Showing posts with label கட்டுரை (இலக்கியம் ). Show all posts
Showing posts with label கட்டுரை (இலக்கியம் ). Show all posts

Saturday, May 15, 2010

ஆத்மாநாம் தன்னை நிராகரித்த கவிஞன்----குவளைக் கண்ணன்

”கவிதை என்று பிரிக்க முடியாது. கவிதை, கவிதை அல்லாதது என்று மட்டுமே பிரித்தாள முடியும். கவிதை அல்லாதது அப்பட்டமாகத் தன்னைத்தானே வெளிக்காட்டிக்கொண்டு விடுகிறது.

கவிதையானது என்றைக்குமே தனது இருப்பை மொழியின் மீதோ அல்லது அதனைப் பேசும் மக்கள் மீதோ திணித்ததில்லை. திணிக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டதில்லை.'”

மேற்கூறிய வாசகங்கள் ஆத்மாநாமுடையவை.

பெருநகர்களில் தனிமனித இருப்பு சார்ந்த நெருக்கடியைத் தெரிவிக்கிற, ஒரு செடியின் இருப்பு வழியாக மனித இருப்பின் அடிப்படைச் சிக்கலை விளக்கிக்கொள்ள முயல்கிற, சகவாசியின் வேதனையைப் பார்ப்பதோடு, கும்பலின் மீதான வெறுப்பை athmanamஉமிழ்கிற (உதாரணம்: கட்டாந் தலைகள்), சுய தேடலுள்ள, குழந்தைகளின் உலகில் ஊடாடுகிற, விளக்குக் கம்பம், திருஷ்டிப் பொம்மை, திருஷ்டிப் பூசணி எனச் சாதாரணமாக நாம் தினசரி பார்ப்பவற்றை முற்றிலும் வேறாகக் கண்டு நமது வாழ்வினுள் கொண்டு வருகிற கவிதைகள், பட்டியலிடும் கவிதைகள், வாசகனிடம் நேரடியாகப் பேசும் கவிதைகள், இயக்கங்கள் தங்களது பிரச்சாரங்களில் உபயோகிக்கக்கூடிய அளவுக்குக் காட்டமான, அப்பட்டமான அரசியல் கவிதைகள், கேலி செய்யும் கவிதைகள், காதல் கவிதைகள் என்று பல்வேறு வகையான கவிதைகளையும் கொண்டது ஆத்மாநாமின் படைப்புலகம்.

'குட்டி இளவரசிக்கு ஒரு கடிதம்', 'குட்டி இளவரசி வந்துவிட்டாள்', 'புத்தம் புதிய' எனும் தலைப்பிலுள்ள கவிதைகள், குழந்தைகளின் உலகம் சார்ந்தவை. குட்டி இளவரசிக்கு ஒரு கடிதத்தில், குழந்தைகளின் புனைவுலகம் சார்ந்த ஷிநீஷீஷீதீஹ் எனும் நாய் வருகிறது அல்ல வருகிறான். நாய்களின் தலைவனைக் கௌரவிக்கக் கூட்டம் நடக்கிறது. அந்தத் தலைவன் எதற்காகக் கௌரவிக்கப்படுகிறான் தெரியுமா, பின்னால் சுமக்கும் பையைக் கண்டுபிடித்ததற்காக.

'குட்டி இளவரசி வந்துவிட்டாள்' கவிதையைப் பார்ப்போம்: டப்பியின் களிப்புகளைப் பரப்பி வைப்பாள்/ சுவற்று அழுக்கை ஈயெனப் பிடிப்பாள்/ கூக்கூவைத் தினம்தினமும் புதிதாய்க் காண்பாள்/ மக்கள் கூட்டத்தில் கூக்குரலிடுவாள்/ ஏறி இறங்கும் படிகள் அவள் உலகம்/ பார்த்தவரெல்லாம் அவளது தோழர்கள்/ பசி உடல் தவிர அழ ஒன்றும் இல்லை/ தனக்குள்தானே பொங்கும் மகிழ்ச்சி அவள்/ ஒவ்வொரு கணமும் மகிழ்ச்சியின் தொடர்ச்சியே/ பெயர் சொல்லி அழைத்தால் திரும்பிப் பார்ப்பாள்/ அவள் ஊடுருவல் பார்வை உம்மையும் மீறிச் செல்லும்.

குட்டி இளவரசி நடக்கக் கற்றுக் கொண்டவள்; அநேகமாக இன்னும் பேச ஆரம்பிக்கவில்லை. பசிக்கு அழுதால்தான் அழுகை. வளர்ந்தவர்களின் ஒழுக்கம்/ ஒழுக்க விதிகள் அவளுக்குப் பொருந்தமாட்டா. மக்கள் கூட்டத்தில் கூக்குரலிடுகிறாள். பார்த்தவரெல்லாம் அவளது தோழர்கள் . . . வளர்ந்தவர்களான நமக்குக் குழந்தையாகிற ஏக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்குக் குழந்தைகளின் உலகைக் கவனித்த கவிதை இது. நாமும் குழந்தையாக இருந்தபோது இப்படித்தானே இருந்திருப்போம். சொல்லோடுதான் இப்போதைய குழப்பங்களும் துயரங்களும் நம்மிடம் வந்தனவா?

'பூச்சுக்கள்' என்ற தலைப்பிலுள்ள கவிதையைப் பார்ப்போம்.
வாழ்க்கைக் கண்ணாடியில்/ முகம் பார்த்து/ தலை சீவி/ பவுடர் பூசி/ வெளிக் கிளம்பினேன்/ பஸ் ஸ்டாண்டில்/ என்னைப் போலவே/ ஆண்களும் பெண்களும்/ அவரவர் வாழ்க் கைக் கண்ணாடியில்/ முகம் பார்த்து/ அலங்கரித்து/ காத்து நின்றிருந்தனர்/ வந்து போய்க்கொண்டிருந்த/ வாகனங்களில்/ பொதுமக்கள்/ வேற்றுமை காண இயலாவண்ணம்/ உட்கார்ந்து கொண்டும்/ நகர்ந்துகொண்டும்/ பயணம் செய்துகொண்டிருந்தனர்/ என்னுடைய வாகனம் வந்துவிட்டது/ இடிபாடுகளுக்கிடையே/ நானும்/ ஒரு கம்பியில் தொற்றிக்கொண்டேன்/ எங்கோ ஒரு இடத்தில்/ நிலம் தகர்ந்து/ கடல் கொந்தளித்தது/ ஒரு பூ கீழே தவழ்ந்தது.

இந்தக் கவிதையில் நகரத்தின் காலை நேரக் காட்சியொன்று தரப்படுகிறது. காலை நேரம் என்பதை எட்டிலிருந்து பத்து மணிக்குள் என்று வைத்துக்கொள்ளலாம். திங்கட்கிழமையில் இருந்து சனிக்கிழமைக்குள் ஏதோ ஒரு வேலை நாளாக இருக்க வேண்டும். இதில் வரும் கவிதை சொல்லி வீட்டிலிருந்து கிளம்பிப் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக நிற்கிறார். இவரைப் போலவே ஆண்களும் பெண்களும் காத்துக்கொண்டிருக்கின்றனர். பொதுமக்கள் அடையாளம் காண இயலாவண்ணம் பயணம் செய்கிறார்கள். இவரது வாகனம் வருகிறது. இவரும் ஒரு கம்பியில் தொற்றிக்கொள்கிறார். பெருநகரமொன்றின் வேலைநாட்களின் காலை நேரம் அதன் அத்தனை அவசரத்தோடும் அவதியோடும் கவிதைக்கான காட்சிப் பின்புலமாக நமக்குத் தரப்படுகிறது.

முதல் வரியிலிருந்தே, முதல் சொல்லிலிருந்தே கவிதை தொடங்கிவிடுகிறது. கண்ணாடியில் முகம் பார்த்து, தலை சீவி, பவுடர் பூசி, வெளிக் கிளம்பினேன் என்றாலே கவிதை சொல்லி வீட்டைவிட்டுப் புறப்பட்டதை நமக்குக் காட்டிவிடலாம். ஆனால் வாழ்க்கைக் கண்ணாடி என்கிறார். நாம் ஏன் வெளியே கிளம்புவதற்கு முன் கண்ணாடி பார்க்கிறோம் கண்ணாடியில் முகம் மட்டும்தான் தெரிகிறதா? ஒவ்வொரு முறையும் வீட்டைவிட்டுப் பொதுவெளிக்குள் நுழையும்முன் நாம் ஏன் மறக்காமல் கண்ணாடியிடம் நுழைவுச் சீட்டைப் பெற்றுக்கொள்கிறோம்? கண்ணாடிகள் பிரதிபலிக்கும் தன்மையுடையவை, நாம் உருவத்தைப் பார்த்தால் உருவத்தை. கண்ணாடியில் பார்த்து நமது உருவத்தைத் திருத்திக் கொள்கிறோம். உள்ளுக்குள் எப்படி இருந்தாலும் பொதுவெளிக்கு என்று முகத்தைத் திருத்திக்கொண்டுவிடுகிறோம். கவிஞர் கண்ணாடியில் வாழ்க்கையை, அல்ல கண்ணாடியையே வாழ்க்கையாகப் பார்க்கிறார். உட்கார்ந்துகொண்டு, நகர்ந்துகொண்டு பயணம் செய்யும்போது அடையாளம் காண இயலாதபடி ஆகிறோம். மேலும் பொதுமக்கள் என்பவர் நமது புலன் வெளிக்குள் வந்தாலும் நமது உணர்வுவெளிக்குள் வராதவர்தானே, யாரிடம் நமக்கு எதுவுமே தோன்றுவ தில்லையோ அவர்கள்தானே. இவருடைய வாகனமும் வந்துவிடுகிறது, கவிதைசொல்லியும் கம்பியில் தொற்றிக்கொள்கிறார். பேருந்தில் நின்றுகொண்டு நாம் எதையோ யோசித்துக்கொண்டிருக்கும்போது, சட்டென்று பேருந்து நகரத் தரையே நகர்வது போன்ற உணர்வு ஏற்பட்டு சட்டென்ற திகில் பொங்குமே, அப்படி ஆகிறது. கடைசி வரியில் கவிதை சொல்லி தனது எண்ண ஓட்டத்திலிருந்து நிகழ்கணத்துக்கு வந்து பேருந்துக்கு வெளியே பார்க்க, பேருந்து நகரும் திசைக்கு எதிர்திசையில் ஏதோ ஒரு பெண் நடந்துபோகிறாளா? அசைவுகள் நினைவுகளாகி இந்த நான்கு வரிகளும் அசைபோட்டு சொல்லப்படுகின்றனவா? இப்படி வாசிக்கலாம். மற்றொரு வாசிப்பாகப் பேருந்து நெரிசலில் தவிக்கிற அதே சமயத்தில் பூமியின் வேறொரு பகுதியில் பூமி நகர்ந்து, கடல் கொந்தளிந்துவிடலாம். வேறொரு இடத்தில் தனக்குக் கீழே தண்ணீரிலோ காற்றிலோ பூவொன்று தவழ்வதைக் கவிஞர் சொல்வதாகக் கொள்ளலாம். அதாவது முதலில் சொல்லப்பட்ட சந்தடியும் இரைச்சலுமான நகரக் காட்சியின் அருகில் பூமியின் வேறெதோ இடத்தில் வேறெதோ காலத்தில் நடந்த, நடக்கப் போகிற நிகழ்ச்சியை வைத்துக் கவிதைக்கும் வாழ்வுக்கும் அழகூட்டிவிடுகிறார். இப்படியும் வாசிக்கலாம்.

இந்தக் கவிதையில் 'இடிபாடுகளுக்கிடையே' என்ற சொல்லைக் கவனியுங்கள். நெரிசல் என்ற சொல்லே பொதுவாக உபயோகத்திலுள்ள சொல், தகர்ந்த கட்டுமானங்களைப் பற்றிச் சொல்லும்போது நாம் உபயோகிக்கிற சொல் 'இடிபாடுகள்' என்பது, இப்போது மீண்டும் இந்தக் கவிதையை வாசியுங்கள்.

ஆத்மாநாமின் கவிதை உலகை மேலும் அறிவதற்கு ஏதுவாகச் சில வரிகளைப் பார்ப்போம்:

முட்டிமோதிப் பார்க்கிறது கடல்/ மணலைத் தன் நீலப் புடவைக்குள்/ சுருட்டிக்கொள்ள* உங்கள் இருப்பை நிரூபிக்க/ முத்தத்தைவிட சிறந்ததோர் சாதனம் கிடைப்பதரிது . . . முத்தம்/ முத்தத்தோடு முத்தம்/ என்று/ முத்த சகாப்தத்தைத் துவங்குங்கள்* முன்பென்றால் நினைவு/ பின்பென்றால் கனவு/ இப்பொழுதென்றால் நான்* நானும் வேறான நானும் பொய்/ நான் இல்லை* சித்திரத்திற்கு குரல் இருக்க வேண்டும்/ அந்தக் குரலுக்கு உயிர் இருக்க வேண்டும்/ பார்ப்பவன் பேச வேண்டும்/ பேச்சில் தெளிவு வற்றாதது தெளிவு/ நீங்கள் ஒவ்வொரு வரும்/ ஒரு சமவெளியை நிரப்பிக் கொண்டிருக்கிறீர்கள்* எல்லோருமே/ ஒரே ஒரு புத்தகத்தைத்தான்/ படிக்கப்/ போகிறீர்கள்/ அது உங்கள் புத்தகம் தான்* இந்தக் கவிதை/ எப்படி முடியும்/ எங்கு முடியும்/ என்று தெரியாது./ திட்டமிட்டு முடியாது என்றெனக்குத் தெரியும்/ இது முடியும்போது/ இருக்கும் (இருந்தால்) நான்/ ஆரம்பத்தில் இருந்தவன்தானா.* உதிரும்/ மலரின்/ கணிதத்தை/ என்றாவது/ யோசித்திருந்தால்/ மட்டும்/ இது புரியும்* சரக்கென்று/ உடல்விரித்துக்/ காட்டும்/ கற்றாழையின்/ நுனியிலிருந்து/ துவங்கிற்று வானம்* வயல்களுக்கப்பால் இருந்த/ சூரியன் மேலே சென்றான்/ எருமைகள் ஓட்டிச் சென்ற/ சிறுவனின் தலையில் வீழ்ந்தான்.

மொத்தக் கவிதைகளில் பதினைந்துக்கு மேற்பட்ட சமூக/ அரசியல் கவிதைகள் உள்ளன. ஒருவகையில் தமிழில் இவ்வாறான கவிதைகளுக்கான முன்னோடி என்றுகூட ஆத்மாநாமைச் சொல்லலாம். இவ்வகைக் கவிதைகளில் நுட்பமானவையும் உள்ளன, அப்பட்டமானவையும் உள்ளன. இவ்வகைக் கவிதைகளின் சில வரிகளைப் பார்ப்போம்.

தூங்குபவர்களையும்/ தூங்குபவர்களைப் போல் நடிப்பவர்களையும்/ எழுப்பும் வார்த்தைக் கூட்டங்கள்/ புறப்பட்டாகிவிட்டது கருப்புப்படை* எனது சுதந்திரம்/ அரசாலோ தனி நபராலோ/ பறிக்கப்படுமெனில்/ அது என் சுதந்திரம் இல்லை/ அவர்களின் சுதந்திரம்தான்* மக்கள் சுபிட்சமாய் இருந்தனர்/ அவசரமாய் அவ்வப்போது ஒன்றுக்கிருந்து* இந்த நகரத்தை எரிப்பது/ மிகச் சுலபம்/ ஒரு தீப்பெட்டி போதும் . . . ஓசைகள் குறைந்த இரவில்/ எங்கேனும் துவங்கலாம் . . . தனியொருவன் எரித்தால் வன்முறை/ அரசாங்கம் எரித்தால் போர்முறை * மந்திரிப் பெயர் சூட்டிக்கொண்ட/ அரச குமாரர்கள் . . . ஜனநாயக சர்வாதிகாரம் . . . சூழ்ந் துறங்கும்/ மனித உரிமைகள்.

இவ்வகையிலான இரண்டு கவிதைகளைப் பார்ப்போம்:

'நன்றி நவிலல்' எனும் தலைப்பில்: இந்தச் செருப்பைப் போல்/ எத்தனை பேர் தேய்கிறார்களோ/ இந்தக் குடையைப் போல்/ எத்தனை பேர் பிழிந் தெடுக்கப்படுகிறார்களோ/ இந்தச் சட்டையைப் போல்/ எத்தனை பேர் கசங்குகிறார்களோ/ அவர்கள் சார்பில்/ உங்களுக்கு நன்றி/ இத்துடனாவது விட்டதற்கு.

'தும்பி' எனும் தலைப்பில்: எனது ஹெலிகாப்டர்களைப்/ பறக்கவிட்டேன்/ எங்கும் தும்பிகள்/ எனது தும்பிகளைப்/ பறக்கவிட்டேன்/ எங்கும் வெடிகுண்டு விமானங்கள்/ எனது வெடிகுண்டு விமானங்களைப் பறக்கவிட்டேன்/ எங்கும் அமைதி/ எனது அமைதியைப் பறக்கவிட்டேன்/ எங்கும் தாங்கவொண்ணா விபரீதம்.

இவை மட்டுமல்ல, பல்வேறு தொனிகளில் ஏற்கனவே சொன்னதுபோல் பதினைந்துக்கும் மேற்பட்ட சமூக, அரசியல் கவிதைகள் உள்ளன. இவ்வாறான கவிதைகளில் ஒன்று 'அவள்'. இந்த அவள் நீங்கள் நினைக்கிற 'அவள்' அல்ல, இது 1984க்கு முன்னர் எழுதப்பட்டது.

எந்த ஒரு கட்டுப்பாட்டுக்குள்ளும் இயங்க முடியாத ஒருவன் மட்டுமே படைப்பாளியாக முடியும். சுதந்திரத்தின் உச்சகட்டத்தில் இருப்பவன் மட்டுமே செயல்பட முடியும். புதிய புதிய திசைகளை அடையாளம் காண முடியும். படைப்பாளி தனக்குத்தானே கேள்விகளைக் கேட்டுக்கொண்டு பதில்களைக் கண்டுபிடித்துக்கொள்கிறான். அவன் தனக்குத்தானே குருவாகி சிஷ்யனுமாகித் தன்னையே நிராகரித்துக் கொண்டிருக்கிறான். தொடர்ந்து குருவின் சிலையை உருவாக்கும் உளிச் சத்தம் ஒன்றும் குருவின் சிலையை உடைக்கும் உளிச் சத்தம் ஒன்றும் கேட்கின்றன.

மேல் பத்தியிலுள்ளவையும் ஆத்மாநாமின் வாசகங்கள்தான். நம்மிடையே பல கவிஞர்களும் தம்மை நிறுவ முயன்று, தமக்கென்று ஒரு குறிப்பிட்ட ரீதியைத் தேர்ந்தெடுத்து, தம்மை மீண்டும் மீண்டும் நிறுவிக் கொண்டிருக்கையில், தன்னையே தொடர்ந்து நிராகரித்து வந்ததால்தான் பல்வகைப்பட்ட, பல ரீதியிலான கவிதைகளை அவரால் எழுத இயன்றிருக்கிறது. தமிழில் பலவகையான கவிதைகளை எழுதிய கவிஞர்களில் ஆத்மாநாம் ஒருவர். சரியாகச் சொல்வதானால் ஒரே ஒருவர்.

ஆத்மாநாம் பற்றி பிரம்மராஜன் எழுதியுள்ள வாழ்க்கைக் குறிப்பிலிருந்து Lithium, Hyportry, Largatyl, Fenargan போன்ற மருந்துகளை ஆத்மாநாம் தொடர்ந்து உட்கொண்டது தெரிகிறது. இவரது கவிதைகளில் 'ஒரு குதிரைச் சவாரி' என்கிற ஒரே ஒரு கவிதையில் மட்டுமே இந்த தனிப்பட்ட நிலைமை வெளியாகி வாசகனைத் துயருறச் செய்கிறது. எழுதுபவர்களது மன அவசங்களும் மன அலைவுகளும் மனச் சிக்கல்களும் கவிதையில் அதிகமாக எழுதப்படுகிற இந்தக் கட்டத்தில் கவிதை எழுதுபவர்கள் கவனிக்க வேண்டிய தன்மை இது. கவிதைக்கு ஆட்படுவதற்கும் கவிதையை ஆட்படுத்த நினைப்பதற்கும் உள்ள மிகப் பெரிய வித்தியாசத்தை ஆத்மாநாம் உணர்ந்திருக்கக்கூடும். மேலே குறிப்பிடப்பட்ட நான்கு மாத்திரைகளில் ஏதாவது ஒன்றைத் தொடர்ந்து உட்கொண்டுவரும் ஒருவரிடம் அவரது பெயர் கேட்கப்பட்டால், தனது பெயரைச் சொல்லக்கூட அவருக்கு நேரமெடுக்கும். ஆத்மாநாமுக்கு மனித உறவுகளிலும் சமூக வாழ்விலும் சிக்கலிருந்திருக்கலாம். இலக்கியத்தைப் பொறுத்தவரை அவர் ஒரு திடமான பரப்பில் நின்றிருந்திருக்கிறார். ஆத்மாநாம் கவிதைக்கு ஆட்பட்டவர்.

