Showing posts with label கதைகள். Show all posts
Showing posts with label கதைகள். Show all posts

Friday, April 30, 2010

ஆற்றாமை -கு.ப.ரா

‘உட்காரேண்டி! போகலாம். என்ன அவசரம்’ என்று சாவித்திரி புரண்டு படுத்துக்கொண்டு சொன்னாள்.
‘இல்லை. அவர் வருகிற நேரமாகிவிட்டது. போய் காபிக்கு ஜலம் போட்டால் சரியாயிருக்கும்!’ என்று எழுந்து நின்றாள் கமலா.

‘ஆமாம், காபி போடுவதற்கு எத்தனை நாழியாகும்? வந்த பிறகு கூடப் போகலாம். உட்கார். எனக்குப் பொழுதே போகவில்லை.’

momentsweremember500

அப்பொழுது ‘கமலா’ என்று கூப்பிட்டுக்கொண்டே ராகவன் வந்துவிட்டான்.

‘பார்த்தாயா. வந்துவிட்டார்!’ என்று சொல்லிவிட்டு கமலா தன் அறைபக்கம் ஓடினாள்.

சாவித்திரி படுத்தபடியே தலைநிமிர்ந்து பார்த்தாள்; ராகவன் மனைவியைப் பார்த்து சிரித்துக்கொண்டே உள்ளே நுழைந்தான். கமலா, ‘அதற்குள் நாழியாகிவிட்டதா?’ என்று கேட்டுக்கொண்டே பின்னால் போனாள்.

அறை சற்று தூரத்திலிருந்தபோதிலும் கொஞ்சம் சாதாரணமாகப் பேசினால் காதில் விழாத தூரத்தில் இல்லை. இளம் தம்பதிகளுக்கு அக்கம் பக்கம் ஞாபகம் சில சமயங்களில் இருக்கிறதே இல்லையல்லவா?

‘போங்கள்; இதென்ன விளையாட்டு. யாராவது வரப் போகிறார்கள்!’ என்று கமலா மகிழ்ச்சியுடன் சொன்னது அரை குறையாக சாவித்திரி காதில் பட்டது. அந்த அறையில் பொங்கிய இன்பம் ஏறிய காற்று சாவித்திரியிடம் வந்தபொழுது அவள் மூச்சு திணறிற்று. வேதனை உள்ளத்தையும், உடலையும் ஏதோ செய்ய, பெருமூச்சு விட்டுக்கொண்டு குப்புறப்படுத்துக்கொண்டாள்.

சாவித்திரியின் புருஷன் வடக்கே எங்கோ மிலிடரி சர்வீஸில் இருந்தான். சாஸ்திரத்துக்காக சாந்தி முகூர்த்தம் நடந்த மூன்று நாள் இருந்துட்டு அவசர அவசரமாகப் போய்விட்டான். வருஷம் இரண்டாயிற்று. கடிதங்கள் வந்தன. ஆள் வரக்காணோம்.

சாந்திமுகூர்த்தம் ஆகாமல் வைத்திருந்தால் நாலுபேர் ஏதாவது சொல்லுவார்கள் அல்லவா? அதற்காக சம்பந்திகள் இருவரும் சேர்ந்து முகூர்த்தத்தை நடத்திவிட்டார்கள். பிறகு பெண்ணை விட்டுவிட்டுப் பையன் எவ்வளவுக் காலம் இருந்தாலும் பாதகமில்லை. நாலு பேர் பிறகு வாயைத் திறக்கமாட்டார்கள்.

ஆனால், அந்தச் சாந்திமுகூர்த்தம் சாவித்திரிக்கு யமனாகத்தான் பட்டது. உள்ளத்தை அவள் ஒருவிதமாக முன்போலவே அடக்கி ஒடுக்கிவிட்டாள். உடல்தான் ஒடுங்க மறுத்தது. ஒடுங்கின உள்ளத்தையும் தூண்டிவிட்டது. அந்த மூன்று நாள் அனுபவித்த ஸ்பரிச சுகத்தை அதனால் மறக்க முடியவில்லை. வாய்விட்டு அலறிற்று.

சாவித்திரி நல்ல சரீரக்கட்டு படைத்த யுவதி. இளமைச் செருக்கு அவள் உடலில் மதாரித்து நின்றது. அதன் இடைவிடாத வேட்கையை அவளால் சகிக்கமுடியவில்லை.

‘இந்த கமலாவுக்கு எவ்வளவு கொழுப்பு! அகமுடையான் அருகில் இருந்தால் இப்படியெல்லாமா குதிக்கச் சொல்லும்? என்னிடம் வந்து என்ன பீத்திக்கொள்வது வேண்டியிருக்கிறது? நான் கிடக்கிறேன் வாழாவெட்டி போல. என்னிடம் வந்து என்ன கும்மாளம்! இல்லை. வேண்டுமென்றுதான். நான் பார்த்து வேதனைப்பட வேண்டும் என்றுதான் இப்படியெல்லாம் செய்கிறாள் போலிருக்கிறது! சதா இவள் அகமுடையான் சொன்னது என்ன பிரதாபம்! இவள்தான் அகமுடையானைப் படைத்தவளோ?... ஏன் தலைகீழா நிற்கமாட்டாள். உடனொத்தவள் நான் தனியாகக் கிடந்து சாவதைப் பார்த்து நாம் இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறோமே என்று அவளுக்குப் பெருமை! நான் நொந்துகிடக்கிறேன், நொந்துபோயிருப்பேன் என்று கொஞ்சமாவது அவளுக்குத் தோன்றினால் _ எப்படித் தோன்றும்? பட்டால் அல்லவா தெரியும் அவளுக்கு.’

சாவித்திரி பொருமிக்கொண்டே படுத்திருந்தாள்.

‘ஏண்டி, ஏந்து குழாய் ஜலம் எடுத்துக்கொண்டு வந்து வைக்கப்படாதோ, இந்தா காபி!’ என்று அவள் தாயார் வந்தாள்.

‘எல்லாம் ஆகட்டும். அதற்குத்தானே பெத்தே என்னை. செய்கிறேன். போ!’

‘இதோ இருக்கு காபி. நான் அந்த தெருவுக்குப் போயிட்டு வரேன். ராத்திரிக்கு வரமுடியாதோ என்னவோ...’ ‘நீ வந்து இங்கே என்ன செய்யப்போறே. உங்கண்ணா ஆத்துலேயே இருந்துட்டுவா!’

‘ராத்திரி ஜாக்கிரதையா கதவைத் தாப்பா போட்டுண்டு...’

‘ஆகட்டும், ஆகட்டும் போ!’

அவள் தாயார் நார்மடிப் புடவையைச் சரிபடுத்திக்கொண்டு விபூதி இட்டுக்கொண்டு அந்தத் தெருவுக்குப் புறப்பட்டுப் போனாள். சாவித்திரியின் பக்கத்திலிருந்த காபியின் சூடு ஆறிவிட்டது. சாவித்திரியின் உள்ளத்திலிருந்த சூடு ஆறவில்லை.

புருஷன் ஆபீஸ் போனதும் கமலா வந்தாள். ‘அம்மாமி காபி சாப்பிடல்லயா?’

சாவித்திரி அவளை அசூயையுடன் பார்த்துக்கொண்டு ‘ஆறிப் போய்விட்டது, சாப்பிடவில்லை!’ என்றாள்.

‘நான் தரட்டுமா? அவருக்குச் சாயந்திரத்திற்குப் பிளாஸ்கில் போட்டு வைத்திருக்கிறேன். தரேனே, பிறகு போட்டால் போச்சு!’

‘வேண்டாம், எனக்கு வேண்டியிருக்கவில்லை. நெஞ்சைக் கரிக்கிறது.’

‘இன்னிக்கி சினிமாவுக்குப் போவோமான்னேன், நாளைக்கு ஆகட்டும்னார். நீங்களும் வர்ரேளா அம்மாமி?’

‘நன்னாயிருக்கு, நீங்க இரண்டுபேரும் தமாஷா போகிறபோது நான் நடுவில்...’

‘போங்க அம்மாமி!’ என்று சந்தோஷத்துடன் கூறினாள் கமலா. சாவித்திரிக்குக் கமலாவின் பூரிப்பு விஷமாக இருந்தது.

‘என்ன அம்மாமி, உடம்பு ஒரு மாதிரி இருக்கேளே?’

‘எனக்கென்ன கேடு, ஒன்றுமில்லை.’

‘கருகிய மொட்டு’ என்று ஒÊரு நாவல் கொண்டு வந்திருக்கிறார். படிக்கலாமா?’ என்று சொல்லி, கமலா எழுந்துபோய் புத்தகத்துடன் வந்து உட்கார்ந்தாள்.

மேல் அட்டையில் சித்திரம் ஒன்று. அதை கமலா வெட்கத்துடனும் சிரிப்புடனும் சாவித்திரிக்குக் காட்டினாள்.

ஒருவன் நாற்காலியில் உட்கார்ந்து ஆழ்ந்து யோசனையிலிருக்கிறான். கையிலிருந்த புத்தகம் கீழே விழுந்து கிடக்கிறது. பின்னால் மனைவி வந்து புன்னகையுடன் நிற்கிறாள். அவனுக்குத் தெரியாமல்.

‘இதற்கு என்ன அர்த்தம் அம்மாமி?’ என்று கமலா கேட்டாள்.

‘புருஷன் ஏதோ கவலைப்பட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கிறான். தருணம் தெரியாமல் அசட்டுமனைவி சிரித்துக்கொண்டு வந்து நிற்கிறாள்போல் இருக்கிறது.’

கமலாவின் புன்னகை மறைந்துவிட்டது.

‘அப்படியா இருக்கும்?’

‘வேறென்ன இருக்கப்போகிறது?’ என்று சாவித்திரி சிரித்துக்கொண்டே குரூரமாகச் சொன்னாள்.

‘இருக்காது, அம்மாமி!’

‘பின் எப்படி இருக்கும்?’

‘வந்து, வந்து புருஷன் அவளை, நினைத்துக்கொண்டே படிக்கிறான். மெய்மறதியில் புத்தகம் கீழே விழுகிறது. அவள் வெகு நேரம் வரவில்லை. கடைசியில்...’

‘அதுதான் இருக்கவே இருக்கே!’

‘படிக்கலாமா?’

‘படியேன்.’

கமலா படித்தாள் வெகுநேரம். சாவித்திரி காதில் எவ்வளவு விழுந்ததோ?

‘ஐயோ, நாழியாகிவிட்டதே! படித்துக்கொண்டே இருந்துவிட்டேன். போகிறேன்!’ என்று கமலா மாலை ஐந்து மணிக்கு எழுந்து தன் வீட்டிற்குப் போனாள்.

சாவித்திரி எழுந்திருக்கவில்லை. வீடு கூட்டுகிறவள் வந்தாள். ‘நான் கூட்டிக்கொள்கிறேன் போ!’

பூக்காரி வந்தாள்.

‘இன்னிக்கிப் பூ வாண்டாம்!’

இருட்டிவிட்டது. இருட்டி வெகுநேரம் ஆகிவிட்டது. ராகவனும் கமலாவும் கொட்டம் அடித்தது அவளுக்குச் சகிக்கவே இல்லை. வீட்டில் அயலார் இருப்பதுகூட அவர்களுக்கு நினைவில்லையா? ஆத்திரத்துடன் எழுந்து மின்சாரவிளக்கைப் போட்டுவிட்டு மறுபடியும் படுத்துக்கொண்டாள்.

‘இலை போட்டுவிட்டேனே வாருங்களேன்!’ என்றால் கமலா.

‘அதற்குள்ளா... இப்பவே சாப்பிட்டுவிட்டு...’

‘எனக்குத் தூக்கம் வருகிறது.’

‘தூக்கம் வருகிறதா!’ என்று ராகவன் சிரித்தான். சாவித்திரி காதில் எல்லாம் விழுந்தது.

கமலா இலையை வாசலில் கொண்டு போட்டுவிட்டு கம்பிக் கதவையும், ரேழிக் கதவையும் தாழ்ப்பாளிட்டுக்கொண்டு திரும்பினவள் எதிர்த்த உள்ளில் சாவித்திரி மயங்கி மயங்கிப் படுத்துக்கொண்டிருந்ததைப் பார்த்து, ‘அம்மாமி, சாப்பிட்டாச்சா?’ என்றாள்.

‘ஆச்சு!’

கமலா உள்ளே போய்த் தாளிட்டுக் கொண்டாள்.

கலியாணக்கூடம் போட்ட வீடு. இரண்டு பக்கங்களிலும் குடி. இரண்டு பக்கக்கூடத்து உள்ளுகளுக்கும், ரேழியிலும் கதவுகள்.

இரவு எட்டே மணிதான் இருக்கும். ஊர் ஓசைகூட அடங்கவில்லை. கமலாவின் பக்கத்தில் ஓசை அடங்கிவிட்டது. சாவித்திரிதான் எழுந்திருக்கவே இல்லை.

‘ராகவன்!’ என்று வாசலில் மெதுவான குரல் கேட்டது.

முதலில் சாவித்திரி வாயை மூடிக்கொண்டு இருந்துவிட்டாள். பிறகு Êஏதோ நினைத்துக்கொண்டு எழுந்து மெதுவாக ரேழிக்கதவைத் திறந்துகொண்டு திண்ணையண்டை போனாள்.

வாசலில் ராகவன் வயதுள்ள வாலிபன் ஒருவன் நின்று கொண்டிருந்தான்.

‘ராகவன் இருக்கிறாரா?’

‘இருக்கார்!’ என்று சாவித்திரி கம்பிக் கதவைத் திறந்துவிட்டு உள்ளே திரும்பினாள்.

வாலிபன் ரேழிக்கு வந்து தயங்கினான்.

சாவித்திரி சற்று மெதுவான குரலில் ‘அந்த ரேழிக்கதவைத் தட்டுங்கள்!’ என்றாள் ஜாடையுடன்.

வாலிபன் திரும்பவும் தயங்கினான்.

‘வெறுமனே தட்டுங்கள், திறப்பார்!’ என்றாள். ஒருவிதமான குரூர ஆனந்தத்துடன் சொல்லிவிட்டுத் தன் அறைக்குள் போய் உட்கார்ந்து கொண்டு, ஆவலுடன் நடைபெற போவதை எதிர்பார்த்தாள்.

வாலிபன் ‘ராகவன்’ என்று கதவைத் தட்டினான்.

சிறிது நேரங்கழித்து ‘யார்?’ என்ற உறுமல் கேட்டது.

‘நான்தான்!’

‘நான்தான் என்றால்?’ என்று சீறிக்கொண்டு ராகவன் கதவைத் திறந்துகொண்டு உள்ளே இருந்தபடியே எட்டிப்பார்த்தான்.

‘நான்தான் சீனு, மதுரை.’

‘ஓ, வாருங்கள்!’ என்று ராகவன் பலதரப்பட்ட உள்ளக்கலவரத்தில் கதவைத் திறந்தபடியே விட்டுவிட்டு ரேழியில் நுழைந்து சீனுவை வாசலுக்கு அழைத்துக்கொண்டு போனான்.

ஒரு வினாடி சீனுவின் கண்களில் ஒரு காட்சி தென்பட்டது. மின்சார விளக்கு எரிந்துகொண்டிருந்தது. வாசற்படிக்கு எதிரே கமலா ஆடை நெகிழ்ந்த நிலையில் படுத்திருந்தவள் ராகவன் உடம்பு கதவு திறந்த இடத்திலிருந்து விலகினதும் சடாரென்று எழுந்து கட்டிலை விட்டுக்குதித்து சுவரோரம் ஓடினாள்.

சாவித்திரி இன்னும் கொஞ்சம் நன்றாகப் பார்த்தாள். கமலா தலையில் கட்டுப்பூ தொங்கிக்கொண்டிருந்தது. அறையிலிருந்து மல்லிகை வாசனையும் ஊதுவத்தி வாசனையும் கம்மென்று வெளியேறின.

அந்தரங்கம் திறந்துகிடந்தது போன்ற அந்த அறையை அதற்கு மேல் அவளால் பார்க்கமுடியவில்லை. ஏகாந்தம் ஆடையற்று நின்றது போன்ற அந்த ஒளி அவள் கண்களுக்குக் கூச்சத்தைக் கொடுத்தது. சத்தப்படாமல் அறைக்கதவைச் சாத்திக்கொண்டாள்.

திடீரென்று ஒரு வருத்தமும், பச்சாதாபமும் தோன்றி அவளைத் தாக்கின.

‘என்ன காரியம் செய்தேன்!’ என்ன பாவம் செய்தோ, யாரைப் பிரித்துவைத்தோ இப்பொழுது இப்படித் தனியாகக் கிடந்து தவிக்கிறேன். ஐயோ...’

அளவற்ற ஆவலில் ஒன்றையொன்று கவ்விக்கொண்டு கலந்த இரண்டு உள்ளங்கள் ஒரு கணத்தில் சிதறி தூரத்தில் விழுந்தன. கமலா கண்ணீர் பெருகாத தோஷமாக, மகாகோபத்துடன் ஆடையைச் சீர்திருத்திக்கொண்டு விளக்கை அணைத்துவிட்டுப் படுக்கையில் படுத்தாள்.

சீனுவை அனுப்பிவிட்டு ராகவன் உள்ளே வந்தான்.

மெதுவாகக் கட்டிலில் ஏறிக் கமலாவைத் தொட்டான். கமலா அவன் கையைப் பிடுங்கி உதறி எறிந்தாள்.

‘இன்னொரு கதவையும் நன்றாகத் திறந்து விடுகிறதுதானே!’

‘ஓ, ஞாபகமில்லை கமலா!’

‘ஞாபகம் ஏன் இருக்கும்?’

‘சின்ன விஷயத்துக்கு ஏன் பிரமாதப் படுத்துகிறாய்?’

‘சின்ன விஷயமா? என் மானம் போய்விட்டது.’

ராகவனுக்கு அதுவும் இதுவுமாக எரிச்சல் கிளம்பிற்று.

‘எவ்வளவு போய்விட்டது?’ என்று சீறினான்.

‘போதும் வாயை மூடுங்கள். அண்டை அயல் இருக்கிறது!’ என்று அவளும் சீறினாள்.

சாவித்திரியின் காதில் இதுவும் விழுந்தது. குப்புறப்படுத்துக்கொண்டு விம்மி விம்மி அழுதாள்.

‘பாவியை என்ன செய்தால் என்ன?’ என்று புலம்பினாள்.

கமலா மூக்கைச் சிந்தும் சத்தம் கேட்டது.

‘திருப்திதானா பேயே!’ என்று சாவித்திரி தன்னைத் தானே உரக்கக் கேட்டுக்கொண்டாள்.

