளோ, அதியமான திறன்களோ அதிகமிருக்காது. அவை தினசரி வாழ்வு சார்ந்தே ஒன்றையொன்று சந்திக்கின்றன. அந்த சந்திப்பை சுவராஸ்யமாக்குவது அதன் போராட்டம் . அதிலிருந்து உருவாகும் நகைச்சுவை.

பெரும்பாலும் பசித்தலும் உறக்கமும், ஊர் சுற்றலும், கேளிக்கை விருந்துகளும், தினசரி வாழ்வை சுகமாக்கி கொள்ள விரும்பும் கனவுகளுமே அவரது கதை சொல்லுதலில் முக்கியமாக இருக்கின்றன முட்டாள்தனம் என்று பொதுவான சுட்டிக்காட்டப்படும் தருணங்களே அவரது கதை நிகழ்வுகள். முட்டாள்தனத்தை வேடிக்கையாக்கி சிரிப்பது பொதுபுத்தி. அது உலகெங்குமே உள்ளது..

டிஸ்னியின் கற்பனை மிருகங்கள் ஒரு போதும் அநாகரீகமாக பேசுவதில்லை. அவை படித்த நடுத்தரவர்க்க மனிதனை போலவே பல நேரங்களில் நடந்து கொள்கின்றன. மறைபொருள்தன்மைக்கு டிஸ்னியிடம் அதிக இடமில்லை. அதை குழந்தைகள் விரும்புவதில்லை என்று அவர் நினைத்திருக்க கூடும். ஆலீஸின் அற்புத உலகையும் குட்டி இளவரனையும் குழந்தைகளுக்கு பிடித்திருப்பது அதன் எண்ணிக்கையற்ற உள்தளங்கள் மற்றும் குறியீடுகள், சங்கேதங்கள் கணிதபுதிர்கள் மற்றும் உயரிய கற்பனையே. அதை மிக எளிமைப்படுத்தினார் டிஸ்னி.

பல்வேறு தேசங்களின் தேவதை கதைகளும், அராபிய கதைகள், ஆலீஸ், போன்ற குழந்தைகளுக்கான புகழ்பெற்ற கதைகளே அவரது ஆதார பிரதிகள். அதை காட்சிபடுத்துவதில் அவர்கள் அடைந்த வெற்றியே அந்த திரைப்படங்களை உலகெங்கும் கொண்டாட செய்தன. ஆனால் டிஸ்னியின் கதாபாத்திரங்கள் என்ன செய்யும் என்பதை ஒரு குழந்தை தொடர்ந்து பார்ப்பதன் வழியே கண்டுபிடித்துவிடுகிறது. இது சாப்ளினுக்கு நடந்ததுபோன்ற ஒன்றே. சுவாரஸ்யமாக இருப்பினும் சாப்ளின் எப்படி நடந்து கொள்வார் என்பதை குழந்தைகள் முன்கூட்டியே உணர்ந்து கொண்டுவிடுகின்றன. ஒரு வகையில் இது பெரிய அதிர்ஷடம். இன்னொரு வகையில் இது ஒரு போதாமை.

டிஸ்னியின் போதாமையை இன்றுள்ள குழந்தைகள் அதிகம் உணருகிறார்கள். அவர்கள் மரபான அனிமேஷன் படங்களில் இருந்து விலகி உயர்கற்பனையும். பன்முக கதை சொல்லும் முறையும் கொண்ட அனிமேஷன்படங்களை காணவே விரும்புகிறார்கள். டிஸ்னி வலுவான எதிர்நாயகர்களை ஒரு போதும் உருவாக்கியவரில்லை. அவரது வில்லன்கள் இயல்பானவர்கள். அவர்கள் தீமையின் பிரதிபலிப்புகள் இல்லை. மாறாக நெருக்கடியில் இருந்து உருவானவர்கள்.

அதுபோலவே ஒவ்வொரு நிகழ்வின் பின்பும் ஒய்வு எடுப்பது தான் அவரது கதாபாத்திரங்களின் முக்கியமான செயல். ஒய்வை சீர்குலைப்பதோ, ஒய்வெடுக்க விடாமல் துரத்தபடுவதோ தான் பல கதாபாத்திரங்களின் செயல்பாட்டிற்கான ஆதாரபுள்ளியாக இருக்கிறது.

டாம் அண்ட் ஜெரி என்ற இரண்டு கதாபாத்திரங்கள் அனிமேஷன் உலகில் மிக பிரபலமானவை. அவற்றை உருவாக்கியவர்கள் வில்லியம் ஹன்னா மற்றும் ஜோசப் பார்பேரா.