மொத்தம் நான்கே பக்கங்கள் வரக்கூடிய இவரது இரண்டு கட்டுரைகளும் பிரம்மராஜனுக்கு அளித்த நேர்காணலும் தமிழ்க் கவிதையியலுக்கு ஆத்மாநாமின் முக்கியப் பங்களிப்புகள். 'கவிதை எனும் வார்த்தைக் கூட்டம்' கட்டுரையில் எனது 'மனத்தில் தைத்த கவிதைகள்' எனத் தந்திருக்கும் கவிதை வரிகள், கவிதை பற்றிய புரிதலுக்குப் பெரிதும் உதவக்கூடியவை. இப்படி ஒரு பத்துக் கவிஞர்கள் அவர்களது மனத்தில் தங்கிய கவிதை வரிகளைத் தந்தால் அது தற்காலத் தமிழ்க் கவிதைகளின் உண்மையான வாசகருக்கு உதவக் கூடிய திரட்டாக அமையும்.

'ஆத்மாநாமைப் பற்றியும் கவிதை பற்றியும்' ஆத்மாநாம் - ஐ எனும் கட்டுரையில்:

தன்னிலிருந்து தானே விடுபடும் போது ஒருவன் மனிதனுக்கு ஒருபடி மேலே செல்கிறான் என்பவர், "உண்மையைத் தவிர வேறு எதுவும் இலக்கியமாக முடியாது என்பதில் நம்பிக்கை உள்ளவர்" என்று சொல்லி மேலும் "இலக்கியத் தொடர்பாலேயே வாழ்க்கை வாழத் தகுதியுள்ளதாக நினைக்கும் இவர், இலக்கியத் தொடர்பாலேயே வாழ்க்கை முடியுமோ என்று அஞ்சுகிறார்" என்று தன்னைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இலக்கியத் தொடர்பாலா முடிந்தது? முடிந்ததா?

06.07.1984 அன்று மரணத்தில் மூழ்கியது, 18.01.1951இல் பிறந்த ஷி.ரி. மதுசூதன். இதற்கு இருபது ஆண்டுகள் கழித்தும் இப்போதும் ஆத்மாநாம் இருக்கிறார், இன்னும் இருப்பார். கவிதைகளின் வாழ்வல்லவா கவிஞர்களின் வாழ்வு.

('கடவு' சார்பில் மதுரையில் நடத்தப்பட்ட 'கூடல்' கவிஞர்கள் சந்திப்பில் வாசிக்கப்பட்ட கட்டுரையின் விரிவாக்கம்)

தொட்டில் வாசனை----எஸ்.ராமகிருஷ்ணன்

ஊரிலிருந்து சென்னைக்கு கைக்குழந்தையோடு இடம் மாறி வந்த நாளில், என் மனைவி சிறிய பொட்டலம் ஒன்றை முடிந்து கையோடு எடுத்து வந்திருந்தாள். அந்தப் பொட்டலம் நீண்ட நாட்களாக குழந்தையின் தொட்டில் கம்பில் கட்டித் தொங்கவிடப்பட்டு இருந்தது.

vannanilavanஒவ்வொரு முறை அதைக் காணும்போதும், என்ன இருக்கிறது அதில் என்று கேட்க வேண்டும் என்று தோன்றும். குழந்தையின் கண் திருஷ்டிக்காக எதையாவது கட்டி வைத்திருப்பார்கள் என்று கேட்காமலே விட்டுவிடுவேன். பையன் தொட்டிலில் உறங்கும் வயதைக் கடந்து வந்துவிட்ட பிறகு, இனி தொட்டிலின் தேவை முடிந்துவிட்டது என்பதுபோல அவிழ்த்துக்கொண்டு இருந்தார்கள். அந்தப் பொட்டலம் சுருங்கிச் சின்னதாகிக் கீழே விழுந்தது.

என்னதான் இருக்கிறது அந்தப் பொட்டலத்தில் என்று எடுத்துப் பிரித்துப் பார்த்தேன். உள்ளே பிடி மண் இருந்தது. என் முகத்தைப் பார்த்தபடியே மனைவி சொன்னாள்…
Ô‘பிறந்த இடத்தின் மண் இல்லாவிட்டால் குழந்தை நிம்மதியாகத் தூங்காது. அதற்காக ஊரிலிருந்து வரும்போது ஒரு பிடி மண்ணைக் கொண்டுவந்து கட்டினேன்!ÕÕ
வியப்பாக இருந்தது. பிறந்த மண்ணின் வாசனையும் நெருக்கமும் இல்லாவிட்டால் குழந்தைகளுக்கு நல்ல தூக்கம் வராது என்பது எத்தனை ஆழ்ந்த நம்பிக்கை! அப்படியென்றால், பையன் தன் உறக்கத்திலும் கனவிலும் என் ஊரைத்தான் நுகர்ந்துகொண்டு இருந்திருக்கிறானா? ஊரின் வாசம்தான் உறக்கத்தை வரவழைக்கக் கூடியதா? இப்படிப் பிறந்ததிலிருந்து மண் வாசனையை நுகர்ந்துகொண்டு இருந்த நாம், வளர்ந்த பிறகு அதை எப்படி மறந்துவிடுகிறோம்? மண்ணோடு மனிதனுக்கு உள்ள உறவு விசித்திரமானதுதான், இல்லையா?

ஊரைப் பிரிந்து வருவது எளிதானதில்லை. புகழ்பெற்ற ருஷ்ய எழுத்தாளரான டால்ஸ்டாய், தனது கிராமத்திலிருந்து நகரத்துக்கு இடம் பெயர்ந்தது பற்றி அவரது வாழ்க்கை வரலாற்று ஆசிரியர் குறிப்பிடும்போது, ‘ஒரு நூறு வருடப் பழைமையான ஓக் மரம் தன் வேரைத் துண்டித்துக்கொண்டு ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு நகர்ந்து சென்றது போலிருந்தது அந்த நிகழ்ச்சி’ என்று எழுதுகிறார். ஊரின் அழகு அதன் விஸ்தாரணத்திலோ, வளத்திலோ இல்லை. மாறாக, அதோடு நாம் கொள்ளும் உறவில்தான் இருக்கிறது. ஒவ்வொரு ஊரும் ஒரு கண்ணுக்குத் தெரியாத பதிவேட்டைக் கொண்டு இருக்கிறது. அதில் எண்ணிக்கையற்ற நிகழ்ச்சிகள் பதிவாகின்றன. பிறந்தவர் எத்தனை, செத்தவர் எத்தனை, வாழ்ந்து உயர்ந்தவர் யார், வாழ்ந்து கெட்டவர் யார்… இப்படி எத்தனை ஆயிரம் கணக்குகள்! ஊரின் விசித்திரம் அதன் வெளிப்படுத்தப்பட முடியாத மௌனம்தான். கரும்புகை சுழல்வது போல நிசப்தம் ஒவ்வொரு ஊரையும் சுற்றிப் படர்ந்திருக்கிறது.

மண் திமிறுகிறது என்று விவசாயிகள் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். உண்மைதான். நிலம் சதா புரண்டுகொண்டேதான் இருக்கிறது. மண் நம் காலடியில் கிடக்கிறது என்பதற்காக, அற்பமானது என்பதுபோலப் புரிந்துகொண்டு இருக்கிறோம். உண்மையில் மண் ஒரு விசை. மண் ஒரு உயிர்ப் போராட்டம். மண்ணின் குணம் மிக விநோதமானது!

ஒரு கொய்யாப்பழத்தைத் தின்னும்போது, அதன் ருசியாக இருப்பது அந்த மண்வாகுதான். கிராமத்துப் பெண்கள் கத்திரிக்காயை எந்த ஊர்க் காய் என்று கேட்டுதான் வாங்குவார்கள். மண்வாகு காய்கறிகளுக்கு காரலையோ, கசப்பையோ கொண்டு வருகின்றன. இளநீரின் ருசி அது விளையும் மண்ணைத் தான் சார்ந்திருக்கிறது! கொய்யாப்பழமாக, இளநீராக, அரிசியாக, கீரைகளாக மண் தன் ருசியை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது. இன்றுவரை மண்ணை நாம் புரிந்துகொள்ளவே இல்லை.

மண்ணின் கருணைதான் மனிதர்களை வாழ வைக்கிறது. காய்கறிகளுக்கே இப்படி ருசியும், சத்தும் மண் தருகிறதென்றால், இந்தக் காய்கறிகளையும், கீரைகளையும், பழங்களையும் உண்டு வாழ்ந்து அந்த மண்ணில் புரண்டு திரியும் மனிதனை எத்தனை உரமேற்றியிருக்கும்!

ஊர் ஒவ்வொருவர் உடல் மீதும் கண்ணுக்குத் தெரியாத சில முத்திரைகளைக் குத்தி அனுப்பிவிடுகிறது. அந்த மண் கவிச்சிதான் நம் பேச்சில், சாப் பாட்டில், பழக்கவழக்கத்தில், உடை களில், உறவில் வெளிப்படுகிறது.

பழைய டெல்லியில் சுற்றித் திரிந்துகொண்டு இருந்தபோது, ஓட்டல் நடத்தும் ஒரு தமிழ்க் குடும்பம் பரிச்சயமானது. அவர்களிடம் பேச்சுவாக்கில் டெல்லி பிடித்திருக்கிறதா என்று கேட்டேன். அவர்கள் பிழைப்பதற்கு மிக உதவியாக இருக்கிறது என்றார்கள். ஊருக்கு வரும் யோசனை இருக்கிறதா என்று கேட்டதும் ஓட்டல் நடத்தும் நபரின் மனைவி, ‘அங்கே என்ன இருக்கு, வருவதற்கு? எங்களுக்கு எல்லாமே இனி இந்த ஊர்தான்’ என்றாள். நான் வேண்டுமென்றே ‘இந்த ஊரில் உங்களை வெளியாள் என்றுதானே சொல்கிறார்கள்?’ என்று கேட்டேன். அந்தப் பெண், குரல் உடைந்து போனவளாக, ‘எங்களோட ஒரு வயசுக் குழந்தை குளிர்காய்ச்சல் வந்து செத்துப் போய் இந்த ஊர்லதான் புதைச் சிருக்கோம். டெல்லி மண்ணுல என் பிள்ளையோட எலும்பும் கலந்திருக்கு. எங்களை வெளியாள்னு சொல்றதுக்கு யாருக்கும் எந்த உரிமையும் கிடையாது சார்! நாங்க இந்த ஊர்தான்!’ என்றாள்.
அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் இருந்தது. பிறப்பு மட்டுமல்ல, சாவும்தானே ஊரோடு உள்ள பந்தம்!

ஊரைப் பிரிந்து செல் வதைப் பற்றிய கதைகளில் மிக அபூர்வமானதும் உயர் வானதும் வண்ணநிலவன் எழுதிய ‘எஸ்தர்’ சிறுகதை. வண்ணநிலவனின் நுட்பமான விவரிப்பும் மொழியும், துக்கத்தை வெளிப்படுத்தும் பாங்கும் இக்கதையை என்றும் உயிர் வாழும் சாஸ்வதமான கதையாக மாற்றியிருக்கின்றன. எஸ்தரை எத்தனை முறை வாசித்திருப்பேன் என்று கணக்கிட்டுச் சொல்லவே முடியாது. வண்ணநிலவன் கதைகள் தமிழ்ச் சிறுகதைகளை இன்னொரு பரிமாணத்துக்கு உயர்த்தியவை. அவர் எதையும் உரத்துச் சொல்பவரில்லை. ஆனால், அவரது கதைகள் ஏற்படுத் தும் வலியும் துக்கமும் ஒரு வடுவைப் போல நீண்ட நாட்கள் நம்மோடு கூடவே இருக்கக் கூடியவை.

வண்ணநிலவனின் கதாபாத்திரங்கள் பெரும் பாலும் பெண்கள். அவர்கள் சூழலால் அலைக்கழிக்கப் படுபவர்கள். ஆனாலும், தங்களின் தைரியத்தாலும், எளிய அன்பினாலும்தான் உலகம் இயங்குகிறது என்னும் உண்மையை வெளிப்படுத்துபவர்கள்.

‘எஸ்தர்’, மழையற்றுப் போய் பஞ்சம் பீடித்த ஒரு ஊரின் கதையைச் சொல்கிறது. ‘முடிவாக பாட்டியையும் ஈசாக்கையும் விட்டுச் செல்வதென்று ஏற்பாடாகியது’ என்று தொடங்கும் இக்கதை… ஒரு கிறிஸ்துவ குடும்பத்தின் வாழ்க்கைப் பாடுகளை விவரிக்கிறது.

மரியதாஸ் என்பவரின் பிள்ளைகள் அகஸ்டினும் டேவிட்டும். இருவரது மனைவியர் பெயரும் அமலம். ஆகவே, ஒருத்தி யைப் பெரிய அமலம் என்றும், மற்றவளை சின்ன அமலம் என்றும் அழைக்கிறார்கள். அவர்களுடன், வயதான பாட்டி ஒருத்தி கூரையைப் பார்த்தபடி தனது அந்திம நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கிறாள்.

இந்த வீட்டை நிர்வகிப்பது எஸ்தர் சித்தி. புருஷனோடு வாழப் பிடிக்காமல் பல வருட காலத்துக்கு முன்பு, அந்த வீட்டுக்கு வந்து தங்கிவிட்டவள். வீட்டின் சகலபாடுகளையும் கவனித்துக் கொண்டு, வீட்டை தன் கைக்கூட்டுக்குள் பொத்தி காப்பாற்றி வருகிறாள். வீடே சித்திக்காக இயங்கியது. வேலைக்காரர்கள்கூட சித்திக்காகத்தான் வேலை செய்தார்கள். எஸ்தர் சித்தி மிக அன்பானவள். யாரையும் ஒரு சொல் திட்டாதவள்.

வீட்டு வேலைகளை அவளைப்போல் அக்கறையாக யாரும் செய்ய முடியாது.
பஞ்சகாலத்தில், வீட்டில் உணவு தட்டுப்பாடாகியது. மனிதர்களை விடவும், ஆடு மாடுகளின் தீவனத்துக்காக அதிகம் அலைந்து திரிய வேண்டி இருந்தது. வீட்டில் ஒரேயரு தீப்பெட்டிதான் இருந்தது. ஆகையால் தீக்குச்சிகளைக்கூட எஸ்தர் சித்தி பாதுகாத்து வைத் திருக்கிறாள். பீடி புகைக்கும் டேவிட், ஒரு தீக்குச்சியை ரகசியமாக எடுத்து உரசும்போது, அதன் சத்தம் கேட்டு வந்து பார்க்கும் சித்தியின் கண்களில் படிந்துள்ள வேதனை, டேவிட்டை மிகவும் துக்கப்படுத்துகிறது. பஞ்சம், வீட்டு மனிதர் களின் சுபாவத்தை முற்றிலும் ஒடுக்கிவிடுகிறது. யாவரும் மனக்கலக்கம் கொண்டவர்களாக நடந்துகொள்கிறார்கள்.

பஞ்சம் பீடித்த ஊரில் ஆட்கள் காலி செய்து போய்விடவே, தெருsraaவில் ஆள்நடமாட்டம் குறைந்து போய், ஊரெங்கும் அழிவற்ற இருட்டு பெருகியது. பேச்சரவம் ஓய்ந்து போய், ஊறிய இருட்டு ஊரெங்கும் பயத்தைப் பெருக்கியது. அதோடு இருட்டு சதா எதையோ முணுமுணுத்துக்கொண்டு இருப்பது போலிருந்தது.
எஸ்தர் சித்தி இருட்டின் குரலைக் கேட்டுக் கொண்டு இருந்தாள். ‘நீயும் உனக்குப் பிரியமானவர் களும் இங்கிருந்து போவதைத் தவிர, வேறு வழி என்ன? மழை பெய்வதற்காகக் காத்திருந்து மடிவீர்களா?’ என்று இருட்டு, எஸ்தர் சித்தியிடம் கேட்டது. வீட்டில் நிலைகுத்திப்போன கண்களுடன் பாட்டி கூரையைப் பார்த்தபடி இருந்தாள். அப்படி என்னதான் பார்க்கிறாள் என்று எஸ்தருக்குப் புரியவே இல்லை. ஊரைவிட்டுச் செல்லும்போது பாட்டியை என்ன செய்வது என்று அவளுக்கு யோசனையாகவே இருந்தது.

மதுரைக்குச் சென்று கொத்து வேலை செய்தாவது பிழைத்துக்கொள்ளலாம் என்று அந்தக் குடும்பம் முடிவு செய்கிறது. அன்றிரவு சித்தி எழுந்து பாட்டியின் அருகில் போய்ப் படுத்துக்கொள்கிறாள். மறுநாள் காலை பாட்டி இறந்துபோயிருப்பது தெரிய வருகிறது. மலிவு விலையில் வாங்கிய ஒரு சவப்பெட்டி யில் வைத்து பாட்டியைக் கல்லறைத் தோட்டத்தில் புதைத்துவிட்டு, ஊரைவிட்டு விலகிப் போகிறார்கள். அதன்பிறகு, நெடு நாட்களுக்கு எஸ்தர் சித்திக்கு மட்டும் கூரை பார்த்தபடியிருந்த பாட்டியின் ஈரமான கண்கள் நினைவுக்கு வந்தபடி இருந்தன என்பதோடு கதை முடிகிறது.

எஸ்தர் சித்தி பாட்டியைக் கருணைக் கொலை செய்து விட்டாளா… இல்லையா என்று தெரியாதபடி கதை ஓர் இடைவெளியை விட்டுச் செல்கிறது. ஊரின் மீதுள்ள வேர் பிடிப்பும், மழையற்றுப் போன பஞ்ச காலமும் மனிதர்களை வாட்டி எடுக்கும் சோகமும் கதையெங்கும் நீக்கமற நிரம்பியிருக்கிறது. வண்ணநிலவன் அடங்கிய குரலில், கவித்துவமும் நுட்பமான சித்திரிப் போடும் இக்கதையை எழுதியிருக்கிறார்.
தினமும் ஆயிரம் பறவைகள் பறந்தபோதும், வானில் எந்தப் பறவையின் சுவடும் இருப்பதே இல்லை. மண் அப்படி இல்லை. அதில், நம் வாழ்வின் சுவடுகள் பதிந்து கிடக்கின்றன. மண்ணின் பாடல் முடிவற்ற ஒரு சங்கீதமாக எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கிறது. அதை நின்று கேட்டுப் போவதற்கோ, புரிந்து கொள்வதற்கோ நாம் தயாராகவும் இல்லை… விரும்பவும் இல்லை!

வண்ணநிலவன் என்று அழைக்கப்படும் உ.நா.ராமச்சந்திரன் தமிழ் இலக்கியத்தின் அரிய சாதனையாளர்களில் ஒருவர். திருநெல்வேலியைச் சேர்ந்தவர்.

1948&ல் பிறந்த வண்ண நிலவன், துக்ளக் பத்திரிகை யில் சில காலம் பணியாற்றி உள்ளார். இவரது Ôகடல்புரத்தில்Õ நாவல் இலக்கிய சிந்தனை பரிசு பெற்றுள்ளது. எஸ்தர், பாம்பும் பிடாரனும், தேடித் தேடி, உள்ளும் புறமும், தாமிரபரணிக் கதைகள் போன்றவை இவரது முக்கிய சிறுகதைத் தொகுதிகள்.

சிறந்த நாவலுக்காக தமிழக அரசின் பரிசை வென்றது இவரது ”கம்பா நதி” நாவல். இவரது ”ரெயினீஸ் ஐயர் தெரு” தமிழ் நாவல்களில் மிகவும் தனித்துவமானது. திரைப்படத் துறையில் கொண்ட ஈடுபாடு காரணமாக, ”அவள் அப்படித்தான்” படத்தின் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார் வண்ணநிலவன்.

அசோகமித்திரன் படைப்புலகுக்கு ஒரு வாசல் - ஜெயமோகன்


சுருண்டோடும் வாழ்க்கை நதியின் சித்திரத்தை அசோகமித்திரன் படைப்புகள் நமக்குத் தருவது இல்லை. அவை துளிகளில் ஆழ்ந்துவிடும் தன்மை உடையவை.அத்துளிகளில் நதியின் பிரம்மாண்டத்தை எப்போதும் அடக்கிக் காட்டுவதில் அசோகமித்திரன் வெற்றி பெறுகிறார். மேலோட்டமான பார்வையில் காலத்தில் உறைந்து நின்று விட்ட துளியையே நாம் காண்கிறோம். ஆனால் நுட்பமாக பார்க்கும்போது அத்துளியின் தொடர்ந்த மாறுதலை நாம் காண முடியும். தங்கு தடையற்ற மகத்தான பிரவாகம் இப்படி ஓர் துளியின் நிலை மாறுதலாக அசோகமித்திரனில் வெளிப்படுகிறது.