ஒரு நாள் கழிந்தது -புதுமைப்பித்தன்

"கமலம்! அந்தக் கூஜாவிலே தண்ணீர் எடுத்தா! வெற்றிலைச் செல்லம் எங்கே? வச்சது வச்ச இடத்தில் இருந்தால்தானே?" என்று முணுமுணுத்தார் முருகதாசர்.
கையில் இருக்கும் கோரைப் பாயை விரிப்பதே ஒரு ஜாலவித்தை. நெடுநாள் உண்மையாக உழைத்தும் பென்ஷன் கொடுக்கப் படாததால் அது நடு மத்தியில் இரண்டாகக் கிழிந்து ஒரு கோடியில் மட்டிலும் ஒட்டிக் கொண்டிருந்தது. அதை விரிப்பது என்றால் முதலில் உதறித் தரையில் போட்டுவிட்டு, கிழிந்து கிடக்கும் இரண்டு துண்டுகளையும் சேர்த்துப் பொருத்த வைக்க வேண்டும். அதுதான் பூர்வாங்க வேலை. பின்பு, விடுதலை பெற முயற்சிக்கும் அதன் கோரைக் கீற்றுகள் முதுகில் குத்தாமல் இருக்க ஒரு துண்டையோ அல்லது மனைவியின் புடவையையோ அல்லது குழந்தையின் பாவாடையையோ எதையாவது எடுத்து மேலே விரிக்க வேண்டும்.
முருகதாசரைப் பொறுத்தவரை (அது அவரது புனை பெயர்) அது இரண்டு பேர் செய்ய வேண்டிய காரியம்.
மறுபடியும், "கமலா!" என்று கூப்பிட்டார்.
சமையல் + உக்ராண + ஸ்நான அறை மூன்று நான்கு கட்டுகள் தாண்டி, துண்டாக, அலாதியாக இருப்பதால் இவருடைய பாய் விரிப்புக் கஷ்டங்கள் அந்த அம்மையாருக்கு எட்டவில்லை.
சென்னையில் 'ஒட்டுக் குடித்தனம்' என்பது ஒரு ரசமான விஷயம். வீட்டுச் சொந்தக்காரன், குடியிருக்க வருகிறவர்கள் எல்லாரும் 'திருக்கழுக்குன்றத்துக் கழுகு' என்று நினைத்துக் கொள்ளுவானோ என்னமோ!
'குடித்தனக்காரர் குடியிருக்க இரண்டு ரூம் காலி' என்று வெளியில் போட்டிருந்த போர்டை நம்பித்தான் முருகதாசர் வீடு வேட்டையின் போது அங்கே நுழைந்தார்.
உள்ளே வீட்டின் பாக வசதிதான் விசித்திரமாக இருந்தது. முன்பக்கம், ஒற்றைச் சன்னல் படைத்த ஒரு சிற்றறை. அதற்கப்புறம் எங்கோ பல கட்டுகள் தாண்டி மற்றொரு அறை. அதுதான் சமையல் வகையராவுக்கு. முதல் அறை படிக்க, படுக்க, நாலு பேர் வந்தால் பேச இவை எல்லாவற்றிற்கும் பொது இடம். முதலில், முருகதாசர் பொருளாதாரச் சலுகையை உத்தேசித்தே அதில் குடியிருக்கலாம் என்று துணிந்தார். அதனால், தமக்கும் தம் சகதர்மிணிக்கும் இப்படி நிரந்தரமான 'பிளவு' இருக்கும் என்று சிறிதும் எட்டி யோசிக்கவில்லை; மேலும் அவர் யோசிக்கக் கூடியவரும் அல்லர்.
பக்கத்தில் இருந்த அரிக்கன் விளக்கை எடுத்துக் கொண்டு அவர் சமையல் பகுதியை நோக்கிப் பிரயாணமானார்.
இடைவழியில், குழாயடியில், உள்ள வழுக்குப் பிரதேசம். அடுத்த பகுதிக்காரர் விறகுக் கொட்டில் முதலிய விபத்துக்கள் உள்ள 'பிராட்வே' யை எல்லாம் பொருட்படுத்தாது, ஒருவாறு வந்து சேர்ந்தார். சமையல் அறை வாசலில் ஒரே புகைமயம் "கமலம்!" என்று கம்மிய குரலில் கூப்பிட்டுக் கொண்டு உள்ளே நுழைந்தார்.
உள்ளே புகைத் திரைக்கு அப்பாலிருந்து, "வீடோ லட்சணமோ! விறகைத்தான் பார்த்துப் பாத்து வாங்கிக் கொண்டு வந்தியளே! ஒங்களுக்கிண்ணு தண்ணீலே முக்கிக் கொடுத்தானா? எரியவே மாட்டுதில்லை? இங்கே என்ன இப்பொ? விறகு வாங்கின சீரைப் பாத்து மகிழ வந்திட்டியளாக்கும்?" என்று வரவேற்புப் பத்திரம் வாசிக்கப் பட்டது.
"தீப்பெட்டியை இப்படி எடு! அதுக்காகத்தான் வந்தேன்!" என்று நடைப் பக்கமாகப் பின் நோக்கி நடந்தார்.
"இங்கே குச்சியுமில்லை, கிச்சியுமில்லை! அலமுவெ தீப்பெட்டி வாங்க அனுப்பிச்சேன். மண்ணெண்ணெய் விளக்கே நீங்கதான் துடைச்சிக் கொள்ளணும்!" என்றாள் கமலம்.
"குழந்தையை அந்தியிலே வெளியிலே அனுப்பிச்சையே, நான் வந்த பிறகு வாங்கிக் கொள்ளப் படாதா?" என்று அதட்டினார் முருகதாசர்.
"ஆமாம், சொல்ல மறந்தே போயிட்டுதே... செட்டியார் வந்து விட்டுப் போனார், நாளை விடியன்னை வருவாராம்!" என்றாள் கமலா.
முருகதாசர் இந்தப் பாசுபதாஸ்திரத்தை எதிர்பார்க்கவில்லை.
"வந்தா, வெறுங்கையை வீசிக்கிட்டுப் போக வேண்டியதுதான்! வாரத்துக்கு நேரம் காலம் இல்லை?" என்று முணுமுணுத்துக் கொண்டே வெளியேற முயற்சித்தார்.
"அங்கே, எங்கே போயிட்டிஹ, ஒங்களைத்தானே! கொஞ்சம் நல்லெண்ணை வாங்கிட்டு வாருங்களேன்!"
"எங்கிட்ட இப்பொ துட்டுமில்லே, காசுமிலே!" என்று திரும்பி நின்று பதிலளித்தார் முருகதாசர்.
"அதுவும் அப்படியா! இன்னா இந்த மிளவொட்டியிலே(*மிளகுப் பெட்டி - ஐந்தரைப் பெட்டி) மூணு துட்டு (*ஓர் அணா; ஒரு துட்டு - நான்கு பாண்டி நாட்டு தம்பிடி) இருக்கு. அதெ எடுத்துகிட்டுப் போங்க!"
"வந்ததுக்கு ஒரு வேலையா? அங்கே ஒரு பாடு எழுதித் தொலைக்கணும். இங்கே உனக்கு இப்பத்தான் எண்ணெ புண்ணாக்கு - பகலெல்லாம் என்ன செய்துகிட்டு இருந்தே? இருட்ன பொறவா என்னை வாங்குறது! எல்லாம் நாளைக்குப் பார்த்துக்கலாம்!"
"சோம்பல் வந்தா சாத்திரமும் வரும். எல்லாம் வரும். ஏன் அண்ணைக்குப் போய் வாங்கிட்டு வரலியா? எல்லாம் உங்களுக்குத்தான். இப்பத்தான் அப்பளக்காரன் வந்து கொடுத்துட்டுப் போனான்; பிரியமா சாப்பிடுவேளென்னு சொன்னேன். பின்னே அந்தச் சின்னக் கொரங்கே என்ன இன்னும் காணலே! போனப்ப போனதுதான்; நீங்கதான் சித்த பாருங்களேன்!"
இவ்வளவிற்கும் அவர் இருந்தால்தானே! விறகுப் பிரதேசத்தைத் தாண்டி வழுக்குப் பிரதேசத்தை எட்டிவிட்டார். புகையையும் பேச்சையும் தப்பி வந்தால் போதும் என்றாகி விட்டது. முருகதாசரின் ஆஸ்தான அறையின் ஒரு விசித்திரம் என்னவென்றால் சென்னையில் 'லைட்டிங் டைம்' அட்டவணையைக் கூட மதிக்காமல் அது இருண்டுவிடும்.
இம்மாதிரி மண்ணெண்ணெய் நெருக்கடி ஏற்படாத காலங்களில் அந்த அறைக்குத்தான் முதலில் இராத்திரி. ஆனால் எண்ணெய் நெருக்கடிக் காலங்களில் சிவபெருமானின் ஒற்றைக் கண் போன்ற அந்த அறையின் சன்னல், எதிர்ப்பக்கம் நிற்கும் மின்சார விளக்குக் கம்பத்திலிருந்து கொஞ்சம் வெளிச்சத்தைப் பிச்சை வாங்கும். கார்ப்பொரேஷன் தயவு வரும் வரை, ஸ்ரீ முருகதாசர் வேறு வழியில்லாமல் தெரு நடையில் நின்று அலமுவின் வருகையை எதிர்நோக்கியிருக்க வேண்டியதாயிற்று.
முருகதாசர் வானத்தை அளக்கும் கதைகளைக் கட்டுவதில் மிகவும் சமர்த்தர்; 'சாகாவரம் பெற்ற' கதைகளும் எழுதுவார். அந்தத் திறமையை உத்தேசித்து, ஒரு விளம்பரக் கம்பெனி மாதம் முப்பது ரூபாய்க்கு வானத்தையளக்கும் அவரது கற்பனைத் திறமையைக் குத்தகை எடுத்துக் கொண்டது. அதனால் அவர் வீர புருஷர்களையும், அழியாத சித்திரங்களையும் எழுத்தோவியமாகத் தீட்டுவதை விட்டு விட்டு, சோயாபீன் முதல் மெழுகுவர்த்தி வரையிலும் வெளிநாடுகளிலிருந்து வந்து குவியும் பண்டங்களின் காவியங்களை இயற்றிக் கொண்டிருக்கிறார். 'டபாஸா' வீரிய மாத்திரையின் மீது பாடிய பரணியும், தேயிலைப் பானத்தின் சுயசரிதையும், அந்தத் தமிழ் தெரியாத வெள்ளைக்காரனையும் இவர்மீது அனுதாபம் காட்டும்படி செய்துவிட்டன. அதற்காகத்தான் அந்த முப்பது ரூபாய்!
வீட்டு எதிரில் நிற்கும் மின்சார விளக்கின் உதவியைக் கொண்டும் பிள்ளையவர்களால் அலமுவைக் கண்டுபிடிக்க இயலவில்லை. வெற்றிலை, வேலை, குழந்தை வராத காரணம். எல்லாம் அவரது மனத்தில் கவலையைக் கொண்டு கொட்டின. நடையிலிருந்து கீழே இறங்கிச் சந்தின் மூலை வரை சென்று பார்த்து வரலாமா என்று புறப்பட்டார்.
பக்தி மார்க்கத்தில் ஏகாக்கிரக சிந்தையைப் பற்றிப் பிரமாதமாக வர்ணிக்கிறார்கள். மனம் ஒரே விஷயத்தில் லயித்துவிட்டால் போதுமாம். பிள்ளையவர்களைப் பொறுத்த வரை அவர் இந்தப் 'பணம்' என்ற மூன்றெழுத்து மந்திரத்தில் தீவிர சிந்தை செலுத்துபவர். பணத்தை வாரிச் சேர்த்துக் குபேரனாகி விட வேண்டும் என்ற எண்ணம் ஒன்றுமில்லை. கவலையில்லாமல் ஏதோ சாப்பிட்டோ ம் வேலை பார்த்தோம் வந்தோம் என்று இருக்க வேண்டும் என்பதற்காக எத்தனையோ வித்தைகளையெல்லாம் செய்துவிட்டார். அவருடைய குடும்பத்தின் வரவு செலவு திட்டத்தை மட்டிலும் அவரால் எப்பொழுதும் சமன் செய்ய முடியவில்லை. நிதி மந்திரியாக இருந்தால் பட்ஜெட்டில் துண்டுவிழுவதற்குப் பொருளாதாரக் காரணங்கள் காட்டிவிட்டு, உபமான்யங்களைத் தைரியமாகக் கேட்கலாம். கவலையில்லாமல், கொஞ்சமும் உடம்பில் பிடிக்காமல் கடன் கேட்டுப் புறப்படுவதற்கு முடியுமா? குடும்பச் செலவு என்றால், சர்க்கார் செலவாகுமா?
கவலை இருக்கப்படாது என்ற உறுதியின் பேரில்தான் நம்பிக்கை என்ற இலட்சியத்தை மட்டும் திருப்தி செய்விக்க, 'சாகாவரம் பெற்ற' கதைகளை எழுதுவதைக் கொஞ்சம் கட்டி வைத்துவிட்டு, இந்த 'லிப்டன் தேயிலை', காப்பி கொக்கோ ஆகியவற்றின் மான்மியங்களை அவர் எழுத ஆரம்பித்தார். ஒரு பெரிய நாவல் மட்டிலும் எழுதிவிட்டால் அது ஒரு பொன் காய்க்கும் மரமாகிவிடும் என்று அவர் நெஞ்சழுத்தத்துடன் நினைத்த காலங்களும் உண்டு. இப்பொழுது அது ஒரு நெடுந்தூர இலட்சியமாகவே மாறிவிட்டது.
முன்பாவது, அதாவது நம்பிக்கைக் காலத்தில், ஏதோ நினைத்ததைக் கிறுக்கி வைக்கக் காகிதப் பஞ்சமாவது இல்லாமல் இருந்தது. அப்பொழுது ஒரு பத்திரிக்கை ஆபீஸில் வேலை. ஆனால், இப்பொழுது காசு கொடுத்து வாங்காவிட்டால் முதுகில் தான் எழுதிக் கொள்ள வேண்டும். முருகதாசர் நல்ல புத்திசாலி. அதனால்தான் முதுகில் எழுதிக் கொள்ளவில்லை. யாராவது ஒரு நண்பரைக் கண்டுவிட்டால் போதும், தமது தூர இலட்சியத்தைப் பற்றி அவரிடம் ஐந்து நிமிஷமாவது பேசாமல் அவரை விடமாட்டார். நண்பர்கள் எஸ்.பி.ஸி.ஏ (ஜீவஹிம்சை நிவாரண சங்கம்) யின் அங்கத்தினர்களோ என்னவோ, அத்தனையும் சகித்துக் கொண்டிருப்பார்கள்.
சந்தில் திரும்பிப் பார்த்தால் அலமுவின் ராஜ்யம் நடந்து கொண்டிருந்தது.
"ஏட்டி என்ன! நீயோ, உன் லட்சணமோ?" என்று ஆரம்பித்தார் முருகதாசர்.
ஒரு ரிக்ஷா வண்டி ஏர்க்கால் பக்கத்தில் வண்டிக்காரன் உட்கார்ந்து கொண்டிருக்கிறான். அலமு, ஒரு சுண்டெலி மாதிரி ஜம்மென்று மெத்தையில் உட்கார்ந்திருக்கிறாள். ரிக்ஷாக்காரனுடன் ஏதோ நீண்ட சம்பாஷணை நடந்து கொண்டிருந்தது போலும்!
"ஏட்டி!" என்றார் முருகதாசர் மறுபடியும்.
"இல்லையப்பா? நீ இனிமே என்னை அலமுன்னு கூப்பிடுவேன்னியே!" என்று சொல்லிக் கொண்டே வண்டியிலிருந்து இறங்கப் பிரம்மப் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தாள்.
"தீப்பெட்டி எங்கடீ?" என்றார் முருகதாசர்.
"கடைக்காரன் குடுக்கமாட்டேங்கறான். அப்பா!"
"குடுக்காதெ போனா நேரே வீட்டுக்கு வாரது! இங்கே என்ன இருப்பு?"
"அப்படிக் கேளுங்க சாமி! நம்ம கொளந்தென்னு மெரட்டாமே சொல்லிப் பாத்தேனுங்க. வீட்டுக்கு வண்டியிலே கொண்டாந்து வுடணுமுண்ணு மொண்டி பண்ணுதுங்க. எனக்குக் காலுலே சுளுக்கு. அந்தச் சின்னாம்பயலே காணும்..." என்று நீட்டிக் கொண்டே போனான் ரிக்ஷாக்காரன்.
"அப்பா, அவன் பங்கஜத்தே மாத்ரம் கூட்டிக்கிட்டே போரானே!" என்றாள் அலமு. பங்கஜம் எதிர்வீட்டு சப்ரிஜிஸ்திரார் குழந்தை. அது ரிக்ஷாவிலும் போகும், மோட்டாரிலும் போகும்! அந்த விஷயம் ரிக்ஷாவுக்குத்தான் புரியுமா, குழந்தைக்குத்தான் புரியுமா?
"அலமு! ராத்திரிலே கொழந்தைகள் ரிக்ஷாவிலே போகப்படாதுடீ! எறங்கி வா!" என்று குழந்தையைத் தூக்கிக் கொண்டு வாடிக்கைக் கடைக்காரனிடம் சென்றார் முருகதாசர்.
பிள்ளையவர்கள் கடையை எட்டு முன்பே கடைக்காரன், "சாமி! இந்த மாதிரியிருந்தா கட்டுமா? போன மாசத்திலே தீர்க்கலியே! நானும் சொல்லிச் சொல்லிப் பார்த்தாச்சு. பாக்கியை முடிச்சு, கணக்கெத் தீர்த்துடுங்க! எனக்குக் குடுத்துக் கட்டாது. நான் பொளைக்க வந்தவன்!" என்றான்.
"நானும் பிழைக்க வந்தவன் தான். எல்லாரும் சாகவா வருகிறார்கள்! மின்னே பின்னேதான் இருக்கும். நான் என்ன கொடுக்க மாட்டேன் என்று சொல்லுகிறேனா?"
"போங்க சாமி! அது ஒண்ணுதான் பாக்கி! ரூ.2.5.4 ஆச்சு. எப்ப வரும்?"
"தீப்பெட்டியெக் குடு, சொல்றேன்!"
"பெட்டிக்கென்ன பிரமாதம்! இந்தாருங்க, எப்ப வரும்?"
"எப்பவா? சம்பளம் நாளைக்குப் போட்ருவாங்கன்னு நினைக்கிறேன்; நாளை இல்லாவிட்டால் திங்கள்கிழமை."
"திங்கட்கிழமை நிச்சயந்தானே? நான் சீட்டுக் கட்டணும்!" என்றான்.
"சரி, பார்க்கிறேன்!" என்று திரும்பினார் தாசர்.
"பார்க்கிறேன்னு சொல்ல வேண்டாம். நிச்சயமாக வேண்டும்!"
ஒரு கவலை தீர்ந்தது... அதாவது திங்கட்கிழமை வரை.
பாதி வழியில் போகையில், "அப்பா!" என்றது குழந்தை.
அவர் எதையோ நினைத்துக் கொண்டிருந்ததால், தன்னையறியாமல் கொஞ்சம் கடினமாக, "என்னடி!" என்றார்.
"நீதான் கோவிச்சுக்கிறியே, அப்பா! நான் சொல்லமாட்டேன். போ!"
"கோவம் என்னடி, கோவம்! சும்மா சொல்லு!"
"அதோ பார். பல்லு மாமா!"
முருகதாசரின் நண்பர் சுப்பிரமணிய பிள்ளைக்குக் கொஞ்சம் உயர்ந்த பற்கள். அவை வெளியே நீண்டு கொண்டு, தமது இருப்பை, அனாவசியமாக உலகத்திற்கு அறிவித்துக் கொண்டிருந்தன. அதனால் அலமு அவருக்கு இட்ட காரண இடுகுறிப் பெயர் அது.
"எங்கடி!"
"அதோ பார், வீட்டு நடேலே! என்னை எறக்கிவிடப்பா!" என்று அவரது கையிலிருந்து வழுக்கி விடுவித்துக் கொண்டு, வீட்டிற்கு ஓட ஆரம்பித்தது.
"மெதுவா! மெதுவா!" என்றார் பிள்ளை; குழந்தையா கேட்கும்?
"மாட்டேன்!" என்றது. அதற்கப்புறம் ஏக களேபரம். பாவாடை தடுக்கிற்றோ என்னமோ? அலமு வலுக்கட்டாயமாக அங்கப் பிரதக்ஷணம் செய்ய ஆரம்பித்தாள்.
பிள்ளையவர்கள் ஓடிப் போய்க் குழந்தையை வாரி எடுத்தார். ஆனால் இவர் பதட்டத்திற்கு ஏற்ப அங்கு குழந்தைக்கு ஒன்றும் ஏற்படவில்லை.
"தோளுக்கு மேலே தொண்ணூறு, தொடச்சுப் பார்த்தா ஒண்ணுமில்லே!" என்று பாடிக் கொண்டு குழந்தை எழுந்தது.
"என்ன ஸார், குழந்தையை நீங்க இப்படி விடலாமா?" என்று சொல்லிக்கொண்டே சுப்பிரமணியம் அவர்கள் பக்கம் வந்தார்.
"என்ன ஸார் செய்யட்டும்! என்ன சொன்னாலும் கேட்கிறதில்லை என்ற உறுதி மனசிலே ஏறிப்போயிருக்கு. வெளிலே புறப்பட்டாச்சா, அப்புறம் தேடிக்கொண்டு பின்னோட பத்துப் பேர். இவளைக் கடைக்கனுப்பிச்சுட்டா தாயார். இவ்வளவு நேரம் அந்த ரிக்ஷாக்காரனோடு தர்க்கம் - என்ன செய்கிறது! வாருங்கள் ஸார். உள்ளே! ஒன் மினிட்! விளக்கை ஏத்துகிறேன்."
குழந்தை அலமு அதற்குள் வீட்டிற்குள், "பல்லு மாமா வந்துட்டார்!" என்று பொதுவாக உச்ச ஸ்தாயியில் விளம்பரம் செய்து கொண்டு ஓடிவிட்டாள்.
"குழந்தை துருதுருவென்று வருகிறதே! பள்ளிக்கூடத்திற்காவது அனுப்பக் கூடாதா?" என்றார் நண்பர்.
"ஆமாம் ஸார். தொந்திரவு சகிக்கலே. அங்கேதான் கொண்டு தள்ளணும். வயசு கொஞ்சம் ஆகட்டுமே என்று பார்க்கிறேன்" என்றார் முருகதாசர். விளக்குத் திரியை உயர்த்திக் கொண்டே.
"நேத்து பீச்சுக்குப் போயிருந்தேன்! சுந்தரத்தைப் பார்த்தேன்..." என்று ஆரம்பித்தார் சுப்பிரமணிய பிள்ளை.
"அந்த ராஸ்கல் வந்துட்டானா! என்றைக்கும் அவன் தொல்லைதான் பெரிய தொல்லையாக இருக்கிறது. இங்கே வந்தான்னா ஆபீஸுக்கு வந்து யாருக்காவது வத்தி வச்சுட்டுப் போயிடரது...மின்னே வந்தப்போ, என்ன எழவு சொன்னானோ, அந்த ஆர்ட்டிஸ்ட் 'பதி' இருந்தானே அவனுக்குச் சீட்டுக் கொடுக்க வழி பண்ணிட்டான்..." என்று படபடவென்று பேசிக்கொண்டே போனார் முருகதாசர்.
"அப்படிப் பாத்தா உலகத்திலே யார்தான் ஸார் நல்லவன்! அவன் உங்களைப் பத்தி ரொம்ப பிரமாதமாக அல்லவா கண்ட இடத்திலெல்லாம் புகழ்ந்து கொண்டிருக்கிறான்?"
"சவத்தெ தள்ளுங்க, ஸார்! பேன் பார்த்தாலும் பார்க்கும். காதை அறுத்தாலும் அறுக்கும். அவன் சங்காத்தமே நமக்கு வேண்டாம்... நீங்க என்ன சொல்ல வாயெடுத்தீர்கள்?"
"அதுதான். உங்களெப் பத்திதான் ஒரு இங்கிலீஷ்காரனிடம் பிரமாதமாகப் பேசிக்கொண்டிருந்தான்..."
"இவ்வளவுதானா! கதையை எழுதரேன் அல்லது கத்தரிக்காயை அறுக்கிறேன், இவனுக்கென்ன?..."
அதே சமயத்தில் வெளியிலிருந்து "முருகதாஸ்! முருகதாஸ்!" என்று யாரோ கூப்பிட்டார்கள்.
"அதுதான்! அவன் தான் வந்திருக்கிறான் போலிருக்கிறது! பயலுக்கு நூறு வயசு..."
"'சைத்தான் நினைக்கு முன்னால் வந்து நிற்பான்' என்பதுதான்!" என்று முணுமுணுத்தார் முருகதாசர்.
பிறகு அவர் எழுந்து நின்று வெளியில் தலையை நீட்டி, "யாரது?" என்றார்.
"என்ன? நான் தான் சுந்தரம். இன்னும் என் குரல் தெரியவில்லையா?" என்று உரத்த குரலில் கடகடவென்று சிரித்துக் கொண்டு உள்ளே நுழைந்தார் வந்தவர். அவருடைய சிரிப்புக்கு இசைந்தபடி காலில் போட்டிருக்கும் ஜோடு தாளம் போட்டது.
"என்ன சுந்தரமா? வா! வா! இப்பொத்தான் உன்னைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். நீயும் வந்தாய்! காப்பி போடச் சொல்லட்டுமா? அலமு! அலமு!" என்று உரக்கக் கூவினார் முருகதாசர்.
எங்கிருந்தோ, "என்னப்பா!" என்று அலமுவின் குரல் வந்தது.
"அம்மாவை மூணு கப் காப்பி போடச் சொல்லு. சீக்கிரம் ஆகணும்!"
"நீ என்ன பத்திரிகையையே விட்டுவிட்டாயாமே! இப்பத்தான் கேள்விப்பட்டேன்."
"வயிற்றுப் பிழைப்பிற்கு எதில் இருந்தால் என்ன? சீலைப்பேன் குத்துகிறதும் ஒரு 'பிஸினஸ்' ஆக இருந்து, அதில் ஒரு 'சான்ஸ்' கிடைத்தால் அதையும் விட்டா வைக்கிறது? நான் பத்திரிகையை விட்டுவிட்டா கதை எழுதாமல் இருந்துவிடுவேனோ? ஒரு பெரிய நாவலுக்கு 'பிளான்' போட்டிருக்கேன். தமிழன்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால், எனக்குக் காகிதம் வாங்கவாவது காசு கிடைக்கும். அதில் 'சென்ட்ரல் ஐடியா' என்ன தெரியுமா?..."
"நீங்க நேற்று பொருட்காட்சிக்குப் போனீர்களாமே!" என்று பேச்சை மாற்ற முயன்றார் சுப்பிரமணிய பிள்ளை. இந்த விஷயத்தைத் தொட்டுவிட்டால், முருகதாசர் கீறல் விழுந்த கிராமபோன் பிளேட் மாதிரி விடாமல் திருப்பித் திருப்பி அதையே கதைத்துக் கொண்டிருப்பார்!
"அப்பா! காப்பியாயிட்டுது. நீதான் வந்து எடுத்துக்கிட்டுப் போகணும். சுடுது!" என்று சொல்லிக் கொண்டு, நிலைப்படி இரண்டு பக்கத்தையும் தொட்டவண்ணமாய் ஒற்றைக் காலை ஆட்டிக் கொண்டு நின்றாள் அலமு.
"அம்மா எங்கே?"
"அம்மா சாதத்தெ வடிச்சுக்கிட்டிருக்கா, அப்பா!"
"சரி! இதோ வாரேன், போ!"
"வாயேன்!"
"வாரேன்னா, போடீ உள்ளே!"
"காப்பி ஆறிப்போயிடும், அப்பா!"
"இதோ ஒரு நிமிஷம்!" என்று சொல்லிக் கொண்டு உள்ளே சென்றார்.
"மாமா! நீ என்ன கொண்டாந்தே!" என்று கேட்டுக் கொண்டு, சுப்பிரமணிய பிள்ளை மடியில் உட்கார்ந்து, கழுத்திலிருக்கும் நெக்டையைப் பிடித்து விளையாட ஆரம்பித்தாள் அலமு.
"அதெப் பிடித்து இழுக்காதே! மாமாவுக்கு கழுத்து வலிக்கும்!" என்றார் சுந்தரம் பிள்ளை.
"வலிக்காதே!" என்று மறுபடியும் ஆரம்பித்தாள்.
முருகதாசரும் மேல் துண்டின் உதவியால் ஒரு செம்பை ஏந்திய வண்ணம் உள்ளே நுழைந்தார்.
"என்னப்பா, மூணு டம்ளர் கொண்டாந்தே! எனக்கில்லையா?"
"உனக்கென்னடி இங்கே! அம்மாகூடப் போய்ச் சாப்பிடு."
"மாட்டேன்" என்று ஒரு டம்ளரை எடுத்து வைத்துக் கொண்டது குழந்தை.
முருகதாசர் காப்பியை ஆற்றி, சுந்தரம் கையில் ஒரு டம்ளரைக் கொடுத்தார்.
சுந்தரம் வாங்கி மடமடக்கென்று மருந்து குடிப்பது போல் குடித்து விட்டு, "காப்பி வெகு ஜோர்!" என்று சர்டிபிகேட் கொடுத்தார்.
மற்றொரு டம்ளர் சுப்பிரமணிய பிள்ளையிடம் கொடுக்கப்பட்டது. "மாமா! எனக்கில்லையா?" என்று அவரிடம் சென்று ஒண்டினாள் அலமு.
"வாடி, நாம ரெண்டு பேரும் சாப்பிடுவோம்!" என்றார் முருகதாசர்.
"மாமாகூடத்தான்!" என்றது குழந்தை, சுப்பிரமணியபிள்ளை கையிலிருந்த டம்ளரில் அலமுவைக் குடிக்கச் செய்தார்.
பாதியானதும், "போதும்!" என்றது குழந்தை.
"இந்தாருங்க ஸார்!" என்று மற்ற டம்ளரையும் நீட்டினார் முருகதாசர்.
"வேண்டாம்! வேண்டாம்! இதுவே போதும்!" என்றார் சுப்பிரமணிய பிள்ளை.
"நான்சென்ஸ்!" என்று சொல்லிவிட்டு, குழந்தை எச்சிற்படுத்தியதைத் தாம் வாங்கிக் கொண்டார் தாசர்.
"நேரமாகிறது, மவுண்டில் ஒரு நண்பரைப் பார்க்க வேண்டும்!" என்று எழுந்தார் சுந்தரம். "அதற்குள்ளாகவா! வெற்றிலை போட்டுக் கொண்டு போகலாம்!" என்றார் முருகதாசர்.
"கையில் எடுத்துக் கொண்டேன். நேரமாகிறது! அப்புறம் பார்க்கிறேன்!" என்று சொல்லிக் கொண்டு வெளியேறினார் சுந்தரம்.
கையில் இருந்த புகையிலையை வாயிற் ஒதுக்கிவிட்டு, சிறிது சிரமத்துடன் தமக்கு நேரமாவதைத் தெரிவித்துக் கொண்டார் சுப்பிரமணிய பிள்ளை.
தொண்டையைச் சிறிது கனைத்துக் கொண்டு, "சுப்ரமண்யம், உங்களிடம் ஏதாவது சேஞ்ஜ் இருக்கிறதா? ஒரு மூன்று ரூபாய் வேண்டும்!" என்றார் முருகதாசர்.
"ஏது அவசரம்!"
"சம்பளம் போடலே: இங்கு கொஞ்சம் அவசியமாக வேண்டியிருக்கிறது...திங்கட்கிழமை கொடுத்துவிடுகிறேன்!"
"அதற்கென்ன!" பர்ஸை எடுத்துப் பார்த்துவிட்டு "இப்போ என் கையில் இது தான் இருக்கிறது!" என்று ஓர் எட்டணாவைக் கொடுத்தார் சுப்பிரமணியம்.
"இது போதாதே!" என்று சொல்லி, அதையும் வாங்கி வைத்துக் கொண்டார் முருகதாசர்.
"அப்பொ..." என்று மீண்டும் ஏதோ ஆரம்பித்தார்.
"பார்ப்போம்! எனக்குக் கொஞ்சம் வேலையிருக்கிறது" என்று சுப்பிரமணியமும் விடை பெற்றுச் சென்றார்.
முருகதாசர் தமது ஆஸ்தான அறையின் சிம்மாசனமான பழைய கோரைப் பாயில் உட்கார்ந்து கொண்டு, அந்த எட்டணாவைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டு, நீண்ட யோசனையில் ஆழ்ந்திருந்தார்.
"அங்கெ என்ன செய்யறீங்க?" என்று மனைவியின் குரல்!
"நீதான் இங்கே வாயேன்!"
கமலம் உள்ளே வந்து, "அப்பாடா!" என்று உட்கார்ந்தாள். அவர் கையில் இருக்கும் சில்லறையைப் பார்த்துவிட்டு, "இதேது?" என்றாள்.
"சுப்பிரமணியத்திடம் வாங்கினேன்!"
"உங்களுக்கும்... வேலையில்லையா?" என்று முகத்தைச் சிணுங்கினாள் கமலம். பிறகு திடீரென்று எதையோ எண்ணிக் கொண்டு "ஆமாம், இப்பத்தான் நினைப்பு வந்தது. நாளைக்குக் காப்பிப் பொடியில்லை. அதெ வச்சு வாங்கி வாருங்களேன்!" என்றாள்.
"அந்தக் கடைக்காரனுக்காக அல்லவா வாங்கினேன்! அதைக் கொடுத்துவிட்டால்?"
"திங்கட்கிழமை கொடுப்பதாகத்தானே சொன்னீர்களாம்!"
"அதற்கென்ன இப்பொழுது!"
"போய்ச் சீக்கிரம் வாங்கி வாருங்கள்!"
"திங்கட்கிழமைக்கு?"
"திங்கட்கிழமை பார்த்துக் கொள்ளுகிறது!"