டாம் அண்ட் ஜெரி ஜோடிகளின் முக்கிய வேலை ஒருவரது ஒய்வை மற்றவர் கெடுப்பதே. அதிலிருந்து தான் துரத்துதல், அடித்தல், தப்புதல் போன்றவை நடைபெறுகின்றன. டாம் அண்ட் ஜெரியை தொடர்ந்து பார்க்கும் சிறுவர்கள் அடிப்பதும் அடித்தபிறகு ஒடி ஒளிவதும் அடிபடுதலும் அவசியமானது என்று நம்புகிறார்கள். ஆனால் வலியை வெளிப்படுத்த கூடாது. அடிபடும் டாம் ஒரு முறை கூட தன் உடல் வலிக்காக கண்ணீர்விடுவதில்லை. ஜெர்ரியும் அப்படியே. அவை நெருக்கடிக்குள் தன்னை புகுத்திக் கொள்கின்றன. அல்லல்படுகின்றன. மீண்டு ஆசுவாசம் கொள்கின்றன

இந்த வகை அனிமேஷன் படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை ஜப்பானிய அனிமேஷன் படங்கள் .இவை மிக உயர்ந்த கற்பனை திறன் கொண்டவை. கதை சொல்லுதலிலும் ஜப்பானிய பழங்கதை மரபையும் நவீனத்துவத்தையும் ஒன்று சேர்ப்பவை. ஜப்பானிய அனிமேஷனின் தனிச்சிறப்பு அதன் கதாபாத்திரங்கள். அவர்கள் அதிசயத்தையும் இயல்பையும் ஒருங்கே கொண்டவர்கள். சூப்பர்மேன் ஸ்பைடர்மேன் போல அதிமனிதர்கள் இல்லை.
சாதாரண மனிதர்கள்

ஆனால் சில வேளைகளில் அதிசயமான சக்தி கொண்டவர்கள். அந்த சக்தி அவர்களை வழிநடத்துகிறது. தீமைக்கு எதிராக நன்மை மேற்கொள்ளும் முயற்சியே அந்த அதிசயமாக வெளிப்படுகிறது. அது போலவே இயற்கை பல்வேறு பின்னல்களும் மாய, யதார்த்த உயிரினங்களும், விசித்திரங்களும், மயக்கமூட்டும் நிறமும் ஒசையும் கொண்டதாக சித்திரிக்கபடுகிறது.

ஒருவகையில் நமதுபுராதன வாழ்வும் அதன் நினைவுகளுமே ஜப்பானிய அனிமேஷனில் முக்கிய அம்சமாக வெளிப்படுகிறது.
அதே நேரம் மாநகரங்கள் உருவாக்கபட்டு மக்களது வாழ்வு தொழில்நுட்ப ரீதியாக மிக மேம்பாடு உள்ளதையும் இந்த கதைகள் கணக்கில் எடுத்து கொள்கின்றன. நகரங்களின் விசித்திரங்களையும், இங்கும் கானகம் போலவே அறியாத வீதிகளும் அதன் உள்ளே ஒளிந்து வாழும் மனிதர்களை பற்றியும் நகரங்களின் வன்முறை பெருகிய இரவு வாழ்க்கையும் அதன் ஊடாடும் மனித துயர்களையும் முன்வைக்கின்றன.


இன்று அமெரிக்க அனிமேஷன் துறையை விட பலநூறு மடங்கு பெருகி சாதனை புரிந்திருக்கிறது ஜப்பானிய அனிமேஷன். தொழில்நுட்ப ரீதியாக அவர்கள் உருவாக்கிகாட்டிய சாதனைகளை இப்போது தான் ஹாலிவுட் பயன்படுத்தவே துவங்கியிருக்கிறது. இதற்கு சிறந்த உதாரணம் Final Fantasy​ . இதன் அனிமேஷன் மற்றும் விளையாட்டு வடிவங்கள் எட்டு பகுதியாக வெளியாகி உள்ளன. கின்னஸ் சாதனை புரிந்த அனிமேஷன் படமிது. இந்த படத்தில் பயன்படுத்தபட்ட தொழில்நுட்ப உத்திகளின் விரிவாக்கமே இன்று அவதாரிலும் இடம்பெற்றிருக்கிறது.


இவ்வளவு புகழ்பெற்றுள்ள ஜப்பானிய அனிமேஷன் உலகின் கடவுள் என்று புகழப்படுபவர் ஹயோ மியாசகி. அது உண்மையும் கூட. இவர் கடவுளை போலவே தனது கற்பனையை பயன்படுத்துகிறார். இருப்பதில் இருந்து புதியதை உருவாக்குகிறார். ஒவ்வொன்றையும் தனித்துவமானதாக உருவாக்கி காட்டுகிறார். இவரது கதை சொல்லும் உத்தி ஹிட்ச்காக்கின் திரைப்படங்களுக்கு இணையானது. அடுத்த என்ன நடக்கும் என்று பதைபதைப்பை இவரது கதை சொல்லல் இயல்பாகவே கொண்டிருக்கின்றன.

அதே வேளை மரபா

சொற்களின்

amma