90akc7 அவருடைய அத்தனை சிறுகதைகளுக்குமே 'மாறுதல் ' என்று அர்த்தப்பூர்வமாக பெயர் சூட்டி விடலாம். அவர் தேர்ந்தெடுத்துக்கொண்ட கலைவடிவங்கள் அவருடைய மொழி உத்திகள் அனைத்துமே வாழ்க்கை பற்றிய அவருடைய இந்தக் கோணத்தை வெளிப்படுத்தும் தன்மைஉடையனவாக அமைந்துவிட்டிருக்கின்றன. நுண்மைக்குள் பொறிக்கப்பட்ட விரிவு என அவர் கதைகளை சுருக்கமாக குறிப்பிடலாம். அதற்குத் தேவையான தொழில்நுட்பத்தேர்ச்சி அவருக்கு நிறையவே உண்டு. தமிழில் அசோகமித்திரனின் சிறப்பிடம் இந்ததுளித்தன்மை மூலம் அவர் உண்டுபண்ணிய அழகியல் கூறுகளினாலேயே உருவாகியுள்ளது. அவ்ரால் விரிவின் முழுமையை சித்தரிக்க இயலாது. அவருடைய நாவல்களே இதற்குச் சான்று.

பெருமளவு சிவராம காரந்தின் யதார்த்தவாத உலகாதய நோக்குகள் கொண்டவராக இருப்பினும் கூட அசோகமித்திரனால் 'மண்ணும் மனிதனும் ' போன்ற ஒரு படைப்பை உண்டு பண்ண முடியாது போன்மைக்கு காரணம் இதுவே ஆகும். இலக்கியத்தில் எது ஒருவரது பலமோ அதுவே பலவீனமும் ஆகும் விந்தை அனேகமாக மாற்றமில்லாதது ஆகும். அசோகமித்திரனும் விதிவிலக்கல்ல.

'சாதாரணத் 'துவத்தின் கலை.

ஐம்பதுகளில் எழுத ஆரம்பித்த ஐ. தியாகராஜன் அசோகமித்திரன் என்ற இன்றைய முகம் பெற்றதற்கு முன்புள்ள சலனங்களை கற்பனை செய்து பார்ப்பது சுவையானதாக இருக்கும். தியாகராஜன். எப்பேற்பட்ட பெயர்!. எளிய, நடுத்தர வர்க்கமுகமொன்றை நினைவிற்கு கொண்டு வருகிறதும், எந்த பட்டியலிலும் சர்வ சாதாரணமாக கரைந்து போகிறதுமான ஒரு பெயர். அந்த வயதில் 'எழுத்து ' போன்ற இதழ்களில் 'மஞ்சள் கயிறு ' போன்ற கதைகளை எழுதியபோது அவருக்கு தன் பெயரின் சர்வ சாதாரணத்தன்மை மீது அதிருப்தி ஏற்பட்டிருக்கலாம். புஜகீர்த்தியும், கிரீரமும், சரிகைகளும் குஞ்சலங்களும் நினைவிற்கு வரக்கூடிய அசோகமித்திரன் என்ற பெயரை அவர் தனக்கென தேர்வு செய்வதற்கு அது காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் இன்று அப்பெயரேகூட தங்கு தடையற்ற எளிமையின் ஜ்வலிப்பையும் கூர்மையையும் நம் நினைவிற்கு கொண்டுவருமளவு அவருடைய ஆளுமை அதில் ஏறிவிட்டிருக்கிறது.

எந்த கும்பலிலும் அடையாளமின்றி தங்களை கரைத்துக்கொள்ளக்கூடியவர்கள் அவருடைய கதாபத்திரங்கள். 'வெறும் ' ஜனங்கள். யதார்த்தவாத இலக்கியத்தின் உதயத்துடன் உலகமெங்கும் இலக்கியப் படைப்புக்களில் வெறும் ஜனங்களின் முகங்கள் தென்பட ஆரம்பித்தன. ஆனால் அவற்றின் தன்மைகலில் அடிப்படையான மாறுதல்கள் உண்டு. தன் எளிமையை சரித்திரத்தின் முன் பிரகடனம் செய்வதற்காக கந்தலுடன் மேடையேறி வருபவன் தல்ஸ்தோயின் குடியானவன். ஏதோ தேவதையின் கரம் பட்டு எழுந்து மகத்தான மானுட தரிசனங்களின் விவாத அரங்காக மாறி ஜ்வலிக்கும் மனம் கொண்டவன் தஸ்தாயெவஸ்கியின் குற்றவாளி- எனவேதான் அது யதார்த்த வகைக்குள் அடங்காததாகவும் அவர்கள் சாமானியர்களாக இல்லாமலும் தோன்றுகிறார்கள் போலும்.

தீர்க்கதரிசிக்கு இணையான மனிதாபிமானத்துடனும், இரக்கத்துடனும் மேலிருந்து பார்க்கப்பட்டு சித்தரிக்கப்பட்டவன் சேகவ்வின் தொழிலாளி. புதுமைப்பித்தனின் கணக்குப்பிள்ளையின் சர்வசாதாரணத்தன்மை எபோதுமே இரண்டு முறை அடிக்கோடு போடப்பட்டு அசாதாரணமாக்கப்படுகிறது. ஜெயகாந்தனின் சாமானிய ஜனங்களுக்கு கருத்துப்பிரதிபலிப்புச் சுமை உண்டு. தமிழில் முதல்முறையாக சர்வசாதாரணமாக கறிகாய் கடைக்கு மஞ்சள்பையுடன் போகும் விதத்தில் சாமானிய முகங்கள் படைப்பில் வந்தது அசோகமித்திரனின் கதைகளில் தான். அவன் எதற்கும் குறியீடு அல்ல. அனுதாபத்துக்கு உரியவனோ, பிரியத்துக்கு உரியவனோ அல்ல.

எந்த இலட்சியத்துக்கும் வடிவம் அல்ல. ஆசிரியரில் அவனைப்பற்றி நெகிழ்வுகள் ஏதும் எங்கும் செயல்படுவது இல்லை. அவருடைய பழுத்த யதார்த்தவாதம் அவனை மிக நாசுக்காக கும்பலில் இருந்து சற்று முன்னகர்த்திக் காட்டுகிறது. தன் வரிசையெண்ணை சொல்லி வணங்கிவிட்டு அவன் மீண்டும் முகங்களின் கடலுக்குள் சென்று விடுகிறான். அவனுடைய ஒரு கணம் சரித்திரம் முழுக்க நிரம்பியிருப்பதும், சரித்திரத்தை படைத்து அழித்து சரித்திரமே ஆகி நிற்பதுமான, ஜனங்களின் முகமாக ஆகிறது. ஒரு துளி, அந்தத் துளியில்தான் அலைகளையும் கொந்தளிப்பையும் பிரவாகத்தையும் நாம் காண்கிறோம்.

தன் படைப்புகளில் எப்போதுமே அசோகமித்திரன் சம்பவங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார். சர்வ சாதாரணமான சம்பவங்கள்தாம் - அனேகமாக அபூர்வமாக உத்வேகம் மிகுந்த சம்பவங்கள் நிகழும்போது கூட தன் சித்தரிப்பின் கச்சிதமான தொழில்நுட்பம் மூலம் அதை சாதாரண சம்பவங்களின் தளத்தில் சரியாக பொருந்த வைத்து விடுகிறார். மொத்தத்தில் அவர் படைப்புலகமே சாதாரணத்தன்மையை தன்னுடைய தனித்தன்மையாக கொண்டுள்ளது. அவருடைய படைபூலகில் எதுவுமே விசேஷமானதல்ல. ஒரு படைப்பாளி என்ற முறையில் வெகுஜனம் என்ற முகமின்மையின் உள்ளேயிருந்து அதன் குரலாகவே பேசுகிறார். மொத்தமாக அசோகமித்திரனின் கலையையே 'சாதாரணத்தன்மையின் கலை வெளிப்பாடு ' என்று கூட நாம் வகைப்படுத்திவிட முடியும்.

நடை, பாணியின் ஊற்றுக்கண்கள்

அசோகமித்திரனின் படைப்புலகின் மிக முக்கியமான தனித்தன்மையாக விளங்குவது அவருடைய நடை. அனேகமாக தமிழின் முதல் 'சாதாரணமான ' நடை என்றுகூட அதை கூறிவிடலாம். அவரைப் படிக்க ஆரம்பிக்கும் பெரும்பாலான வாசகர்கள் இந்த எளிமையால் ஏமாற்றமடைவது வழக்கம். தமிழில் ஆரம்பத்தில் இந்த நடை கவனிக்கப்படவில்லை. பிற்பாடு அதை தவிர்க்க இயலாது என்ற நிலை உருவாகியபோது அது பற்றிய விவாதங்கள் நடைபெற்றிருக்கின்றன. அசோகமித்திரனில் என்ன இருக்கிறது என்று நிறையபேர் கேட்டிருக்கிறார்கள். தங்களை முக்கியமான வாசகர்கள் என்று கருதிக்கொள்பவர்கள் கூடக் கேட்டிருகிறார்கள். இன்றும் கூட கேட்கப்படுகிறது. அசோகமித்திரனின் மொழிநடையை வகப்படுத்டுவது ஒரு வகையில் அவருடைய எழுத்தையும் அவருடைய தரிசன நிலைபாடுகளையும் வகைப்படுத்திப் புரிந்துகொள்வதற்கு நிகர்தான்.

அசோகமித்திரனின் மொழிநடைக்கு இந்திய மரபிலும் சரி, தமிழ் மரபிலும் சரி, வேர்கள் இல்லை என்று பொதுவாக கூறலாம். பழங்குடித்தன்மை பெருமளவு உள்ள தமிழ் உரைவடிவத்தில் ஒருவிதமான வெளிப்பாடமைதி பொதுவாக உள்ளது. இதை நாம் வசதிக்காக 'சொலவடைகள் ' எனலாம். இவற்றை தவிர்த்து நமது உரை வடிவில் எதையும் தீர்க்கமாக கூறுவது இயலாது. நவீன உரைநடை - வாய் மொழியை பின்பற்றுவது- மேற்குறிப்பிட்ட சொலவடைகளின் அடிப்படை அமைப்பைப் பின்பற்றி நவீன சொலவடைகளை உருவாக்கிக்கொண்டே பேசமுடிகிறது. உதாரணமாக சுந்தர ராமசாமியின் மொழிநடை. மிக நவீனமாக கருதப்படும் இந்நடை உண்மையில் நாட்டார் உரைமரபின் - நாகர்கோவில் வட்டார வழக்கின் - கொச்சை தவிர்த்து நவீனமாக மாற்றப்பட்ட மறுவடிவமேயாகும் - 'ஒரு புளிய மரத்தின் கதை 'யின் மொழி நடையில் இதை தெளிவாகக் காணமுடியும். 'ஜே. ஜே. சில குறிப்புகளி 'ல் புழங்கும் மேலும் சிக்கலான மொழி நடை கூட இதன் அடுத்த பரிணாமமேயாகும்.

இந்திய மரபில் இரண்டாவது நடைவடிவம் எப்போதும் மாறிக் கொண்டிருக்கும் பண்டித நடை. இதை(Elite Style) நாம் கருத்து நடை அல்லது அறிவுலகின் மொழிநடை எனலாம். இது பெரும்பாலும் தர்க்கங்களினால் கோர்க்கப்பட்டு உருவாவது. படைப்புக்கு நிச்சயம் உதவாதது. உதாரணமாக இந்த கட்டுரையின் மொழிநடையிலேயே அதைக்காணலாம். நவீன உரைநடை வடிவங்களை எடுத்துப் பார்த்தால் கூட இதன் இரு முகங்களைக் காணமுடியும். பாரதி, புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி என்று முதலில் குறிப்பிட்ட ஒரு போக்கு சி. வை. தாமோதரம்பிள்ளை, மறைமலை அடிகளார் முதல் மு. வ வரையிலான இரண்டாம் போக்கு.

அசோகமித்திரன் மொழிநடையில் இவ்விரண்டின் பின்புலப்பாதிப்பும் இல்லை. அலாதியாக, துண்டாக அது தமிழ்ச் சூழலில் நிற்கிறது. எனவேதான் வினோதமாக பார்க்கப்படுகிறது, வியக்கப் படுகிறது. அத்துடன் பலசமயம் புறக்கணிக்கவும் படுகிறது. நம்மைஅறியாமலேயே அத்துடன் ஒரு விலகல் உருவாகிறது, குறிப்பாக கிராமப் பின்புலம் உடைய வாசகர்களுக்கு. இத்தனை எளிமையான மொழிநடை பலரால் படிக்கமுடியாததாக கூட கருதப்ப்டுகிறது. வெட்டி எடுத்து ஒப்பிடும்போது வித்தியாசம் பளீரென்று தெரிகிறது.

அசோகமித்திரனின் நடையின் வேர் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மேற்கத்திய உலகைப்பாதித்த எழுத்தாளர்களின் மொழிநடையில் தெளிவாக இனம் காணுமளவு தெரிகிறது. 'தாமஸ் மன் 'னின் மெல்லிய புன்னகையுடன் கூடிய, இயல்புத்தன்மை மாறாத நடையில் ாசோகமித்திரனிடம் நாம் காணும் பல அம்சங்களை காணமுடிகிறது. உத்தி மற்றும் சொற்றொடர் அமைப்புக்களில் நேரடியான பாதிப்பை அசோகமித்திரனில் செலுத்தியவர் என்று 'ஹெமிங்வே ' யைக் குறிப்பிடலாம். பொதுவாக அமெரிக்க எழுத்தின் பாதிப்புதான் அவரில் நிறைய உள்ளது என்று கூறலாம். அதே சமயம் ஹெமிங்வேயின் வாழ்க்கைக்கண்ணோட்டத்திற்கும் அசோகமித்திரனுக்கும் நிறைய இடைவெளி உண்டு. அதிலுள்ள வன்முறை, தாக்கும் வேகம் ஆகியவை இதில் இல்லை. அசோகமித்திரனின் சாமானியனில் முக்கியகுணமாக கோழைத்தனமும், செயலின்மையும் இருந்துகொண்டே இருக்கிறது. ஆயினும் சிறு வட்டத்திற்குள் நுட்பமும் கவனமும் என்ற தன்மை இருவருக்கும் பொதுவாக உள்ளது.

ஒருவகையில் அந்தரத்தில் நிற்பதாயினும் அசோகமித்திரனின் நடை அவருடைய கதையுலகிற்கு மிகச்சரியாகப் பொருந்திவிடுகிறது என்பது முக்கியமாக கவனிக்கப்படவேண்டும். நவீன அமெரிக்க எழுத்தில் வேர் உள்ள மொழிநடை இந்திய, தமிழ்நாட்டு சாமானிய வாழ்வின் சித்தரிப்புக்கு ஏன் இந்த அளவு பொருத்தமாக உள்ளது ? அசோகமித்திரன் காட்டும் உலகம் நம்முடைய கைத்தொடும் தூரத்தில் புழங்குவதாயினும் அவருடைய கோணம் எவ்வகையிலும் இந்ஹ்திய வேர்கள் உடையது அல்ல. இன்று கிட்டத்தட்ட இந்திய புனைகதையுலகில் பாதிப்பங்கை ஆட்சி செய்யும் இந்தக் கோணத்டிற்கும் ஐரோப்பிய ஜனநாயக மறுமலர்ச்சிகாலத்திற்கும் ஆழமான தொடர்பு உண்டு. முதன் முதலாக சாமானியனை மையம் கொண்ட கோணம் அங்கு உருவாகியது. இன்னும் கூறப்போனால் பிரஞ்சுப் புரட்சியும் அக்காலகட்டத்து உணர்வுகளுமே இதற்குப் பிறப்புக்காரணம் எனலாம். இந்தக் கோணத்தின் வளர்ச்சி ஜனநாயக முறைமைகளாகவும், சாமானியனை நோக்கிச் செயல்படும், நலம் நாடும் அரசுகளாகவும் (Welfare States) வளர்ந்து முற்றிய பிறகு உருவான இலக்கியப் போக்குகளிலிருந்து உத்வேகம் கொண்டவர் அசோகமித்திரன்.

மிக இயல்பாகவே அவரில் ரஷ்ய இலக்கிய மேதைகளின் அதிக பாதிப்பு இல்லாமலிருப்பதையும் நாம் காணலாம். உணர்ச்சியற்ற தனிமனிதப் பார்வை எனும் கோணம், சாமானியனிஒன் தனிப்பிரக்ஞையை மையமாக்கி எதையும் விவாதிக்கும் மனோபாவம் ஆகியவை மேற்குறிப்பிட்ட ரஷ்ய இலக்கியமேதைகளின் வாழ்க்கைப்பார்வைக்கு அன்னியமானவை. தஸ்தாயெவ்ஸ்கி, தல்ஸ்தோய் முதலியவர்களின் சமூகக் கூட்டுப்பார்வை மட்டுமல்ல, சேகவ்வின் எளிய பிரகாசம் மிகுந்த மனிதாபிமானம் கூட அசோகமித்திரனின் படைப்புக்களில் இல்லை. சாமானியர்களைப் பற்றி நாற்பது ஆண்டுகளாக எழுதிவரும் இந்த கலைஞனை நாம் மிகவும் தயங்கியே ஒரு 'மனிதாபிமானி ' என்று கூற முடிகிறது.

அசோகமித்திரனின் தார்மீக உணர்வு பெருமளவு மேற்கத்திய தன்மை உடையது. தனிமனித அறச்சார்பு என்ற அந்த மையம்தான், மேற்கத்திய லிபரல் ஜனநாயக முறைமைகளுக்கு அடித்தளம். அது, அசோகமித்திரனின் உலகின் தார்மீக அடிப்படையை தீர்மாணிக்கிறது. சுதந்திரத்துக்கு முந்திய இந்தியாவில் ஒரு வேளை பெரிதும் அன்னியமாக பட்டிருக்கக்கூடிய இம்மையம் இன்று மிகவும் முக்கியத்துவம் பெறக்கூடியதாக ஆகிவிட்டிருக்கிறது. மேற்கத்திய ஜனநாயக முறைமைகள் மற்றும் தனிமனித மனோபாவங்களை அடியொற்றி வெகு வேகமாக தன்னை மாற்றி அமைத்துக்கொண்டிருக்கும் இந்தியச் சூழலில் அதற்கு முக்கியத்துவம் ஏற்பட்டிருப்பது இயல்பானதாகும். அதே சமயம் பழங்குடித்தன்மை கொண்ட இந்திய மரபின் தொடர்ச்சிக்கு அசோகமித்திரனின் இத்தன்மை அன்னியமாக இருப்பதும் இயல்புதான்.

யதார்த்த - நிதர்சன வாதத்தின் வெற்றிகளும் எல்லைகளும்

அசோகமித்திரனை யதார்த்தவாதி என்று வகைப்படுத்துவது எளிதாகச் செய்யப்பட்டு வரும் செயல். உண்மையும் கூட. நடுத்தர வர்க்க லெளகீகவாதியின் விவேகத்தால் எப்போதும் கட்டுப்படுத்தப்படும் படைப்புலகம் அவருடையது. அவருடைய நோக்கை பழைய பாணியில் வரையறுக்கமுயல்வது என்றால் அவருடைய படைப்பு நோக்கின் அடிப்படை கருத்து முதல்வாதமா இல்லை பொருள்முதல்வாத்மா என்ற கேள்வியை கேட்கலாம். அசோகமித்திரனை கருத்துமுதல்வாதி என்று கொள்ள இயலாது என்பது வெளிப்படை. கருத்து முதல்வாதத்தின் இரு முக்கிய ஓட்டங்களுடனும் அவருக்கு இயைபு இல்லை. மாபெரும் பிரவாகத்தின் காரணத்தை புனிதமான ஒரு புள்ளியில் குவிக்கும் கடவுள்வாதம் அவரிடம் இல்லை. அவருடைய படைப்புலகில் எங்குமே கடவுள் தென்படுவது இல்லை. பிரவாகத்தின் சலனங்களை தொகுத்து, அதற்கு திசையை நிறுவி, அத்திசையின் முனையில் லட்சியப்புள்ளிகளை நிறுவும் ஹெகல் பாணி மேற்கத்திய கருத்துமுதல்வாதமும் அவரிடம் இல்லை.

அவருடைய படைப்புகளில் அசோகமித்திரன் வாழ்வின் பிரவாகத்தை வெறுமே பார்க்கிறார். சலனம் வழியாக அது எந்த விதமான நோக்கத்தையும் நிறைவேற்றுவதை நாம் அங்கு காணமுடிவதில்லை. அது ஒரு முதலிறுதி இருப்பின் இலக்குகளை நிறைவேற்றவில்லை. அதன் சலனங்களுக்கு ஒட்டுமொத்தமான தருக்கமும் தெரிவதில்லை. இந்த பார்த்தல் ஒரு அத்வைதிக்கு உரியதான விலகல் சார்ந்தது அல்ல. கா. நா. சுவின் 'பார்த்தலில் ' செயல்களை மீறிய பிரவாகம் இது என்ற பிரக்ஞைதரும் விச்ராந்தி உள்ளது. இந்த 'வெறும் பார்வை 'யே பொய்த்தேவுவில் சாத்தியமாகியுள்ளது. அசோகமித்திரன் மாயாவாதி அல்ல. நிதரிசன வாதி. அல்லலுறுபவர். கோபப்படுபவர். நெகிழ்பவர். அத்தனை மன எதிrவினைகளுடனும் வெறுமே பார்த்தபடி இருப்பவர். விமரிசனக்குரல் அவர் படைப்புகளில் உள்ளடங்கியதாக விரக்தி தோணிப்பதாக எதிர்மறையானதாகவே உள்ளது பெரும்பாலும்.