கிருஷ்ணன் வைத்த வீடு -வண்ணதாசன்

கிருஷ்ணன் வைத்த வீடு, தனுஷ்கோடி அழகருக்கு எப்படி ஞாபகம் இருக்கிறது என்று தெரியவில்லை. இத்தனைக்கும் அவன் ஒரே ஒரு முறைதான் எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறான். அதுவும் முப்பது முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு.

அவன் ஹாஸ்டலில் இருந்தான். நான் வீட்டிலிருந்து மூன்றாம் நம்பர் பஸ் பிடித்துக் காலேஜ்உக்குப் போய்க் கொண்டிருந்தேன்.

Modern-Art-Paintings-Prints-34

பாப்புலர் டாக்கீஸில் 'தாமரை நெஞ்சம் ' படம் பார்த்துவிட்டு வெளி வருகிற கூட்டத்தில், என் தோளை வந்து அவன்தான் பிடித்தான். சிகரெட் குடித்து, மிட்டாய் சாப்பிட்டிருந்த வாசனையுடன் சிரிப்பு இருந்தது.

'நீ எங்கேடாஇருக்கே ? ' என்றான்.

'எங்கள் வீடு இந்தப் பக்கம்தானே ' என்று சொல்லி அவனை வீட்டுக்கு வந்துவிட்டுப் போகுமாறு அழைத்தேன்.

தனுஷ்கோடி அழகர், தியேட்டர் முன்பு தரையில் பரப்பி வைத்துப் பாட்டுப் புத்தகம் விற்கிற மனிதரைப் பார்த்தான். வளைந்து திரும்புகிற வாய்க்காலில் தண்ணீரே தெரியாமல் பூத்துக்கிடந்த நீலநிறப்பூக்களைப் பார்த்தான். விறகுக் கடையில் விழுந்து கொண்டிருந்த சம்மட்டி அடியிலிருந்தும் ஈரவிறகு வாசனையில் இருந்தும் என்னுடைய அழைப்புக் குறித்த முடிவை எடுத்தது போல் 'சரி, போவோம் ' என்றான். பத்தடி முன்னால் போய்க்கொண்டிருந்த விடுதி நண்பர்களிடம், தான் அப்புறம் வருவதாகக் கையைக் காட்டினான்.

பெருமாள் கோயில் தெருப்பக்கம் நின்ற தேரை நிதானமாகப் பார்த்து, அது எந்தத் திருவிழாவுக்கு ஓடும் என்று விசாரித்தான். 'எல்லா ஊர் சலூன்களுக்கும் ஒரே மாதிரிக் கதவுகள்தான் இருக்கின்றன ' என்று சொல்லிக்கொண்டே சந்திப்பிள்ளையார் முக்குவரை நடந்தான். வாடகைக்கு நிற்கிற ஒற்றை மாட்டு வண்டிகளைப் பார்த்து ஆச்சரியம் அவனுக்கு.

பக்கத்தில் நிற்கிற காந்தி சிலையைப் பற்றி, முக்கியமாக காந்தியின் கால்களைப் பற்றி சிலாகித்தான். என்னைப் போலவே அவனுக்கும் காந்திசிலைக்குப் பக்கத்தில் பழக்கடை போட்டிருப்பவர் எப்போதும் ஊதாச்சட்டைதான் போடுவாரா என்கிற சந்தேகம் வந்தது. அவன் அந்தச் சந்தேகத்தைக் கேட்டதும் தனுஷ்கோடி அழகருக்கும் எனக்கும் ரொம்ப நெருக்கம் உண்டாகிவிட்டது போலத் தோன்றியது.

இந்த நேரத்தில் அப்பா வீட்டில் இருப்பாரா என்று சந்தேகம் உண்டாயிற்று. அம்மா மட்டும் இருந்தால் கூட நல்லது. தின்பதற்கு ஏதேனும் கொடுத்துக் காபியையும் தனுஷ்கோடி அழகருக்குத் தரமுடியும் எனில் நன்றாக இருக்கும். ஒன்றுமே கொடுக்காவிட்டால் கூட எல்லாவற்றையும் கொடுத்துவிட்டது போல அம்மாவால் உபசரித்துவிடமுடியும்.

அம்மா முதலில் ஒரு டம்ளர் தண்ணீர்தான் கொண்டுவந்து கொடுப்பாள். கொடுப்பதற்கு முன் டம்ளரின் வெளிப்புறத்தில் வழிகிற சொட்டுக்களை லேசாக விரல்களால் துடைத்துவிடுவாள். அந்தத் துடைப்பிலேயே எல்லா மாயமும் நிகழ்ந்துவிடும். அம்மாவிடமிருந்து தண்ணீரை வாங்கிக் குடித்த யாரும் அம்மாவை மறந்திருக்க முடியுமா.. தெரியவில்லை.

ஆனால், தனுஷ்கோடி அழகர் அம்மாவை மறந்துவிட்டது போலத்தான் இருந்தது. இத்தனை வருடங்களுக்கு அப்புறம் என்னைப் பார்க்கிறவன் அம்மாவைப் பற்றி எதுவும் கேட்கவில்லை.

'அந்த கிருஷ்ணன் வெச்ச வீடு இப்ப இருக்கா ? ' என்று கேட்டான்.

'கிருஷ்ணன் வைத்த வீடா ? அதை நீ எப்போ பார்த்தே ? ' என்று கேட்ட என்னுடைய குரலின் ஆச்சரியம் எனக்கே விநோதமாக இருந்தது. யாருக்கும் தெரியாது என்றும் தெரியக்கூடாது என்றும் நான் என்னுடைய ரகசிய அறையில் ஒளித்து வைத்திருந்த ஒரு விஷயத்தை எடுத்த எடுப்பில் அவன் தொட்டுவிட்டது எப்படி என்று தெரியவில்லை.

எங்கள் தெருவில் கிருஷ்ணன் வைத்த வீட்டுக்குத் தனியான அடையாளமும் மரியாதையும் கூட இருந்தது.

ஒரு சுடலை மாடசாமி பீடத்தை ஆரம்பமாக வைத்து, நூல் பிடித்த மாதிரி சிறியதும் பெரியதுமாக ஐம்பது நூறு வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட காரை வீடுகளுக்கும் மட்டப்பா போட்ட வீடுகளுக்கும் மத்தியில் 'கிருஷ்ணன் வைத்த வீடு ' துண்டாகத்தான் தெரியும்.

மற்ற எல்லா வீடுகளும் தரையோடு தரையாக, தெருவும் சாக்கடையுமாக இருக்கிற முன்வாசல் நடையுடன் துவங்குகிறபோது கிருஷ்ணன் வைத்த வீடு நான்கு ஐந்து படிகளுடன், ஆற்றங்கரையில் வெள்ளம் வந்தால் பாதிக்கக் கூடாது என்பது போல கட்டப்பட்டிருக்கும். பத்தடிக்குக் கீழ் தெரு பள்ளத்தில் இருப்பதுபோல வீட்டின் கட்டுமானம் துவங்கும்.

நெடுநெடு என்று வரிசைக்கு இரண்டு பாக்குமரம், இரண்டு தென்னைமரம், முன் வாசலில், நட்டநடுவில், புல்லாங்குழல் வாசிக்கிற கிருஷ்ணர் பொம்மை. பொம்மையின் முதுகுக்கு அண்டை கொடுத்தது மாதிரியான குழாயின் உச்சியில் நீலமான ஒரு ரசகுண்டு. ராத்திரியில் உள்ளுக்குள் பல்பு எரியும். தெருவில் போகிறவர் வருகிறவர்கள் தற்செயலாக ஏறிட்டுப் பார்த்தால், கிருஷ்ணன் நேரடியாக நிலா வெளிச்சத்தில் புல்லாங்குழல் வாசித்துக்கொண்டு அந்த வீட்டின் முன்னால் நிற்கிறது மாதிரி இருக்கும்.

அதற்கப்புறம் வீடு ஆரம்பிக்கும். தார்சா, பட்டாசல், இரண்டாம் கட்டு, அரங்குவீடு, அடுக்களை என்ற அமைப்பு இல்லாமல் வேறு தினுசில் இருக்கும். செங்கோட்டை என்கிறதும், திருவனந்தபுரத்தில் கரமனை என்கிறதும், இல்லையில்லை இங்கே முனைஞ்சிப்பட்டி மூலைக்கரைப்பட்டி என்கிறதுமாக அந்த வீட்டு ஆட்களின் ஊரைப் பற்றி வெவ்வேறு பேச்சும் அனுமானமும் இருந்தது.

நாகர்கோவிலில், நாகர்கோவிலைத்தாண்டி இரண்டு மூன்று இடங்களில் பெரிய பெரிய ஓட்டல்கள் வைத்திருக்கிறாதாகவும் பெண்ணினுடைய படிப்பையும் பையனுடைய படிப்பையும் உத்தேசித்து இங்கே இருப்பதாகவும் தான் சொன்னார்கள்.

இங்கே கார் நிறுத்துவதற்கு இடமில்லை என்பதால், அடுத்த முடுக்கில் ஒரு காடினாவை வாடகைக்குப் பிடித்திருப்பதும், வீட்டு வாசலில் வந்து ஏற்றிக்கொண்டுபோய், மறுபடி வீட்டு வாசலில் கொண்டுவந்து இறக்கிவிடுவதும், தவிர, அந்த வீட்டுக்காரர்கள் நடந்துபோய் எங்கள் தெருவில் யாரும் பார்த்ததில்லை என்பதும் வாஸ்தவம்தான்.

பையனுக்கு படிப்பு வரவில்லை. எட்டாவது வகுப்பிலேயே இரண்டு தடவை உட்கார்ந்துவிட்டான் என்றும், ஆனால், அவனுடைய அக்கா மகா கெட்டிக்காரி என்றும் சொன்னார்கள்.

வழக்கமாக காலேஜ் தினத்தில் பரதநாட்டியம் ஆடுகிற டாக்டர் கிருஷ்ணமூர்த்தியின் மகளைப் போன இடம் தெரியாமல் ஆக்கிவிட்டது கிருஷ்ணன் வைத்த வீட்டுப் பெண்ணினுடைய நடனம் என்று குனிந்த தலை நிமிராமல் ஐந்தாம் நம்பர் பஸ் ஏறி கல்லூரிக்குப் போய்விட்டு வருகிற காந்திமதி அக்கா சொல்கிறாள்.

கிருஷ்ணன் வைத்த வீட்டுப் பெண்களைப் பார்த்தது என்பது ரொம்பத் தற்செயலாகவும் அவ்வளவு சந்தோஷப்பட்டுக் கொள்ள முடியாத ஒரு நேரத்திலும் எனக்கு வாய்த்தது.

பிச்சம்மாள் ஆச்சி செத்துப் போயிருந்தாள். ஆயுள் பூராவும் வீடு வீடாகத் தோசைக்கு அரைத்துக் கொண்டும் முறுக்கு சுற்றிக் கொடுத்துக் கொண்டும் இது எல்லாம் போதாமல் எப்போதும் இரண்டு மூன்று பூனைக்குட்டிகள் வளர்த்துக் கொண்டும் ஒருத்தி இருக்க முடியும் என்றால், அது பிச்சம்மா அக்கா என்கிற பிச்சம்மா ஆட்சிதான். தெருவில் இருக்கிற எல்லோருமாகச் சேர்ந்துதான் அவளைத் 'தூக்கிப் போடவேண்டிய ' நிலைமை. பாடைக்குக் கிடுகு பின்னுவதற்குத் தென்னை ஓலலித் தேவைப்படும் இல்லை... அதற்காகத்தான் நான் கிருஷ்ணன் வைத்த வீட்டுப் படியேறிப் போனேன்.

எனக்கும் தென்னங்கிடுகுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. இருந்தாலும் இதன் பொருட்டுஎன்னை இங்கே அனுப்பின குரல் எது என்று இப்போது ஞாபகமில்லை. வழக்கம் போல இது போன்ற நல்லது -- கெட்டதுகளில் முன்னால் நின்று உத்தரவு இடுகிற மீசைப் பெரியப்பா குரலோ, ராமையாப்பிள்ளை குரலோ அல்ல அது. அசரீரி மாதிரி அது எங்கிருந்தோ கேட்க, எங்கிருந்தோ நானும் வந்திருக்க வேண்டும் என்று படுகிறது.

நான் சத்தம் கொடுத்து ரொம்ப நேரம் கழித்து, 'சசி... வாசலில் யாருன்னு பாரு ' என்று குரல் கேட்டது. கதவுகள் திறந்து மூடுகிற நுட்பமான நேரம். கனகாம்பர கலரில் ஒரு தாவணியும் கையில் புத்தகமுமாக அந்தப் பெண் வந்தது. நான் விவரம் சொல்லி, தென்னங்கீற்று வெட்டிக் கொள்ள அனுமதி கேட்டேன்.

'யாரு சசி ? ' மறுபடியும் உள்ளிருந்து குரல் வந்தது.

'வர்றேம்மா ' என்று உள்ளே நகர்ந்த பிறகும் அந்த இடத்தில் கனகாம்பர கலர் இருந்தது. சசி என்ற பெயரின் உச்சரிப்புக் காற்றில் அலைந்தது.

சசியும் சசியுடைய அம்மாவும் வந்தார்கள்.

சசியின் கையில் அரிவாள் இருந்தது. இந்தப் பக்கத்து அரிவாள் மாதிரி இல்லை. அது கூட வேறு மாதிரி இருந்தது.

'வெட்டிக்கொள் ' ' என்று இரண்டு பேருமே சொல்லவில்லை. சசி அரிவாளைத் தரையில் குனிந்து வைக்கும்போது ஜடை முன்னால் விழுந்து, கிட்டத்தட்ட தரையைத் தொட்டது. மஞ்சள் ரிப்பன் பட்டுப் பூச்சி மாதிரி பறந்தது.

நான் பக்கத்து வீட்டு காம்பெளண்ட் சுவரில் ஏறி, வேப்பமரக் கிளையில் உட்கார்ந்து கைக்கு எட்டின தென்னங்கீற்றை இழுத்துப் பிடித்து வெட்டினேன். குறுக்கே போன மின்சார ஒயரில் சற்றுத் தொங்கி ஆடி, தென்னங்கீற்று 'சலார் ' என்று கீழே விழுந்தது.

சசியும் சசியின் அம்மாவும் வாசலிலேயே நின்றார்கள்.

தூரத்திலிருந்து அவர்களை பார்க்கமுடிந்தது போல, பக்கத்தில் போனதும் பார்க்க முடியவில்லை. அரிவாளைக் கீழே வைத்தேன். 'தாங்க்ஸ் ' என்று சொன்னது யார் காதிலும் விழுந்திருக்க முடியாது.

வெளியே கேட்காமல் சொன்ன அந்தச் சொல், பனிக்கட்டி போல உருகி ஓடி சசியின் கால் பெருவிரலைத் தொடுமுன் ஆவியாகிக் கொண்டிருந்தது.

வெளியே நடையிறங்கும்போதுதான், கிருஷ்ணன் வைத்த வீட்டின் கிருஷ்ணன் பொம்மையை இவ்வளவு நேரமும் சரியாகக் கூட பார்க்கவே இல்லை என்று புரிந்தது. இத்தனைக்கும் அது வாசல் நடுவில்தான் இருந்தது. அதைச் சுற்றித்தான் நான் போனது, கேட்டது, வந்தது.. எல்லாம்.

மறுபடியும் தனுஷ்கோடி அழகர் கேட்டான்.

'நான் பார்த்தது இருக்கட்டும். கிருஷ்ணன் வெச்ச வீடு இப்போ இருக்கா ? அதைச் சொல்லு. '

எனக்கு ஒரு கேள்வி - பதில் போல அவ்வளவு திட்டவட்டமாக அதைச் சொல்ல முடியும் என்று தெரியவில்லை. வாசல் முழுவதும் புல் பூண்டுகள் மண்டி, ஒரு மழைக்காலத்துக்கு பிந்திய வெயில் நாளில், தட்டான் பூச்சிகள் பறக்கிற கோலத்தில், வாசிக்கின்ற புல்லாங்குழல் முற்றிலும் உடைபட்டு, மூக்கு நுனி மூளியாகி, வலது முழங்கைப் பக்கம் துருபிடித்த கம்பி தெரிய கிருஷ்ணன் அந்த வீட்டில் கால்மாற்றி நிற்பதைப் பற்றி தனுஷ்கோடி அழகரிடம் சொல்ல வேண்டுமா என்ற தயக்கம் வந்தது. உண்மையின் கரிக்கோடுகளால், முப்பது வருஷத்துக்கு முந்திய ஞாபகத்தின் சுவர்களில், தனுஷ்கோடி அழகர் வரைந்து வைத்திருக்கிற, கிருஷ்ணன் வைத்த வீடு பற்றிய சித்திரங்களை நான் கோரப்படுத்த வேண்டுமா ?

நான் இரண்டாவது முறை அந்த வீட்டைப் பார்த்த கோரத்தை விடவா பெரிய கோரம் இருக்கப் போகிறது. நான் மட்டுமா பார்த்தேன் ? தெருவே அல்லவா கூடிப் பார்த்தது. இந்த வீட்டில், பக்கத்து வீட்டில், வேப்பமரக்கிளையில், நகைக்கடைச் செட்டியார் வீட்டுச் சுவரில் என்று எங்கேயெல்லாம் ஆட்கள் இருந்தார்கள். மோர் விற்பதற்கு வருகிற சுப்பையா கோனாருடைய வீட்டுக்காரிகூட பிரப்பங்கூடையும் கறுத்த மோர்ப்பானையும் தலையில் இருக்க, பச்சைக் குத்தின கையால் சேலையை வாயில் வைத்துப் புதைத்துக் கொண்டு நின்றாள். ஓர் இடத்தில் ஐந்து நிமிடம் நிற்கிறவளே இல்லை அவள் '

போலீஸ்காரர்கள் 'தள்ளிப்போ, தள்ளிப்போ ' என்று மச்சுப்படியில் இருந்து சத்தம் போட்டுக் கொண்டே இறங்குகிறார்கள். முனிசிபல் ஆஸ்பத்திரியில் இருந்து கூட்டிக் கொண்டு வரப்பட்டவர்கள் தலைப்பாகையை அவிழ்த்து மூக்கை மறைத்து கட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஜமுக்காளத்தின் நான்கு மூலைகளையும் நான்கு பேர்களாகப் பிடித்தபடி ஒவ்வொரு உடம்பாகக் கீழே கொண்டுவந்து வாசலில் வைக்கிறார்கள்.

முதலில் அந்த வீட்டுப் பையன் உடம்பு. அடுத்து அநேகம் பேர் பார்த்தே இராத அந்த வீட்டுக்காரர் உடம்பு.

தூக்கிக்கொண்டு வந்த தோட்டிகளில் ஒருத்தர், 'இப்படிப் பண்ணிட்டாங்களே முதலாளி ' என்று கீழே உட்கார்ந்து அழுதார். தோள்பட்டையில் கையைக் கொடுத்துத் தூக்கி ஒரு போலீஸ்காரர் அவரை விரட்டினார்.

மறுபடியும் மேலே ஏறினார்கள்.

அந்த அம்மாவைக் கொண்டுவரும்போது நிறையச் சிரமம் இருந்தது. பிடித்துக்கொண்டு வந்த போர்வை, கனம் தாங்காமல் சரிந்துவிடுவது போலவும், படிகளில் தாங்கித் தாங்கி இறங்கித் திசைமாற்றிக் கொண்டு வருவதில் தள்ளாட்டமும் இருந்தது. அதிகம் நாற்றம் அடித்தது என்று கூடச் சொல்லவேண்டும்.

ஏற்கனவே நிறையப் பேர் அழ ஆரம்பித்திருந்தார்கள்.

கடைசியாக சசியை இறக்கும்போது எல்லோரும் வாய்விட்டுச் சத்தம் போட்டு அழுதார்கள். இன்னது என்று சொல்லமுடியாத வகையில் புலம்பல் இருந்தது.

'அட, பாதகத்தி ' ' என்ற குரல் சுழன்று சுழன்று வருகிற ஒரு கூர்மையான கத்தி போல கிருஷ்ணன் வைத்த வீட்டின் மேல் விழுந்து இதுவரை மூடிக்கொண்டிருந்த எல்லாத்திரைகளையும் கிழித்து எறிந்துவிட்டு அப்புறம் போனது.

பழைய சேலைகளாலும், அழுக்கு வேட்டிகளாலும் மூடப்பட்டு வரிசையாகக் கிடத்தப்பட்டிருந்த நான்கு உடல்களிலும், கிருஷ்ணன் சிலைக்கு மிக நெருக்கமாக சசியின் உடல் இருந்தது. கொலுசும் பாதமும் தெரிந்த இடது காலை, காக்கிச் சட்டையுடன் இருந்த முனிசிபல் ஆஸ்பத்திரி சிப்பந்தி மூடிவிட்டார்.

எங்கிருந்து வந்தது என்று தெரியாமல், வேப்பமரத்தின் அடர்த்திக்குள் ஒளிந்திருந்த பளீர் என்ற வெயில் வாசல் முழுவதையும் கொஞ்சம் நேரம் பொசுக்கிற்று. பாக்கு மரத்திலிருந்து பொத்தென்று விழுந்த அணில், பரபரவென்று குறுக்காக ஓடியது. சசியின் உடம்பின் மேல் குதித்து ஓடியதா, தாண்டிப் போனதா என்று அனுமானிக்க முடியவில்லை.

முதுகில் விழுந்திருந்த பழுப்புக் கோடுகளில் சசியைச் சிறகுகளாகச் செருகிக் கொண்டு எந்தப் பக்கம் பறந்தது அது என்று தெரியாமல் போனபோது, வெயில் முற்றிலும் மங்கி, வேப்பமரம் பந்து பந்தாக நிழல்களை எறிந்தது.

வேம்பின் மஞ்சள் இலைகள் பறந்து உதிர்ந்து, கிருஷ்ணன் பொம்மையில் அப்பி, மறுபடி பறக்கும்போது, கிருஷ்ணனின் தலை உச்சியில் இருந்த மயில்பீலிகளையும் பிய்த்துக் கொண்டு போயிற்று.

மேலும் சில பழுத்த இலைகள் ஓலைப் பாய்களைப் போலச் சுருண்டு விரிந்து, அந்த நான்கு பேரையும் அள்ளித் தெருவில் நிற்கிற சக்கடா வண்டியில் ஏற்றப்போவது போல ஆவேசத்துடன் தரையில் நகர்ந்தன.

நான் எங்கே நின்றேன் என்று சொல்ல முடியவில்லை. எல்லா இடங்களிலும், எல்லோருடனும் நின்றிருக்க வேண்டும்.

'ஒண்ணு போலப் போயிரலாம். ஒண்ணு போல வரமுடியுமா உனக்கு ? ' -- ஐஸ் விற்கிற முருகனுடைய அப்பா என்னிடம் கேட்டார். இதைக் கேட்கும்போதும் மூச்சுமுட்டுகிற அளவு அவர் குடித்திருந்தார்.

என்னிடம் மட்டும் இதையெல்லாம் ஏன் கேட்கிறார்கள் என்று தெரியவில்லை. 'வரமுடியாது ' என்ற பதிலையே 'வர முடியுமா ? ' என்ற கேள்வியாகக் கேட்டால் என்ன சொல்ல முடியும்.

நிறைய பேர் பதில் சொல்வதைத்தான் கேள்வியாகக் கேட்பார்கள் போலிருக்கிறது.

'கிருஷ்ணன் வெச்ச வீடு இப்போ இருக்கா ? ' என்று தனுஷ்கோடி அழகர் என்னிடம் கேட்டதுகூட அப்படித்தான் இருக்க வேண்டும்.

கபாடபுரம் - புதுமைப்பித்தன்

1. கடல் கொண்ட கோவில்

நான் கிழக்குக் கோபுர வாசல் திண்ணையில், 'முருகா' என்ற கொட்டாவியுடன் துண்டை உதறிப் போட்டுக் கொண்டு சாய்ந்தேன். கிழக்குக் கோபுர வாசல் கதவு எப்பொழுதும் சாத்தித்தான் இருக்கும். ஆனால், அதே மாதிரி எப்பொழுதும் அதன் திட்டிவாசல் திறந்தே இருக்கும். திட்டிவாசல் வழியாக சமுத்திர கோஷமும் சமுத்திர அலைகளும் புலன்களில் உராய்ந்துகொண்டு இருக்கும்.

TE-Mystic-Outlook

நான் உள்ளிருப்பதைக் கவனியாமல் அர்ச்சகர்கள் கதவைத் தாளிட்டுப் பூட்டிக்கொண்டு சென்றுவிட்டார்கள். அன்றிரவு நான் கன்னியின் சகபாடியாக அவளுடன் தனிமையில் கழிக்க வேண்டியதாயிற்று. பொச்சாப்பும் குரோதமும் புகையும் மனிதர் வாழ் சமாதிகளுக்குள் ஒன்றில், என்னை இவ்வாறு நிச்சிந்தையாக ஒரு கன்னியுடன் இராப் பொழுதைக் கழிக்க விட்டுவிடுவார்களா? கல்லில் உறையும் கன்னி எனில், திரிகால பூஜையும் ஆர்ப்பாட்டமும் பண்ணிக்கொண்டிருப்பவர்கள் கூட, சற்றும் சஞ்சலமற்று நடந்து விடுகிறார்கள். என்ன மனிதர்கள், என்ன பிழைப்பு!
நான் உள்ளுக்குள்ளாகவே சிரித்துக் கொண்டேன். கல்லில் வடித்திருந்த உருவத்தில் மனசை லயிக்கவிட்ட எனக்கு, அந்தக் கோயிலில் அந்த அர்த்த ஜாமத்தில் இப்படி எண்ணமிட்டுப் பொழுதைக் கழிக்க நேர்ந்தது தற்செயலாக நிகழ்ந்த ஒரு காரியமா அல்லது... அதற்கும் அப்பால், அதற்கும் அப்பால் என வெங்காயத்தோல் உரித்துகொண்டுபோவது போல் மனித அறிவு என்ற ஸ்பரிசம் படப்பட மற்றொரு திரையிட்டுவிட்டு, அதற்கும் அப்பால் அகன்று சென்றுகொண்டே இருக்கும் அந்த விவகாரத்தைச் சேர்ந்த ஒரு நிகழ்ச்சியா என என்னால் நிர்ணயிக்க முடியவில்லை.

எனது இளமையில், எப்போதோ ஒரு முறை - கணக்குக் கூடத் தவறிப் போய் வெகுகாலமாகிவிட்டது - கன்னியின் கொலு விழாவிற்கு வந்தேன். மஞ்சணை மெழுகு வைத்து அர்ச்சகன் அந்தக் கருங்கல் வடிவத்தை பதினாறு வயது சிறுமியாக ஆக்கியிருந்தான். அந்த அர்ச்சகனுடைய கைத் திறமையை மறந்து அந்த அழகில் மனசை இழந்தேன். பிறகு உலகத்து ஊர்வசிகள் எல்லாம் பெண் பிறவிகளாகக் கூட எனக்குத் தென்படவில்லை. ஆனால் அதற்கு மறுநாள் ஏற்பட்ட ஏமாற்றத்தையும் என்னால் இன்றுவரை மறக்க முடியவில்லை. மறுநாள்தான் அர்ச்சகனுடைய கைத்திறமையை உணர முடிந்தது. உதயகால பூஜையின்போது, தேய்ந்தும் மாய்ந்தும் போய்த் தென்பட்ட கருங்கல் விக்கிரகந்தானா முந்திய நாள் இரவில் கண்ட யுவதி! அன்று சிதறின ஆசை பிறகு மறுபடியும் மனசில் குவியவே இல்லை.

திட்டிவாசல் வழியாகக் கடற்காற்று பரம் பரம் என அடித்துக் கொண்டிருந்தது. இருப்புக் கொள்ளவில்லை. மூலக் கிரகத்தை ஏறிட்டுப் பார்த்தேன். இருட்டுடன் ஐக்கியமாகிக் கிடக்கும் சிலையில் வைர மூக்குத்தி மட்டும் சுடர்விட்டது. எழுந்து பிரகாரத்தைச் சுற்றி வந்தேன். தூக்கமோ அகன்று விட்டது. என்ன செய்யலாம்? பொழுது விடிவதற்கு இன்னும் எவ்வளவு நேரம் இருக்கும் என்று பார்க்கலாம் எனக் கிழக்குக் கோபுர வாசலின் திட்டிவாசல் வழியாக வெளியேறினேன். கடலலைகள் ஆக்ரோஷமாகக் குமுறி கிழக்கு வாசலிலிருந்து சமுத்திரத்துக்குள் இறங்கு 978-81-8368-545-0_b படிக்கட்டுகளை மோதி நுரை கக்கின. அன்று நல்ல நிலாக் காலம் ஆகையால் கடற்பரப்பு நுரைக் கரையிட்ட வெள்ளிபோல் மின்னியது. பேரலைகளுக்கிடையில், கடல் மட்டத்துக்கு அடியில் உள்ள குன்றுகளின் முகடுகள் பெரிய சுறா மீன்களின் முதுகு போலத் தென்படும். அடுத்த கணம் பனைப் பிரமாண்டமாக படம் எடுக்கும் நாக சர்ப்பம் போன்ற பேரலை மடங்கி அடித்து அதை முழுக்கிவிடும். வானத்தை அண்ணாந்து பார்த்தேன். இன்னும் விடிவெள்ளி உதிக்கவில்லை. எவ்வளவு நேரந்தான் காத்திருப்பது. நின்று நின்று காலோய்ந்து மறுபடியும் கோவிலுக்குள் நுழைந்தேன். திண்ணையில் துண்டை உதறிப் போட்டுக் கொண்டு அசந்துவிட்டேன். கடலின் ஓங்காரநாதம் தாலாட்டியது. நினைவு வழுவியது எப்பொழுது என்பது எனக்குத் தெரியாது. ஆனால் எங்கோ வெகு தொலைவில் நினைவின் அடிவானத்தில் பேரிரைச்சல் கேட்டுக் கொண்டே இருந்தது...

என்ன அதிசயம். கடல் அலைச் சத்தம் கேட்கவில்லையே. கடல் ஓய்ந்துவிட்டதா அல்லது என் காதுகள்தான் ஓய்ந்து விட்டனவோ? முழுப் பிரக்ஞையும் வந்துவிட்டது. ஆனால் இமைகள் மட்டும் விழிக்க முடியவில்லை. இடைவெளிகளினூடே கோயிலின் திட்டிவாசல் தெரிந்தது. கண் இமைகளை யார் இப்படி அமுக்குகிறார்கள். மேல்விழுந்து அழுத்தும் பெரும்சுமையை உதறித் தள்ளுகிறவன் போல, கண் இமைகளை நிர்ப்பந்தப்படுத்தித் திறக்க முயன்றேன். முடியவில்லை. மூச்சுத் திணறியது. சற்று அயர்ந்தேன். மந்திர வலையிலிருந்து விடுபட்டவைகளைப் போல எனது கண்கள் திறந்தன. அப்பாடா என்ன சுகம்! எழுந்து உட்கார்ந்தேன். உறக்கச் சடைவு தீரவில்லை. என்ன அதிசயம்! அலைச் சத்தமே கேட்கவில்லையே! இதென்ன கூத்து? திட்டிவாசல் வழியாக நிலவொளிதான் தெரிந்தது. கர்ப்பக்கிரகத்தில் வைரத்தின் ஒளிச் சிமிட்டும் பழையபடிதான் இருந்தது. எழுந்து திட்டிக் கதவு வழியாக வெளியே வந்தேன். என்ன ஆச்சர்யம்! கண்ணுக்கெட்டிய வரை சமுத்திரத்தையே காணவில்லை. பால் போன்ற நிலவில் சமுத்திரப் படுகைதான் தெரிந்தது. கடல் வற்றுவதாவது! எதிரில் சற்று முன் குமுறிக் கொண்டு நின்ற பேரலைகள் எங்கு சென்று ஒளிந்தன? கடல் ஜலம் உள்வாங்கிவிட்டதா!

சமுத்திரப் படுகையிலே பெரும் பெரும் கற்குன்றுகள் சிதறிக் கிடந்தன. தூரத்தில் ஒரு குன்றின் பேரில் கோபுரமும் கோவிலும் தென்பட்டன. சமுத்திர மட்டத்துக்குக் கீழ் கோவிலும் கோபுரமுமா? பரளியாறும் பன்மலை யடுக்கத்து குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள என எவனோ ஒருவன் ஏங்கியது நினைவுக்கு வந்தது. நான் கண்ட கோவில் அழிந்து போன, கடல் உண்டு பசியாறின சமுதாயத்தின் கோவிலோ? என்ன கோவிலாக இருக்கக் கூடும்? ஒருவேளை இந்தக் கன்னிக்கு அவர்கள் கட்டிய கோவிலோ? எண்ணமிட்டுக் கொண்டே கோபுர வாசலில் இருந்து கடலுக்குள் இறங்கும் படிக்கட்டுகள் வழியாக இறங்கினேன். ஐந்நூறு படிகள்! கடல் படுகையில் நான் கால் வைத்து அண்ணாந்து பார்த்தேன். கன்னியின் கோவில் மலை முகட்டிலிருந்தது! கடல் திசையை நோக்கினேன். நிலவொளி அவ்வளவு தீட்சண்யமாக விழவில்லை. நாலா திசைகளிலும் சிதறிக் கிடக்கும் பாறைகளின் நிழல்கள் படுகையில் குடிகொண்டிருந்தன. படுகையில் கணுக்கால் அளவுதான் சகதி; பொருட்படுத்தாமல் நடந்து சென்றேன். ஆனைத் துதிக்கை போன்ற தன் எட்டுக் கைகளையும் ஒரு பாறையைப் பற்றிக்கொண்டு கவந்தன் மாதிரி வெறுந்தசைக் கோளமாகக் கண்சிமிட்டிக் கிடந்தது ஒரு ஜலராசி. அதன் வாழ்வு இன்னும் எவ்வளவு நேரமோ என்று எண்ணமிட்டுக் கொண்டு அதை கடந்தேன். தண்ணீர் வற்றிப் போனதால் மாண்டிருக்கும் என்று நினைத்தேன். அது ஜிவ்வென்று எழும்பி, தனது எட்டுத் துதிக்கைகளில் ஒன்றை என்மீது வீசியது. நல்ல காலம் நான் அதைக் கடந்துவிட்டேன். இல்லாவிட்டால் கழுத்தே முறிந்து போயிருக்கும். கடல் படுகையில் அழகான பவழக் கொடிகள், விசித்திர விசித்திரமான செடிகள் இருந்தன. இந்த இருட்டுப் பாதை வழியாகச் செல்லுதற்கே பயமாக இருந்தது.

பாறையின் பேரில் ஏறி நிலவு வெளிச்சத்துக்குப் போய்விட்டால் போதும் என்றாகிவிட்டது. பாறை வழுக்குமோ என்று நினைத்தேன். கரடுமுரடாக இருந்ததினால் பற்றி ஏறுவதற்குச் சுளுவாக இருந்தது. அதன் உச்சிக்கு வந்த பிறகு தான் வளைந்து வளைந்து நான் நடந்து வந்த தூரம் எவ்வளவு என்பது தெரிந்தது. கரையிலிருந்து பார்க்கும் போது தொலைவில் தெரிந்த கோவில் அடுத்த குன்றின் மேலிருந்தது. அது இதைவிட சற்றுத் தாழ்ந்தது. மறுபடியும் கீழே இறங்கிவிட்டால் அதில் ஏறுவது எப்படி என்று நான் தடுமாடிக்கொண்டு வரும்போது கிழக்குச் சரிவில் படிக்கட்டுகள் தென்பட்டன. எந்த யுகத்து மனிதர்கள் செதுக்கி வைத்ததோ! அதிசயப்பட்டுக் கொண்டு படிக்கட்டுகள் வழியாக இறங்கினேன். கால்கள் சற்று வழுக்கத்தான் செய்தன. மனசில் உள்ள வேகந்தான் என்னை இழுத்துச் சென்றது. படிக்கட்டுகள் மறுசரிவில் உயர ஏற ஆரம்பித்தன. சுமார் ஐம்பது படிக்கட்டுகள் தானிருக்கும். கோயிலிருந்த குன்றின்மேல் கொண்டுவிட்டது. கரையைத் திரும்பிப் பார்த்தேன். எங்கோ எட்டாத் தொலைவில் ஒரு பெருங்குன்றின்மேல் சிகரமும் கிழக்கு வாசலும் தெரிந்தன.
நான் நின்றிருந்த குன்று வெறும் பாறை. யாரோ அதை வெட்டிச் செதுக்கி சமதளமாகத் திருத்தி இருக்கிறார்கள். கோவிலும் அந்தக் குன்றின் ஒரு பகுதி. குடைவரைக் கோவில் என்று சொல்லுகிறார்களே அந்த ரகம். ஆனால் அதன் அமைப்பு வேறு. குன்றின் உச்சியைக் கோவிலாகச் செதுக்கி அதனோடு ஒட்டி பிரகாரமாக தளத்தையும் செப்பனிட்டிருக்கிறார்கள். கோவில் எல்லாம் பிரமாதமான உயரமல்ல. சுமார் நாற்பது அல்லது ஐம்பது அடி உயரந்தானிருக்கும். அதற்குக் கோபுரம் ஏதும் கிடையாது. மலையாளத்துக் கோவில்கள் மாதிரித் தானிருந்தது. ஆனால் கருங்கல் வேலைப்பாடு. சுற்றி வந்தேன். கிழக்குப் பக்கத்தில் வாசலிருந்தது; ஆனால் கதவில்லை. கோவிலின் முற்றத்தில் கிழக்குப் பிரகாரம் மூன்று நான்கு அடி அகலத்துக்கு மேல் இல்லை. அந்த பிரமாண்டமான பாறை பிளவுபட்டு, வெறும் பாதாளமாக இருட்டுடன் ஐக்கியமாயிற்று. வெளிப்பக்கத்தில் நிற்க பயமாக இருந்தது. கோவில் வாசலில் கால் வைத்தேன். சற்று தயக்கத்துடனேயே உட்புகுந்தேன். இந்த ஒற்றை கல் கோவிலுக்குள்ளும் சிறு பிரகாரம். அதன் மையத்தில் தான் கர்ப்பக்கிரகம். பிரகாரத்தைச் சுற்றி வந்தேன். இருட்டில் எதுவும் தெரியவில்லை. காலில்கூடப் பாசியும் நுரையும் மிதிபட்டது. கர்ப்பக்கிரகத்தைச் சுற்றி ஒரு பிரதட்சணம் வந்துவிட்டு, அதன் வாசல் பக்கம் நின்றேன். வாசலில் இரண்டு பக்கத்திலும் இரு அபூர்வமான மிருகங்களை துவாரபாலகர்கள் போல் கல்லில் செதுக்கியிருப்பது சற்று மங்கலாகத் தெரிந்தது.

கர்ப்பக்கிரகத்தில் என்ன இவ்வளவு இருட்டு என்று எண்ணமிட்டுக்கொண்டே கைகளை முன்னோக்கி நீட்டிக்கொண்டு கருங்கல் நிலையில் கால் வைத்தேன். நிலைப்படியில் தாமரைப்பூ செதுக்கியிருப்பது காலுக்குத் தட்டுப்பட்டது. முன் நீட்டிய கைகளை வழவழப்பான இருள் வழிமறித்தது. வழி கிடையாதா அல்லது கல்லால் செதுக்கிய கதவா என்று எண்ணமிட்டுக்கொண்டு தடவிப் பார்த்தேன். கரும் பளிங்குபோல வழவழப்பாக இருந்தது. கால் பாதத்தில் தட்டுப்படும் தாமரை உறுத்தியதினால் சற்று பாதத்தை உயர்த்திவிட்டு மறுபடியும் காலைக் கீழே வைத்தேன். குமிழ் போல ஏதோ தட்டுப்பட்டது. தாமரையின் மையம் என்று நினைத்தேன். அதே சமயத்தில் கருப்புப் பளிங்குக் கதவு உட்பக்கமாகத் திறந்தது. நான் கதவின் மீது கைகளை ஊன்றிக் கொண்டு நின்றதினால் தடமாடிக்கொண்டு உள்ளே சாய்ந்தேன். அங்கும் இருட்டு. அதே சமயம் வெளிவாசல் பக்கம் பேரிரைச்சல் கேட்டது. கடல் ஜலம் பிரளயம் போல நுங்கும் நுரையுமாக கோவிலுக்குள் பிரவேசித்தது. கர்ப்பக்கிரகத்தின் கதவு தானாகவே சாத்திக்கொண்டது.

இனிமேல் நமக்கு ஜலத்தில் சமாதி கட்டின மாதிரிதான் என்று பீதியடைந்து பதறினேன். ஆனால் பயம் மறுகணம் அகன்றது. கதவு பொருந்தியடைத்துக்கொண்டதும் கர்ப்பக்கிரகத்துக்குள் பிரமாதமான பிரகாசம். கண்ணையே குருடாக்கிவிடுமோ என்று பயந்தேன். இத்தனை நேரம் இருட்டில் கிடந்து தடமாடியதினால் இந்தத் தொந்தரவு போலும். ஒளியின் தன்மை கண்களுக்குப் பழக்கமாக ஆக உறுத்துவது போய் பன்னீர் விட்ட மாதிரி குளுமையாக இருந்தது. வெளிச்சம் எங்கிருந்து வருகிறது என்று பார்த்தேன். மேல் சுவரில் உள்ள ஒரு மாடத்தில் குத்துவிளக்குப் போல் ஒன்றிருந்தது. அதன் உச்சியிலிருந்து வந்தது இந்தப் பிரகாசம். சற்று நெருங்கிச் சென்று கவனித்தேன். குத்துவிளக்கு தங்கம் போலப் பிரகாசித்தது. அதன் உச்சியில் வைரம் ஒன்று பதித்திருந்தது. அதிலிருந்து எழுந்தது இந்தப் பிரகாசம். தூண்டாமணி விளக்கு என்று சொல்லுகிறார்களே அதுதானோ என்று அதை எடுத்துப் பார்க்க முயன்றேன்.

"அடே, அதைத் தொடாதே" என்று அதட்டியது ஒரு குரல்.
நான் திடுக்கிட்டுத் திரும்பினேன். ஆணோ பெண்ணோ எனச் சந்தேகப்படும்படியாக இருந்தது. வாக்கு தமிழ்தான் என்றாலும் தொனிப்பு யாழ்ப்பாணத்துக்காரர் ரீதியில் இருந்தது. சுற்றுமுற்றும் பார்த்தேன். யாரும் தென்படவில்லை.

"நான் இங்கேதான் இருக்கிறேன். இதோ என்னைப் பார்" என்றது அந்தக் குரல்.

நிருதியின் திசையிலிருந்து பலிபீடத்தின்மீது ஒரு தலை அமர்ந்திருந்தது. பெண்ணின் தலை. அதன் அளகபாரம் பலிபீடத்தில் மயில் தோகை மாதிரி விரிந்து கிடந்தது. முகத்தைப் பார்க்கப் பார்க்க எனக்கு அதிசயம் தாங்க முடியவில்லை. வருஷாவருஷம் வாழையடி வாழையாக அர்ச்சக பரம்பரை மஞ்சணை மெழுகு வைத்து அலங்காரம் செய்யும் முகத்தின் சாயலுக்கும் இதற்கும் சற்றும் வித்தியாசமில்லை. எத்தனை எத்தனை காலம் இந்த முகத்தின் சாயல் அர்ச்சக பரம்பரையின் நினைவில் படிந்து மனித வம்சத்தின் ஞாபகச் சரடாக இருந்து வந்திருக்கிறது! எனக்கு பலிபீடத்தில் அமர்ந்திருந்த தலை பேசியதில் அதிசயம் தோன்றாதது எனக்கே வியப்பாக இருந்தது. அசாதாரணமான நிலையில் அகப்பட்டுக் கொண்டால் எல்லாம் இயல்பாகத் தோன்றும் போலும். இப்படியாக நான் எண்ணமிட்டுக் கொண்டிருக்கும்போது, சண்பகப் பூவின் வாசம் கலந்த மெல்லிய காற்று கர்ப்பக் கிருகத்தில் ஊசலாடியது. காற்று எங்கிருந்து வருகிறது எனச் சுற்றுமுற்றும் பார்த்தேன். அந்தக் காற்று அந்தக் கற்குகைக் குள்ளாகவே தோன்றி அதனுள்ளேயே மடிகிறது போலும்.
"இம்மாதிரிக் காற்று அடித்தால் சூர்யோதயமாகிவிட்டது என்று அர்த்தம். அஸ்தமனமாகும்போது மல்லிகையின் வாசம் வீசும்" என்றது அந்தத் தலை.

இது என்னடா புதுவிதமான கடிகாரமாகத் தோன்றுகிறதே என்று எண்ணமிட்டுக்கொண்டு "நீ யார்? எப்படி சிரசை மட்டும் காப்பாற்றி உயிருடன் இருந்து வருகிறாய்?" எனக் கேட்கலாமா என்று வாயெடுத்தேன்.

அந்த சிரசு கண்களை மூடியபடியே நான் சொல்ல வந்ததை எதிர்பார்த்தது போல, வாயைத் திறவாமலேயே பேசியது.
"நானும் ஒரு காலத்தில் உன்னைப் போல உடம்புடன் தானிருந்தேன். உலக பந்தங்களுக்கு உடன்பட்டு பிறப்புச் சங்கிலிக்குள் தன்னையும் உட்படுத்திக்கொள்ள விரும்புகிறவர்களுக்குத்தான் உடம்பு அவசியம். காலத்தை எதிர்த்து நிற்க விரும்புகிறவர்களுக்கு உடம்பு அனாவசியம். மேலும் பால பேதத்தினால் உடலில் தோன்றும் இச்சா பந்தங்களையும் போக்கிக் கொள்ளலாம் அல்லவா? என்னுடைய வயசு என்னவென்று நினைக்கிறாய்? மூன்று கர்ப்ப காலம் கடந்துவிட்டது; நான் எத்தனை காலம் பிரக்ஞையுடன் இருக்க இச்சைப்படுகிறேனோ அத்தனை காலமும் வாழ முடியும். என்னுடைய இச்சை என்று அவிந்ததோ அன்று நான் காற்றுடன் காற்றாகக் கரைந்துவிடுவேன்..."

அந்த சிரசு மறுபடியும் பேச ஆரம்பித்தது.
"உடல் இழந்த வாழ்வு எனக்கு எப்படி ஏற்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பாதே. அந்த ரகசியம் உனக்குக் கிடைக்காது. அது குமரிமலையுடனும் பரளியாற்றுடனும் பரம ரகசியமாக ஹிரண்ய கர்ப்பத்தில் சென்று ஒடுங்கிவிட்டது. கேவலம் நீ ஒரு மனிதன். மிஞ்சிப்போனால் இன்னும் இருபது வருஷங்கள் உயிரோடு இருப்பாய். அதாவது இந்த உடம்போடு உறவு வைத்திருப்பாய். உனக்கு எதற்கு இந்த ரகசியங்கள்?" என்று கேட்டது.
"அழியும் உடம்பு என்பதை உன்னுடைய முன்னோர்களும் அறிந்துதானிருந்தார்கள். இருந்தாலும் கர்ப்ப கோடி காலம் பிரக்ஞை மாறாமல் வாழ்வதற்கு ஒரு வழி உண்டு என்பதைக் கண்டுபிடிக்காமல் ரொம்ப நாட்களைக் கழித்தார்களா? அப்படி அவர்கள் கழித்திருந்தால் இப்போது என்னுடன் பேச உனக்கு முடியுமா?" என்று கேட்டேன்.

தலை கடகடவென்று சிரித்தது. "உனக்கு உண்மையைத் தெரிந்து கொள்ளப் போதுமான தைரியம் உண்டா? நான் யார் என்பதைத் தானே தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறாய். கர்ப்ப கோடி காலத்துக்கு முன் நான் எப்படி இருந்தேன். நான் வாழ்ந்த உலகம் எப்படி இருந்தது. என்பதை நான் உனக்கு காட்டுகிறேன். மணிவிளக்கு நிற்கிறதே, அந்த மாடத்தின் அருகில் யாளியின் தலை ஒன்று செதுக்கியிருக்கிறது. தெரிகிறதா? அந்தத் தலையை வலப்புறமாகத் திருப்பு."
நான் அது சொல்லியபடி செய்தேன். தளத்தின் ஒரு பகுதி விலகியது. படிக்கட்டுகள் தென்பட்டன.

"தைரியமாக உள்ளே போ; உனக்கு ஆபத்து எதுவும் ஏற்படாது" என்றது அந்தத் தலை.

"நீ இருக்கும்போது எனக்கு என்ன பயம்? மேலும் ஆபத்துக்குப் பயப்படுகிறவனாக இருந்தால் சமுத்திரத்துக்கு அடியில் வலிய வந்து மாட்டிக்கொள்ள வேண்டாமே! நீ சொல்லக்கூடாத பரம ரகசியம் அங்கே என்ன இருக்கிறது?" என்று கேட்டேன்.

"என்னிடம் காதல் பேசினது போதும். என் வயசு மூன்று கர்ப்ப காலங்கள். நான் உன் பாட்டிகளுக்கு பாட்டி என்பதை மறந்து பேசாதே. இஷ்டமிருந்தால் போய்ப் பார்" என்று சற்று கடுகடுப்பாகப் பேசியது அந்த சிரம்.

"நானும் உன்னைப் போல உடம்பை இழந்துவிட்டு, எத்தனை கர்ப்ப கோடி காலமானாலும் உன் எதிரில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கத்தான் ஆசைப்படுகிறேன்" என்று சொல்லிக் கொண்டே படிக்கட்டுகளின் வழியாகக் கீழே இறங்கிச் சென்றேன். படிகள் எங்கு கொண்டு என்னை விடும் என்பது பற்றி நான் கவலைப்படவில்லை. கீழே என்ன இருக்கிறது; உலகத்தாருக்குத் தெரியக் கூடாது என காலம் என்ற திரையிட்டு, இயற்கை மறைத்து வைத்துள்ள ரகசியங்களில் எது என் வசம் சிக்கப் போகிறது என்று எண்ணமிட்டுக்கொண்டே நடந்தேன். கடல் கன்னிக் கோவிலில் இருந்த தூண்டாமணி விளக்கின் ஒளி, சிறிது தூரந்தான் படிக்கட்டுகளில் வீசியது. அதன் பிறகு, வழி நெடுக, நிலவொளி போல, வெள்ளியை உருக்கி வெளிச்சம் செய்தது போல ஒரு ஒளி எனக்கு வழிகாட்டியது. நிலவு எனவோ அல்லது நட்சத்திர ஒளியெனவோ அதை வருணிப்பது பொருந்தாது. தற்கால நியான் விளக்குகள் போல ஒரு வெளிச்சம். ஆனால் நியான் ஒளியைப் போல கண்ணையோ உடம்பையோ உறுத்தவில்லை.