இந்தக் கோணத்திற்குக் காரணம் பிரவாக சலனத்தின் தருக்கம் முற்றிலும் பிடிபடாததாக இருக்கிறது என்பதேயாகும். முழுமையான யதார்த்தவாதி நடைமுறை வாழ்வு சார்ந்த தருக்கத்துடன் வாழ்வை அளக்க முயலும்போது ஏற்படும் பிரமிப்பு இது. இது அவரை எங்கும் இட்டுச்செல்ல இயலாது. அதே சமயம் முற்றிலும் பவுதிகவாதம் சார்ந்ஹ்த கோணத்தின் அதீத எல்லையான வெறுமையையும் அசோகமித்திரன் அடைவது இல்லை. தற்செயல்களின் தொடர்நிகழ்வான பிரவாகம் என வாழ்க்கையை பார்த்தார் என்றால் மாபெரும் அபத்தமாக ஒவ்வொன்றும் ஆகக்கூடிய - கடவுள் தரிசனத்திற்கு இணையான - அபத்த தரிசனம் அவருக்கு வாய்த்திருக்கும். அசோகமித்திரனின் லெளகீக வாதம் எப்போதுமே அதற்கு ஒரு படி முன்னதாகவே நின்று விடுகிறது. பலவிதங்களில் அவருடைய கதையுலகை கம்யூ, சார்த்ரின் உலகுகளோடு ஒப்பிடலாம். சார்த்தரின் - மதில் - (The Wall) கம்யூவின் 'விருந்தாளி ' - அசோகமித்திரனின் 'காத்திருத்தல் ' ஆகிய கதைகளை பரஸ்பரம் ஒப்பிட்டு பார்க்கலாம். நம்பி கோஷமிட்டு செயற்பட்ட ஒரு அரசியல் கோணத்தின் வீழ்ச்சியும் அதனால் உருவாகும் தனிமையும், துரத்தப்பட்டு தாக்கப்படும் நிலையும் ' காத்திருத்தலின் ' கதைப்பாத்திரத்தை திரும்பிப் பார்க்கவைக்கின்றன. தனது வெறியையும் நம்பிக்கை உத்வேகத்தையும் துணுக்குற வைக்கும் அளவுக்கு அர்த்தமற்றதாக அவன் பார்க்கிறான்.

சார்த்தரின் கதையில் மையகதாபாத்திரம் முற்றிலும் அவனை மீறிய தற்செயல் நிகழ்வுகளினால் துரோகியாக ஆக்கப்படுகிறது. கம்யூவின் கதையில் உருவாக்கிக் காட்டுகிறது. அசோகமித்திரனின் கதையில் அர்த்தமின்மை ஒரு எல்லை வரை வந்து நின்று விடுகிறது. மத்தியதரக் குடிமகனாகிய தனக்கு இந்த போராட்டங்களும் நம்பிக்கைகளும் உண்மைஒயில் எதற்க்காக என்று அம் மையக்கதாபாத்திரம் நினைக்கலாம். அடிப்பவன் - அடி பட்பவன் இருவருமே மத்திய வர்க்கத்தினர். காரணமோ அவர்களுக்கு எவ்வகையிலும் சம்பந்தமற்றது. முற்றிலும் அவர்களை மீறிய வேறு எவருடையவோ இச்சைகளுக்காக சம்பந்தமில்லாத நாடகம் ஒன்றில் நடிக்கும்படி ஆகியிருக்கிறார்கள் - இவ்வளவுதான். அசோகமித்திரனின் உலகில் கதாபாத்திரங்களின் இந்த மனநிலையானது மீண்டும் மீண்டும் தென்படுகிறது. 'பதினெட்டாவது அட்சக்கோட்டில் ' ரசாக்கர்களுக்கு எதிராக போராடும்படி தூண்டி மாணவர்ககளுக்கு கைவளையல் தந்து கிண்டல் செய்யும் மாணவிகளைப் பார்த்தபடி சந்திரசேகரன் நினைப்பது ஒர் உதாரணம்.

அசோகமித்திரனின் எக்கதாபாத்திரமும் அர்த்தமின்மையின் எல்லைக்குச் செல்வதில்லை. 'இன்னும் சில நாட்களி 'ன் சாம்பசிவமாக இருப்பினும் கூட, செயலின் அந்த தளத்தின் உள்ளீடற்ற தன்மை ஒரு ஓசையுடன் வெடித்துத் திறப்பது மட்டுமே அவர் கதைகலில் தெரிகிறது. அவை காட்டும் உருவம் நிதரிசனங்களில் மட்டுமே நம்பிக்கை உள்ள யதார்த்தவாதியினுடையது. இது ஒரு குறைபாடோ பிழையோ அல்ல, ஒரு தன்மை மட்டுமே ஆகும். இப்பார்வைக்கு எல்லைகள் நிறைய. பிரவாகத்தை அசோகமித்திரன் பார்ப்பதில்லை, துளிகளைத்தான் என்று கூறுவது இதனால்தான். அவருடைய கதைகளை எந்த பிரமாண்டத்திலும் கச்சிதமாக பொருத்தலாம். ஆனால் அவை பிரம்மாண்டத்தின் சிறு மாதிரிகள் அல்ல. அவை வாழ்வை தனித்த துண்டுகளாக எடுத்து அவற்றில், அவற்றின் அசைவில், வாழ்வின் முழுஓட்டத்தையும் பார்ப்பதுபோல. இதனால் தான் அவர் சிறுகதையில் வெற்றிகரமாக செயல்படமுடிகிறது.அவருடைய குறிப்பிடத்தக்க சில கதைகளை உலகத்தளத்துக்கு இணையானவையாக நிச்சயம் கூறமுடியும்.

துளிக்குள் சலனமாக பிரவாகத்தை பார்க்கும் முயற்சியினால் அசோகமித்திரன் தரும் வாழ்க்கைச்சித்திரம் 'ஓட்டம் ' அல்ல. 'சுழலும் ' அல்ல. அதற்கு திசையே இல்லை. அது மிக நெருங்கி அமர்ந்து, நதியின் நீரோட்டத்தை பார்க்கும் புழுஒன்றின் பார்வைபோல. அதிக பட்சம் பார்க்க முடிந்த ஒரு துளியில் அது காணும் நதி என்பது நீரின் அசைவு மட்டுமேயாகும். எனவேதான் அசோகமித்திரனின் கதைகளின் பொதுவான சித்திரம் 'மாறுதல் ' என்பது மட்டுமாக உள்ளது.

அவருடைய முக்கியமான அத்தனை கதைகளிலும் நுணுக்கமான - மிக நுணுக்கமான - ஒரு மாறுதலின் கணம் மட்டுமே பிடிக்கப்பட்டுள்ளது. எல்லையா கார் கற்றுக் கொளவது ஓர் உதாரணம். போலீஸ்காரர் கையை உயர்த்த எப்படியோ எல்லையாவிற்கு கிளட்சின் சூட்சுமம் தெரிந்துவிடுகிற ஒரு கணமே அக்கதை. அதற்கு முன் எல்லையா வாரங்கலில் மாடு மேய்ப்பவன். அதற்குப் பிறகு பெருநகரில் உழலும் ஒரு தொழிலாளி. இம்மாறுதலின் முன்னும் பின்னும் எவ்வளவோ உள்ளன. நமது சமகால இந்தியாவின் மாபெரும் சமூக மாற்றத்தையே நாம் இதன் பிண்னணியாக நிறுத்திக்கொண்டு இதை பார்க்க முடியும். இம்மாற்றத்தை ஒரு பெரிய நாவலின் கருவாகக்கூட மாற்ற முடியும். அசோகமித்திரனின் உலகில் அது ஒரு கணம்தான். அதுவும் இக்கணத்தை எப்போதுமே மிக மெளனமாகவும் கண்ணுக்குத் தெரியாததாகவுமே அமைக்கிறார் அசோகமித்திரன். 'விமோசனத்தி 'ல் அடிக்கக் கையோங்கிய கணவனின் கரம் அந்தரத்தில் நின்றிவிடும் கணம். சந்திரசேகரனின் முன் அகதிப்பெண் நிர்வாணம் காட்டும் கணம் - இப்படியே கூறியபடிச் செல்லலாம். இக்கணங்களில் அவரது மொழி தேய்ந்து மவுனத்திற்குப் போவதும், கண்ணுக்குத் தெரியாத் அவருடைய தொழில்நுட்பத்திறமை அதி சூட்சுமமாகச் செயல்படுவதும், மொழியும் உத்தியும் கூடி முயங்கி உச்சமெய்துவதுமே அவருடைய படைப்புலகின் முக்கியமான தருணங்கல். எம்மொழியிலும் அவை போன்ற தருணங்கள் அபூர்வமானவையாகவே மதிக்கப்பெறும் என்பதில் சந்தேகமில்லை.

மாறுதல்களை சித்தரிப்பதுடன் நின்று விடுகிறார் அசோகமித்திரன். அவற்றை குறியீட்டுத்தன்மை நோக்கி நகர்த்தி விடுவது இல்லை. முன்பு குறிப்பிட்டதுபோல அவர் எந்த சித்தாந்த தளத்தையும் ஏற்காத ஒரு யதார்த்த வாதியென்பதே இதற்குக் காரணம். பவுதீக வாதத்தின் எல்லையில் அபத்ததையோ, லட்சியவாதத்தையோ அவர் அடைவது இல்லை. அவரால் கருத்து முதல்வாத அம்சத்தை ஏற்க முடியாது போனமையால்தான் மார்க்ஸீயத்தை ஏற்க முடியவில்லை. மார்க்ஸீயத்தின் அடிப்படைகளில் ஒன்றான ஹெகலிய லட்சியவாதம் அவருக்கு எவ்வகையிலும் ஏற்புடையதல்ல என்றே அவர் படைப்புக்கள் காட்டுகின்றன.எவ்வகை சித்தாந்த அடிப்படையுமற்று காரணமற்ற நிகழ்வுகளை பதிவுசெய்யும் கோணமானது உலர்ந்த கரிய ஹாஸ்யம் எதிர்மறைத்தன்மையும் உடையதாக உள்ளது. அவருடைய கதைகளின் விரக்தி மற்றும் நிராகரிப்பின் எதிர்வினையாகவே அவர் படைப்புலகுக்கு உள்ளேயே பிரகாசமான ஒரு தளம் அபோதமாக உருவாக்கப்பட்டிருப்பதை நாம் காணலாம். உற்சாகம், கபடின்மை, சுதந்திரம் ஆகியவை நிரம்பிய அவரது பாலிய கால அனுபவங்களை கூறுவது போன்ற கதைகள் தாம் அவை. அவருடைய பொஅடைப்புலகின் இருளுக்கும் அழுத்தத்திற்கும் எதிரான சமன் தான் இது. எந்த பெரிய ப்டைப்பாளியிலும் இப்படி கறுப்பு - வெள்ளை என்று இருவிதமான பரஸ்பரம் சமன் செய்யும் இரு கூறுகளைக் காண முடியும். இரண்டுக்கும் மையம் ஒன்றுதான். ஒரு தளத்தில் நேரடியாகவும், மறுதளத்தில் தப்பித்து இளமைக்குத் திரும்பும் கனவாகவும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த எதிர்மறையான மனோபாவத்தை தற்போதைய இந்தியாவின் நகர்சார்ந்த சாமானியனின் பொதுவான கோணமாகவும் நாம் கருதிக்கொள்ளலாம்.

பொதுவாக அசோகமித்திரனை தமிழில் விரிவான பாதிப்புகளை ஏற்படுத்டிய எழுத்தாளர் என்று கூறலாம். இளம் கலைஞர்களின் நடையில் அசோகமித்திரனின் பாதிப்பு என்பது சகஜமாக காணப்படக்கூடிய ஒன்றாக உள்ளது. திலீப்குமார், விமலாதித்த மாமல்லன், கோபி கிருஷ்ணன் என அவருடைய பாதிப்புள்ள நடை உடைய படைப்பாளிகளின் நீண்ட பட்டியலையே போட முடியும். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் பெரு நகரப் பிண்னணியுடைய வாசகர்களும் சரி, எழுத்தாளர்களும் சரி, அசோகமித்திரனை எளிதாக ஏற்று அதன் நேரடியான பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்பதும்; பிற வாசகர், படைப்பாளிகளில் அவருடைய நடை மீதான மன எதிர்ப்பு ஆரம்பத்திலேயே உருவாகிவிடுகிறது என்பதும்தான். இவ்வெதிர்ப்பு பிற்பாடு பல விதங்களில் மாறுதல்கள் அடைந்து , அவர்களின் தனித்தன்மைகளின் சில அம்சங்களை தூண்டி, சில புது ஆளுமைகளை உண்டு பண்ணக் காரணமாக அமைகிறது. உதாரணமாக வண்ணதாசன். அவரது உலகம் அசோகமித்திரனுக்கும் பொதுவானதே. ஆனால் அவரது மொழியில் அசோகமித்திரனின் நேரடித்தன்மையும், இறுக்கமும், உள்ளார்ந்த அமைதியும் இல்லை. இத்தன்மையும் சரி, காட்சி மற்றும் கதாபாத்திரங்கள் மீது வண்ணதாசன் கொள்ளும் நெகிழ்ச்சியும் சரி, அசோகமித்திரன் மீதான எதிர்வினையாகும். வண்ணதாசனின் கதை கூறும் முறையில் உள்ள 'வக்கணை ', மிகவும் அசலான ஒரு கிராமத்துப் பார்வை சார்ந்தது. ஒரு விதமான சமையலறைத் திண்ணை சார்ந்த வக்கணை அது. காட்சிகளை அதீதமாக பிரகாசப்படுத்தும் போக்கு கூட இந்தப் பின் திண்ணையிலிருந்து வந்ததேயாகும். இதுவே வண்ணதாசன் கதைகளுக்கு இன்னொரு பரிமாணத்தை பெண்மை கனிவு போன்றவை அடங்கியதும், உத்வேகம் ஆழம் இவற்றை இவற்றை விடவும் அதி நுட்பங்களில் கவனம் செலுத்துவதுமான பரிணாமத்தை - உண்டு பண்ணி வண்ணதாசனின் தமிழிலக்கிய இடத்தை உறுதி செய்கிறது. இத்தகைய எதிர்வினையை வண்ணநிலவன், சுப்பிரபாரதி மணியன், அஸ்வகோஷ், பாவண்ணன் ஆகியோரிடம் பல நிலைகளில் காண முடிகிறது. கணிசமான அளவு பெருநகர் சார்ந்த படைப்பாளிகள் இத்தகைய எதிர்வினை அம்சம் இல்லாமல் அசோகமித்திரனின் குட்டி பிம்பங்களாகத் தெரியும் காட்சியை நாம் கணையாழி, விருட்சம் முதலிய சிற்றிதழ்களில் வரும் நிறைய கதைகளில் காண முடியும்.

இத்தகவல்களை முன்வைத்து ஆராயும் போது அசோகமித்திரனின் படைப்புலகின் வேறு சில தனித்தன்மைகள் தெரிய வருகின்றன. அது ப்ரும்பாலும் இந்திய பெரு நகர் மனோபாவம் சார்ந்தது. அசோகமித்திரனின் சாமானியன் திரளான ஒற்றை வடிவம் கொண்டவனும், கிராமங்களில் நிறைந்து வாழ்பவனுமாகிய அசல் இந்திய சாமானியனின் பிரதிநிதி அல்ல. அவன் நகரத்தில், உபரி மதிப்பின் பங்கு பெற்று அதிகார அமைப்பின் நேரடியான சுரண்டலுக்கும் பாதுகாப்பிற்கும் ஆட்பட்டு, வாழும் சாமானியன். அவனை இயக்கும் தார்மீக அடிப்படைகளுக்கு மேற்கத்திய ஜனநாயக முறைமைகளின் அடிப்படையான தனிநபர் தன்மை கொண்ட உலகப்பார்வையின் பாதிப்புபெருமளவில் உண்டு. பழங்குடித்தன்மை கொண்ட மரபுகளினால் கட்டுப்படுத்தப் படும் கிராமத்துத் தார்மீக அடிப்படைகளுக்கு இத்துடன் பெரிய வேறுபாடு உண்டு, இந்த சாமானியரில் ஒருவரால் தீட்டப்பட்ட சுய வர்க்கச் சித்திரமே அசோகமித்திரனின் படைப்புலகம்.அதன் தத்துவ அடிப்படைகளை நாம், இவ்வடிப்படைகளிலேயே விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவேண்டும். அசோகமித்திரனின் படைப்புகளின் பெரும்பாலான வாசல்களை திறக்க உதவக்கூடிய பாதையே இதுவேயாகும்.

**********

தனிமையின் உபாக்கியானம் - ஞானக்கூத்தன்

1974ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு புத்தகக் காட்சி நடைபெற்றது. பல்கலைக்கழகத்தில் ஏதோ நிகழ்ச்சி. கொண்டாட்டம். அதை ஒட்டித்தான் புத்தகங்கள் விற்கப்பட்டன. 1974ஆம் ஆண்டு வாக்கில் பல இளைய படைப்பாளிகள் நவீன இலக்கியத் தொடர்பாக அறியப்பட்டிருந்தனர். பல இளைய படைப்பாளிகள் கல்லூரிக் கல்வி பெறும் வாய்ப்புப் பெற்றுப் பயன் அடைந்தவர்கள்தாம் என்றாலும் nagulan-by-viswamithran-3 தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரை கல்லூரிப் பதவிகள் அவ்வளவாக அவர்களிடம் மதிப்புப் பெற்றதில்லை. பழைய தமிழ் இலக்கியக் கல்வியே இலக்கிய மதிப்பைத் தரவல்லது எனவும் நவீன இலக்கியம் தேவை அற்ற ஒன்று எனவும் ஒரு கருத்து கல்லூரிகளில் 70களில் நிலவிவந்தது. கவிதையில் குமரகுருபர ஸ்வாமிகள் செய்யாத புரட்சியில்லை என ஒரு பேராசிரியர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இவரேதான் பின்னாளில் பாரதியாரின் பாடல்களுக்கு முறையான தொகுப்பை வெளியிட்டவர். பல்கலைக்கழக-கல்லூரித் தமிழாசிரியர்களுக்கு வெறுப்பூட்டும் ஒரு முயற்சியாக நவீன இலக்கியம் தோற்றம் தர, தமிழ்த் துறையை முற்றிலும் புறக்கணிக்கத் தகுந்த ஒரு துறையாக இளைய படைப்பாளிகள் எண்ணிக்கொண்டிருந்த சூழலில்தான் 1974இல் சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் புத்தகக் காட்சியும் விற்பனையும் நடைபெற்றன. அங்கே விற்பனையில் ஈடுபட்டிருந்தவர்களில் நானும் ஒருவன். மற்ற நண்பர்களில் கசடதபற ஆசிரியர் ந. கிருஷ்ணமூர்த்தியும் க்ரியா ராமகிருஷ்ணனும் ஈடுபட்டிருந்தனர். குறிப்பாக ராமகிருஷ்ணன் ஒரு புத்தகத்தை எடுத்துக் காண்பித்துப் பார்வையாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தது என் நினைவில் உள்ளது. அன்று நகுலனை யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. 'யாருக்கும்' என்றால் பொதுவான வாசகர்களுக்குத் தெரியாது. மற்றும் மு.வ., அகிலன் முதலான எழுத்தாளர்களின் அபிமானிகளுக்குத் தெரியாது. இலக்கிய உலகில் சிலருக்குத் தெரியும். ஆனால் பிடிக்காது.

நகுலன் என்றால் புரியாத கதைகளையும் புரியாத கவிதைகளையும் எழுதுகிறவர் என்று சிலர் சொல்லிக்கொண்டிருந்தனர். மதுரையில் 1980களில் நடந்த ஒரு கூட்டத்தில் ஒருவர் இக்கருத்தை என்னிடம் கூறி, அப்படி எழுதினால்தான் இலக்கியமாகுமா என்று கேட்டார். இலக்கிய வட்டம் மற்றும் எழுத்து பத்திரிகைகளில் அவர் வித்தியாசமான கவிதைகளை வெளியிட்டிருக்கிறார். ஆனால், நகுலன் எந்த ஒரு பத்திரிகையிலும் வாசகர்களின் கவனத்தைப் பெற முடிந்ததில்லை. இலக்கிய வட்டத்தில் அவர் கவிதைகளை வெளியிட்டதாகத்தான் நினைவு. ஆனால் உறுதியாகக் கூற முடியவில்லை. தன் வாழ்நாளில் பெரிதும் கவனிக்கப்பட்ட ஒரு படைப்பாளியாக நகுலன் இருந்ததில்லை. அதை அவர் அறிவார். ஆனால், அதற்காகக் கவலைப்பட்டதே இல்லை. இந்த நிலைமையைச் சரி செய்ய அவர் சில வழிகளை மேற்கொண்டார். அவை வெறுமனே வாய்பேசாத சில நண்பர்களைக் கொடுத்ததுதான் மிச்சம்.