குளுகுளுவென்று ரம்யமாக இருந்தது. வெளிச்சம் எந்தத் திசையிலிருந்துதான் வருகிறது என்பதை நிர்ணயிக்க முடியாதபடி ஒளிப்பிரவாகத்தின் காந்தி எல்லாவிடங்களிலும் ஒரே மாதிரி இருந்தது. பத்துத் திசையிலும் சிக்கென்று மூடிய பிலமாக இருந்தும், சுகந்தமான காற்று ஒன்று சற்று வேகமாக அடித்துக்கொண்டிருந்தது. பிலத்தில் நான் இறங்கிச் செல்லச் செல்ல, பேரலைகளின் குமுறல் போன்ற ஒரு பேரிரைச்சல் என் செவியை உடைக்க ஆரம்பித்தது. சப்தம் வந்த திசையை நான் நெருங்க ஆரம்பித்தேன்.
படிக்கட்டுகள் கடைசியாக ஒரு நிலவறையில் சென்று முடிவடைந்தன. நிலவறை அறுகோண யந்திரம் போல அமைக்கப்பட்டிருந்தது. படிக்கட்டுகளுக்கு எதிர் பாரிசத்தில் உள்ள சுவரில் உள்ள பிறையில் தலையற்ற முண்டம் ஒன்று வளர்த்தியிருந்தது; பச்சைக் கல்லைக் குடைந்து செய்த ஒரு பாத்திரம், அதன் தலை இருக்க வேண்டிய இடத்தில் ஒரு யந்திர சக்கரத்தின் மீது வைக்கப்பட்டிருந்தது. உடலத்தின் மீது ஒரு பிரம்பு கிடந்தது. நிலவறையின் இரு பாரிசத்திலும் இரண்டு வழிகள் தென்பட்டன. நான் பிலத்தின் மையத்தில் வந்து நின்று எந்தத் திசை நோக்கிச் செல்லலாம் என்று எண்ணமிட்டேன்.

எந்தத் திசையில் சென்றால் என்ன? எல்லாம் பார்க்க வேண்டிய இடந்தானே என்று நினைத்துக் கொண்டு இடது பக்கமிருந்த பாதை வழியாகச் செல்லுவதற்குத் திரும்பினேன்.

"இது திசைகள் அற்றுப்போன இடம்; எந்த வழியாகச் சென்றாலும் ஒன்றுதானே" என்ற ஒரு குரல் கேட்டுத் திரும்பினேன். ஒருவரையும் காணவில்லை. என் காதில் விழுந்தது நிச்சயமாக ஆண் குரல்.

குரலுக்குப் பதில் கொடாமல், நான் முதலில் நிச்சயம் பண்ணின பாதை வழியாகச் சென்றேன்.
யாரோ கடகடவென்று கர்ண கடூரமான குரலில் சிரிப்பது போலக் கேட்டது. திரும்பிப் பார்த்தாலும் ஆள் எங்கே தென்படப் போகிறது; பேசுகிறவன் என்றால் எதிரில் வந்து பேசட்டுமே என்று முனகிக் கொண்டே நடந்தேன். இந்தப் பாதையிலும் நன்றாக வெளிச்சமாகத் தானிருந்தது. ஆனால் நான் முன்பு கேட்ட பேரலைச் சத்தம் இன்னும் ஆக்ரோஷமாகக் கேட்டது. கடல் தளத்தருகில் நெருங்குகிறோமா, கடல் பிரவாகம் செல்லும் பிலத்துவாரம் எதுவும் இருக்கும் போலும் என்று நினைத்தேன். அடுத்த நிமிஷம் அது என்ன அசட்டுத்தனமான நினைப்பு. கடல் தண்ணீர் உள்ளே வர வழியிருந்தால் இந்தப் பிலம் முழுவதும் அல்லவா நிரம்பியிருக்க வேண்டும்? இரைச்சலுக்குக் காரணம் வேறு ஏதாவதாக இருக்க வேண்டும் எனத் தீர்மானித்தேன். ஆச்சு இன்னும் எவ்வளவு தூரமிருக்கப் போகிறது? போயே பார்த்து விடுகிறது. சப்தத்தைத் தாங்குவதற்குச் செவித் தொளைகளுக்குப் போதுமான சக்தியில்லை. மேல்துண்டை எடுத்துக் காதோடு காதாக வரிந்து கட்டிக் கொண்டு மேல் நடக்கலானேன். சிறிது தூரம் சென்றதும் வெக்கை அடிக்க ஆரம்பித்தது. வரவர வெக்கை அதிகமாயிற்று. அக்னிச் சுவாலைக்குள் நடப்பது போலத் திணறினேன்.

ஆனால் அடியெடுத்து வைக்கும்போது தரை சுடவில்லை. இதற்கு மேல் சுமார் பத்து கெஜ தூரந்தான் என்னால் போக முடிந்தது. மேல் நடப்பது சாத்தியமில்லை என்று திரும்பினேன்.

"வடக்குச் சுவரில் உள்ள மாடத்தில் ரசக் குழம்பு இருக்கிறது. அதை உடம்பில் தடவிக் கொண்டால் மேலே போக முடியும்" என்று ஒரு குரல் கேட்டது. பழைய குரல்; அதே குரல்.

மாடத்திலிருந்த பாத்திரத்தை எடுத்தேன். உருக்கிய வெள்ளி போல, சந்தனக் குழம்பின் மென்மையுடன் கைக்கு இதமாக இருந்தது. அள்ளி எடுத்து உடம்பு முழுவதும் பூசிக்கொண்டேன். வெக்கை குடியோடிப் போயிற்று. ஆனால் உடம்பு வெள்ளி வார்னிஷ் கொடுத்த மாதிரி ஒரேயடியாக மின்னியது. இந்த நவராத்திரி வேஷத்துடன் மேலும் நடந்து சென்றேன். தூரத்தில் புகையும் அக்னிச் சுவாலையும் ஒரு பிலத்திலிருந்து எழுவதும், மறுகணம் அடியோடு மறைவதுமாகத் தெரிந்தது. பூமிக்கடியில் இருக்கும் எரிமலையோ எனச் சந்தேகித்தேன். நான் நினைத்தது சரிதான். எரிமலைதான். இந்த அக்னி கக்கும் மலையினருகில் எப்படிப் படிக்கட்டும் மண்டபமும் கோவிலும் வந்து கட்டினார்கள்? ஏன் கட்டினார்கள்? எந்த மனித வம்சம் இதைக் கட்டியிருக்கக் கூடும் என எண்ணமிட்டுக் கொண்டு நின்றேன். பொங்கிக் கொப்புளிக்கும் அக்னிச் சுவாலை ஒடுங்கியது. பூமியினடியில் மட்டும் பெருங்குமுறல் கேட்டுக் கொண்டிருந்தது. நானும் சற்று தைரியமாக எரிமலையின் விளிம்பு அருகே சென்றேன்.

ஆழத்தில் வெகு தூரத்தில் பாறையும் மண்ணும் உலோகங்களும் பாகாக உருகிக் கொந்தளித்துச் சுவாலை விடுவது தெரிந்தது. விளிம்பருகிலும் படிக்கட்டுகள். ஆனால் மிகவும் ஒடுங்கியவை. பாறையைக் கொத்திச் செதுக்கியது போலத் தென்பட்டது. இந்தப் படிக்கட்டுகள் எரிமலையின் உட்புறச் சுவரில் தென்பட்ட பிலத்துக்குள் சென்றது. அங்கே ஒரே இருட்டு. திரும்பி விடலாமா என யோசித்தேன். திரும்பவும் படிக்கட்டுகள் வழியாக மேலேறி வருவதற்குப் பயமாக இருந்தது. வந்தது வருகிறது என இருட்டில் நடந்து சென்றேன். சிறிது தூரம் செல்லுவதற்குள் எரிமலையின் பேரிரைச்சல் கேட்கவே இல்லை. அதற்கு வெகு தொலைவில் வந்துவிட்டது போல அவ்வளவு நிசப்தமாக இருந்தது. சுமார் அரை மணிப் பொழுது நடந்து சென்றிருப்பேன். இந்தப் பாதை என்னை ஒரு மண்டபத்தில் கொண்டு சேர்த்தது. கால் கடுக்க ஆரம்பித்தது. தரையில் உட்கார்ந்துகொண்டேன். சுற்றுமுற்றும் இருட்டில் எதுவும் தெரியவில்லை. அக்னி வெக்கைக்குத் தப்புவதற்காக நான் உடம்பில் பூசிக் கொண்ட திராவகந்தான் மின்னியது.

"இன்னும் எத்தனை நேரந்தான் உட்கார்ந்திருக்கப் போகிறாய். கால் வலி தீரவில்லையா? ஆனாலும் நீ தைரியசாலிதான்" என்றது ஒரு குரல். அதே குரல்; பழைய குரல்.
"நீ யார், எங்கு பார்த்தாலும் என்னைத் தொடர்ந்து வருகிறாயே? நீ எங்கே நிற்கிறாய்? எனக்குத் தென்படவில்லையே?" என்று கேட்டேன்.
அந்தக் குரல் சிரித்தது.

"நான் உன் பக்கத்தில் தான் இருக்கிறேன். எனக்கு உடம்பு கிடையாது. அதனால் நான் எங்கும் இருக்க முடியும். நான் எங்கு இருந்தாலும் உன் பக்கத்தில் இருக்க முடியும். அதைப் பற்றி உனக்கு என்ன கவலை? நீ எங்களுடைய அதிதி. உன்னை உபசரிப்பது எங்கள் கடமை."

2. ஸித்தலோகம்

"அசிரீரியாருக்கு ஆசாரமாகப் பேசத் தெரியும் போலிருக்கு; வந்தவனை வாவென்று கேட்பாரில்லை; இருட்டில் திண்டாட விட்டுவிட்டு வேடிக்கை பார்ப்பது இந்த இடத்துச் சம்பிரதாயம் போலும்" என்று நான் முழங்காலைத் தடவிக் கொண்டே கேட்டேன்.

"எங்களுக்குத் தெரியாததைப் பற்றி நீ பேசிக்கொண்டிருந்தது போதும்; உடனே, எதிரே தெரிகிறதே வாசல், அதன் வழியாகப் போனால் பாதாள கங்கை ஓடுகிறது. அதில் போய்க் குளி. இல்லாவிட்டால் உடம்பு வெந்து போகும். நீ உடம்பில் பூசிக்கொண்டிருக்கிறது கார்கோடக பாஷாணம் சேர்ந்த ரசக்குழம்பு. வெளி வெக்கை இருந்தால்தான் உடம்பைப் பாதுகாக்கும். இல்லாவிட்டால் உடம்பையே தின்றுவிடும். எலும்புக்கூடுகூட மிஞ்சாது" என்றது அசரீரிக் குரல்.
எனக்குப் பகீர் என்றது. விழுந்தடித்துக்கொண்டு எழுந்தேன். "நீரும் என் கூட வாருமே; பேச்சுத் துணையாக இருக்கும்" என்று சொல்லிக் கொண்டு பிலத்தின் வழியாக பாதாள கங்கைக்குச் சென்றேன். பிரமாண்டமான பாம்புப் பொந்து போல பூமியைக் குடைந்துகொண்டு நதி வேகமாக ஓடியது. இருட்டுக்கும் ஜலத்துக்கும் வேறுபாடு தெரியவில்லை. ஜலத்தில் கால் வைத்தேன். ரொம்ப ஜில்லென்றிருந்தது. ஒரு முறை சென்றிருக்கிறேன் மானஸரோவரத்துக்கு; அந்தத் தண்ணீர் அவ்வளவு ஜில்லென்றிருந்தது. வெகு நேரம் தண்ணீரில் துளைந்தால் முடக்குவாதம் வந்துவிடக்கூடாது என்று இரண்டு மூன்று முக்குப் போட்டுவிட்டுக் கரையேறினேன். ஆற்றில் இறங்கியதுதான் தாமசம், உடம்பில் பூசியிருந்த வர்ணச்சாயம் அப்படியே கரைந்து போய்விட்டது. கரையேறி உடம்பைத் துடைத்துக் கொண்டு நிற்கும்போது, தண்ணீரில் மின்னல் கொடிகள் போல அப்பொழுதைக்கப்பொழுது தெரிந்து மறைந்தது. சூரிய வெளிச்சமே படாத இந்த பிலத்தில் கூட ஜல ராசிகள் எப்படித் தோன்ற முடியும் என்று ஆச்சரியப்பட்டுக்கொண்டே நின்றேன்.
"வீணாகப் பொழுதைப் போக்கிக் கொண்டிருக்காதே. உன்னை ஸித்தலோகத்துக்கு அழைத்துச் செல்ல உத்தேசித்திருக்கிறேன். உனக்கு அங்கே சென்றால்தான் உணவு" என்றது அந்த உடம்பற்ற குரல்.
"ஸித்தலோகமா? அங்கே செல்வதற்கு இந்தப் பிலத்தினுள் வழி ஏது?" என்று கேட்டேன்.

"இதோ இந்த பாதாள கங்கை இருக்கிறதே இதன் வழியாக" என்றது குரல்.

"நீந்தியா?" என்று கேட்டேன்.

"குளிரும் என்று பயப்படாதே. உன்னை ஏற்றிச் செல்ல புணை வரும்" எனச் சிரித்தது அந்தக் குரல்.

"இந்த நதி எங்கிருந்து வருகிறது என்றா எண்ணுகிறாய்? இதுதான் பூலோகத்திலேயே பிரமாண்டமான நதி. இங்கிருந்து பத்து யோஜனை தூரத்திலுள்ள கன்னிச் சுனையிலிருந்து உற்பத்தியாகி கார்கோடகத் தீவுவரை கிழக்கு நோக்கிச் சென்று பிறகு அங்கிருந்து வடதிசை திரும்பி அங்கு காட்டினடியில் ஓடி, அங்கேயே மடிகிறது. பூமிக்கு அடியில் இதே மாதிரி இன்னும் எத்தனையோ நதிகள் உண்டு. அதோ வருகிறது பார் ஒரு புணை. நீ அதில் ஏறிக்கொண்டால் ஸித்தலோகத்துக்குப் போய்ச் சேரலாம்" என்றது அந்தக் குரல்.

அது பேசி முடிப்பதற்கு முன் அந்தப் புணை நான் நின்ற படிக்கட்டுகள் அருகில் வந்து தேங்கியது. என்ன கோரம். மூன்று நான்கு பிணங்களை, இல்லை முண்டங்களைச் சேர்த்துக் கட்டிய மிதப்பு. முண்டங்கள் தங்கம் போலத் தகதகவென மின்னின. இதில் ஏறிக் கொள்வதா?
"தயங்காதே; நெருப்பு என்றால் வாய் சுட்டுவிடுமா? அல்லது பிணம் என்றால் நீயும் பிணமாகிவிடப் போகிறாயா? தயங்காதே; ஏறி உட்கார்ந்துகொள்" என்று அதட்டியது அந்தக் குரல்.

நானும் சுவாதீனம் இழந்தவனைப் போல அதில் ஏறி உட்கார்ந்து கொண்டேன். மிதப்பு நகர ஆரம்பித்தது.
"நீயும் என்னுடன் வரவில்லையா" என்று கேட்டேன்.

"இதுதான் என் எல்லை" என்றது அசரீரி.

"பிறகு எப்பொழுது சந்திப்பது?" என்றேன்.

"ஸித்தலோகத்தில்" என்றது அசரீரி.

"எல்லையும் எல்லையற்ற தன்மையுமா?" என எனக்குள்ளாகவே எண்ணமிட்டேன். பிரேதப் புணை வெகு விரைவாகச் செல்ல ஆரம்பித்தது. நதியின் வேகத்தைவிடப் பன்மடங்கு வேகமாகத் தண்ணீரைக் கிழித்துக் கொண்டு சென்றது.

நான் பிணத்தின் மீது உட்கார்ந்தபடி ஜலத்தைப் பார்ப்பதும் இருட்டைப் பார்ப்பதுமாக இருந்தேன். திடீரென்று உஸ் என்ற இரைச்சல் கேட்டது. புணைக்குக் குறுக்காகக் கருநாகம் ஒன்று படமெடுத்துக் கொண்டு சீறிக் கொண்டு நீந்திச் சென்றது. பயம் பன்மடங்கு அதிகமாக இருந்தது. தலை கிறங்கும்படியாகப் புணையின் வேகமும் அதிகமாக இருந்தது. எத்தனை நேரம் கழிந்ததோ?

புணை வேகம் குறைய ஆரம்பித்தது. பிறகு மெதுவாக வலது கரையில் சென்று ஒதுங்கியது. நான் பதனமாகக் கரையில் கால் வைத்தேன். இங்கே முன் போல பாதையில்லை. மணற்பாங்காக இருந்தது.

என்ன அதிசயம்! நான் திரும்பிப் பார்க்குமுன் புணையாக வந்த கவந்தங்கள் எழுந்து கரையேற ஆரம்பித்தன. அவை கரைக்கு வந்து நின்றதுதான் தாமசம். அவை தலை பெற்றன. மனிதத் தலைகளா! அல்ல. மாட்டுத் தலைகள். அவற்றின் நெற்றியில் பிரகாசமான கண் போன்ற துவாரம் தெரிந்தது.
"வாருங்கள் போகலாம்" என்றன அந்த நான்கு அதிசயத் தோற்றங்களும்.

நான் தயங்கினேன்.

"இதுதான் ஸித்தலோகம். மாடர்கள் அல்லது நந்திக் கணங்கள் என எங்களைச் சொல்லுவார்கள். பயப்படாமல் வாரும்" என்று சொல்லிக் கொண்டு எனது வருகையை எதிர்பார்க்காமலேயே நடக்க ஆரம்பித்தன. நானும் தொடர்ந்து நடந்தேன்.

விசித்திர விசித்திரமான தாவர வர்க்கங்கள் தோன்ற ஆரம்பித்தன. பூமியின் சிசுப் பருவத்திலே தோன்றிய தாவர வர்க்கங்கள் என்று சொல்லுவார்களே சயன்ஸ்காரர்கள் அவை போன்றவை. பிரமாண்டமான நாய்க்குடைகள், தாழைகள், கொடிகள் விசித்திர விசித்திரமாக முளைத்திருந்தன. ஆனால் அவை யாவும் பொன் போலும் வெள்ளி போலும் மின்னின. இன்னும் சிறிது தூரம் சென்றதும், ஏழு வர்ணங்களிலும் தண்டு முதல் இலை வர பளபளவென சாயம் பூசி வைத்த மாதிரி நிற்கும் விருக்ஷங்களைக் கண்டேன். அதிலே நீல நிறமான கருநாகங்கள் சோம்பிச் சுற்றிக் கிடந்தன. வழியிலே தங்கத் தகடு போல மின்னிய தவளை கத்திச் சென்றது.
மரச்செறிவுகளுக்கிடையே நந்திக் கணங்கள் மறைந்து விட்டனர். அவர்கள் எந்த வழியில் சென்றார்கள் என்பதைக் கவனிக்கவில்லை. கால்கொண்டு போன வழியே நடந்தேன். மரங்களுக்கிடையே திறந்த வெளி வந்தது.
அங்கே சமாதி நிலையில் பதினெட்டுப் பேர் அந்தரத்தில் அமர்ந்திருந்தனர். அவர்கள் ஒவ்வொருவருக்கடியிலும் வெள்ளி போன்ற ஒரு உருண்டை இடையறாது சுழன்றுகொண்டிருந்தது.

"வா அப்பா, வந்து உட்காரு" என்றார் தலைவராக அமர்ந்திருந்த ஸித்த புருஷர்.

அத்தனை பேருக்கும் உருவபேதம் கற்பிக்க முடியாதவாறு ஒரே அச்சில் வார்த்த சிலைகள் போன்றிருப்பதைக் கண்டு அதிசயப் பட்டேன்.

"உடம்பை இஷ்டப்படி கற்பித்துக்கொள்ள முடியாதா? இருந்து பார் எப்படி என்பது தெரியும்" என்றார் அவர்.
நான் அவரது காலடியில் அமர்ந்தேன்.

"உனக்குப் பசிக்குமே" என்று சொன்னார்.

நந்திக் கணத்தில் ஒருவன் தோன்றினான். முகத்தைக் கழற்றி வைத்தான். அப்பொழுதுதான் மாட்டின் தலையை அப்படியே வெட்டி எடுத்துப் பதனிட்டுச் செய்த முகமூடி என்பதைக் கண்டேன்.

"இது பூர்வீக காலத்துத் தலைக் கவசம், இரும்பு தோன்றுவதற்கு முன்" என்றார் ஸித்த புருஷர்.
நந்தி நேராக எதிரே இருந்த ஒரு விசித்திரமான மரத்தினடியில் சென்றான். இலைகள் அவனைத் தழுவிக் கொண்டன. மரத்தின் பாம்புக் கைகள் அவனைச் சுற்றிச் சுற்றிப் பின்னின.

சற்று நேரங்கழித்து இலைகள் தானாக விலகின. அதனடியிலிருந்து விழுந்தது ஒரு எலும்புக் கூடு.
ஸித்த புருஷர் ஏதோ துரட்டி போன்ற ஆயுதத்தைக் கொண்டு அதை மரத்தினடியிலிருந்து இழுத்துப் போட்டார். எலும்புகள் பற்று விடாமல் பூட்டோ டு அப்படியே வந்தன. வேறு இரண்டு நந்திகள் வந்து எலும்புக் கூட்டைத் தூக்கிச் சென்றார்கள்.

"இங்கே பிரபஞ்ச நியதிப்படி பிரஜோற்பத்தி கிடையாது. அதனால் ஒவ்வொரு எலும்புக் கூடும் அத்யாவசியம்" என்றார் ஸித்த புருஷர்.

இவர் என்ன, நம்மைப் பசிக்கிறதா என்று கேட்டுவிட்டு வீண்கதை பேசுகிறார் என்று நினைத்தேன். எதிரிலிருந்த மரம் எருமை முக்காரம் போடுவதுபோலக் கனைத்தது! சில மரங்களில் அதன் பால் நாளங்கள் வழியாக வேகமாக ஓடும் போது கனைக்கும் சப்தம் கேட்கும் எனப் படித்திருக்கிறேன். நரமாம்ச பட்சணியான இந்த மரமும் அப்படித்தான் போலும்.
ஸித்த புருஷர் அருகில் இருந்த அம்பு ஒன்றை எடுத்து வீசினார். வெறும் சதைப்பற்றில் பாய்வது போல புகுந்தது.
அம்புடன் தொடுக்கப்பட்டிருந்த கயிற்றின் வழியாக அதன் பால் வழிந்து ஓடிவந்து ஒரு பாத்திரத்தை நிறைத்தது. பாத்திரம் நிறைந்ததும் மரத்திலிருந்து அம்பை உருவினார். கொப்புளித்து வந்த பால் சற்று நேரத்தில் காய்ந்து மரத்தோடு மரமாகிவிட்டது.

பாலை எடுத்து என்னிடம் கொடுத்துச் சாப்பிடச் சொன்னார். மனிதனைத் தின்ன மரத்தின் பாலையா சாப்பிடுவது!
நான் விழித்தேன்.

சுடுகாட்டு மாமரத்துப் பழம் தின்பது என்றால் விரசமாகத் தெரியவில்லையே? சாப்பிட்டுத்தான் பாரேன் எப்படி இருக்கிறது என்று" என ஸித்த புருஷர் சிரித்தார்.
நானும் எடுத்துப் பருகினேன். பசி களைப்பு எல்லாம் பஞ்சாய்ப் பறந்து உடம்பிலே புதிய சக்தியும் தெம்பும் உண்டாயின. "இதையே சாப்பிட்டுக் கொண்டிருந்தால் சாக்காடு இல்லை" என்றார்.

"கடல் கொண்ட கோவிலில் உள்ள கன்னி யார்?" என்றேன்.
"அவளா! அந்தக் காலத்தில் உனக்கு வாழ்க்கைப்பட வேண்டியவள். பூசாரி சடையன் மகள். இன்று காவல் தெய்வம்" என்றார் ஸித்த புருஷர்.

"ஞாலத்தில் யாத்திரை செய்வது போல காலத்திலும் யாத்திரை செய்து பார்க்கப் பிரியமா?" என்று கேட்டார்.
"அது எப்படி முடியும்?" என்று கேட்டேன்.

"இதோ சுழன்று கொண்டே இருக்கிறதே அந்த ரஸக் குளிகையைப் பார்த்துக் கொண்டு" என்றார்.

3. குமரிக்கோடு

"ரஸக் குளிகையைப் பார்ப்பது இருக்கட்டும்; நான் எங்கே இருக்கிறேன்?" என்றேன்.

"ஈரேழு பதினான்கு லோகங்களில் இது ஒன்று என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா?" என்றார் ஸித்த புருஷர்.
"நான் அப்படி எதுவும் நினைக்கவில்லை. சிந்திப்பதற்கு லாயக்கில்லாதபடி புத்தி குழம்பிக் கிடக்கிறது" என்றேன் நான்.

"புத்தி குழம்புவதற்கு இங்கே உனக்கு ஊமத்தைச் சாறு பிழிந்து யாரும் கொடுக்கவில்லையே?"

"இயல்பு என நான் நினைத்துக் கொண்டிருப்பதற்கு மாறாக இங்கே காரியங்கள் நடந்துகொண்டிருக்கும்போது ஊமத்தைச் சாறு வேறு அவசியமா?" என்றேன்.

"இயல்பு என்று நீ நினைத்துக் கொண்டிருப்பதற்கு மாறாக எதுவும் நிகழந்தால் அதை இயல்புக்கு மாறானது என்று நிச்சயப்படுத்தி விடலாமா?" என்றார் ஸித்த புருஷர்.
"உடலற்ற தலை பேசுவதும், உடம்பற்ற குரல் துணை வருவதும், தலையற்ற முண்டம் புணையாகவும் பிறகு வழிகாட்டியாகவும் உயிர் பெறுவது என்றால் அது எனக்குக் கொஞ்சம் அதிசயமாகத்தான் இருக்கிறது. நான் பிறந்து நாளது வரையில் நடமாடிய உலகத்தில் அந்த மாதிரி நடந்தது கிடையாது. அங்கே செத்தவர்கள் செத்தவர்கள்தான்" என்றேன்.

"சாவு என்பது என்ன?" என்றார் ஸித்த புருஷர்.
"'உறங்குவது போலும் சாக்காடு - உறங்கி விழிப்பது போலும் உயிர்ப்பு' என்று சொன்னால் உங்களுக்குத் திருப்திதானே?" என்றேன்.

"நீ திருக்குறள் படித்திருக்கிறாய் என்பதை எனக்குச் சொல்லிக் காண்பித்தது போதும். சாக்காடு என்றால் என்ன?" என்றார் ஸித்த புருஷர் மறுபடியும்.

"அது என்னதென்று சொல்லத் தெரியாமல்தான் எங்களுடைய சமய சாஸ்திரங்கள் தவிக்கின்றன" என்றேன்.

"எங்கள் உங்கள் என்று பேதம் பேசினது போதும்; நானும் உங்களவன் தான். உனக்குத் தெரியாமல் போனால் இல்லை என்று சாதித்துவிடுவாய் போலிருக்கிறதே."