1970களின் தொடக்கம் மூத்த தலைமுறை எழுத்தாளர்களின் இலக்கிய வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தின் தொடக்கமாகவும் அமைந்திருந்தது. மூத்த தலைமுறையினரில் ந. பிச்சமூர்த்தியும் க.நா. சுப்ரமணியமும் சி.சு. செல்லப்பாவும் தங்கள் வாழ்க்கைக்கு ஒரு நிமிர்ச்சி உண்டென்று கண்டுபிடித்தனர். புதுக்கவிதையின் முன்னோடி தான்தான் என்று 1976இல் ந. பிச்சமூர்த்தியால் சொல்லிக்கொள்ள முடிந்தது. விமரிசனத்தையும் புதுக்கவிதையையும் ஸ்தாபித்த பெருமை தங்களுக்கு உண்டென்பதை க.நா. சுப்ரமணியமும் சி.சு. செல்லப்பாவும் அறிந்திருந்தனர். ஆனால், இதற்குரிய கௌரவத்தை அவர்கள் அடைந்தார்களா? 'ஆம்' என்றும் 'இல்லை' என்றும் இதற்குப் பதில் அமைகிறது. இலக்கிய வெளியை இவர்களே உருவாக்கினர். அதற்கு முன்பு அப்படி ஒரு வெளி கிடையாது. இவர்களைத் தங்களின் முன்னோடிகளாக இனம் காணத் தொடங்கிய ஒரு தலைமுறை இவர்களுக்கு அடுத்து வந்ததே இவர்கள் பெற்ற கௌரவமாகக் குறிப்பிடவேண்டும். ஆனால் வேறு இடத்தில் இவர்கள் அறியப்படாதவர்களாகவே இருந்தனர். ந. பிச்சமூர்த்தியை ந. பிச்சமுத்து என்றே சிலர் குறிப்பிட்டதை நான் அறிவேன். பாரதிதாசன் வாழ்ந்த வீட்டில் வைத்திருக்கும் போட்டோ ஒன்றில் ந. பிச்சமூர்த்தி பாரதிதாசனோடும் மற்ற சில கவிஞர்களோடும் இருக்கிறார். ஆனால், அவர் பெயர் ந. பிச்சமுத்து என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது.

1930களிலிருந்தே தொடர்ந்து இலக்கியப் படைப்பாளிகளாக அறியப்பட்டிருந்த பலரைத் தேசியம் அல்லாத அரசியல் இயக்கங்கள் மறைக்கும் மனப்பான்மையை மேற்கொண்டதற்கு இது ஒரு சின்ன எடுத்துக்காட்டு. மௌனி, புதுமைப்பித்தன், கு.ப.ரா., பிச்சமூத்தி இவர்கள் இலக்கியம் படைத்து முன்னோடிகளாகிவிட்ட பல ஆண்டுகளுக்குப் பிறகு பேனா பிடித்தவர்கள்தாம் முன்னோடிகளென்று சிலர் சொல்ல முற்பட்டனர். சிறுகதை, நாவல், கவிதை, விமரிசனக் கட்டுரை என்ற ஒவ்வொரு வடிவத்துக்கும் புதிய தந்தைமார்களைத் தேடும் முயற்சிகளும் சிலரால் மேற்கொள்ளப்பட்டன. திராவிட இயக்கத்தின் எதேச்சாதிகார மனப்போக்குகளுக்கு gnanakoothan3 மாறாகச் சுதந்திரமான இலக்கியப் போக்கு எதுவும் வளர்வதை இயக்க அனுதாபிகள் விரும்பியதில்லை. 'தமிழ் இலக்கியத்தின் பரந்துபட்ட ஜனநாயகப் போக்கு, தம் இலக்கிய மேலாண்மையை நிறுவ முயன்ற இலக்கிய சட்டாம்பிள்ளைகளுக்கு உவப்பானதாக இல்லை. சிறுபத்திரிகைகள் என்ற பண்பாட்டு வடிவத்தின் தோற்றம் இதன் வெளிப்பாடே. திராவிட இயக்க இலக்கிய முறைகள் எல்லாம் புறக்கணிக்கப்பட்டன. தமக்குச் சாதகமான வகையில் இலக்கியத் தன்மை, கலை நுட்பம், அழகியல் முதலானவை வரையறுக்கப் பட்டன. 'மணிக்கொடி' 'மௌனி' என்று மாயைகளும் புனைவுகளும் உருவாக்கப்பட்டன'* என்று ஒரு கட்டுரை ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். புதுக் கவிஞர்களில் இருநூறு சொற்களுக்கு மேல் பயன்படுத்திய கவிஞர்கள் உண்டா என்று அக்கட்டுரையாளரே ஒரு கேள்வியையும் எழுப்பி உதவியிருக்கிறார். புதுக்கவிஞர்களில் ந.பி., சி. மணி, க.நா.சு. போன்றவர்களின் புலமையை இக்கட்டுரையாளர் கண்டுகொள்ளவில்லை. இங்கே நகுலன் ஆங்கிலத்தில் மட்டுமல்ல, தமிழிலும் முதுகலைப் பட்டம் பெற்றவர் என்பதைக் கட்டுரையாளரின் கூற்று மறைத்துவிடுகிறது.

நகுலன் வெளியிடத் தொடங்கியபோது மணிக்கொடியின் காலம் முடிந்துவிட்டது. மணிக்கொடிக் காலம் எனவும் இன்னின்னார் மணிக்கொடியில் எழுதிய எழுத் தாளர்கள் எனவும் பேசப்பட்ட காலம் தொடங்கிவிட்டது. க.நா.சு. மணிக்கொடி எழுத்தாளர் அல்லர் என சி.சு. செல்லப்பா சொல்லத் தவறியதில்லை. ஆனால், க.நா.சு. மணிக்கொடியில் வெளியிட்டவர் தான். மணிக்கொடியை சிறுகதைப் பத்திரிகையாக நடத்திய பி.எஸ். ராமையாவே முதலில் க.நா.சுவை மணிக்கொடி எழுத்தாளர் இல்லை என்று சொன்னார். பின்னர் 'மணிக்கொடி காலம்' என்ற தொடர்கட்டுரை எழுதத் தொடங்கிய பிறகு க.நா.சு.வும் மணிக்கொடி எழுத்தாளர்தான் என்பதைக் கண்டுபிடித்தார். க.நா.சு.வை மணிக்கொடி எழுத்தாளர் இல்லை என்று சொல்லிவந்த சி.சு. செல்லப்பா, க.நா.சு. மணிக்கொடி எழுத்தாளர் என்ற முத்திரை குத்துவதற்குத் தகுதி யானவர் இல்லையென்று குறிப்பிடத் தொடங்கினார். ஆக, வெவ்வேறு விதமான அங்கீகாரத்துக்கு வெவ்வேறு விதமான அளவுகோல் வைத்து யாரையாவது கதவுக்கு வெளியே நிறுத்திவிடும் வழக்கம் எல்லாத் துறைகளிலும் இருந்துவந்தது. மணிக்கொடியின் பங்கை எடுத்துக்காட்டி அதில் வெளியிட்ட புதுமைப்பித்தன், மௌனி மற்றும் கு.ப.ரா. இவர்களை வாசகர் மனதில் நிலை நாட்டிய க.நா.சுவின் பணியே அதிகார மையங்களால் புறக்கணிக்கப்பட்டதென்றால் நகுலன் எம்மாத்திரம்? மணிக்கொடி எழுத்தாளர், எழுத்துவின் எழுத்தாளர் என்ற முத்திரை எல்லாம் நகுலனுக்குக் கிடையாது. நகுலன் தனியானவர். அந்தத் தனிமை அவருக்குப் பிறப்பிலிருந்தே வாய்த்த ஒரு குணாம்சம் போலும்.

நகுலனின் கவிதைகள் சில என்னைக் கவர்ந்திருந்தாலும் அவரது கவிதைகள் எல்லாமும் படிக்கக் கிடைக்கவில்லை. அவரிடம் அவரது கவிதைகளைக் குறித்துப் பேசியது கிடையாது. ஆனால் அவற்றைப் பற்றி என் கருத்து உயர்வானதுதான் என்று அவருக்குத் தெரியும். என்னைப் பார்க்க நகுலன் கசடதபnaguற ஆசிரியர் ந. கிருஷ்ணமூர்த்தியுடன் வந்திருந்தார். நான் ஜெரார்ட்மான்லி ஹாப்கின்ஸ் என்பவருடைய கவிதைகளைப் படித்துக்கொண்டிருந்தேன். நகுலன் நான் ஹாப்கின் ஸைப் படித்தது குறித்து மகிழ்ச்சி அடைந்தார். அவரது குரல் மிகவும் மெல்லியதாக இருந்தது. பேசியதைவிட அதிகமாகச் சிரித்தார். பல சந்தர்ப்பங்களில் அவர் சிரிப்புக்கு அவசியமே ஏற்பட்டிருக்காது. சிரிக்காமலும் பேசுவார். அப்படிப் பேசும்போது அவருடைய முகபாவம் படு சீரியஸாக இருக்கும். தனக்குப் பிடிக்காத கருத்தை மறுப்பதற்குத் தயங்குவார். தன்னைவிட மற்றவர்கள் புத்திசாலியாக இருக்கக்கூடும் என்றே நம்புவார். அதிக நேரம் பேச நேர்ந்தால் சுந்தர ராமசாமியைப் பற்றியும் கிருஷ்ணன் நம்பியைப் பற்றியும் இரண்டு முறையாவது குறிப்பிடுவார். சுந்தர ராமசாமியை மறுப்பதுபோல் பேச்சைத் தொடங்கி இறுதியில் சுந்தர ராமசாமி பெரிய படைப்பாளிக்குரிய லட்சணங்கள் உள்ளவர் என்று முடிப்பார்.

நகுலனுக்கு ஷண்முக சுப்பையாதான் பிடித்த கவிஞர். நகுலனைச் சந்திக்கும் முன்பே நான் ஷண்முக சுப்பையாவைச் சந்தித்தேன் என்று நினைக்கிறேன். நகுலனின் நட்பு, க.நா.சுவின் விமரிசன ஆதரவு இரண்டும் ஷண்முக சுப்பையாவைத் தன்னம்பிக்கை உடையவராக ஆக்கியிருந்தன. ஆனால் அவரது கவிதைகளில் எனக்குச் சிறிதளவும் ஈடுபாடு ஏற்படவில்லை. இதை நகுலன் அறிவார். அவருக்கு என்மீது வருத்தம். ஆனால், நகுலனும் க.நா.சுவும் குமாரன் ஆசான் பரிசுக்கு ஷண்முக சுப்பையாவைப் பரிந்துரை செய்ததுண்டு. சுப்பையாவுக்குக் கிடைத்ததோ இல்லையோ தெரியாது. பிற்பாடு சுந்தர ராமசாமியும் சி. மணியும் இந்தப் பரிசைப் பெற்றார்கள். நகுலன் இந்தப் பரிசைப் பெற்றிருந்தார். நகுலனை அவர் வீட்டில் சந்தித்தபோது ஆசான் விருதைக் குறித்துப் பெருமையாகப் பேசிக்கொண்டார். என்ன காரணமோ தெரியவில்லை, தனக்குக் கொடுக்கப்பட்ட ஆசான் பரிசுதான் அசலானது என்று சொல்லிச் சத்தமில்லாமல் சிரித்தார்.

நகுலனை எனக்குத் தெரிய வந்தபோது அவர் 50 வயதைக் கடந்திருந்தார். இலக்கிய உலகில் தன் நிலைமை என்ன என்று அவர் அக்கறை காட்டத்தொடங்கினார். என்று நம்புகிறேன். தனக்கு வாசகர்கள் உண்டா என்று ஆராயத் தொடங்கினார். நான், ஆத்மா நாம், ஆர். ராஜகோபாலன், எஸ். வைத்யநாதன், ஆனந்த், தேவதச்சன் பிறகு அழகியசிங்கர் போன்றோர் அவரிடம் அக்கறை உள்ளவர்கள் என்பதை அவர் தெரிந்துகொண்டது அவருக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்கும். ஆனால், என்னை நீக்கி மற்றவர்களை இணைத்து ஒரு வட்டத்தை அவர் கற்பித்துக்கொள்ளத் தொடங்கினார். சென்னைக்கு வந்தால் மற்ற யாருக்காவது விவரம் தெரிவிப்பார். தனக்குப் பிடித்த கவிஞர்களில், இவர்களில் ஒருவரைக் குறிப்பிடுவார். தன் கவிதையின் செல்வாக்கு மற்றவர் கவிதையில் இருப்பதாகக் காணும் படைப்பாளியின் வழக்கத்துக்கு மாறாக மற்றவர் கவிதைகளின் சாயல் தனது கவிதையில் இருப்பதாகக் கூறிக்கொண்டார். இப்படிக் கூறியதால் சம்பந்தப்பட்ட கவிஞர்களை மகிழ்விக்க முயன்றார் என்றே சொல்ல வேண்டும். ஆனால், நகுலன் கவிதையில் யாருடைய சாயலும் கிடையாது என்பதுதான் உண்மை. நகுலன் அப்படிக் கூறியது தனக்கு நெருக்கமான வாசகர்களை உருவாக்கிக்கொள்ளத்தான். இதை நான் தவறாகக் குறிப்பிட விரும்பவில்லை. நகுலன் வாய் திறந்து சொல்லாததை உரத்துச் சொன்னவர்கள் உண்டு.

நகுலனுக்குக் கவலை இருந்தது. அந்தக் கவலை தனது படைப்புகள் காலத்தை வெல்லுமா என்பது பற்றி அல்ல. அவை வாசகன் மனதில் எப்படிப்பட்ட சலனத்தை ஏற்படுத்துகின்றன என்பதை அறியத்தான் அவர் விரும்பினார். நன்றாகப் படித்து விமரிசித்துச் சொல்லப்படும் கருத்துகளைவிட எடுத்த எடுப்பிலேயே என்ன சொல்லப்படுகிறதோ அதைத்தான் அவர் விரும்பிக்கேட்டார். ஒரு கதை, கவிதை அனுப்பினால் அது கிடைக்கப் பெற்றதும் அவருக்குப் பதில் எழுதிவிட வேண்டும். அது பிடித்திருந்ததா இல்லையா என்பதை யும் தெரிவித்துவிட வேண்டும். ஒரு நாள் தாமதத்தைக் கூட அவரால் பொறுத்துக்கொள்ள முடியாது. அவரே சில சமயம் தன்முகவரியிட்ட அஞ்சல் அட்டையை அனுப்பிவிடுவார் அல்லது அவர் படைப்பு கிடைத்த மறுநாளே ஓர் அஞ்சல் அட்டை வந்துவிடும். அவருடைய கடிதத் தொடர்பின் கீழே அவர் மனதின் தீவிரமான ஜுரம் வெளிப்படும். ஆனால் நேரில் அது குறித்துப் பேச மாட்டார். அவருடைய புத்தகம் ஒன்றை 'ழ' சார்பில் வெளியிட்டோ ம். அதில் ஒரு பிரதிகூட விற்கவில்லை. அதுகுறித்து அவருக்கு வருத்தம். புத்தகம் விற்கவில்லை என்ற தகவலைச் சொல்லவில்லை என்பதற்காக வருத்தம். தனது சொந்தச் செலவிலேயே நகுலன் தனது புத்தகங்களை வெளியிட்டார். எனக்குத் தெரிந்து அவரது கோட்ஸ்டாண்ட் கவிதைகள் பல பிரதிகள்விற்றன. அதற்கு நான் முன்னுரை எழுதியது ஒரு காரணமல்ல. அவருக்குப் புத்தகங்கள் வெளியிடுவதில் ஊக்கம் குறையத் தொடங்கியது. 'இடைக்காலத்தில் என் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பலவித அனுபவங்களால் நான் மேலும் மேலும் தனிமையில் ஈடுபட வேண்டிய ஒரு நிலைமை ஏற்பட்டது' என்று நகுலன் எழுதியிருக்கிறார். சதா சர்வ காலமும் மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டு சாய்வு நாற்காலியில் படுத்திருக்கும் ஒரு மனிதனாக/சிந்தனையாளனாகத் தன்னை அவர் தன் மனதில் வடிக்கத் தொடங்கினார் என்று நம்புகிறேன். 'எனக்கு வேலையிலிருந்து ஓய்வு பெற இன்றும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்றன. ஓய்வுப் பெற்ற பிறகு என் சொந்தச் செலவில் புஸ்தகங்களைப் பிரசுரிக்க முடியுமா என்பது எனக்குச் சந்தேகமாகவே இருக்கிறது. அந்த நிலையில் இந்த இலக்கியச் சூதாட்டத்தில் என் கடைசிப் பைசாவையும் வைத்து விளையாட முற்பட்ட துணிவே இந்த 'ஐந்து', என ஐந்து கவிதைத் தொகுப்பில் நகுலன் எழுதியிருக்கிறார். உட்கார்ந்த இடத்திலேயே உடைமைகள் எல்லாவற்றையும் இழக்கச் செய்யும் சூதாட்டத்தோடு புத்தக வெளியீட்டை நகுலன் ஒப்பிட்டிருப்பது கவனிக்கத் தகுந்தது. தொடக்கத்தில் நான் குறிப்பிட்டதுபோல ஒரு படைப் பாளியைத் தள்ளிவிட, வாசகர் கவனத்துக்கு வராமல் செய்துவிட வெளியீட்டு அரசியல் பெரிதும் உதவுகிறது. 'அவருக்குத் தரமுடியாதே. கடந்த ஐந்து ஆண்டுகளில் அவரது புத்தகம் ஒன்றும் வரவில்லையே' என்று சொல்லிவிடலாம்! 'அவர் காணாமல் போய்விட்டார்' என்று சொல்லலாம். சொல்லியிருக்கிறார்கள். அரசியல் முதலாளித்துவம்போலவே பத்திரிகை முதலாளித்துவம் கொடுமையானது என்பதை உணர்ந்தவர்கள்தாம் சிறு பத்திரிகை என்ற சிந்தனையைக் கண்ணீர்விட்டு வளர்த்தவர்கள். நகுலன் சொன்ன சூதாட்டத்தில் தோற்றுப்போனவர்கள் ஏராளம். வென்றவர்கள் இல்லை. பத்திரிகை முதலாளித்துவத்தை எதிர்க்கும் முயற்சியில் ஈடுபட்டவர்களைக்கூடத் தூற்றியவர்கள் உண்டு. நகுலன் தான் தோற்றுக்கொண்டு வரும் ஓர் எழுத்தாளன் என்று 1970இல் நினைக்கத் தொடங்கினார் என்று நம்புகிறேன்.

நகுலன் தன் தோல்வி உணர்வுக்கு ஒருவகையில் தனது தனிமைதான் காரணம் என்று நம்பினார். அவர் உணர்ந்த தனிமைப் பல நிறங்களை உடையது. சில சமயம் அது முதன்மையினால் நிகழ்வது. சில சமயம் பிரதி ஏகத்தன்மையால் நிகழ்வது. இந்நிறங்களும் வேறு நிறங்களின் சாயையைப் பெறுவதுண்டு.

'இன்று என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான
கட்டத்தில் நான் இருக்கிறேன். பெரிய
அண்ணா ஒரு மாதிரி என்றால், உடன்
பிறந்தவன் அவனினும் வேறு என்றால்
அவனும் சில அடிப்படைகளில் அவனைப்
போலத்தான். இவர்களில் கடைசியானவன்
நான். இவ்வளவு பெரிய இராஜ்ஜியத்தில்
நான் தனிப்பட்டவனாக இருந்திருக்கிறேன்.'

'வீடணன் தனிமொழி' என்ற கவிதையில் விபீஷணன் சொல்வதாக நகுலன் எழுதியிருக்கிறார். இந்தப் பகுதியின் நடையைத் தற்காலத் தன்மை உடையதாக அமைத்திருக்கிறார். விபீஷணன் இராவணனைப் 'பெரிய அண்ணா' என்று குறிப்பிடும்போது இராவண-விபீஷணர்கள் ஒரு குடும்பத்தினர் என்பதை நமது மறதியிலிருந்து அது வெளிக் கொண்டுவருகிறது. 'ஒரு கும்பல் அடிப்படையில் ஒரு கொள்கை உருவாகிறது என்பதை என்னால் நினைத்தும் பார்க்க முடியவில்லை' என்ற விபீஷணனின் கூற்று காலத்தைக் கடந்து நீந்துகிறது.

நகுலன் தன்னைத் தோற்றுப்போன கலைஞனாக உருவகித்துக்கொண்டது கலைஞர்களில் அப்படியும் ஒரு வகை உண்டென்று அவர் கருதியதால்தான். வடக்கு அல்லது வடகிழக்கு இந்தியாவில் எங்கோ ஓர் அரங்கத்தில் அவர் படித்த கவிதை வரவேற்பைப் பெறவில்லை. இந்தச் செய்தியை அவர் என்னிடம் சொன்னபோது அதில் எந்த வருத்தமும் தொனிக்கவில்லை. 'நான் ஒரு ஃபெயில்ட் ஆர்ட்டிஸ்ட்' என்று அவரே ஒருமுறை சொல்லிக்கொண்டபோதும் அதைக் கேட்டுக்கொண்டிருந்த கூட்டத்திலிருந்து எந்த அனுதாபத்தையும் அவர் எதிர்பார்க்கவில்லை.

அவர் அப்படிச் சொன்ன கூட்டத்தில் நான் இருந்தேன். திருவனந்தபுரத்தில் நடந்த தென்னிந்திய கவிசம்மேளனத்தில்தான் அவர் அப்படிச் சொன்னார். நிகழ்ச்சிக்கு முதல் நாள் நகுலனை அவர் வீட்டில் சந்திக்கப் போயிருந்தேன். 1980களில் ஒருமுறை அவருடைய வீட்டுக்குப் போயிருக்கிறேன். ஓட்டலில் தங்காமல் அவரைத் தவிர வேறு யாரும் இல்லாத அவர் வீட்டு வராந்தாவில் தங்கினேன். இரவு நீண்ட நேரம் பேசிவிட்டுப் பின் தூங்கப் போனார். இந்த முறை நான் சந்திக்கப் போயிருந்தபோது அவர் பெரிதும் மாறிவிட்டிருந்தார். எழுத்தாளர்களைப் பற்றி வம்புதும்பு பேசும் இயல்பு நகுலனுக்கு உண்டு. அது அப்படியே இருந்தாலும் இடையிடையே நீண்ட நேரம் மௌனமாகிவிட்டார். என்னை அவர் உடனே தெரிந்துகொள்ள முடியாத அளவுக்கு நான்தான் மாறிவிட்டேனா அல்லது அவர் கண்டுகொள்ளாமல் இருக்க முயல்கிறாரா என்று தெரியவில்லை. அவருக்கு என்மீது மனஸ்தாபம் ஏற் படும்படி யாரோ ஏதோ சொல்லிவிட்டிருக்கிறார்கள் என்று எனக்குத் தோன்றியது. ஆனால், சிறிது நேரத்தில் சகஜமாகிவிட்டார். மறுநாள் நிகழ்ச்சிக்கு அவர் வந்தாக வேண்டும் என்று வலியுறுத்தினேன். அப்படி ஒரு நிகழ்ச்சி இருப்பதை அவர் நினைவில் கொள்ளவேயில்லை. மறுநாள் அவரே நிகழ்ச்சிக்கு வந்தார்.

அந்த அமர்வுக்கு நான்தான் தலைவர். நகுலனைச் சம்பிரதாயமாக அறிமுகம்செய்து அவரைப் பேச அழைத்தேன். நகுலன் என்னைப் பார்த்துக் கேட்டார் தமிழில்: 'இவள்ளாம் யார்? ஏன் வந்திருக்கா?' அரங்கில் இருந்தவர்களைப் பார்ந்து 'இவாள்ளாம் யார்' என்று அவர் கேட்டதும் அதிர்ந்துபோனேன். அரங்கு அமைதியாக இருந்தது - இந்த வயதில் இது இயல்பு என்பது போல. நான் அவருக்கு விளக்கிச் சொன்னேன். 'நான் தமிழில்தான் பேசுவேன். தலைவர் என்ற முறை யில் நீங்கள் அனுமதிக்க வேண்டும்' என்றார் நகுலன். நான் இசைந்தேன். அது தென்னிந்தியக் கவிஞர்களின் அரங்கு என்பதால் ஆங்கிலத்தில் நிகழ்ச்சி நடந்தது. நகுலன் தமிழிலேயே பேச விரும்புவதால் அவர் தமிழில் பேசி ஆங்கில மொழிபெயர்ப்புகளைப் படிப்பார் என்று நான் அறிவித்தேன். அவர் தமிழிலேயே பேசட்டும் என்று அரங்கில் பலர் சொன்னார்கள். ஒலிபெருக்கிக்கு முன் வந்து நின்ற நகுலன், 'ஐ ஆம் எ ஃபெயில்ட் ஆர்ட்டிஸ்ட்' என்று ஆங்கிலத்தில் சொன்னார். அரங்கம் அதை ஒரு தமாஷாக எடுத்துக்கொண்டதுபோல் சிரிப்பில் ஆழ்ந்தது. அரங்கில் இருந்த தென்னிந்தியப் படைப்பாளிகள் பலரும் தோற்றுப் போய்விட்டதாக நம்பப்படும் படைப்பாளிகளே சிறந்தவர்களாக இருப்பார்கள் என்ற கருத்துடையவர்களாகத் தெரிந்தனர். இப்படிப்பட்ட கருத்துடையவர்களை வேறு அரங்கிலும் நான் பார்த்திருக்கிறேன். திருவனந்தபுரத்து அரங்கம் நகுலனை மதித்தது. நகுலன் தன் கவிதைகளைப் படிக்கச் சில நிமிடங்களே எடுத்துக்கொண்டார்.

நிகழ்ச்சிக்குப் பிறகு நகுலனை நான் சந்திக்கவில்லை. அவருக்கு வயது முதிர்ந்துவந்ததும் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டதும் அங்கலாய்ப்பைத் தந்தன. அவரது கவிதைகள் பலவற்றை நான் சந்தர்ப்பம் வாய்த்தபோதெல்லாம் எடுத்துச் சொல்லியிருக்கிறேன். அவரது வாக்கு மூலம் சிறந்த நாவல் என்றும் சாகித்திய அகடமியைச் சார்ந்த சிலரிடம் அது இந்திய மொழிகளில் வெளிவர வேண்டும் எனவும் நான் சொன்னதுண்டு - அகடமிக்குக் காது கொஞ்சம் மந்தம் என்றாலும்.

'மழை: மரம்: காற்று' என்ற கவிதையில்
'சவத்தைத் தேய்க்கும்
சோப்பை எனக்குக் கொடுத்துவிட்டும்
போய்விட்டான்.'

என்று நகுலன் எழுதியிருக்கிறார். நகுலனைப் பற்றி ஒரு பெரிய பத்திரிகையில் ஓர் எழுத்தாளர் ரொம்பச் சோகம் தொனிக்க எழுதியிருந்தார். அதைப் படித்த ஒரு வாசகி - வெளிநாட்டில் வாழ்பவர் - நகுலன் இறந்துவிட்டதாக எண்ணிக்கொண்டு என்னிடம் விசாரித்தார். நகுலன் நன்றாகத்தான் இருக்கிறார் என்றேன். இது நடந்து மூன்றாண்டுகள் இருக்கும். நகுலனிடம் இதைச் சொல்லியிருந்தால் என்ன சொல்லியிருப்பார் தெரியுமா? 'இப்போதாவது நான் இறந்துபோய்விட்டதை நம்புகிறார்களே' என்றிருப்பார். அந்த மனப்பண்பு அவரிடம் இருந்தது.

நகுலன் ஓர் அத்வைதி - ந. பிச்சமூர்த்தி, க.நா. சுப்ரமணியம், மௌனி இவர்களைப் போல. ந.பி., க.நா.சு., மௌனி, ஆத்மாநாம், சம்பத், சுப்ரமண்ய ராஜு, காசியபன், கு. அழகிரிசாமி, எம்.எஸ். ராமசாமி, சுந்தர ராமசாமி இப்படிப் பலரை நான் இழந்துவிட்டேன். ஆனால், எவ்வளவு ஆழமான நினைவுகளை அவர்கள் என்னிடம் விட்டுச் சென்றிருக்கிறார்கள்! இவர்களைப் பார்த்தேன், பேசினேன் என்பதையே ஒரு வாசகன் என்ற முறையில் நம்ப முடியாத ஒரு பேறாகக் கருதுகிறேன். ஓர் உணர்வு அலைமோதுகிறது:

'அந்தப் பெரிய மீனைப் பிடிக்க
நடுக்கடலில் சாண்டியாகோ
கரையிலிருந்து தொலை தூரம் சென்ற
சாண்டியா கோவின் நினைவு எனக்கு வந்தது.'

'நகுலன்' - மழை: மரம்: காற்று

*******

பஷீர் : மொழியின் புன்னகை---ஜெயமோகன்

1

நூற்றாண்டு காணும் எந்த ஓர் எழுத்தாளனும் வேறு வழியில்லாமல் தொன்மமாக ஆகிவிட்டிருப்பான். பஷீரைப் பொறுத்தவரை அவர் வாழும்போதே அப்படி ஆகிவிட்டவர். அதற்கு அகக் காரணம் என்பது பஷீரின் ஆக்கங்களே. அவை முழுக்க baseer2 முழுக்க அவரது குரலில் ஒலிப்பவை. பஷீரின் எப்போதைக்கும் உரிய பேசுபொருள் அவரேதான். 'வினீதனாய சரித்ரகாரன்' (பணிவுள்ள வரலாற்றாசிரியன்) எல்லாக் கதைகளிலும் தன் இளம் புன்னகையுடன் வந்து நின்று பேச ஆரம்பிக்கிறான். "அன்று காலைச் சூரியன் கிழக்கு வானத்தில் வந்து நின்று கீழே ஸ்தலத்தை நோக்கினான். வேறு விசேஷம் ஒன்றுமில்லை. எல்லாம் வழக்கம்போல" (ஸ்தலத்தே பிரதான திவ்யன்) என்று கதையைச் சொல்ல ஆரம்பிப்பவனே அவன்தான். பஷீர் எழுத்தாளரே அல்ல, கதை சொல்லி. பஷீரின் குரலில் அல்லாமல் அவரது கதைகளை நாம் நினைவுகூரவே முடிவதில்லை. வாசகன் பஷீரைத் தொடர்ந்து பார்த்தபடியே இருக்கிறான். பஷீர் திருடனாக, நாடோடியாக, சமையற்காரராக, கைஜோசியக்காரராக மாறுவேடமிட்டு அவன் முன்வந்துகொண்டே இருக்கிறார். மெல்ல மெல்ல அவன் நெஞ்சில் ஒரு படிமமாக ஆகி நாள்கள் செல்லச் செல்லத் தொன்ம வடிவம் ஆகிறார்.

பஷீரின் இந்தத் தொன்மத் தன்மையைக் கண்டுபிடித்த வணிகர் என டொமினிக் சாக்கோ கிழக்கேமுறியைச் சொல்ல வேண்டும். கேரள இலக்கியச் சூழலில் எழுபதுகளில் பஷீர் கிட்டத்தட்ட மறைந்தே போயிருந்த ஒரு காலகட்டம் இருந்தது எனச் சொன்னால் இன்று மலையாளிகளே நம்ப மாட்டார்கள். எழுபதுகளில் கேரளத்தில் இடதுசாரித் தீவிரவாதம் இலக்கியத்தை மூழ்கடித்தது. அதன் வீழ்ச்சி உடனடியாக இருத்தலிய அலையை உருவாக்கியது. இந்த மனநிலைகள் பஷீரைப் பொருட்படுத்துவன அல்ல. இவை அரசியலை மையமாக்கியவை. பஷீர் ஓர் 'அரசியலற்ற' பிராந்தியத்தில் நின்று எழுதிக்கொண்டிருந்தார். தன் அலைச்சலையும் குடும்பச் சூழல்களையும் வைத்து எளிய நகைச்சுவைக் கதைகளை எழுதும் ஒரு பழைய எழுத்தாளராக பஷீர் நோக்கப்பட்டார். தகழி ஓரளவுக்கு இக்காலகட்டத்திலும் கவனிக்கப்பட்டமைக்கு அவரது இடதுசாரித்தனம் காரணம். பி. கேசவதேவ் மேடை மேடையாகப் போய் கர்ஜனை செய்து தன்மீது மேலோட்டமான கவனத்தை ஈர்த்தார். உறூப் (பி.சி. குட்டிகிருஷ்ணன்), காரூர் நீலகண்டபிள்ளை ஆகியோர் மறக்கப்பட்டனர். பஷீர் பொருட்படுத்தப்படவில்லை.

இக்காலகட்டத்தில்தான் சாகித்ய பிரவர்த்தக சஹஹரண சங்கம் (இலக்கியவாதிகள் கூட்டுறவுச் சங்கம்) என்ற மாபெரும் பிரசுர நிறுவனம் அதன் தூண்களில் ஒருவராக இருந்த டி.சி. கிழக்கேமுறியை வெளியேற்றியது. அவர் டி.சி. புக்ஸ் என்ற இந்திய மொழிகளில் இன்று மிகப்பெரிய பிரசுர நிறுவனமாக விளங்கும் அமைப்பைத் தொடங்கினார். பஷீரின் நூல்களை வெளியிட ஆரம்பித்தார். பஷீரின் நூல்களை ஒரு ரூபாய் விலையில் சிறுசிறு பிரசுரங்களாக வெளியிட்டார் டி.சி. இவற்றைக் கேரளம் முழுக்க வழக்கத்துக்கு மாறான கடைகளில் வைத்து விற்றார். இந்நூல்களில் பஷீர் குறித்த அறிமுகக் குறிப்பு விரிவாகவே இருக்கும். இன்றுவரை கிட்டத்தட்ட அதே வரிகள் அவரது நூலறிமுகங்களில் தொடர்கின்றன. பஷீரின் நாடோடி + புரட்சிக்காரன் + சூஃபி படிமத்தை இவை கட்டமைத்தன. அவர் செய்த பதினாறுக்கும் மேற்பட்ட தொழில்கள் அவற்றில் பட்டியலிடப்பட்டிருக்கும். அன்றைய இருத்தலியல் அலை, இலக்கியம் வாசித்துப் பழகிய மேநிலைக் குழுவுக்கு உரியதாகவே இருந்தது. மசக்கியbaseer-maruthu2 கப்பையைச் சாளைமீன் சேர்த்து, குழைத்து உண்ணும் சாதாரண மக்களுக்கு ஏது இருத்தலியம்? டி.சி. கிழக்கேமுறி வழியாக பஷீர் அம்மக்களை நேரடியாகச் சென்று சேர்ந்தார். அவர்களைச் சிரிக்க வைத்தார். அவரது அழியாத இலக்கிய இடம் இவ்வாறாக உருவானதேயாகும்.

பஷீரைப் புரிந்துகொள்ள அக்கால நவீனத்துவத் திறனாய்வாளர்களால் இயலவில்லை என்பதை இப்போது வாசிக்கும்போது தெரிந்துகொள்ள முடிகிறது. கேரள வாசகர்களில் மிகப்பெரும்பான்மையினர் நுண்ணிய இலக்கிய ஆக்கங்களை உள்வாங்கும் திறனற்றவர்கள் என்பதே என் அவதானிப்பாகும். பல்வேறு அரசியலியக்கங்களால் இலக்கியக் களத்தில் கொண்டுவந்து கொட்டப்படும் பெரும் தொகையினர் இவர்கள். அதிகமாகப் பேசப்படுவதை வாசிப்பார்கள், மேலே தட்டுப்படும் கருத்துகளை எடுத்துக்கொள்வார்கள். ஆகவே, கேரள இலக்கிய விவாதங்களில் இலக்கியத்தின் மேல்தளத்து அரசியலே எப்போதும் இலக்கியம் என்ற தோரணையில் பேசப்படுகிறது. சீரிய இலக்கிய வாசகர்கள் தமிழகத்தின் அளவே இருப்பார்கள். அவர்களை இந்த லட்சக்கணக்கான பேர் கொண்ட திரை முற்றிலும் மறைத்துவிடுகிறது.

ஆகவே, இயல்பாகப் பொதுவாசகர்கள் பஷீரைப் புரிந்துகொண்டார்கள், கொள்கிறார்கள் என நான் எண்ணவில்லை. பஷீரை அவர்கள் புரிந்துகொண்டிருந்தார்கள் என்றால் பஷீருக்குச் சமானமான உலகத்தில் இயங்கிய காரூர் நீலகண்டபிள்ளை, பட்டத்துவிளை கருணாகரன், விகேஎன் போன்றவர்கள் மேல் அதேயளவுக்கு ஆழ்ந்த கவனம் இருந்திருக்கும், அப்படி இல்லை. பஷீர் கேரளம் முழுக்க எளிய வாசகர் நடுவே ஆழமான நேரடிப் பாதிப்பைச் செலுத்த ஆரம்பித்த பின்னரே இந்தப் பெரும்பான்மையினரான அரசியல் வாசகர்கள் அவரை அணுகினர். அவரது 'சூஃபி' படிமத்தைத் தாங்களும் ஏற்றுக்கொண்டு பேச ஆரம்பித்தனர். பஷீர் கேரளத்தின் நவீன இலக்கியத் தொன்மமாக மாறியது இவ்வாறுதான்.

எண்பதுகளின் தொடக்கத்தில் இந்தத் தொன்மமயமாதல் அதன் முழுவீச்சில் நடந்த காலகட்டத்தில் தான் நான் கேரளத்தில் இருந்தேன். தொடர்ச்சியான பத்திரிகைக் கட்டுரைகள் மூலமே இது நிகழ்ந்தது. பஷீரின் போப்பூரில் உள்ள வீடு, மங்கோஸ்டைன் மரம், சாய்வு நாற்காலி, கட்டன் சாயா, பீடி, மூக்குக் கண்ணாடி என வர்ணனைசெய்யும் கட்டுரைகள் மாதத்துக்கு மூன்று வீதம் வெளியிடப்பட்டன. இக்காலகட்டத்தில் பஷீர் அவரது முதுமையை எய்திக் கால, இட போதத்தை இழந்து கோர்வையில்லாமல் பேசுபவராக ஆனார். அதை ஞானமொழிகளாக ஆக்கும் கற்பனை வளம் இதழியலாளர்களுக்கு இருந்தது. இத்தகைய கட்டுரைகளைப் பற்றி அப்போதே பலரும் கிண்டல்செய்து எழுதியிருக்கிறார்கள். கட்டுரையாளர் கோழிக்கோட்டில் இருந்து கிளம்பும்போதே தொடங்கிவிடும் கட்டுரைகள் விரிவான வர்ணனைக்குப் பின் பஷீர் சொல்லும் உதிரி வரிகளுக்குத் தத்துவ அர்த்தம் அளித்துக் கற்பனாவாதச் சொற்களில் முடியும். 'போப்பூர் சுல்தான்' 'மலையாளத்தின்றெ சூஃபி' போன்ற சொல்லாட்சிகள் உருவாகிச் சலித்து ஒருகட்டத்தில் எம். கங்காதரன் போன்ற திறனாய்வாளர்கள் இச்சொற்களை மலையாளத்தில் தடைசெய்ய வேண்டும் என்று சொல்லும் அளவுக்குச் சென்றது.

இதேயளவுக்கு ஓவியர் நம்பூதிரி வரைந்த பஷீரைப் பற்றிய கோட்டோவியங்களும் பங்களிப்பாற்றின. அவை பஷீர் ஒருவரல்ல, ஏராளமான ஆளுமைகளின் தொகை என்ற சித்திரத்தை உருவாக்கி இன்றுவரை நிலைநிறுத்தியிருக்கின்றன. எம்.ஏ. ரஹ்மான் தயாரித்த பஷீர் த மான் ஆவணப்படத்துக்காக வரையப்பட்டவை இவை.

jemo பஷீர் மலையாள இலக்கியத்தின் வாழும் தொன்மமாக ஆன பின்னர் அதிலிருந்து அவரது கதைகளுக்குள் சென்று அர்த்தம்கொள்ளும் போக்கு வாசகர்கள் நடுவே உருவாயிற்று. பஷீரின் கதாபாத்திரங்களைத் தேடி நிருபர்கள் காமிராக்களுடன் சென்றார்கள். பாத்துமாவிடமே அவரது ஆட்டைப் பற்றிக் கேட்டுக் கட்டுரைகள் எழுதினார்கள். மெல்ல மெல்ல நாம் இன்று காணும் 'மூலவிக்ரஹ'த் தன்மை பஷீருக்கு உருவாயிற்று. இப்போது நூற்றாண்டுக் கொண்டாட்டங்களில் அது உச்சமடைந்திருக்கிறது. பஷீரைக் கொண்டாட அவரைப் படிக்கவே வேண்டியதில்லை என்கிற அளவுக்கு.

இது பஷீரை அணுகுவதற்கு மிகப் பெரிய தடைகளை உருவாக்கும் அம்சம் என்று சொல்ல வேண்டியதில்லை. சென்ற காலங்களில் பஷீர் பற்றி உற்சாகமாகப் பேசிய பல மலையாள வாசகர்களிடம் விவாதித்திருக்கிறேன். பஷீரின் ஒரு சொல்லாட்சியைக்கூட அவர்களால் நினைவுகூர்ந்து சொல்ல முடியவில்லை. அவர்கள் அத்தனை பேருமே அவர் சூஃபி என்றும் சிரிக்கும் கலகக்காரர் என்றும் சொன்னார்கள். அந்த முடிவுக்கு எப்படி வந்துசேர்ந்தீர்கள் என்று கேட்டபோது பஷீரின் கதைகளுக்கு உருவக வாசிப்புக் கொடுத்து, கோட்பாட்டு விளக்கம் அளிக்கத் தொடங்கினார்கள். அதைவிடப் பஷீர் நூல்கள் மேல் சாணியடிக்கலாம். அவர்கள் எவருமே பஷீரை அறிந்தவர்களல்ல என்றே எண்ணுகிறேன்.