"நிச்சயமாக ஏகோபித்த அபிப்பிராயம் இல்லாதவரை..."
"சமய சாஸ்திரத்தின் நிச்சயத்தன்மை பற்றி பிறகு பேசிக் கொள்வோம். சாவு என்றால் என்ன என்பது நிச்சயமாக உனக்குத் தெரியாது என்பதை ஒப்புக்கொள்."

"நான் ஒப்புக்கொள்கிறேன். அதற்கு மேலே சொல்லுங்கள்."

"செத்த பிறகு என்ன நடக்கிறது? மூச்சு நின்று விடுகிறது. ரத்த ஓட்டம் நின்றுவிடுகிறது. ஸ்மரணை கழன்றுவிடுகிறது. நீ உடம்பு என்று சொல்லுகிறாயே அது பல அணுக்களின் சேர்க்கையிலே, அவை சேர்ந்து உழைப்பதிலே உயிர்த் தன்மை பெற்றிருக்கிறது. அது அகன்றவுடன் அணுக்கள் தம் செயலை இழந்துவிடுவதாகப் பொருள் அல்ல; அவை சேர்ந்து உழைக்கும் சக்தியை இழந்துவிடுகின்றன; அவ்வளவுதான். அவற்றைத் தனித்து எடுத்து அவற்றிற்கு வேண்டிய ஆகாராதிகளைக் கொடுத்துக் கொண்டு வந்தால் அவை வளரும்..."

"ஆமாம்; அது சாத்தியந்தான்; எங்கள் லோகத்திலும் ஒரு வெள்ளைக்காரர் இதைச் செய்து காட்டியிருக்கிறார்" என்றேன்.

"இதை நீங்கள் வேறு செய்து பார்த்து திருப்தியடைந்திருக்கிறீர்களா? இதுதான் முதல் படி. இதற்கப்புறந்தான் விவகாரமே ஆரம்பிக்கிறது. மரணத்தில் எத்தனை வகையுண்டு என்பது தெரியுமா? கிழடு தட்டிச் சாவது ஒன்று; பிஞ்சிலே மடிவது ஒன்று; நோய் விழுந்து மடிவது ஒன்று; பிறகு திடகாத்திர தேகத்துடன் இருந்து வருகையில் அணுக்களின் சேர்க்கையைத் துண்டிப்பதால் ஏற்படுவது ஒன்று; இந்த மாதிரி மரணத்தில் எத்தனையோ வகை. ஆதி காலத்தில் நரபலி கொடுத்துக் கொண்டிருந்தார்களே அதனால் எவ்வளவு உபயோகம் இருந்தது தெரியுமா? எமனை எட்டி நிற்கும்படிச் சொல்வதற்கு எங்களுக்கு சக்தி கிடைத்ததெல்லாம் இதனால்தான்..."

"நாம் அநாகரீகமானது எனக் கண்டித்துக் கொண்டிருந்த ஒரு காரியம் ஆதிகாலத்தில் சாஸ்திர வளர்ச்சிக்கு எவ்வளவு துணை செய்திருக்கிறது" என நான் எண்ணமிடலானேன்.
"கழுத்துடன் அரிந்து உயிரைப் போக்கிவிட்ட பிற்பாடு அணுக்களின் நசிவு ஏற்படாமல் தடுத்துக் கொள்ள முடியுமானால், அதாவது அதில் உள்ள உயிர்ப்பை மட்டும் அவிந்து போகாமல் காப்பாற்றிக் கொண்டால், அந்த உடம்பை நம் இஷ்டப்படி இயக்கலாம் அல்லவா?"

"உதாரணமாக?"

"வெறும் மூளை இருக்கிறதே; அதுதான் மனம் புத்தி சித்தம் என்பனவற்றிற்கெல்லாம் ஆதார கோளம் என்பது உனக்குத் தெரியுமா? பழகிக் கொண்டால் பக்கத்தில் உள்ளவரை நம் இஷ்டப்படி ஆட்டி வைக்க முடியும் என்பது தெரியுமல்லவா?"

"ஆமாம். அது சாத்தியந்தான். நான் கூட நேரில் பார்த்திருக்கிறேன்."

"அதே மாதிரி ஜீவனை அகற்றிய தலையைத் தூர வைத்துவிட்டு, அதன்மூலம் அங்கு நடப்பதை அறியலாம். அங்கு நாம் விரும்புவதை நடத்தலாம். அதே மாதிரி தலைகள் மூலம் உடற்கூறுகளை நம் இஷ்டப்படி இயக்கலாம். இதெல்லாம் வெறும் பொம்மலாட்டம். பிரபஞ்ச தாதுக்களின் நுட்பங்களை அறிந்தவர்களுக்கு உயிர்ப்பை மட்டும் உடம்பில் காப்பாற்றி வைப்பதற்கு முடியும்..."
"அப்படியானால் நான் முதலில் கோவிலுக்குள் நுழைந்த போது அந்தக் கன்னியின் சிரசின் மூலம் தாங்கள்தான் பேசினீர்களோ" என்று கேட்டேன்.

ஸித்த புருஷர் விழுந்து விழுந்து சிரித்தார். அந்தச் சிரிப்பிலே நாக சர்ப்பத்தின் சீறலும் தொனித்தது. எனக்கு வெகு பயமாக இருந்தது.

என் மனசில் ஓடிய எண்ணங்கள் எல்லாம் அவருக்கு வெட்ட வெளிச்சம் என்பதை உணர்ந்துகொண்ட எனக்கு இன்னும் பீதி அதிகமாயிற்று.

நான் பயத்தைக் காட்டிக்கொள்ளவில்லை. "தூரத்தில் பேசுவதற்கும் பொருள்களை இயக்குவதற்கும் நாங்கள் எங்கள் லோகத்தில் வெறும் ஜடப் பொருள்களையே உபயோகிக்கிறோமே. அந்தக் காரியத்தை நடத்துவதற்காக உயிர்க் கொலை செய்வது அநாவசியம்தானே?" என்றேன் நான்.

"நீங்கள் ஜடப் பொருள்களை இயக்கி காரிய சாதனை செய்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஜடப் பொருள்களை இயக்குவது என்றால் ஜடத்துக்குள் வசப்பட்டு அதன் நியதிகளுக்கு இணங்கி, தானே காரியம் நடக்கிறது. உங்களுடைய காரியங்களைப் புயல்கூடத் தடுத்துவிடுமே; எங்களுக்கு அப்படியா? எரிமலையைத் தாண்டிக்கொண்டு எங்கள் எண்ணங்கள் செல்லுகின்றனவே; உங்களுக்கு அப்படியா? நீங்கள் பேசினால் அங்கே குரல் கேட்கும்; அதாவது உங்கள் குரல் கேட்கும்; இங்கு அப்படியா? நீங்கள் ஜடப் பிராணனை உபயோகிக்கிறீர்கள். நாங்கள் அதற்கும் நுண்தன்மை வாய்ந்த சூட்சுமப் பிராணனை உபயோகிக்கிறோம். அது கிடக்கட்டும். நான் கேட்பதற்குப் பதில் சொல்லு; நீ காலத்தில் யாத்திரை செய்ய விரும்புகிறாயா? சொல்லு."

"நான் எதற்கும் தயாராகத்தான் வந்திருக்கிறேன். முதலில் நீங்கள் ஏன் இங்கு வரவேண்டும். ஏன் பூலோகத்துக்கு வரக்கூடாது? நீங்கள் பேசுவதற்கு உபயோகமாகும் சிரமுடைய கன்னி யார்? இதெல்லாம் தெரியச் சொல்ல மாட்டீர்களா?" என்று கேட்டேன்.

ஸித்த புருஷன் சிரித்துக்கொண்டு "பூலோகத்தில் எங்களுக்குக் கிடைக்காத சௌகரியங்கள் எல்லாம் இங்கு கிடைக்கும்போது நாங்கள் ஏன் அங்கு வர வேண்டும்? மேலும் எங்கிருந்தால் என்ன? நாங்கள் இப்போது பூலோகத்தில் இல்லை என்பதை நீ எப்படிக் கண்டாய்?" என்று கேட்டார்.

நான் அவரது வாயையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
அவர் மேலும் பேசலானார்.

"இப்பொழுது நாம் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும் இடம் ஒரு காலத்தில் கடல் மட்டத்துக்கு மேலே பெரியதொரு மலைத் தொடராக இருந்தது. இந்த எரிமலை இருக்கிறதே, அது அந்தக் காலத்தில் கிடையாது. பனிக்கட்டிகள் மூடிய பெரும் மலைகள் இந்த இடமெல்லாம். இதற்குத் தெற்கே அகண்டமான பெரியதொரு நிலப்பரப்பு இருந்தது. அதில்தான் உன்னுடைய மூதாதைகளும் என்னுடைய மூதாதைகளும் வாழ்ந்து வந்தார்கள். இந்த மலையிலிருந்து புறப்பட்டு இரண்டு நதிகள் ஓடின. ஒன்று குமரியாறு. அது கிழக்கே கடலில் சங்கமமாயிற்று. மற்றது பல்துளியாறு என்பது. அது இங்கிருந்து புறப்பட்டு ஏழு பாலைவனங்களைக் கடந்து ஏழ்பனை நாட்டின் வழியாக ஈசனை வலம் வந்து மறுபடியும் தென் திசை நோக்கியோடி, பனிக்கடலுள் மறைந்தது. பனி வரையில் பிறந்து பனிக்கடலில் புகுந்தது பல்துளியாறு. குமரி நதி கீழ்த்திசைக் கடலில் சங்கமாகுமிடத்தில்தான் தென்மதுரை இருந்தது. அதில்தான் பாண்டியர்கள் மீன் கொடியேற்றி மீனவனை வழிபட்டார்கள். அவர்கள் குலதெய்வம் மீன்கண்ணி.

படைப்புக் காலந்தொட்டே வழிபட்டுவரும் சிலை அது. அதற்குப் பூசனை நடத்தி வந்தவள் கன்னி. படைப்புக் காலந்தொட்டு ஜீவித்து வருகிறாள் அவள். உன்னைப் போல உன் வயசிலிருக்கும் போதும் அவளைக் கண்டேன். எனக்கு முந்தியோரும் அவளை அப்படியே கண்டு வந்திருக்கிறார்களாம். மீன்கண்ணியின் ஆலயம் ஆதியில் தென்மதுரையில் இருந்தது. நீரிலே நெருப்புத் தோன்ற தென்மதுரை அழிந்தது. நிலப்பரப்பு குன்றியது. பிறகு மீன்கண்ணியின் சிலை, அதே சிலை கபாடபுரத்தில் ஈசனார் திருவடி நிழலிலே பிரதிஷ்டை செய்யப்பட்டது. கபாடபுரத்தை நிரூபித்ததும் அங்கு குடியேறியதும் வேலெறிந்த பாண்டியன் காலத்திலாகும்... கபாடபுரம் நிலப்பரப்பின் மையத்திலிருந்தது. மீண்டும் கடற்கோள். கடல் மீண்டும் நகரின் ஒரு பாரிசத்தைத் தொட்டது. அந்த நிலையில்தான் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் சிம்மாசனமேறினான். அதன் பிறகு... மறுபடியும் மறுபடியும் சமுத்திர ராஜன் சீற்றங்கொண்டான்... கபாடபுரம் தென்மதுரை போல மூழ்கி மறைந்தது..."

ஸித்த புருஷர் பேசி நிறுத்தினார். நாங்கள் இருவரும் மவுனமாக இருந்தோம்.

எனது பார்வை இடையறாது சுழன்றுவரும் ரசக்கோளத்தின் மீது கவிந்தது. அதன் சுழற்சி நிதானமாக ஒரே வேகத்தில் வெளிச்சத்தைப் பிரதிபலித்தது...

4. கபாடபுரத்தின் அழிவு

நான் உற்றுக் கவனித்துக்கொண்டே இருந்தேன். சற்று சித்தம் கிறங்கியது. உடம்பிலிருந்து சுழன்ற புத்தி மட்டும் எங்கோ விரைந்து சென்றது. வேகத்தில் செல்லும் திசை தெரியவில்லை. நேரம் தெரியவில்லை. எதிரே பெரும் பாலைவனம் தெரிந்தது. என்ன சூடு என நினைப்பதற்குள் அவற்றை விட்டு அகன்று விட்டேன்.

மாலை நேரம். பிரமாண்டமான செம்புக் கதவின் முன் பக்கம் நின்றுகொண்டிருந்தேன். அது மேற்கே பார்த்திருந்தது. என்ன அற்புதமான வேலைப்பாடு! கதவைத் தள்ளித் திறப்பது என் போன்ற மனிதனால் இயலாத காரியம். உயரம் நூறடிக்கு மேலிருக்கும்; அகலம் இருபத்தைந்து அல்லது முப்பது அடிக்குள்ளாக இருக்காது. கதவின் இரு பக்கங்களிலும் நிமிர்ந்து நின்ற மதில் கற்களைச் செம்பை உருக்கி வார்த்துக் கரைகட்டியிருந்தார்கள். இந்தக் கதவு பிரமாண்டமானதொரு கற்பாறையின் உச்சியிலிருந்தது. வடபுரத்தில் ஆழமான சமுத்திரம். அலைகள் அதனடியில் வந்து மோதி நுரை கக்கின.

தென்புறத்தில் காடு. மரம் செறிந்த காடு குன்றினடியில் தென்பட்டது. உயர்ந்த விருக்ஷங்களுக்கு மேல் தனது கொக்குத் தலையைத் தூக்கி நின்று கொண்டிருந்த கர்ப்பேந்திரம் ஒன்று ஒரு யானையைத் தனது கைகளில் பற்றிக் கிழித்துத் தின்று கொண்டிருந்தது.
மேற்கே பெரிய மலை ஒன்று கனிந்து புகைந்து கொண்டு இருந்தது. அஸ்தமன செவ்வானத்தில் தென்பட்ட பிறைச் சந்திரன் எனக்கு இழை நெற்றிக்கண் நிமலனை நினைப்பூட்டியது. திரித்திரியாகத் திரிந்து படரும் புகை சடையையும், கனிந்த உச்சி நெற்றிக் கண்ணையும் நினைப்பூட்டியது.

அதிசயப்பட்டுக்கொண்டே நின்றேன். பிரமாதமான பேரியும் வாங்காவும் மணிச்சத்தமும் கேட்க ஆரம்பித்தது. கதவு மெதுவாகத் திறக்க ஆரம்பித்தது.

ஊர்வலத்தின் முன்னால் பூசாரி சடையன் பவித்திரமாக நீறு அணிந்து இடையில் வைரவாள் சொருகி நடந்தான். அவனுக்குப் பின் அவள் வந்தாள். என்ன அழகு! அவளைப் பலியிடப் போகிறார்கள். அவளுக்குப் பின் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் வந்தான். அவனுக்குப் பின் நான் வந்தேன். அதாவது என்னைப் போன்ற ஒருவன் வந்தான். கையிலே வேல்.

அவன் கர்ப்பேந்திரத்தைக் கண்டான். அதன்மேல் வீசினான். வேல் குறி தவறி அதன் ஒற்றைக் கண்ணைக் குருடாக்கியது. ஐந்நூறு அடி உயரமுள்ள மிருகத்திற்கு இந்த குன்று எம்மாத்திரம்! அதன் கோரக் கைகள் பூசாரி சடையனைப் பற்றின. சடையன் தனக்கு மரணம் நிச்சயம் என்று தெரிந்துகொண்டாலும், வைரக் கத்தியைக் கொண்டு அதன் குரவளையில் குத்தினான். சடையன் தலை அந்த மிருகத்தின் கோர விரல்களில் சிக்கி அறுபட்டது.
ஊர்வலத்தில் ஒரே களேபரம். தெறி கெட்ட மிருகம் எங்கே பாயுமோ என நாலா திசையிலும் சிதறி ஓடினர். கர்ப்பேந்திரமோ வலி பொறுக்கமாட்டாமல் மலையுச்சியை நோக்கி ஓடியது.

இந்தக் களேபரத்தில் என் சாயலில் இருந்த அவன் கன்னியை அழைத்துக்கொண்டு கடற்கரைக்கு ஓடினான். அரசன் வாளுக்கும் கோபத்துக்கும் தப்பிவிடலாம் என்று. நேரே ஓடிய கர்ப்பேந்திரம் எரிமலையின் உச்சியில் சென்று பாதாளத்தில் விழுந்து மறைந்தது.

கடற்கரை நோக்கி ஓடியவர்கள், நீரிலே நெருப்புத் தோன்றிவரக் கண்டார்கள். அதே சமயத்தில் மண் மாரி போல சாம்பல் விழுந்தது. எரிமலை கர்ஜிக்கத் தொடங்கியது. அக்னிக் குழம்புகள் பாகாக உருகி ஓடிக் கடலில் கலந்து அதையும் பொங்க வைத்தது. கடலின் அலைகளோ ஊழியின் இறுதிப் பிரளயம் போலத் தலை தூக்கியடித்தன. நிமலன் நெற்றிக் கண்ணைத் திறந்தான். கபாடபுரத்தின் செப்புக் கதவுகள் பாகாக உருகியோடுவதைக் கண்டேன்.
பிறகு அலைச் சப்தம், பேரலைச் சபதம், ஒரே அலைச் சப்தம்.

******

வெயிலோடு போய்…ச.தமிழ்ச்செல்வன்

மாரியம்மாளின் ஆத்தாளுக்கு முதலில் திகைப்பாயிருந்தது. இந்த வேகாத வெயில்ல இந்தக் கழுத ஏன் இப்படி தவிச்சுப் போயி ஓடியாந்திருக்கு என்று புரியவில்லை.

‘‘ஓம் மாப்பிள்ளை வல்லியாடி’’ என்று கேட்டதுக்கு ‘பொறு பொறு’ங்கிற மாதிரி கையைக் காமிச்சிட்டு விறுவிறுன்னு உள்ள போயி ரெண்டு செம்பு தண்ணியை கடக்குக் கடக்குன்னு குடிச்சிட்டு ‘ஸ்… ஆத்தாடி’ன்னு உட்கார்ந்தாள்.
‘‘ஓம் மாப்பள்ளை வல்லியாடி?’’
‘‘அவரு… ராத்திரி பொங்க வைக்கிற நேரத்துக்கு வருவாராம். இந்நியேரமே வந்தா அவுக யேவாரம் கெட்டுப் போயிருமாம்.’’
‘‘சரி… அப்பன்னா நீ சித்த வெயில் தாழக் கிளம்பி வாறது… தீயாப் பொசுக்குற இந்த வெயில்ல ஓடியாராட்டா என்ன…’’
‘‘ஆமா. அது சரி… பொங்கலுக்கு மச்சான் அவுக வந்திருக்காகளாமில்ல…’’
ஆத்தாளுக்கு இப்ப விளங்கியது.
அவளுடைய மச்சான் – ஆத்தாளின் ஒரே தம்பியின் மகன் தங்கராசு இன்னிக்கி நடக்கிற காளியம்மங்கோயில் பொங்கலுக்காக டவுனிலிருந்து வந்திருக்கான். அது தெரிஞ்சுதான் கழுத இப்படி ஓடியாந்திருக்கு.

‘‘மதியம் கஞ்சி குடிச்சிட்டு கிளம்பினியாட்டி’’ என்று கேட்டதுக்கு கழுத ‘இல்லை’ யென்கவும் ஆத்தா கஞ்சி ஊத்தி முன்னால் வைத்து குடிக்கச் சொன்னாள்.

உடம்பெல்லாம் காய்ஞ்சு போயி காதுல கழுத்தில ஒண்ணுமேயில்லாம கருத்துப் c28c9d06-5554-40ae-91e6-8c71b06cdfea போன அவளைப் பார்க்கப் பார்க்க ஆத்தாளுக்குக் கண்ணீர்தான் மாலை மாலையாக வந்தது. தங்கராசு மச்சானுக்குத்தான் மாரியம்மா என்று சின்னப் பிள்ளையிலேயே எல்லாருக்கும் தெரிஞ்சதுதான். கள்ளன் – போலீஸ் விளையாட்டிலிருந்து காட்டிலே கள்ளிப்பழம் பிடுங்கப் போகிற வரைக்கும் ரெண்டு பேரும் எந்நேரமும் ஒண்ணாவேதான் அலைவார்கள். கடைசிக்கி இப்படி ஆகிப்போச்சே என்று ஆத்தாளுக்கு ரொம்ப வருத்தம். எப்படியெல்லாமோ மகளை வச்சிப் பாக்கணுமின்னு ஆசைப்பட்டிருந்தாள்.

பேச்சை மாற்றுவதற்காக ‘‘அண்ணன் எங்கத்தா’’ என்று கேட்டாள். ‘‘நீங்க ரெண்டு பேரும் வருவீக, அரிசிச் சோறு காச்சணும்னிட்டு அரிசி பருப்பு வாங்கியாறம்னு டவுனுக்கு போனான்.’’ கஞ்சியைக் குடித்துவிட்டு சீனியம்மாளைப் பார்க்க விரைந்தாள் மாரி. சீனியம்மள்தான் மச்சான் வந்திருக்கிற சேதியை டவுணுக்கு தீப்பெட்டி ஒட்டப் போன பிள்ளைகள் மூலம் மாரியம்மாளுக்குச் சொல்லிவிட்டது. சேதி கேள்விப்பட்டதிலிருந்தே அவள் ஒரு நிலையில் இல்லை. உடனே ஊருக்குப் போகணுமென்று ஒத்தக்காலில் நின்றாள். ஆனால், அவள் புருஷன் உடனே அனுப்பி விடவில்லை. நாளைக் கழிச்சுப் பொங்கலுக்கு இன்னைக்கே என்ன ஊரு என்று சொல்லிவிட்டான். அவ அடிக்கடி ஊருக்கு ஊருக்குன்னு கிளம்பறது அவனுக்கு வள்ளுசாப் பிடிக்கவில்லை. அவ ஊரு இந்தா மூணு மைலுக்குள்ளே இருக்குங்கிறதுக்காக ஒன்ரவாட்டம் ஊருக்குப் போனா எப்படி? அவ போறதப் பத்திகூட ஒண்ணுமில்ல. போற வட்டமெல்லாம் கடையிலேருந்து பருப்பு, வெல்லம் அது இதுன்னு தூக்கிட்டு வேற போயிர்றா. இந்தச் சின்ன ஊர்லே யேவாரம் ஓடுறதே பெரிய பாடா இருக்கு. இப்ப கோயில் கொடைக்குப் போணுமின்னு நிக்கா என்று வயிறு எரிந்தான். ஆனாலும், ஒரேடியாக அவளிடம் முகத்தை முறிச்சுப் பேச அவனுக்கு முடியாது. அப்பிடி இப்பிடியென்று ரெண்டு புலப்பம் புலம்பி அனுப்பி வைப்பான்.

இதைப் பத்தியெல்லாம் மாரிக்கு கவலை கிடையாது. அவளுக்கு நினைத்தால் ஊருக்குப் போயிறணும். அதுவும் மச்சான் அவுக வந்திருக்கும்போது எப்பிடி இங்க நிற்க முடியும்?

அவ பிறந்து வளர்ந்ததே தங்கராசுக்காத்தான் என்கிற மாதிரி யல்லவா வளர்ந்தாள். அவள் நாலாப்புப் படிக்கிறபோது தங்கராசின் அப்பாவுக்கு புதுக்கோட்டைக்கு மாற்றலாகி குடும்பத்தோடு கிளம்பியபோது அவள் போட்ட கூப்பாட்டை இன்னைக்கும் கூட கிழவிகள் சொல்லிச் சிரிப்பார்கள். நானும் கூட வருவேன் என்று தெருவில் புரண்டு கையைக் காலை உதறி ஒரே கூப்பாடு. அதைச் சொல்லிச் சொல்லி பொம்பிள்ளைகள் அவளிடம், ‘‘என்னட்டி ஒம் புருசங்காரன் என்னைக்கு வாரானாம்’’ என்று கேலி பேசுவார்கள். ஆனால், அவள் அதையெல்லாம் கேலியாக நினைக்கவில்லை. நிசத்துக்குத்தான் கேட்கிறார்கள் என்று நம்புவாள். ஊர்ப் பிள்ளைகளெல்லாம் கம்மாய் தண்ணியில் குதியாளம் போடும்போது இவள் மட்டும் கம்மாய் பக்கமே போக மாட்டாள். சும்மாத் தண்ணியிலே குதிச்சா சொறிபிடித்து மேலெல்லாம் வங்கு வத்தும். டவுன்ல படிக்கிற மச்சானுக்குப் பிடிக்காது. அதேபோல கஞ்சியக் குடிச்சி வகுறு வச்சிப்போயி மச்சான் ‘ஒன்னைக் கட்ட மாட்டேன்’னு சொல்லிட்டா என்னாகுறது? சும்மா மச்சான் மச்சான் என்று சொல்லிக்கொண்டிருந்தவள் பெரிய மனுஷியானதும் மச்சானைப் பத்தி நினைக்கவே வெட்கமும் கூச்சமுமாயிருந்தது. கொஞ்ச நாளைக்கி. வெறும் மச்சானைப் பத்தின நினைப்போடு அப்புறம் கனாக்களும் வந்து மனசைப் படபடக்க வைத்தன. டவுனுக்கு தீப்பெட்டி ஒட்டப் போகையிலும் வரையிலும், ஓட்டும்போதும் மச்சானின் நினைப்பு இருந்துகொண்டே இருக்கும்.

பஞ்சத்திலே பேதி வந்து அவ அய்யா மட்டும் சாகாம இருந்திருந்தா மச்சானுக்குப் பொருத்தமா அவளும் படிச்சிருப்பா. அது ஒரு குறை மட்டும் அவ மனசிலே இருந்து கொண்டிருந்தது. அதுவும் போயிருச்சு மச்சான் ஒரு தடவை அவுக தங்கச்சி கோமதி கலியாணத்துக்கு பத்திரிகை வைக்க வந்தபோது. எந்த வித்தியாசமும் பாராம ஆத்தாளோடவும் அண்ணனோடவும் ரொம்பப் பிரியமா பேசிக்கிட்டிருந்த மச்சானை கதவு இடுக்கு வழியாப் பாத்துப் பாத்து பூரிச்சுப் போனா மாரியம்மா.
மச்சானைப் பத்தின ஒவ்வொரு சேதியையும் சேர்த்துச் சேர்த்து மனசுக்குள்ளே பூட்டி வச்சிக்கிட்டா. வருஷம் ஓடினாலும் பஞ்சம் வந்தாலும் அய்யா செத்துப் போயி வயித்துப் பாட்டுக்கே கஷ்டம் வந்தாலும் அவனைப் பத்தின நினைப்பு மட்டும் மாறவே இல்லை. அதனாலேதான் தங்கராசு அவளுக்கில்லை என்று ஆன பிறகும்கூட அவளால் அண்ணனையும் ஆத்தாளையும் போலத் துப்புரவாக வெறுத்துவிட முடியவில்லை.

அவளுக்கு நல்லா ஞாபகம் இருக்கு, மாமனும் அத்தையும் வந்தது. தங்கராசு மச்சான் கலியாணத்துக்கு பரிசம் போடத்தான் மாமனும் அத்தையும் வருவாகன்னு இருந்தபோது, வேற இடத்திலே பொண்ணையும் பாத்து பத்திரிகையும் வச்சிட்டு சும்மாவும் போகாம மாமா அண்ணங்கிட்டே, ‘‘கலியாணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னக்கூட்டியே வந்திரணும்பா. கோமதி கலியாணத்தை முடிச்சு வச்ச மாதிரி வேலைகளையும் பொறுப்பா இருந்து நீதான் பாத்துக் கணுமப்பா’’ என்று வேறு சொல்லிவிட்டுப் போனார். அவுக அங்கிட்டுப் போகவும் ஆத்தாளிடம் வந்து அண்ணன் ‘தங்கு தங்’கென்று குதித்தான். ‘‘என்னய என்ன சுத்தக் கேணப்பயனு நெனச்சுட்டாகளா’’ என்று. ‘கோமதி கலியா ணத்துக்கு எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு அண்ணன் செய்தான்னு சொன்னா அது நாளக்கி நம்ம தங்கச்சி வந்து வாழப் போற வீடு, நாம வந்து ஒத்தாசை செய்யாட்டா யாரு செய்வா என்று நினைத்து செய்தது. ஆனா, இப்படி நகைநட்டுக்கு ஆசைப்பட்டு மாமா அந்நியத்தில போவாகன்னு யாரு கண்டது. என்ன மாமானும் மச்சானும்.’ என்று வெறுத்துவிட்டது அவனுக்கு.ஆனால், அண்ணன் ஏறிக்கொண்டு பேசியபோது ஆத்தா பதிலுக்கு கூப்பாடுதான் போட்டாள்.

‘‘என்னடா குதிக்கே? படிச்சு உத்தியோகம் பாக்குற மாப் பிள்ளை தீப்பெட்டியாபீசுக்கு போயிட்டு வந்து வீச்ச மெடுத்துப் போயிக் கெடக்கிற கழுதயக் கட்டுவான்னு நீ நெனச்சுக்கிட்டா அவுக என்னடா செய்வாக’’ என்று ஆத்திரமாகப் பேசினாள். அப்படி அப்போதைக்குப் பேசினாலும் அன்னைக்கு ராத்திரி செத்துபோன அய்யாவிடம் முறையீடு செய்து சத்தம் போட்டு ஒப்பாரி வைத்தாள். ‘‘ஏ… என் ராசாவே… என்ன ஆண்டாரே! இப்பிடி விட்டுப் போனீரே… மணவடையிலே வந்து முறைமாப்பிள்ளை நானிருக்க எவன் இவ கழுத்தில தாலி கட்டுவான்னு சொல்லி என்னச் சிறையெடுத்து வந்தீரே… இப்பிடி நிர்க்கதியா நிக்க விடவா சிறையெடுத்தீர் ஐயாவே… தம்பீ தம்பீன்னு பேகொண்டு போயி அலைஞ்சேனே… அவனைத் தூக்கி வளத்தேனே… என் ராசாவே… எனக்குப் பூமியிலே ஆருமில்லாமப் போயிட்டாகளே…’’
பக்கத்துப் பொம்பிளைகளெல்லாம் வைதார்கள், ‘‘என்ன இவளும் பொம்பளதான… அப்பயும் இப்படியா ஒப்பாரி வச்சு அழுவாக’’ என்று.

பிறகு அண்ணன் வந்து, ‘‘இப்பம் நீ சும்மாருக்கியா என்ன வேணுங்கு’’ என்று அரட்டவும்தான் ஒப்பாரியை நிப்பாட்டினாள்.

மறுநாள் அண்ணன், ‘‘தங்கராசு கலியாணத்துக்கு ஒருத்தரும் போகப்புடாது’’ன்னு சொன்னபோது மறுபேச்சுப் பேசாமல் ஆத்தாளும் சரியென்று சொல்லிவிட்டாள்.
‘அவனுக்கும் நமக்கும் இனிமே என்ன இருக்கு’ என்று சொல்லிவிட்டாள்.

ஆனால், மாரியம்மா அப்படியெல்லாம் ஆகவிடவில்லை. பலவாறு அண்ணனிடமும் ஆத்தாளிடமும் சொல்லிப் பார்த்தாள். ஒன்றும் மசியாமல் போக, கடைசியில்…
‘நீங்க யாரும் மச்சான் கலியாணத்துக்குப் போகலைன்னா நான் நாண்டுக்கிட்டுச் செத்துருவேன்’ என்று ஒரு போடு போட்டதும் சரியென்று அண்ணன் மட்டும் கலியாணத்துக்குப் போய்வந்தான். எம்புட்டோ கேட்டுப்பாத்தும் கலியாணச் சேதி எதையும் அவன் மாரியம்மாளுக்கோ ஆத்தாளுக்கோ சொல்லவில்லை.
‘எல்லாம் முடிஞ்சது’ என்பதோடு நிறுத்திக்கொண்டான்.

தன் பிரியமான மச்சானின் கல்யாணம் எப்பிடியெல்லாம் நடந்திருக்கும் என்று மாரியம்மாள் தினமும் பலவாறாக தீப்பெட்டி ஒட்டியபடிக்கே நினைத்து நினைத்துப் பார்ப்பாள்.
‘எங்கிட்டு இருந்தாலும் நல்லாருக்கட்டும்’ என்று கண் நிறைய, மனசு துடிக்க வேண்டிக்கொள்வாள்.

தங்கராசு கலியாணத்துக்குப் போய்விட்டு வந்த அண்ணன் சும்மா இருக்கவில்லை. அலைஞ்சு பெறக்கி இவளுக்கு மாவில்பட்டியிலேயே அய்யா வழியில் சொந்தமான பையனை மாப்பிளை பார்த்துவிட்டான். சின்ன வயசிலே நாகலாபுரத்து நாடார் ஒருத்தர் கடையில் சம்பளத்துக்கு இருக்க மெட்ராசுக்குப் போய் வந்த பையன். மாரியம் மாளோட நாலு பவுன் நகையை வித்து மாவில்பட்டியிலேயே ஒரு கடையையும் வைத்துக் கொடுத்துவிட்டான்.

இத்தனைக்குப் பிறகும், கோவில் கொடைக்கு மச்சான் வந்திருக்காகன்னு தெரிஞ்சதும் உடனே பாக்கணுமின்னு ஓடியாந்துட்டா. அவுக எப்படி இருக்காக? அந்த அக்கா எப்படி இருக்காக? மச்சானும் அந்த அக்காளும் நல்லா பிரியமா இருக்காகளான்னு பாக்கணும் அவளுக்கு.

ஆனா, வந்த உடனேயே மச்சானையும் அந்த அக்கா ளையும் பார்க்கக் கிளம்பிவிடவில்லை. மத்தியான நேரம், சாப்புட்டு சித்த கண்ணசந்திருப்பாக என்று இருந்துவிட்டு சாயந்தி ரமாகப் போனாள்.

கட்டிலில் படுத்தவாக்கில் பாட்டையாவுடன் பேசிக் கொண்டிருந்தான் மச்சான்.

‘‘குடும்புடுறேன் மச்சான்’’

என்று மனசு படபடக்கச் சொல்லிவிட்டு உள்ளே போனாள். தங்கராசின் அப்பத்தாளும் அந்த அக்காளும் அடுப்படியில் வேலையாக இருந்தார்கள். பொன்னாத்தா இவளைப் பிரியத்துடன் வரவேற்றாள். அந்த அக்கா ரொம்ப லட்சணமாக இருந்தார்கள். நகைநட்டு ரொம்ப போட்ருப் பாகன்னு பாத்தா அப்படி ஒண்ணும் காணம். கழட்டி வச்சிருப்பாக என்று நினைத்துக்கொண்டாள். ரொம்ப பிரியம் நிறைந்த பார்வையுடன் அந்த அக்காளுடன் வாஞ்சையோடு பேசினாள் மாரியம்மா.

‘பேசிக்கிட்டிருங்க, இந்தா வாரே’ன்னு பொன்னாத்தா கடைக்கு ஏதோ வாங்கப் போகவும் மாரியம்மா அந்த அக்காளிடம் இன்னும் நெருங்கி கிட்ட உட்கார்ந்து கொண்டு கைகளைப் பாசத்துடன் பற்றிக் கொண்டாள். ரகசியமான, அதே சமயம் ரொம்பப் பிரியம் பொங்கிய குரலில், ‘‘யக்கா… மாசமாயிருக்கிகளா’’ என்று ஆர்வத்துடன் கேட்டாள்.

பட்டென்று அந்த அக்கா ஒரு நெடிப்புடன்,
‘‘ஆம, அது ஒண்ணுக்குத்தான் கேடு இப்பம்’’
என்று சொல்லிவிட்டாள். மாரியம்மாளுக்குத் தாங்க முடிய வில்லை. அதைச் சொல்லும்போது லேசான சிரிப்புடன்தான் அந்த அக்கா சொன்னாலும் அந்த வார்த்தைகளில் ஏறியிருந்த வெறுப்பும் சூடும் அவளால் தாங்க முடியாததாக, இதுநாள் வரையிலும் அவள் கண்டிராததாக இருந்தது. ஒரு ஏனத்தைக் கழுவுகிற சாக்கில் வீட்டின் பின்புறம் போய் உடைந்து வருகிற மனசை அடக்கிக் கொண்டாள். உள்ளே மச்சான் அவுக பேச்சுக்குரல் கேட்டது.

‘‘மாரியம்மா போயிட்டாளா’’ என்று உள்ளே வந்த மச்சான் அந்த அக்காளிடம்’’ ‘‘காப்பி குடிச்சிட்டியா ஜானு’’ என்று பிரியமாகக் கேட்டதும் படக்குனு அந்த அக்கா,

‘‘ஆஹாகாகா… ரொம்பவும் அக்கறைப்பட்டுக் குப்புற விழுந்துறாதிக…’’ என்று சொல்லிவிட்டது.
ரொம்ப மெதுவான தொண்டையிலே பேசினாலும் அந்தக் குரல் இறுகிப்போய் வெறுப்பில் வெந்து கொதிக்கிறதாய் இருந்தது.

வெளியே நின்றிருந்த மாரியம்மாளுக்கு தலையை வலிக்கிற மாதிரியும் காய்ச்சல் வர்ற மாதிரியும் படபடன்னு வந்து. கழுவின ஏனத்தை அப்படியே வைத்துவிட்டு பின்புறமாகவே விறுவிறுவென்று வீட்டுக்கு வந்து படுத்துக்கொண்டாள்.

ஆத்தாளும் அண்ணனும் கேட்டதுக்கு ‘மண்டையடிக்கி’ என்று சொல்லிவிட்டாள்.

சிறு வயசில் கள்ளிப்பழம் பிடுங்கப் போய் நேரங்கழித்து வரும்போது வழியில் தேடி வந்த மாமாவிடம் மாட்டிக் கொண்டு முழித்த தங்கராசின் பாவமான முகம் நினைப்பில் வந்து உறுத்தியது. தண்ணியைத் தண்ணியைக் குடித்தும் அடங்காமல் நெஞ்சு எரிகிற மாதிரியிருந்தது. அந்த அக்காளின் வீட்டில் நகைநட்டு குறையாகப் போட்டதுக்காக தங்கராசின் அம்மா ரொம்ப கொடுமைப்படுத்துகிறாளாம் என்று சீனியம்மா சொன்னதும், அந்த அக்காள் கொடும் வெறுப்பாகப் பேசினதும் நினைப்பில் வந்து இம்சைப் படுத்தியது.

எல்லாத்துக்கும் மேலே அந்த வார்த்தைகளது வெறுப்பின் ஆழம், தாங்க முடியாத வேதனையைத் தந்தது. ராத்திரி ஊரோடு கோயில் வாசலில் பொங்கல் வைக்கப் போயிருந்தபோது இவ மட்டும் படுத்தே கிடந்தாள். ஒவ்வொன்றாக சிறுவயதில் அவனோடு பழகினது… அய்யாவைப் பத்தி… ஆத்தாளைப் பத்தி… அண்ணனைப் பத்தி… எல்லோரும் படுகிற பாட்டைப் பத்தி… அந்த அக்காளைப் பத்தி நினைக்கக்கூட பெருந்துன்பமாயிருந்தது. குமுறிக்கொண்டு வந்தது மனசு.

ராத்திரி நேரங்கழித்து அவ புருஷன் வந்தான். ரெண்டு நாளாய் நல்ல யேவாரம் என்றும் தேங்காய் மட்டுமே முப்பத்திரெண்டு காய் வித்திருக்கு என்றும் பொரிகடலைதான் கடைசியில் கேட்டவுகளுக்கு இல்லையென்று சொல்ல வேண்டியதாப் போச்சு என்றும் உற்சாகமாக ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தான். திடீரென்று இவள் ஏதுமே பேசாமல் ஊமையாக இருப்பதைக் கண்டு எரிச்சலடைந்து, ‘‘ஏ நாயி, நாம் பாட்டுக்கு கத்திக்கிட்டிருக்கேன். நீ என்ன கல்லுக்கணக்கா இருக்கே’’
என்று முடியைப் பிடித்து ஒரு உலுக்கு உலுக்கினான்.

உடனே அணை உடைத்துக் கொண்டதுபோல ஏங்கி அழ ஆரம்பித்தாள். அவன் பதறிப்போய் தெரியாமல் தலையைப் பிடித்துவிட்டேன் என்று சொல்லி, தப்புத்தான் தப்புத்தான் என்று திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்த்தான். அவள் அழுகை நிற்கவில்லை. மேலும் மேலும் ஏக்கமும் பெருமூச்சம் வெடிப்பும் நடுக்கமுமாய் அழுகை பெருகிக் கொண்டு வந்தது.

ஏதோ தான் பேசிவிட்டதற்காகத்தான் அவள் இப்படி அழுகிறாள் என்று நினைத்துக்கொண்டு ரொம்ப நேரத்துக்கு அவளை வீணே தேற்றிக் கொண்டிருந்தான் அவன்.

*****

ஐந்தாவது மருந்து- ஜெயமோகன்

எயிட்ஸுக்கு மருந்து கண்டுபிடித்தவன் இருக்கும் ஊரில் கொக்கோகோலா கிடைக்கவில்லை. வழியெங்கும் அடர்த்தியான தென்னந்தோப்புகளில் இளநீர்க்குலைகள்தான் தொங்கின. சரியான தாகம். பிரதாப் ‘பேசாமலிரு. போய் நல்ல கிணற்றுத்தண்ணியே சாப்பிடலாம் ‘என்றான்.

ஊருக்கும் ஒரு மலையாள நெடி இருந்தது, பெயரில் தொடங்கி . அச்சன்குளத்துக்கு கார்கள் வருவதே அதிகமில்லை போலும். மாட்டுவண்டிபாதையில் இரு செம்மண் குழிகள் இணைஓடைகள் போல உருவாகியிருந்தன. அடிக்கடி தென்பட்ட குளங்களிலெல்லாம் தாமரைகள். அபூர்வமாக நீலத்தாமரையைக்கூட பார்த்தேன்.

‘ஒரு கிராக்கைப்பாக்க இத்தனைதூரம் வரணுமாண்ணு இருந்தது. ஆனா ஊரைப்பாக்கிறப்ப வரவேண்டிய ஊர்தாண்ணு படுது ‘என்றேன்.

‘தளவாய் கிராக்கு மட்டுமில்லை. அவனோட நல்ல கட்டுரைகள் முக்கிய ஜேர்னல்களில வந்திருக்கு ‘ என்றான் பிரதாப் மேனன்.

‘எயிட்ஸுக்கு மருந்தா ? அடுத்த மருத்துவ நோபல் வெற்றியாளனை இந்த கிராமத்தில் பாக்க போறமா ? சினிமாக்கதை மாதிரில்லா இருக்கு ?

‘பாக்கலாம் ‘ என்றான் பிரதாப்.

அச்சன் குளம் வசதியான வேளாள வீடுகள் கொண்டது.அழி இறக்கிய இரண்டுதட்டு ஓட்டு வீடுகள் .சிமிண்ட் களமுற்றங்கள். பெரிய வைக்கோல்போர்கள். களங்கள் தோறும் ஏதாவது பொருட்கள் உலர, பெண்கள் காவலிருந்தனர்.

ஆறுமுக பவனம் ஊரிலேயே பெரிய வீடு. களமுற்றத்தில் கார் சென்று நிற்க திண்ணை பெரிதாகியபடியே வந்தது. ஐம்பதுபேர் வரிசையாக படுக்கலாம். முற்றத்தில் உளுந்து காயப்போட்டிருந்தது. திண்ணையிலிருந்த கிழவர் கண் மீது கைவைத்து பார்த்தார்.

‘வணக்கம் ‘

‘வாங்க தம்பி … உக்காருங்க…ராஜப்பாவ பாக்க வந்தியளா ? ‘ ‘

‘ஆமா. திருவனந்தபுரத்திலேருந்து வாறம் ‘

‘ஒக்காருங்க . பார்வதீ ‘

ஒரு தடித்த அம்மாள் மோர் கொண்டுவந்தாள் .டம்ளர்களிலல்ல, பெரிய செம்பில் . விட்டுக்குடிக்க சிறு பித்தளைப் போணிகள்.

‘நீங்க அவனோட கூட்டுக்கரம்மாரா தம்பி ? ‘

‘ஆமா, அவன்கூட சேந்து படிச்சோம் ‘

‘கோட்டும் சூட்டுமா காரில வாறீங்க. இவனும் நல்லாத்தானே படிச்சான். எப்பிடி இருக்கான் பாருங்க. பண்டாரம் பரதேசி மாதிரி. எப்பிடி இருக்கவேண்டிய பய… ‘

அதற்குள் மாடியிலிருந்து தளவாய் ராஜா இறங்கி வந்தான் . ‘ வாடே வாடே ‘ என்று சிரித்தபடி . நரைத்தாடி. காவிவேட்டி, துண்டு. ‘வாடே மேல போலாம் ‘

‘என்னடே சாமியாராயிட்டியா ? ‘

‘எங்க ? ஆனா ஊரிலே இந்தவேசம் பெரிய செளரியம். கிராக்குத்தனமா இருக்கலாம். கல்யாணம் காட்சிக்கு போகாட்டி பிரச்சினையில்லை. இதக் கட்டாம கிராமத்தில சுதந்திரமா இருக்க முடியாது. என்ன , அப்பப்ப சிலர் திருநீறு பூசிக்கணும்ணு வருவாவ. சரி வா ‘

அவன் அறை ஒரு பெரிய ஆய்வகமும் ஒரு நூலகமும் குரங்குகளால் இரண்டறக் கலக்கப்பட்டது போல இருந்தது.

‘எயிட்சுக்கு மருந்து கண்டுபிடிச்சுட்டேன்னு எழுதியிருந்தே … ‘

‘ஆமா. அதப்பத்தி இன்னும் யாருட்டயும் சொல்லல. உங்க கிட்ட சில விஷயங்கள் பேசணும். பேசாட்டி எனக்கு தல வெடிச்சுடும்போல இருந்தது… அதான் எழுதினேன்…. ‘

‘வெளையாடறியா ? ‘

‘ ஒரு அசல் கண்டுபிடிப்பு இந்தியாவிலே நடக்கவே முடியாதுண்ணு நீ நம்பறதுதான் பிரச்சினை. காரணம் இங்க நவீன மருத்துவம் வெறும் நுகர்பொருளாத்தான் இருக்கு. ஆராய்ச்சியே நடக்கலை. நவீன மருத்துவமே வெள்ளைக்காரனுக்குரியதுண்ணு நாம நம்பறோம் .. ‘

‘அதான் உண்மை ‘

‘ஆனா நமக்குண்ணு அதைவிட பழசான ஒரு மருத்துவ மரபு இருக்கு.. உதாரணமா சித்த மருத்துவம்… ‘

‘இருக்கு. ஆனா இப்ப சொன்னியெ அதான் சரி. அது பழசு. அதில ஆராய்ச்சியே நடக்கலை. அறிவியல் ரீதியான அணுகுமுறையே கெடையாது. எல்லாருக்கும் பொதுவான எந்த நிரூபணமுறையும் இல்லை. முக்காப்பங்கு வெறும் மோசடி . அதிலயும் இண்ணைக்கு சித்த மருத்துவம்ங்கிறது ஸ்டாராய்டுகளால ஆடற ஆட்டம் . ஏகப்பட்ட உலோகங்கள் வேற . பாதி மருந்துகள் சிறுநீரகத்த சீரழிச்சுடும். ‘என்றான் பிரதாப்

‘நான் மறுக்கல்லை. இப்ப அது என் வேலை இல்லை. இண்ணைக்கு நீ பாக்கிற சித்த மருத்துவம் உண்மைல அதிக பட்சம் பதினாறாம் நூற்றாண்டிலே உண்டாகி வந்தது. ஆனா அது உண்மைல குமரிக்கண்டத்தோட காலம் முதல் இருந்துட்டு வார ஒரு வைத்திய மரபு . உலகத்திலேயே பழைய மரபு இது. அந்தக்காலத்த வச்சு பாத்தா உலகத்திலேயே முன்னேறிய மரபும் இதுதான். ஆனா படிப்படியா அது அழிஞ்சுட்டு வந்தது .ஏன்னா வரலாற்ற எடுத்துப் பார்த்தா ஒண்ணு தெரியும், தமிழ் நாகரீகம் அழிய ஆரம்பிச்சபிறகுள்ள காலம்தான் நம் கவனத்துக்கே வந்திருக்கு. தொல்காப்பியமே கூட அழிஞ்சுபோன ஏராளமான நூல்களோட சாரத்தை சுருக்கி எதிர்காலத்துக்காக சேத்து வச்ச நூல்தான். எல்லா பாட்டும் ‘என்மனார் புலவர் ‘னுதான் முடியுது. தமிழ் வைத்தியமுறையும் அழிய ஆரம்பிச்ச காலம்தான் நாம அறியக்கூடிய தொல்பழங்காலம். அதுக்கு முன்னால பல ஆயிரம் நூல்கள் இருந்திருக்கு. ‘

தளவாய் தொடர்ந்தான் ‘ ‘ மழை விட்ட பிறகு தூவானம் மாதிரி சில ஏட்டுச்சுவடிகள் கிடைக்க அதை வச்சு அந்தக்காலத்தில உருவாக்கின ஒரு மருத்துவமுறைதான் சித்த மருத்துவம். நாம இப்ப பாக்கிற சித்த வைத்தியம் அத நவீன மருத்துவ முறைப்படி பதினெட்டாம் நூற்றாண்டில சிலர் மாற்றி அமைச்சது…. ‘

‘அரைகுறை அறிவு அறியாமையவிட ஆபத்தானது… ‘

‘ஆமா. கண்டிப்பா. எனக்கு தற்செயலா எங்க தாத்தாவொட அண்ணா வச்சிருந்த சுவடிகள் சிலது மச்சிலே கிடைச்சது. பிராமி லிபியிலே எழுதின சுவடிகள் கூட சிலது அதிலே இருந்தது. அதபடிக்க ஆரம்பிச்ச பிறகுதான் எனக்கு கிறுக்கு பிடிச்சுதூண்ணு அம்மை சொல்வா.அது சரிதான் . ஒரு நூலுக்கும் இன்னொரு நூலுக்கும் நடுவிலே கிடைக்காம போன ஆயிரம் நூல் இருக்கு. அது என் கற்பனைய தூண்டிவிடுது . விடவே முடியலை. தூக்கமே இல்லைண்ணு வச்சுக்கோ ‘

‘நீ உன் வாழ்க்கையை வீணடிக்கிறே. அவ்வளவுதான் சொல்வேன் ‘என்றான் பிரதாப்.

‘எல்லாருமே ஏதாவது ஒரு விதத்திலே வீணடிச்சுட்டுதான் இருக்கோம்ங்கிறது என் எண்ணம் . ‘என்று தளவாய் சிரித்தான். ‘இண்ணைக்குள்ள சித்த வைத்தியத்தொட முக்கியப் பிரச்சினை அது அலோப்பதிமுறைகளை மறைமுகமா ஏத்துக்கிட்டு அதுக்கேத்தாப்பிலே மாத்தப்பட்டிருங்கிறதுதான். இரண்டு முறைகளுக்கும் அடிப்படையே வேற. நேர் மாறுண்ணு கூட சொல்லலாம். அலோப்பதி நோய்க்கு காரணத்தை மனித உடலுக்கு வெளியே தேடுது. கிருமிகள் , பூச்சிகள் இந்தமாதிரி. சித்த மருத்துவத்த பொறுத்தவரை நோய்ங்கிறது மனித உடலிலேயே இருக்கு. மனித உடல் அதோட சமநிலையை இழக்கிறதுதான் நோய். அதாவது நோய்க்கு எதிரா உடலை தயாரிக்கிறதுதான் சித்த மருத்துவம், கிருமியக் கொல்றது இல்லை. நோயில்லாதபடி வாழ்க்கையை அமைச்சுக்கறதப்பத்தித்தான் அது பேசுது… ‘

‘நான் சித்த வைத்தியத்த இப்ப நியாயப்படுத்த மாட்டேன் ‘ என்று அவன் தொடர்ந்தான். ‘ இண்ணைக்கு நவீனமருத்துவத்தில்தான் புது ஆராய்ச்சிகள் இருக்கு. மத்த அறிவியல் கண்டுபிடிப்புகளை பயன்படுத்தறதும் அங்கதான் அதிகம். உலகம் முழுக்க பொதுவான நிரூபணமுறைகள் அவங்களுக்கு இருக்கு . ஆனா ஆராய்ச்சிக்கு கண்டிப்பா சித்த வைத்தியம் மாதிரியான மாற்று வழிகளை பயன்படுத்திப் பாக்கணும் . நான் செஞ்சது அதுதான் ‘

‘உன் மருந்து சித்த மருந்தா ? ‘

‘அப்டி சொல்ல முடியாது. என் கொள்கை அங்கேருந்து முளைச்சது, அவ்வளவுதான் ‘ என்றான் தளவாய்.