இன்றைய மலையாளப் பொதுவாசகன் படைப்பில் அரசியல் நம்பிக்கைகள் மற்றும் கோட்பாடுகளை மட்டுமே எடுக்கத் தெரிந்தவன். அவனால் பஷீரை அணுகவே முடியாது. அவன் பஷீர் பற்றி வைக்கும் விளக்கங்களையே வாசிக்கிறான். அதனால்தான் பஷீர் பற்றிக் கடந்த இருபதாண்டுகளில் ஒரு புதிய வாசிப்புகூட மலையாளத்தில் நிகழவில்லை. ஒரே விதிவிலக்கு, கல்பற்றா நாராயணன் எழுதிய "ஏதிலையும் மதுரிக்குந்ந காடுகளில்..." என்னும் கட்டுரை. அது பஷீரை ஒரு நடையியலாளராக (ஷிtஹ்றீவீst) மட்டுமே அணுகி அவரது சொல் விளையாட்டுகளை நோக்கி நம்மைக் கொண்டுசெல்கிறது.

2

பஷீரின் கதைகள் வலுவான மையக்கரு கொண்டவை அல்ல. திட்ட வட்டமான கதைக்கட்டு மானம் உடையனவல்ல. ஆழமுள்ள கதைமாந்தரும் அவர்கள் சுமக்கும் மதிப்பீடுகளும் அம்மதிப்பீடுகள் மோதும் நாடகீயத் தருணங்களும் அவற்றில் இல்லை. புனைவுத் தருணங்கள் கவித்துவத் தரிசனத்தின் ஒளியுடனோ தத்துவ தரிசனத்தின் உக்கிரம் கொண்டோ வெளிப்படுவதில்லை. நாம் எந்த அம்சங்களினால் தல்ஸ்தோயை, தஸ்தயேவ்ஸ்கியை, மாப்பஸானை, தாமஸ் மன்னை இலக்கிய மேதை என்கிறோமோ அந்தக் கூறுகளைப் பஷீரில் காண முடியாது. பஷீரில் என்ன இருக்கிறது, வெறும் சுயபுராணமும் அசட்டு நகைச்சுவையும் எட்டாம் கிளாஸ்தரத்து மலையாளமுந்தானே என ஒரு விமரிசனக் குரல் எழுந்தது மலையாளத்தில் (உப்பூப்பான்றே குழியானகள் என்ற நூல். கெ. ரகுநாதன்). வழக்கமான ஒரு வாசகன் பஷீரைப் பார்த்தால் என்ன கிடைக்குமோ அதுதான் அந்நூலாசிரியருக்கும் கிடைத்தது. அவருக்குப் பொருட் படுத்தும்படியான ஒரு பதில் அங்கே சொல்லப்படவில்லை.

பஷீரின் ஆக்கங்கள் அவற்றின் மொழிநடையால் மட்டுமே பேரிலக்கியங்களாகின்றன. தன் நாற்பது வயதுவரை 'அனல் கக்கும்' இலக்கியங்களையே எழுதி வந்ததாகவும் ஒரு கட்டத்தில் அவற்றையெல்லாம் துணிந்து கொளுத்திவிட்டு இன்றைய நடைக்கு வந்ததாகவும் பஷீர் எழுதியிருக்கிறார். பஷீரின் தலைக்கு பிரிட்டிஷ் அரசு விலைவைத்த, திருவிதாங்கூர் அரசு அவரைச் சிறையில் அடைத்த எழுத்துக்கள் எதுவுமே இன்று கிடைப்பதில்லை. பஷீர், பஷீராக ஆன பிறகுள்ள எழுத்துக்களே இன்று கிடைக்கின்றன.

பஷீரின் முந்தைய காலகட்டத்தின் எச்சம் என்று சப்தங்ஙள் குறுநாவலைச் சொல்லலாம். அது ஒருவகையில் எதிர்ப்பு ஓங்கிய ஆக்கம். அனல் இருக்கிறது. இன்றைய வாசிப்பில் அது பலவீனமான ஒரு பஷீர் படைப்பாகவே தெரிகிறது. அதில் உள்ள அமைப்புக்கு எதிரான அராஜக நோக்கு மட்டுமே இன்றைய பஷீரில் ஒட்டும்.

பஷீரின் ஆக்கங்களில் இன்று நமக்குக் கிடைக்கும் குறிப்பிடத்தக்க ஆரம்பகாலப் புனைகதை என்பது பால்யகால சகி தான். இது மிக எளிமையான ஒரு காதல் கதை. எளிய நேரடியான மொழியில் சொல்லப்பட்டிருக்கிறது. பஷீர் இரண்டு விஷயங்களை முற்றாகத் தவிர்த்திருக்கிறார். ஒன்று சூழல் விவரணை. அக்கால எழுத்துக்களில் இது மிக அதிகம். மஜீதின் வீடும் குடும்பமும் சரி சுஹராவின் குடும்பமும் சரி எளிய வேகமான கோட்டுச்சித்திரங்கள் போலத்தான் நமக்கு அறிமுகமாகின்றன. அதேபோல மன உணர்வுகளை விரிவாகச் சொல்வதையும் பஷீர் தவிர்த்துவிடுகிறார். பிற்பாடு பஷீரில் உருவாகிவந்த நுண்ணிய மொழி நிகழ்வுகள் எதுவுமே இந்நாவலில் இல்லை. ஆகவே, இந்நாவல் இன்றைய வாசிப்புக்கு ஒரு கதைச்சுருக்கம் போலவே உள்ளது.

ஆயினும் இதை இன்றும் முக்கியமான ஆக்கமாக நிலைநாட்டும் அம்சம் இதில் மிக இயல்பாக உருவாகி வந்திருக்கும் படிமத்தன்மை. இந்த எளிய காதல் கதையை நெஞ்சுருக்கும் கவிதையாக ஆக்குவது இந்த அம்சமே. வாழ்க்கையைத் தேடி வீடு விட்டிறங்கித் தோற்றுத் திரும்பிவந்து மஜீத் நட்டுவளர்க்கும் ரோஜாத் தோட்டம் ஓர் உதாரணம். சுஹரா ஏதோ சொல்லவந்து சொல்லாமலேயே இறக்கிறாள். 'அவள் சொல்லவந்தது என்ன?' என்ற வினாவுடன் நாவல் முடியும்போது அந்தக் கடைசிச் சொல் ஒரு பெரும் படிமமாக ஆகிவிடுகிறது.

பஷீரின் நடை இதில் உருவாகவில்லை என்று சொன்னேன், ஆனால், உருவாக ஆரம்பித்துவிட்டிருந்தது என அதில் மஜீத் - சுஹரா உரையாடல்கள் காட்டுகின்றன. மெல்லிய புன்னகையுடன் மட்டுமே மீண்டும் மீண்டும் வாசிக்கத்தக்க உரையாடல். உலகமே தெரியாத முஸ்லிம் பெண்ணின் குழந்தைத்தனமான மனம். அந்தக் கள்ளமின்மையில் தன் இளமையைக் கண்டுகொள்ளும் இளைஞன். அவர்களின் உள்ளங்கள் மாறிமாறிப் புன்னகைகளைப் பரிமாறிக்கொள்வது அந்த உரையாடல்களில் தெரிகிறது. அதுதான் பஷீர். அங்கிருந்து முளைத்துத்தான் அவர் கிளை விரித்தார்.

பிற்கால பஷீரின் கதைகளில் எப்போதுமே அந்தப் புன்னகை இருந்துகொண்டிருக்கிறது. மஜீத், சுஹரா போன்ற கதாபாத்திரங்களை நாம் பிற்பாடு பஷீரின் ஆக்கங்களில் காண முடிவதில்லை. நாம் காண்பது நகைச்சித்திரங்களையே (சிணீக்ஷீவீநீணீtuக்ஷீமீ). மண்டன் முத்தபா, பொன்குரிசு தோமா, ஒற்றைக்கண் போக்கர், ஆனவாரி ராமன்நாயர், சாத்தங்கேரி மனைக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாடு, சைனபா, எட்டுகாலி மம்மூஞ்ஞு போன்று எல்லாக் கதாபாத்திரங்களும் பஷீரின் புன்னகையால் கோணலாக்கப்பட்டுள்ளார்கள். மஜீத் வாழ்ந்த நிலம் அதேபோலத் திரிபுகொண்டு 'ஸ்தலம்' ஆக மாறிவிட்டிருக்கிறது. அதன்பின் இந்த ஸ்தலத்தில் துயரமே இல்லை. சிக்கல்களும் மோதல்களும்கூட இல்லை. கொண்டாட்டம் மட்டுமே உள்ளது.

உலகமெங்கும் நகைச்சித்திரங்களை உருவாக்குபவர்கள் அவற்றை விமரிசனம் கலந்து கேலிச்சித்திரங்களாக (சிணீக்ஷீtஷீஷீஸீ) ஆக்குவதே வழக்கம். பஷீர் அதிலிருந்து முற்றாக வேறுபடுகிறார். பஷீரில் கேலியே இல்லை. காரணம், அவர் எதையுமே விமரிசனம் செய்வதில்லை. பஷீர் நாம் நம்மைச் சுற்றிக் காணும் எதிர்மறைக் கூறுகள் ஏதுமில்லாத ஓர் உலகத்தை உருவாக்கி நம்முன் காட்டுகிறார், அவ்வளவுதான். அது அவரது சிரிப்பு மூலம் நிகழ்கிறது. அந்தச் சிரிப்பு பஷீரின் மொழியிலேயே உள்ளது. பஷீரின் கலையின் சாரம் அதுவே.

கேலி இல்லாததனால் சம்ஸ்கிருதத்தில் பிரஹஸனம் என்று சொல்லப்படும் கேலிக்கூத்துத் தன்மையும் பஷீரின் கதைகளில் இல்லை. எந்த விஷயமும் தரம் தாழ்த்தப்படுவதில்லை, திரிக்கப்படுவதில்லை. ஏன் ஒன்றுக்குக் கீழ் ஒன்றாக வைக்கப்படுவதுமில்லை. நகைச்சுவையாக எழுதிய பிற எழுத்தாளர்களிடமிருந்து பஷீர் மாறுபடுவதும் இங்கேதான்.

ஓர் உதாரணம் மூலம் சொல்லலாம். 'முச்சீட்டு களிக்காரன்றே மகள்'. மகாபுத்திமானும் சந்தையையே தன் வாயடி கையடியால் அமுக்கி வைத்திருப்பவனுமாகிய மூன்று சீட்டு ஆட்டக்காரன் ஒற்றைக்கண் போக்கரின் மகள் சைனபா. அவளும் 'சில்லறைக்காரி' அல்ல. ஆற்றுக்கு மறுபக்கம் சந்தைக்குக் கொண்டுபோக வைத்திருக்கும் வாழைக்குலைகளில் சிலவற்றை அவ்வப் போது தூண்டில் மூலம் தன்னை நோக்கி நீந்திவரச் செய்யும் கலை தெரிந்தவள்தான். மண்டன் முத்தபாவுக்கு ஒன்றும் தெரியாது, திக்குவதைத் தவிர.

ஆனால், மண்டன் முத்தபா மீசையில் மணிகட்டிய கிண்ணன்கள் தோற்கும் மூன்றுசீட்டு ஆட்டத்தை ஆட, போக்கர் முன்சென்று நெளிந்து நிற்கிறான். ஆட்டம் நடக்கிறது. மண்டனுக்குத் தொடர் வெற்றி. பந்தயப் பொருளான சைனபாவை அவன் மணக்கிறான். போக்கருக்கு உலகப்போக்கே புரியவில்லை. அல்லாவுக்கு என்ன ஆயிற்று? குழம்பிப்போய்விட்டாரா என்ன? ஆனால், உண்மையில் அல்லாவின் நியதிப்படியே எல்லாம் நடக்கிறது. மகாபுத்திசாலியின் மகள் மடையனைக் காதலித்துத்தானே ஆக வேண்டும்? சைனபா சீட்டுகளில் போட்ட ரகசிய முத்திரைதான் போக்கரை மண்டனாக்கிவிட்டது.

என்றும் எப்போதும் மண்ணில் நிகழும் அந்த மூன்று சீட்டு ஆட்டத்தைத்தான் பஷீரும் சொல்கிறார். ஆனால், சொல்லும் விதத்தில் அது வலியில்லாத விளையாட்டாக ஆகிவிடுகிறது. "கர்த்தாவாகிய ஏசுகிறிஸ்து செத்தது மரச்சிலுவையில். பின்னே எதுக்கு சர்ச்சுக்குப் பொன் சிலுவை?" என்ற பொன்குரிசு தோமாவின் தரிசனம் அந்த விளையாட்டின் உச்சமாகத் திரண்டுவருகிறது.

ஜெ. சைதன்யா கதை சொல்லுவாள். "..அப்றமா அந்தத் திவிடன் மாமா திவிடிக்கிட்டு ஓடினாங்களாம். அப்போ போலீஸ் மாமா தொப்பி போட்டுகிட்டு வேகமா அவங்களைத் தொரத்தினாங்களாம். போலீஸ் மாமா டேய் நில்லுடா திவிடான்னு சத்தம் போட்டாங்களாம்.....திவிடன் மாமா நிக்கமாட்டேன் நீ என்னைய அடிப்பேன்னு சொல்லிட்டே ஓடினாங்களாம்..." போலீசும் திருடனும் மாமாக்களாக மாறி உற்சாகமாகத் தங்கள் கடமைகளைச் செய்யும் ஜெ. சைதன்யாவின் உலகில் வன்முறைக்கு இடமில்லை. எல்லாம் விளையாட்டுகள் மட்டுமே.

பஷீரின் உலகமும் அத்தகையதே. சொல்ல வரும் கதைகளை எல்லாம் குழந்தையின் கண்களால் பார்க்க ஆரம்பித்துவிடுகிறார். அவ்வகையில் நோக்கும் வாசகர் பஷீருடன் ஒப்பிடத்தக்க படைப்பாளி லூயிஸ் கரோல் மட்டுமே என உணரலாம். பஷீரின் கதையில் கதையைச் சொல்வதும் சரி, கதைநாயகனும் சரி, பஷீர் தான்- குழந்தை அல்ல. ஆனால், சொல்லும் விதமும் சொல்லும் கோணமும் ஆலீஸ§க்குச் சமானமாகவே உள்ளன. பஷீரின் மொழியாட்டம்கூடப் பலவகையிலும் லூயிஸ் கரோலுடன் ஒப்பிடத்தக்கது. ஆம், பஷீர் தன்னை ஒரு குழந்தையாக ஆக்கிக்கொண்டு தன் புனைவுலகை உருவாக்கியிருக்கிறார்.

லூயிஸ் கரோலின் தரிசனங்கள் அவரது மொழிவிளையாட்டிலேயே வெளிப்படுகின்றன. எது உண்மையெனக் கேட்டால் யார் முக்கியம் என்று பதில் சொல்லும் பூசணிக்காய் போல. பஷீரும் அப்படித்தான். அவரது உரையாடல் வரிகளின் வழியாக அவரது தரிசனங்களின் உலகை எளிதாகச் சென்றுசேரலாம். அது ஒரு தனிப் பயணம்.

3

"ஆனைத்தூவல் ஒரு திருட்டின் கதை! கொலைக் கொம்பனாகிய ஒரு ஆனை! மிதித்து அரைத்தும் குத்தியும் அவன் ஒன்றிரண்டு யானைக்காரர்களைக் கொன்றிருக்கிறான். அவனுடைய வாலில் உள்ள ஒரு தூவலைத் திருட வேண்டும். திருடுவது என்று சொன்னால் யாருமே பார்க்கக் கூடாது. யானைக்காரர்களும் வாப்பாவும் உம்மாவும் யாரும்...ஆசாமி நானேதான். ஒரு ஆனை அல்ல. மூன்று. இரண்டு பிடியும் ஒரு கொம்பனும். அந்தக் கொம்பனின் வாலில் உள்ள முடிதான் தேவைப்படுகிறது. என்னுடைய சொந்தத் தேவைக்காக அல்ல. ராதாமணிக்காக...." என்று தொடங்குகிறது பஷீரின் 'ஆனப்பூட' என்னும் கதை. யானையின் வால்மயிரை யானையின் தூவல் என்று எண்ணிக்கொண்ட பஷீரின் இளமைப்பருவம். புத்தகத்தில் வைக்கும் மயில்தூவலைப் போன்றுதானே யானை முடியும் இருக்கிறது? அப்படிச் சொல்லிப் பள்ளிவட்டாரத்தில் ஆனப்பூட எனப் புகழ் அடைந்த கதாநாயகன் கதை சொல்ல ஆரம்பிக்கிறான்.

ஆனப்பூட ஒரு குழந்தைக் கதையல்ல. ஆனால், அதன் மொழி அப்படியே ஒரு குழந்தைக் கதைக்குரியது என வாசகர் காணலாம். ஒரு எட்டுவயதுப் பையன் உற்சாகமும் களங்கமின்மையும் கலக்க, சவடாலடிக்கும் தோரணையிலேயே மொத்தக் கதையும் அமைந்துள்ளது. இந்த பாணி அக்கதைக்கு அலாதியான உற்சாகத்தை அளித்துவிடுகிறது. தம்பி அப்துல்காதர் பாயில் படுத்து மூத்திரம் பெய்கிறான். ஆகவே, அண்ணா பஷீர் யானைக்கு அடியில் நுழைந்து சென்றாக வேண்டும். அப்துல் காதர்தான் ஒருகால் பலவீனமான 'சட்டுகாலன்' ஆயிற்றே. சண்டைகளில் நல்ல காலை ஊன்றி மெல்லிய காலை அந்தரத்தில் சுழற்றி அவன் அடிக்கும் அடிகளையும் பஷீர் வாங்கிக்கொண்டாக வேண்டும். ஒரே ஒரு முறை ஊன்றிய காலில் ஒரு அடி அடித்து அவனை விழவைத்தபோது பஷீருக்குத்தான் அடி கிடைத்தது. இந்தக் கொடுமைகளுக்குக் காரணபூதமாக இருப்பவள் சமையற்காரி நாணி. அவளுடைய முலையைச் சிறு வயதில் பஷீர் குடித்தான் என்பதனால் அவள் அவனைப் பற்றி என்ன சொன்னாலும் அது உண்மையே. அவளது மகன் நத்து தாமுவை பஷீர் கல்லால் அடித்தால் அதற்கும் அடி - கல் கூடையிலேயே பட்டது என்றாலும் இந்தக் கொடுமைகளைத் தீரமாக எதிர்கொண்டு, தோழி ராதாமணிக்காக உயிரைப் பணயம் வைத்து ஆற்றுவெள்ளத்தில் மூழ்கிச்சென்று கொம்பன் யானையின் வாலைக்கடித்து அதை அலறவைத்தான் பஷீர். ஒரே களேபரம். கடைசியில் தேடினால் பஷீரைக் காணவில்லை. கடைசியில் வீடு திரும்புகிறான். "உம்மா என் வேட்டி போச்சு" "எல்லாருக்கும்தான் வேட்டி போச்சு" என்றாள் உம்மா. குற்ற உணர்வு தாளாமல் வாப்பாவிடம் ஒரு ஒப்புதல் "வாப்பா நான் ஆனையைக் கடிச்சேன்!" "என்னது, நீ கொம்பனைக் கடிச்சியா?" அன்பின் சிரிப்பில் முடியும் இந்தக் கதை ஒரு தேர்ந்த வாசகனில் பலவிதமான நுண் அதிர்வுகளை உருவாக்கக் கூடியது. ஆனால், கதையை ஒரு நல்ல குழந்தைக் கதை என்றும் சொல்லிவிடலாம்.

பின்னர் கதாநாயகன் குழந்தையாக இல்லாத கதையிலும் குழந்தைநோக்கு இயல்பாக வந்துசேர்கிறது. "மந்திரச் சரடு வருவது அப்துல் அஸீஸின் வழுக்கைத் தலையில் ஒரு மாம்பழம் ப்டுக்கென்று விழுந்த நாளில் தான்" (மந்திரச் சரடு) மாம்பழத்தை அது மண்ணில் விழுவதற்கு முன்னரே அப்துல் அஸீஸ் போய்ப் பிடித்தாக வேண்டும். இல்லாவிட்டால் அதை கான் எடுத்துத் தின்றுவிடுவான். அவனுக்கு மாம்பழம், பலாப்பழம் எல்லாமே பிடிக்கும். கான் ஒரு ஆண்நாய். "கானை பூட்டியிட்டால் பிறகு செவிதலை கேட்க முடியாது. அய்யோ பொத்தோ என்று கதறல். ஆகவே பூட்டுவதில்லை. கான் இளம்சிவப்பு நிறத்தில் பெரிய வட்டங்கள் கொண்ட வெளுத்த சுந்தரன். அவன் ஒரு காதல் தோல்வியின் துயரத்தில் இருக்கிறான்..."

ஆகவே, ஹிந்து ஸ்திரீகளை விரும்பிக் கடிக்கும் பழக்கம் கானுக்கு இருக்கிறது. மாளு என்ற ஹிந்து நாயுடன் முஹபத் ஆகி அது மத வேற்றுமையால் கைகூடாமல்போன வெறி. வேறுவழியில்லாமல் அஸீஸ் ஒரு மந்திரச் சரடை வாங்கி கானின் கழுத்தில் கட்டுகிறார். கழுத்தில் சரடு கட்டப்பட்டதும் கான் ஆளே மாறி முஸ்லிம் ஸ்திரீகளைக் கடிக்க ஆரம்பிக்கிறான். "உம்முசுல்மயின் உம்மா கொண்டாட்டமாக நடந்து வரும்போது கான் பாய்ந்து காலில் ஒரு கடி வைத்தான். நியாயமான கடி! உம்முசுல்மாவின் உம்மா "றப்பே -ன்னே கொந்நே ஓடிவாயோ.."என்று பெரியவாயில் கதறினாள். அப்துல் அஸிஸ§ம் ஓடிப்போனார். கழுத்தில் மந்திரச்சரடு கட்டி கான் ஸிம்ப்ளனாக நின்றுகொண்டிருந்தான்..."