‘எய்ட்ஸுக்கு மருந்துண்ணு இதுவரை அம்பது சித்தவைத்தியனுங்க அறிவிச்சாச்சு .எல்லாமே போலி ‘ என்றான் பிரதாப்.

‘அவங்கள்லாம் பண்ணிய தப்பு ஒண்ணுதான். சித்த வைத்தியச் சுவடிகளிலே எய்ட்ஸ் மாதிரியான ஒரு நோயோட இலக்கணம் இருக்கு. அதுக்கான மருந்தை இவங்க அப்டியே சொல்றாங்க. அதெல்லாம் பிரயோசனப் படறதில்லை ‘

‘ஏன் ? ‘

‘ஏன்னா நோய் அதுதான். கிருமி வேற ‘ என்றான் தளவாய் . ‘பரிணாமக் கொள்கைப்படி ஒவ்வொரு உயிரும் அது சார்ந்து வாழக்கூடிய சூழலுக்கு ஏற்ப மாறிட்டே இருக்கு. இப்ப மனித உடல் ரொம்ப மாறிட்டது. பலவகையான மருந்துகளை நாம பயன்படுத்தறோம். அதுக்கேற்ப அந்த வைரஸ் தன் மொத்த அமைப்பையும் மாத்தி இன்னொண்ணா மாறிட்டே இருக்கு . இப்ப உள்ள ஹெச்.ஐ .வி கிருமி அப்டி புதிசா உருவாகி வந்தது… அதோட மரபணு அமைப்பே வேற . அதுக்கு புது மருந்துதான் வேணும். சித்த மருத்துவத்தில் தாவர மருந்துக்களை அஜீவம்னு சொல்றாங்க. பறவைகள் மிருகங்களிலேருந்து எடுக்கிற மருந்துக்கள் ஜீவம் . மத்த ரசாயனங்களும் உப்புக்களும் உலோகங்களும் ரசாயனம் . மூணுமருந்துமே இதுக்கு பயன்படாது… ‘

‘குழப்பாம சொல்லு. உன்னோட மருந்தோட கொள்கை என்ன ? ‘

‘ அதை ஒரு கதையாத்தான் சொல்லணும். ‘ என்று அவன் ஆரம்பித்தான் ‘ தென்காசீல ஒரு ராஜ குடும்பம் இருந்தது கேட்டிருக்கியா ? பாண்டிய வம்சத்தோட ஒரு கிளை அது . அவங்க குடும்பமே மர்மமான ஒரு நோயால அழிஞ்சுபோச்சுண்ணு சரித்திரத்தகவல் இருக்கு . இது நடந்து ஐநூறு வருஷம் இருக்கும் . அப்ப அந்த நோயால கிட்டத்தட்ட அம்பதாயிரம்பேர் செத்திருக்காங்க. அண்ணைக்கு இது பெரிய எண்ணிக்கை இல்ல . அம்மை நோயால லட்சக்கணக்கானபேர் செத்திட்டிருந்த காலம் அது . தென்காசி ராஜகுடும்பம் மட்டுமில்ல அவங்களுக்கு சிகிழ்ச்சை செய்த வைத்தியங்க எல்லாருமே செத்துட்டாங்க. அவங்களில ஒரு வைத்தியர் எழுதிவச்ச நோய்க்குறிப்புகள் அதிருஷ்டவசமா கிடைச்சிருக்கு . அந்த சுவடிகள் எங்க தாத்தா கைக்கு வந்து இப்ப என் கையிலே இருக்கு. நோயின் லட்சணங்களை கேட்ட அசந்துடுவீங்க. காரணமில்லாத காய்ச்சல் . எடை குறையிறது. நோய் எதிப்புசக்தி இல்லாம ஆகி காசம் முதலான நோய்கள் தாக்கி மெல்லமெல்ல உசிர் போயிடுது . ‘

‘எயிட்ஸா ? உண்மையான ஆதாரமா இது ? ‘ என்றான் பிரதாப் பரபரப்புடன் .

‘அசல் சுவடியே இருக்கு . நீ பரிசோதனை செய்யலாம் ‘ என்றான் தளவாய் ‘ ராஜகுடும்பத்திலே ஒரு இளவரசனுக்கு நோய் வந்திட்டது. அவன் மனம் வெறுத்து குற்றாலம் காட்டுக்குள்ளார போனான். தற்கொலை செய்றதுக்காகத்தான். அங்க அதிகாலைல தேனருவீல குளிச்சிட்டிருந்த ஒரு சித்தரைக் கண்டான். காலில விழுந்து அவன் அழுதப்ப மனமிரங்கிய சித்தர் அவனோட ஊருக்கு வந்தார்.அவர் பேர் மாம்பழச்சித்தர். பெரும்பாலும் மாம்பழத்தையே உணவா சாப்பிடுவார்ணு கதை. அவர் முதலிலே நோயாளிகளை ஆராய்ச்சி பண்ணினார். அப்ப இருந்த எந்த மருந்துமே அந்த நோயை ஒண்ணும் பண்ணமுடியல்லை .அவரால நோயை அடையாளம்காணவே முடியலை. வாதம், பித்தம் ,கபம் அப்டாங்கிற மூணு ஆதார சக்திகளிலே உண்டாகிற சமநிலைக் குலைவினாலேதான் நோய்கள் வருதுங்கிறதுதான் இந்திய வைத்தியமுறைகளிலே பொதுவா இருக்கிற சித்தாந்தம். புராதன தரிசனமரபான சாங்கியத்திலேருந்து வந்த பார்வை அது. ஆனா இந்த மர்ம நோய் கண்ட நோயாளிகளிலே சிலருக்கு வாதம் கோபிச்சிட்டிருந்தது . சிலருக்கு பித்தம் தாறுமாறா இருந்தது. சிலருக்கு கபம் உச்சம் . என்ன காரணம்னே அவரால சொல்லமுடியல. மூன்று ஆதார சக்திகளையும் இயக்கக் கூடியது உடலில் இருக்ககூடிய மூலாதார அக்னி. அந்த தீ வலுவிழந்து அணையிறதுதான் இந்த நோய் என்று கண்டுபிடிச்சார். சித்த வைத்தியத்தோட மொழியிலே இருக்கே ஒழிய அந்த கணிப்பு சரிதான். ‘

‘ஆமாம் ‘என்றான் பிரதாப். எனக்கு அவன் அப்படி சொன்னது ஆச்சரியமாக இருந்தது.

‘எப்படி ? ‘ என்றேன்

‘நோய் எதிர்ப்பு சக்தீங்கிறது என்ன ? உயிர் வாழணும்னு உயிர்களுக்கு இருக்கிற அடிப்படையான துடிப்பு. செல்களிலே அதுக்கான இச்சை இருக்கு.அது இல்லண்ணா உயிர்சக்தி அழிஞ்சுபோயிட்டுதுண்ணுதானே அர்த்தம் ? ‘ என்றான் பிரதாப்

‘ சித்தர் பழைய ஆதாரங்களை தேடிப்பிடிச்சு பரிசீலிச்சார். அப்ப அந்த ஆதாரங்களெல்லாம் சித்தர்கள்ங்கிற நாடோடி அறிஞர்கள் மத்தியிலே வாய்மொழி மரபா இருந்திருக்கணும் . அப்ப அவருக்கு ஒரு விஷயம் தெரிஞ்சது ஆயிரம் வருஷம் முன்னாடி இதேநோய் பாண்டிய ராஜகுடும்பத்த தாக்கியிருக்கு. அப்ப போகர் இருந்தார். இவர் எந்த போகர், எத்தனையாம் போகர்ணு தெரியலை. ஆனா அவர் பேரும் போகர். அவர் ஒரு மருந்து கண்டுபிடிச்சு நோயை விரட்டினார் … கருங்குரங்கோட ரத்தம் ,சிறுநீர் ரெண்டயும் கலந்து அவர் ஒரு மருந்து செஞ்சார். அதுதான் சித்த வைத்தியத்தில முதல் ஜீவ மருந்து. அதுவரைக்கும் சித்தமருத்துவம் அஜீவமருந்துக்களை மட்டும்தான் பயன்படுத்திட்டிருந்தது. அது ஒரு பெரிய புரட்சியோட தொடக்கம்… ‘

‘ அந்த மருந்து இப்ப இருக்கா ? ‘ என்றேன்

‘இப்ப சித்தமருத்துவம் ஏராளமான ஜீவ மருந்துக்களை பயன்படுத்துது. சிட்டுக்குருவி லேகியம் உங்களுக்கெல்லாம் நல்லா தெரிஞ்சதுதான். ஆனா ஜீவ மருந்துக்களால இந்த நோயை ஒண்ணுமே செய்ய முடியல்ல. அதனாலே மாம்பழச்சித்தர் ரெண்டு வருஷம் ஆராய்ச்சி செய்து ஒரு மருந்து கண்டுபிடிச்சார். ஈயத்தையும் தங்கத்தையும் கலந்து ஒரு புது மருந்துக் கலவை . சித்த மருத்துவத்திலே ரசாயனங்களை பயன்படுத்தறது அதுதான் முதல் தடவை. இது இரண்டாவது பெரும் புரட்சி. ‘

தளவாய் தொடர்ந்தான். ‘உலோகங்களையும் ரசாயனங்களையும் சித்த மருத்துவத்தில் பஸ்பம் பண்ணியும் , ஸ்புடம் போட்டும் ,பாஷாணமா ஆக்கியும் பல வகையில இப்ப பயன்படுத்தறாங்க. அதுக்குத் தொடக்கம் மாம்பழச் சித்தர்தான். அந்த நோய் அவர் செய்ஞ்ச பஞ்ச பாஷாணத்தாலே குணமாயிட்டது. அவரோட சீடர்கள் அந்த ரசாயனவைத்தியத்தை சித்தவைத்தியத்துக்குள்ள தனி மரபா வளர்த்து பரப்பினாங்க ‘

‘இப்ப அந்த மருந்துகளினால பயன் இருக்கா ? ‘ என்றேன்

‘பலவிதமான நோய்களுக்கு அந்த மருந்துக்கள் இப்பவும் பயன்படுது. ஆனா எய்ட்ஸுக்கு அதனால பயன் இல்லை. ‘

‘ஏன் ? ‘

‘நவீன மருத்துவம் நோயை கிருமிகளோட தாக்குதலா பாக்குது. அந்தக் கோணத்திலே யோசிச்சுப்பாருங்க ‘

‘அப்ப எய்ட்ஸ் கிருமி சரித்திர ஆரம்ப காலம் முதல் இருக்கா ? ‘

‘இருந்திருக்கணும். அது மனுஷ உடலிலே சாதாரணமா இருக்கக் கூடிய ஏதோ வைரஸ் தான் . இப்பக்கூட அதன் வேறு வகை வடிவம் ஆப்ரிக்கக் குரங்குகளிலே இருக்கிறதா கண்டுபிடிச்சிருக்காங்க . அந்தக் குரங்குகளை இந்த வைரஸ் ஒண்ணும் செய்யறதில்லை. ஆப்ரிக்காவிலே தான் மனிதன் குரங்குக்கு சமானமான ஏதோ உயிரிலேருந்து பரிணாமம் அடைஞ்சு வந்தான்னு சொல்றாங்க. அப்ப இந்த வைரஸ் அப்பவே நம்ம உடம்போட சேந்து இருந்திட்டிருக்கு. அத நம் உடம்பிலேருந்து பிரிக்க முடியாது. அதன் முதல் தக்குதல் எப்ப ?ஏன் அது நோயா ஆச்சு ? நான் நினைக்கிறேன், எப்ப மனிதன் கலச்சாரம் அடைஞ்சானோ , எப்ப குரங்கு அல்லாம ஆனானோ அப்பத்தான். சமைச்சு சாப்பிட ஆரம்பிச்சவா ? சீசன் பாக்காம உடலுறவு கொள்ள ஆரம்பிச்சவா ? குடும்பமா ஆனப்பவா ? தெரியலை. ஆனா குரங்குகளுக்கு இந்த வைரஸால அபாயமே இல்ல. அது தாக்குறது மனுஷனைத்தான் ‘

‘இல்லாட்டி மனுஷக் கலாச்சாரத்தைத்தான் ‘ என்றான் பிரதாப்

‘ஆமா. மனுஷக் கலாச்சாரம் இந்த வைரஸை எதுத்து போராடிட்டிருக்கு . மனுஷன் முதலில் பச்சிலைகள் மூலம் மருத்துவம் செய்ய ஆரம்பிச்சப்ப இந்த வைரஸ் பலமிழந்தது. ஆனா அது மெதுவா தன் உயிரியல் அடிப்படைகளை மாத்தி அமைச்சுக்கிட்டு மறுபடி தாக்கியிருக்கு. அப்பத்தான் போகர் ஜீவ மருந்துக்களை கண்டுபிடிச்சார் . அது இந்த வைரஸை கட்டுப்படுத்திட்டது. ஆனா மெல்ல ஜீவமருந்துக்களுக்கும் எதிரா அது தன்னை மாத்திக்கிட்டது. அப்பத்தான் மாம்பழச்சித்தர் ரசாயன மருந்தைக் கண்டுபிடிச்சார். அந்தமருந்து இந்த வைரஸை கட்டுப்படுதிட்டது. அதன் பிறகு ரசாயன மருந்துக்களைத் தாண்டி இப்ப புதுவடிவிலே பலமடங்கு சக்தியோட திரும்ப வந்திருக்கு. இப்ப உள்ள எந்த மருந்தும் அதைக் கட்டுபடுத்தாது… ‘

‘ஒரு நிமிஷம் தளவாய். நீ எல்லாத்தயும் சித்த வைத்தியத்தோட நிறுத்திட்டே. இது உலகளாவிய ஒரு பிரச்சினை… ‘என்றேன்

‘இதோபார் , உலகத்திலேயே பழைய வைத்திய முறை சித்த வைத்தியம்தான். இங்கேயிருந்துதான் இந்த மருந்துக்கள் சீனாவுக்கும் ஆப்ரிக்காவுக்கும் அரேபியாவுக்கும், ஐரோப்பாவுக்கும் போயிருக்கு. அந்தநாட்டு மக்கள் எல்லாருமே தமிழ்நாட்டை தேடிவந்த காலம் ஐநூறு வருஷம் முன்னாடிகூட இருந்திருக்கு. காலகட்டத்த வச்சு ஒப்பிட்டுப்பாத்தா சித்தவைத்தியம் தாத்தாமாதிரி. மத்த வைத்தியமுறைகள் பேரப்பிள்ளைகள் இல்லாட்டி கொள்ளுப்பேரனுங்க . எல்லாமே இங்கேருந்து போய் வளந்ததுதான். அப்பிடி இல்லைண்ணாக்கூட ஒண்ணு பாத்தாதெரியும் மருத்துவமுறைகள் அதிசீக்கிரமா உலகம் முழுக்க பரவிடுது. ஏறத்தாழ எல்லா இடத்திலேயும் புது மருந்துகள் ஒரே காலத்திலேதான் உபயோகத்துக்கு வருது… ‘ தளவாய் தொடர்ந்தான் ‘இண்ணைக்கு நவீன மருத்துவம் பயன்படுத்தற மருந்துக்கள்கூட மூணு வகைதான். பென்சிலின் மாதிரி தாவர மருந்துக்கள்லாம் அஜீவம். வாக்சின்கள் எல்லாம் ஜீவம். மத்ததெல்லாம் ரசாயனங்கள் . மூணுமே எய்ட்ஸை குணப்படுத்தாது. ஏன்னா இந்த வைரஸ் மூணையுமே தாண்டிப்போகக் கூடிய உயிரியல் அமைப்பை வளத்து எடுத்திட்டிருக்கு… ‘

‘அப்ப ? ‘

‘நாலாவது மருந்தைத்தான் பரிசோதனை பண்ணிப் பாக்கணும். ‘என்றான் தளவாய்.

‘என்ன அது ? ‘

‘யோசிச்சுப் பார். பூமியிலே என்னென்ன இருக்கு ? தாவரம், பிற உயிர்கள், ரசாயனங்கள் . அப்புறம் ? ஆமா, கதிர்கள்…. பல நூறு நுண்கதிர்கள்…இப்பவே நாம கதிர்வீச்சை கான்சருக்கெல்லாம் மருந்தா பயன்படுத்தறோம்.. ‘

‘நீ என்ன பண்ணினே ? கதிர் வீச்சினாலே லாபத்த விட நஷ்டம்தான் அதிகம். அதை கட்டுப்படுத்தவே முடியாது… ‘ என்றான் பிரதாப்

‘ஏற்கனவே கதிரியக்கம் சித்த வைத்தியத்திலே இருக்கும் . சித்த வைத்தியர்கள் ரசக்கட்டு அப்டான்னு ஒரு உத்தி இருக்கு. பாதரசத்த திடமான கட்டியா ஆக்கறாங்க. அதாவது அதன் மூலக்கூறு அமைப்பையே மாத்திடறாங்க. அது மென்மையான கதிரியக்கத்தை உருவாக்குது. நான் அந்த வழிகளைப் பயன்படுத்தி பழைய ஜீவ, அஜீவ , ரசாயன மருந்துகளிலே மென்மையான கதிர்வீச்சை செலுத்தினேன். இந்த மருந்து கிடைச்சது ‘ என்று அவன் ஒரு சீசாவைக் காட்டினான். ‘கட்டப்பட்ட ரசத்தின் அடியில் ஆறுமாசம் வைச்ச ஒரு ஜீவரசாயனக் கலவை இது . இது உடம்பிலே உள்ள செல்களுக்கு மிக மிக குறைவான கதிரியக்க சக்தியை குடுத்திடுது . கதிரியக்கத்துக்கான சக்தியை அது நம்ம உடல்வெப்பத்திலேருந்து எடுத்துக்கிடும். அந்த கதிரியக்கம் நம்ம உடல்செல்களை பாதிக்காது. பாக்டாரியாவைக்கூட ஒண்ணும் செய்யாது. வைரஸ்களைமட்டும்தான் அழிக்கும்… ‘

‘இதால பயன் இருக்கா ? ‘

‘காட்டறேன். ஓமனக்குட்டியையும் தாமஸையும் ஞாபகமிருக்கா ? ‘ ‘

‘ஆமா. எய்ட்ஸ் நோயாளிகள். என் ஆஸ்பத்திரியிலேருந்து விட்டுட்டு போனவங்க ‘

‘இங்கதான் இருக்காங்க ‘ என்ற தளவாய் கீழே எட்டிப்பார்த்தான். ‘ வரச்சொல்லியிருந்தேன். வந்திருக்காங்க . ‘ சிறு சாளரம் வழியாக எட்டிப்பார்த்து ‘ மேலே வாங்க ‘

மட்கிய குச்சி போல படுக்கையில் எழ முடியாமல் கிடந்த இருவரும் ஆரோக்கியமான உடலுடன் சிரித்தபடி வந்து நின்றதைக் கண்டு பிரதாப் பிரமித்துவிட்டான்.

‘எப்படி இருக்கே ஓமனா ? ‘

‘நல்லா இருக்கேன் சார். இங்க இன்னும் ஒரு மாசம் இருந்தா போயிடலாம்னு சார் சொல்றார் ‘

:

‘இவங்களை நீ நல்லா சோதனை பண்ணிப் பாக்கலாம்… இப்ப இவங்க கிட்டே எய்ட்ஸ் வைரஸ் இல்லை ‘ என்றான் தளவாய்.

பிரதாப் அவர்களையே வெறித்துப் பார்த்தபடி வெகுநேரம் சொல்லிழந்து அமர்ந்திருந்தான். சட்டென்று எழுந்து தளவாயை ஆரத்தழுவிக் கொண்டான். ‘டேய்… பித்துக்குளி மாதிரி இருந்துட்டு.. டேய்.. நீ பெரிய ஆளுடா… .. ‘

‘நம்ம நாட்டுக்கு அடுத்த நோபல் பரிசுய்யா! ‘என்றபடி நானும் தளவாயைக் கட்டிக் கோண்டேன்.

‘ஆனா இந்தமருந்தோட மறுபக்கம் ஒண்ணு இருக்கு… ‘ என்றான் தளவாய் விடுவித்தபடி .

‘என்ன ? ‘

‘இந்த வைரஸ் முதலிலே தாக்கிய பிறகு பல ஆயிரம் வருஷம் தாவர மருந்துக்களோட கட்டுக்குள்ள இருந்திருக்கு. ஆனா ஜீவ மருந்து கண்டுபிடிச்ச பிறகு ஆயிரம் வருஷத்திலே மறுபடி தாக்கியிருக்கு. உலோகரசாயன மருந்துக்களை ஐநூறு வருஷங்களிலே தாண்டி வந்திருக்கு. அதாவது அதன் பரிணாமவேகம் அதிகமாயிட்டே இருக்கு. இப்ப மனுஷங்க மருந்துக்களை உபயோகிக்கிறது ரொம்ப அதிகம். மனுஷங்க உலகம் முழுக்க சுத்திட்டே இருக்காங்க. அப்ப அது சீக்கிரமா அடுத்த கட்ட பரிணாமவளர்ச்சியை அடைஞ்சுடும். அதாவது அடுத்த தாக்குதல் நூறுவருஷத்துக்குள்ள இருக்கலாம்… ‘

என் மனம் சில்லிட்டது

‘அப்ப கதிரியக்க மருந்தையும் இந்த வைரஸ் தாண்டிடும். பூமியிலே வேற என்ன இருக்கு மருந்தாக ? எதுவுமில்லை! அஞ்சாவது மருந்தை மனிதன் கண்டுபிடிப்பான்னு என்ன உத்தரவாதம் இருக்கு ? இந்த வைரஸ் அப்ப மனிதகுலத்தையே அழிச்சிடுமா ? ‘என்றான் தளவாய்.

‘என்னடா உளறுறே ? ‘

‘இல்லடா . தத்துவார்த்தமா யோசிச்சுப்பாரு. மனுஷ இனமே இயற்கையை எதுத்து போராடி வளந்ததுதான். நம்ம கலாச்சாரமே இயற்கைக்கு எதிரானதுதான். காடுகளை அழிச்சிட்டோம். தண்ணீரை வீணடிச்சிட்டோம். இப்ப இயற்கை நம்மை திருப்பி அடிக்குதா என்ன ? நம்ம இடுப்பில கயிறு கட்டி மறுநுனியை கைல பிடிச்சுட்டு போறவரைக்கும் போ அப்டாண்ணு விட்டிருக்கா ? கயிறு முடிஞ்சதும் என்ன ஆகும் ? ‘

‘என்னடா ஆச்சு உனக்கு ? அற்புதமான மருந்தைக் கண்டுபிடிச்சுட்டு… ‘

‘இல்லடா . இப்ப என் மருந்து பலலட்சம் பேரைக் காப்பாத்தும் . ஆனா இதே மருந்துதான் நூறு வருஷம் கழிச்சு பலகோடி பேர் சாகவும் காரணமா அமையும். மாம்பழச்சித்தர் கண்டுபிடிச்ச மருந்துதான் இண்ணைக்குள்ள எயிட்ஸ் கிருமிய உருவாக்கிச்சு. நான் எந்த மாதிரி பயங்கரமான கிருமிய உருவாக்கப் போறேன் ? ‘

நாங்களும் கிட்டத்தட்ட வாயடைந்து போனோம்.

‘மருந்து கண்டுபிடிக்கிறதுக்குப் பதில் நாம ஏன் இயற்கையோட சமரசம் பண்ணிக்க கூடாது ? இந்த எய்ட்ஸோட ஒத்துப்போய் வாழ முயற்சி செய்யலாமே ? இயற்கையான முறையில் இதை தவிர்த்துட்டு வாழலாமே ? இந்த வைரஸ் நம்மை விடாது. ஏதோ வடிவிலே நம்மகூட இருக்கும் . அதை எதுக்க எதுக்க அது விசுவரூபம்தான் எடுக்குது ! ஏன் அதை அப்டியே விட்டுடக் கூடாது ? அது நம்மை கட்டுப்படுத்தற ஒரு இயற்கைச் சக்தீண்ணு ஏன் நினைக்கக் கூடாது ? நமக்கும் ஏதாவது ஒரு கட்டுப்பாடு வேணும். இப்ப போற போக்கிலே நாம் சீக்கிரமே பூமியையும் அழிஞ்சு நாமும டுவோம்… ‘ தளவாய் சொன்னான். ‘ ஐந்தாவது மருந்து ஒண்ணு இருக்குண்ணா அது நிரந்தரமான மருந்தாத்தான் இருக்க முடியும்… ‘

‘நீ இந்தமருந்தை இப்ப வெளியிடு .மத்த பிரச்சினைகளை மெல்ல பேசிக்கலாம் ‘என்றான் பிரதாப்

‘இல்லடா. நான் நூறுவருஷம் கழிச்சு மனுஷகுலமே அழியக் காரணமா இருக்க விரும்பலை. இந்த விஷயத்துக்கு ஒரு தெளிவான விடை கிடைக்காமல் நான் இந்த மருந்தை வெளியிட மாட்டேன். ‘ என்றான் தளவாய்.

எங்களுக்கும் பதில் கிடைக்கவில்லை. வருத்தமாகவே கிளம்பிவந்தோம்.

சோலைச்சித்தரைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். தளவாயைத்தான் காலப்போக்கில் அப்படி அழைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர் வீட்டைவிட்டு பக்கத்து சோலைக்கு குடிவந்து இப்போது எட்டு வருடங்கள் ஆகின்றன.

****

சொற்களின்

amma