பஷீரின் நடையில் வரும் இந்த வாய்மொழி வேடிக் கைகளைக் கவனிக்க வேண்டும். மாம்பழம் 'ப்டுக்கேந்நு' விழுகிறது. உம்மா 'ஆஹோஷமாக' வருகிறாள். கான் 'ஸிம்ப்ளனாக' நிற்கிறான். இவ்வாறுதான் பஷீரின் நடை உருவாகிவருகிறது. அது நம்மையும் ஒரு குழந்தையாக எண்ணி நம்முடன் கொஞ்சிச் சிரித்துப் பேச முற்படுகிறது. 'செவிதலை கேட்கில்ல' என்ற நாட்டுப்புறச் சொல்லாட்சியைச் சாதாரணமாக பஷீர் சொல்லிச் செல்கிறார். பஷீரின் ஆகச்சிறந்த படைப்பான பாத்தும்மாவின் ஆடு இந்த அம்சங்கள் மட்டும் அடங்கிய முழுமையான ஆக்கம். அதில் வேறு ஒன்றுமே இல்லை! பஷீரின் இந்த அம்சத்தை மொழியாக்கம் செய்வது மிகமிகக் கஷ்டமான காரியம். ஆனால், இதுதான் பஷீர்.

ஒரு சிறிய நிகழ்ச்சியை உதாரணமாகச் சொல்லலாம். பஷீர் மனைவி குழந்தைகளுடன் பஸ் ஏறிக் கோழிக் கோட்டுக்குச் செல்கிறார். வீட்டிலிருந்தே குடும்பத் தலைவனின் அலம்பல்கள் ஆரம்பம். பொருட்களை எடுப்பது, உடைமாற்றுவது எல்லாவற்றைப் பற்றியும் உரத்த குரல் கட்டளைகள். அறிவுரைகள். குழந்தைகளுக்கு அதட்டல்கள். பஸ் ஏறியதுமே "ஃபாபி மேலே கம்பியைக் கெட்டியாகப் பிடித்துக்கொள். மக்கு மாதிரி ஆடி விழுந்துவைக்கக் கூடாது..." சொல்லி முடிப்பதற்குள் 'ப்படே' என்று விழும் ஒலி. விழுந்தது பஷீர்தான். (மாந்திரிகபூச்ச).

எளிமையான இந்த நகைச்சுவைக்கு ஓர் இலக்கியப் படைப்பில் என்ன இடம்? பஷீர் சொல்வது குழந்தைகளுக்கான கதை என்ற பாவனையில். அங்கே ஒரு 'பெரிய ஆள்' நிலைதடுமாறி விழுவதைப் போல உற்சாகமான விஷயம் வேறு ஏதுமில்லை. முதிர்ந்தவர்களின் உலகம், கட்டளையிடும் உலகம், குப்புற விழுந்து கிடக்கிறது. அதன் பிறகுதான் கதையே ஆரம்பம். இந்தக் 'குப்புறச்சரித்தல்' பஷீரின் எல்லாக் கதைகளிலும் உண்டு. நாய்க்கு 'கான்' என்று பெயர் வைத்த பிரக்ஞை அதுதான். எது வெளியே மிக முக்கியமோ அது உள்ளே கவிழ்க்கப்பட்டிருக்கும். 'ஆனைவாரி' என்றால் யானைமீதுள்ள அம்பாரி என்று பொருள்கொள்பவர்கள் பெரியவர்கள். பஷீரின் சிறியவர்களின் உலகில் ராமன் நாயர் காட்டுக்குப் போய்க் குவிந்துகிடக்கும் சாணி என்று தூங்கும் யானையை மண்வெட்டியால் வாரப்போய் அந்தப் பட்டம் பெறுகிறார்.

தன்னைத் திருடன் என்று முத்திரை குத்தும் 'ஸ்தலத்துக்கு' எதிராக ஒரு நாசகார ஆயுதத்துடன் பொன்குரிசு தோமா வந்து சேர்கிறான். சொரியன்புழு! அதை வீசிவிடுவான். சொரிந்து சொரிந்து சாக வேண்டியதுதான்! ஸ்தலத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைகிறது. ஆனவாரி ராமன்நாயர் பீதியுடன் சொன்னார், "ச்ச்சொரியன்புழு!" மண்டன் முத்தபா சொன்னான், "ஜ்ஜ் -ஜ்ஜ் -ஜ்ஜொரியன்புடு!" சாத்தங்கேரி மனைக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாடு அவரது ராஜதந்திர மூளையை முழுக்கப் பயன்படுத்தி உழைக்கும் வர்க்கத்தை அணிவகுக்கச் செய்து போலீஸ் நிலையம் நோக்கி ஓர் ஊர்வலத்தை நடத்துகிறார்- அதே வேகத்தில் திரும்பிவருவதற்காக.

பஷீரின் உலகில் அணுகுண்டுகூட 'ஜ்ஜொரியன்புடு'ஆகிவிடுகிறது. பொதுவாகக் கேரள வாசகர்களுக்குத் தெரியும், சாத்தங்கேரி மனைக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாடு இ.எம். எஸ்தான் என. ஆனவாரி ராமன் நாயர் ஆர்.எஸ்.பி தலைவர் சி.என். ஸ்ரீகண்டன்நாயர் என்பார்கள். பிரம்மசாரியான ஆனவாரிக்குப் பெண்களைப் பிடிக்காது. ஆகவே, ஆற்றில் நிறுத்தப்பட்டிருக்கும் பெண்யானைமீது மண்கட்டிகளை விட்டெறிந்து தன் ஆத்திரத்தைத் தீர்த்துக்கொண்டு இன்பக்கிளர்ச்சியும் அடைகிறார். இவ்வாறு நுண்ணிய நகலி உருவங்களைப் படைத்தபோதும் பஷீர் அவர்களின் அரசியல், கருத்தியல் எதையும் அவற்றை வைத்துக்கொண்டு கிண்டலோ விமரிசனமோ செய்யவில்லை. அவரது குழந்தைக்கு அதெல்லாம் பெரிதாகப்படவும் இல்லை. அந்தப் பெரியவர்கள் கால்தடுமாறி 'ப்படே' என்று விழும் தருணங்களில் கெக்கலி கொட்டிச் சிரிப்பது மட்டுமே அதன் நோக்கமாக இருக்கிறது

'சீரியஸ்நெஸ்' கால்தடுமாறி விழுந்து கிடக்கும் குழந்தை உலகில் வைத்துச் சொல்லப்படும் கதைகள் இவை. பஷீரின் மொழி கொள்ளும் எல்லா நெளிவுகளும் சுளிவுகளும் இதற்காகவே. சாதிமதம் எல்லாமே விழுந்து விழுந்து சிரிப்பதற்குரியவை. ஏன், அங்கே அல்லாவேகூட ஒரு மாபெரும் வேடிக்கைதான். சொல்லிய விஷயத்தின் வழியாக பஷீர் சூஃபி ஆகவில்லை, சொல்லும் நடை வழியாகவே அவர் சூஃபி.

4

நாடோடியான பஷீருக்கு இந்தியப் பிரிவினை பிடிக்கவில்லை. ஊருக்குத் திரும்பிப் புத்தகக் கடை வைக்கிறார். மூளை குழம்பி அப்படிச் செய்யவில்லை, அப்படிச் செய்ததனால்தான் மூளை குழம்புகிறது. கையில் கத்தியுடன் "அவன் பல பேர்களில் வருவான்! விடமாட்டேன்" என்று உறுமி நிற்கிறார். எம்.டி. வாசுதேவன்நாயரைப் பார்த்து "அவன் எம்.டி. வாசுதேவன்நாயரின் வடிவிலும் வருவான்!" என்கிறார். உஸ்தாதை ஒருவழியாகக் கையைக் காலைக் கட்டித் தூக்கி எடுத்துக்கொண்டுபோய் ஆயுர் வேத சிகிச்சைக்கு ஆளாக்குகிறார்கள். அதில் முக்கிய அம்சமே கண்களில் அஞ்சனம் எழுதுவதுதான். நாழி குறுமிளகைச் சுக்கில் அரைத்து மையாக்கிக் கண்களில் பூசுவதுபோல் இருக்கும். அதை மூக்கில் ஏற்றும் நஸ்ய சிகிச்சையும் உண்டு. உஸ்தாத் தெளிவாகப் பேசுகிறார், சிரித்து அருகே அமரும்படி உபசரிக்கிறார். வலிய கைகளில் ஆள் அகப்பட்டதுமே பிடித்து அஞ்சனம்பூசி நஸ்யம் ஏற்றிவிடுகிறார். உலகமே மூளை குழம்பி இருக்கும்போது அப்படிச் செய்வது அவரது கடமை.

வேறுவழியில்லாமல் அவரை நூலன்வாசு அல்லது கடாரி வாசு என்ற எம்.டி. வாசுதேவன்நாயர், என்.பி. முகம்மது என்கிற மம்மு, எஸ்.கெ. பொற்றெகாட், நடிகர் சத்யன் ஆகியோர் அடங்கிய கும்பல் வலுக் கட்டாயமாக நிக்காஹ§க்கு ஆளாக்குகிறது. துணிந்த மனத்துக்குப் பெயர் ஃபாபி. பார்கவி நிலையம் படத்துக்குக் கிடைத்த சன்மானத்தில் ஒரு காட்டுத் தோட்டம் போப்பூர் கடற்கரையருகே வாங்கப்பட்டு பஷீர் அங்கே சுல்தானாக ஆட்சிப் பொறுப்பை ஏற்கிறார். ஸாஹினா பிறந்து பஷீர் அவளுடைய ஒன்றுக்கும் உதவாத மொட்டைத்தலை 'ற்றாற்றா' ஆக மாறுகிறார். மங்கோஸ்டைன் மரம் நடப்படுகிறது. அதன் கீழே சாய்வு நாற்காலி போடப்பட்டு பாதுஷா பீடிக்கட்டு கடும் சாயாவுடன் வந்து அமர்கிறார்.

பஷீரின் புனைவுலகின் சிறந்த படைப்புகளில் பெரும்பாலானவை இக்காலகட்டத்துக்குப் பின் எழுதப்பட்டவை என்பதைக் கவனிக்கலாம். பாத்துமாவின் ஆடு கூட இக்காலத்து சிருஷ்டியே. 'விஸ்வவிக்யாதமாய மூக்கு', 'ன்றுப்பாப்பக்கொரானேண்டார்ந்நு' முதலிய கதைகள் எழுதியபோது பஷீரில் இருந்த சிறு அளவு உலக விமரிசனம்கூட இப்போது இல்லாமலாகிறது. இந்த உலகம் சிரிப்பதற்கன்றி வேறெதற்கும் பயன்படாதது என்று பஷீரின் மொழியில் துயிலெழுந்த அக்குழந்தை கண்டடைந்தது. "ற்றாற்றா, தா பீப்ளி பீச்ண மிஸ்கீன்!" என்று தனிமொழி பேசும் ஸாஹினா பஷீரில் செலுத்திய பாதிப்பு மிக அபூர்வமானது என இப்போது படுகிறது. அவளுடைய கண்கள் வழியாக பஷீர் உலகைப் பார்க்கக் கற்றுக்கொண்டார். அவளது மொழியின் வழியாக ஒரு புதிய மலையாளத்தை எழுதிப் பழகினார்.

குழந்தைக் கண்களால் தலைகீழாக்கப்பட்ட பஷீரின் உலகில் பெரிய விஷயங்களும் பெரிய மனிதர்களும் வேடிக்கை வடிவங்களாக இருக்கிறார்கள். சுதந்திரப் போராட்டத் தியாகி என்பதற்காக மத்திய அரசு அளித்த தாமிரப் பட்டயம் காயப்போட்ட நெல்லைக் கொத்தவரும் காகத்தை விரட்டப் பயன்படுத்தப்படுகிறது. வீட்டுக்கு வரும் சகலமான நாயர்மாரும் அவர்களின் ஸ்திரீரத்தினங்களும் கிண்டல்செய்யப்படுகிறார்கள். அதேசமயம் ஆடு மையக் கதாபாத்திரமாகி மொத்த உலகமே அதைச்சுற்றி நடைபெறுகிறது. பஷீர் எழுந்ததுமே கோழி அவரது சுல்தான்பீடத்தில் ஏறி அமர்ந்து ஒருகண்ணை மட்டும் திறந்து என்ன என்று பார்க்கிறது.

பஷீரின் ஆக்கங்கள் இப்போது 'கிளாசிக்' ஆக மாற்றப்பட்டுவிட்டமையால் அவை தடவித்தடவி விடப்படுகின்றன. உக்கிரமான பெண்ணியர் ஒருவர் அவரைப் போட்டுக் குடைந்து எடுக்கும் நாள் தொலைவில் இல்லை. அவரது புனைவுலகில் பெண்கள் எப்போதுமே பிரியத்துக்குரிய குசும்பினிகள் மட்டுமே. 'பூவன்பழம்' உதாரணம் . அடிதடி நிபுணரான உஸ்தாத் அவர்கள் பரம ஸ்டைலாகக் குடையுடன் வரும் டீச்சர்மீது மையல் கொள்கிறார். 'உன்னை எனக்குப் பெருத்து இஷ்டம்' என்று காதலைத் தெரிவிக்கிறார். "அதற்கு?" என்று ஸ்டைலான பதில் வருகிறது.

எப்படியோ திருமணம். நாள்தோறும் முதலிரவு. உஸ்தாத் புதையல் காத்த பூதமாக இருக்கிறார். ஒருநாள் இரவில் பீபிக்கு பூவன்பழம் வேண்டுமென்று ஆசை ஏற்படுகிறது. ஊரடங்கிய நேரம். மழை. ஆற்றில் வெள்ளம். உஸ்தாத் மனம் தளராமல் ஏழு மலை, ஏழு கடல் தாண்டிச்சென்றாலும் பூவன்பழம் இல்லை. ஆகவே, திராட்சை வாங்கித் திரும்ப வருகிறார். அதை பீபி தூக்கி வீசி எறிந்துவிட்டு விசும்பி விசும்பி அழுகிறாள். உஸ்தாத் ஒரு சிறிய குச்சியை எடுத்துப் பீபியின் அழகிய தொடையில் அடிக்கிறார். திராட்சையைச் சுட்டிக்காட்டி "இது என்ன? ". நாலைந்து அடிகளுக்குப் பின்னர் பீபிக்குக் காரியம் பிடி கிடைக்கிறது. கண்ணீருடன் "பூவம் பழம்!" என்கிறாள். இருவரும் தொண்ணூறு வயதுவரை சந்தோஷமாக வாழ்ந்தார்கள். சுபம் மங்களம்.

இந்தக் கதையைக் கதையாகச் சொல்லப்போனால் மிகமிக ஆணாதிக்க நோக்குள்ள ஒரு கதை என்றே படும். உண்மையில் பஷீரின் பல கதைகள் இப்படிப்பட்டவையே. ஆனால், பஷீரின் புன்னகையின் ஒளிமிக்க நடை இதன் தொனியையே மாற்றிவிடுகிறது. ஆதிக்கத்தின் கதை என்ற தளத்திலிருந்து தூக்கிக் காதலின், காமத்தின் விளையாட்டைப் பற்றியதாக ஆக்குகிறது. பிரபஞ்சம் முழுக்க நிறைந்திருக்கும் அலகிலா நடனம் ஒன்றின் ஒரு தருணமாக ஆக்கிவிடுகிறது.

பஷீரின் பெரும்படைப்புகள் என்று இப்போது ஒரு விமரிசகன் சொல்லத்தக்கவை பாத்துமாவின் ஆடு, ஸ்தலத்தே பிரதான திவ்யன், மாந்த்ரிக பூச்ச, ஆனவாரியும் பொன்குரிசும், முச்சீட்டுகளிக்காரன்றே மகள், ஸிங்கிடிமுங்கன் போன்றவை. இவையனைத்துக்குமே ஒரு பொதுத்தன்மை உண்டு என்று காணலாம். இவற்றுக்கு எந்த விதமான மையமும் அர்த்தமும் இல்லை. கதை என்ற ஒன்று இல்லை. இருந்தாலும் அதைச் சொல்லப்போனால் நான்கு வயதுக்குக் கீழே உள்ள குழந்தைகள் மட்டுமே ரசிக்கும். வடிவமே இல்லை. பஷீர் அவருக்குத் தோதுபட்ட விஷயங்களைத் தோது பட்ட மொழியில் சொல்லிச் செல்கிறார். விமரிசனம், மையக்கரு எதையுமே தேட முடியாது.

இருந்தே ஆக வேண்டுமென்றால் எல்லாக் கதைகளிலும் முடிவில் பஷீர் எழுதிவைத்திருக்கும் 'சுபம்' 'சுபமஸ்து' போன்ற வார்த்தைகளையும் "நாயர் ஸ்திரீகளும் நஸ்ராணி ஸ்த்ரீகளும் மாப்பிள ஸ்த்ரீகளும் சகல குசும்பு குன்னாய்மைகளுடனும் நீணாள் வாழட்டே" என்பதுபோன்ற வரிகளையும்தான் சொல்ல வேண்டும். அதிலும் பாத்தும்மாவின் ஆடு முழுக்க முழுக்க 'அர்த்தமில்லாத' கதை. அதில் ஒன்றுமே நடக்கவில்லை. அதைப் பற்றி என்ன சொன்னாலும் அது தவறு. அதில் குடும்ப உறவுகளின் மகத்துவம் பற்றிச் சொல்லியிருக்கிறார் பஷீர் என எங்கோ படித்தேன்? அப்படியா? "பாத்துமா அறிய வேண்டாம். அப்துல் காதர் அறிய வேண்டாம். ஹனீஃபா அறிய வேண்டாம். அபி அறிய வேண்டாம். நீ எனக்கு ஒரு அம்பது ரூபா தா" என்று ஓயாமல் பிடுங்கும் அம்மா வாழும் வீடுதான் குடும்பமா?

குடும்ப சுயநலங்களின் மையமாக அவ்வீட்டை பஷீர் காட்டுகிறார் என்றும் ஒருவரி வாசித்திருக்கிறேன். முட்டாள்தனம். அந்த வீடு முழுக்க நிறைந்திருப்பது உற்சாகமும் அன்பும்தான். ஆட்டின் மடியும் பஷீரின் பையும் கனத்திருப்பது அவ்வீட்டின் குற்றமா என்ன? அகப்பட்டவர்கள் கறக்க வேண்டியதுதானே? உண்மையில் அவ்வீட்டைப் பற்றி எதையுமே பஷீர் சொல்லவில்லை. எதைப் பற்றியும் பஷீர் சொல்லவில்லை. அவர் வெறுமே வேடிக்கை பார்க்கிறார். இந்திய இலக்கியங்களில் 'சும்மா' எழுதப்பட்ட ஒரே படைப்பு இதுதான். ஆகவேதான் இது என்றும் ஒளிமங்காத ஒரு பேரிலக்கியம்.

5

ஆழ்பிரதியே இல்லாத விசித்திரமான பேரிலக்கியம் பஷீர் எழுதியது. உய்த்துணர, சிந்திக்க, குறியீடுகளாக விரிய எந்த வாய்ப்பும் இல்லாத உலகம் அது. நம்முன் கிடப்பது பண்பாடு, தலைகீழாகப் பிரதிபலித்து நெளியும் ஒரு மொழிவெளி. விளையாடும் அர்த்தங்களின் நுண்பரப்பு. இந்த எளிய உலகம் ஆழ்ந்த அர்த்தங்களைத் தேடப் புகுந்தவனுக்குப் புரியாத மந்திரப்புதிர்களாகத் தோன்றி மயக்கக்கூடும். சட்டையைக் கழற்றிவிட்டுக் காட்டாற்றில் குதிப்பவனைப் போல இறங்குபவனைச் சிரித்தபடி குளிர அணைத்துக்கொள்ளும்.

பஷீரின் மொழி மிகமிகத் தெளிந்த நீரோட்டம். அதற்கு அடித்தளம் இல்லை. ஏனெனில், அடித்தளமே மேல்தளமாகத் தெரிகிறது. பஷீரில் அறிய ஏதுமில்லை. அவரது மொழியுடன் சற்றாவது இணையும்போது நமது மொழி நம்மை விட்டு நீங்கும் '...ம்ணி பல்ய ஒந்நின்' மொழிக்குள் நாம் நுழைவோம். அதுவே பஷீரின் புனைவுகள் அளிக்கும் அனுபவம்.

பஷீரைப் பற்றிய ஆவணப் படம் பார்த்துவிட்டு அந்த வரியைச் சொன்னவர் யாராக இருந்தாலும் அவர் பஷீரின் நல்ல வாசகர்.

*********

சொற்களின்

amma